பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
தேன் மருவு பொழில் இடத்து மலர்ந்த போது
தேன் அதனை வாய்மடுத்து
உன் பெடையும் நீயும்,
பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த
அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
ஆமருவி நிரை மேய்த்த அமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக்கு
இன்றே சென்று,
நீ மருவி
அஞ்சாதே நின்று
ஓர் மாது நின் நயந்தாள்
என்று இறையே இயம்பி காணே
- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையழ்வார்)
பரகால நாயகியை ஆட்கொண்ட பிறகு, 'ஸ்ரீரங்கம் செல்கிறேன்' என்று சொல்லி விட்டு சென்று விட்டார் பெருமாள்.
பரகால நாயகி, 'வருவாரா?' என்று காத்து கிடக்கிறாள்.
வெகு நாட்கள் ஆகி விட்டது. 'என்னை மறந்து விட்டாரா?' என்று நினைக்கிறாள்.
தன் காதலனோடு சேர முடியாமல் தவிக்கும் பரகால நாயகி, ஒருசமயம் நந்தவனத்தில் (பொழில் இடத்து) தேன் நிரம்பி இருக்கும் (தேன் மருவு) மலர்ந்த பூக்களில் உள்ள (மலர்ந்த போது) தேனை வாய் முழுவதும் எடுத்து ஒரு ஆண் வண்டு தன் காதலியியுடன் சேர்ந்து குடிப்பதை பார்க்கிறாள் (தேன் அதனை வாய்மடுத்து).
தன் காதலனோடு சேர்ந்து தேன் குடித்து, அந்த பூவின் இதழ்களிலேயே படுத்து விளையாடும், ஆண் வண்டையும், அதன் காதலியையும் பார்த்து, தனக்காக தூது செல்லுமாறு கேட்கிறாள் பரகால நாயகி.
"பூக்களின் இதழில் உன் பேடையோடு விளையாடி, புள்ளிகள் ஏற்பட்டு இருக்கும் வண்டே!
எம்பெருமாள் இங்கு இல்லை. எம்பெருமானிடம் என்னை பற்றி சொல்லேன்!
என்னை அவருடன் சேர்க்க, எனக்காக தூது செல்வாயா?
நீ எனக்கு இந்த உதவி செய்தால், உன்னுடைய ஆறு சிறு கால்களிலும் விழுந்து தொழுவேன் (உன் பெடையும் நீயும், பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை)
மேலும்,
திருவரங்கம் செல்கிறேன்! என்று சொல்லி சென்றவர். தேவாதிதேவனான அவர், இப்பொழுது (மாயவரம் அருகில்) தேரழுந்தூர் என்ற திவ்ய தேசத்தில் இருக்கிறார் என்று கேள்வி படுகிறேன்.' என்றாள்.
அந்த ஜோடி வண்டு, "உன்னையும் அவரோடு சேர்த்து வைக்கிறேன். அவர் அடையாளம் சொல்லேன்" என்று கேட்க,
"முப்பத்து முக்கோடி தேவர்களையும் மேய்க்கும் என் நாதன்,
அந்த பசு மாடுகளை எல்லாம் கூட்டிக்கொண்டு, காவிரி தீரத்தில் வந்து மாடு மேய்க்க ஆசைப்பட்டு, அங்கு சென்று இருப்பதாக கேள்விப்படுகிறேன்" என்றாள் பரகால நாயகி.
'மாடு மேய்ப்பதில் ஏன் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது?' என்று வண்டு கேட்க,
"தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்க கூர்ம அவதாரம் செய்து முதுகை கொடுத்தார். அசுரர்கள் அம்ருதத்தை தூக்கி சென்று விட, அவர்களுக்காக மோகினி வேடம் போட்டு அம்ருதத்தை வாங்கி தந்தார்.
"தன்னிடம் என்ன கிடைக்கும் என்று பார்த்தார்களே தவிர, தனக்கு பெருமாள் தான் வேண்டும் என்று கேட்பவர்கள் குறைச்சல் தானே என்று நினைத்த இவர், தேவர்களை மேய்த்ததோடு, மாடுகளையும் மேய்க்கலாம் என்று வர, இந்த மாடுகளோ, தனக்கு போட்ட புல்லையும் உண்ணாமல், பெருமாள் திருவடியே போதுமென்று, இவர் பாதத்தையே நக்கி கொடுக்க, "பெருமாள் தான் வேண்டும்" என்று நினைக்கும் மாட்டின் மீது இவருக்கு பிரியம் ஏற்பட்டுவிட்டது' என்றாள்.
'அவர் அடையாளம் என்ன?' என்று வண்டு கேட்க,
"பசுமாட்டை தனக்கு பின்னால் நிறுத்தி கொண்டு, அதன் மீது ஒரு கையை போட்டு கட்டிக்கொண்டு (ஆமருவி), மற்றொரு கையில் சுருள் கோல் வைத்து கொண்டு, திருவழுந்தூர் என்ற தெரழுந்தூரில் நின்று கொண்டிருப்பார் (நிரை மேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக்கு). அது தான் அவரது அடையாளம்" என்றாள் பரகால நாயகி.
"சரி. இரண்டு நாள் கழித்து செல்லவா?" என்று வண்டு கேட்க,
"நீ சொல்வதால் போகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே!" என்று சொல்ல,
"நீ அஞ்சவே வேண்டாம். அவர் மிகவும் சாந்த ஸ்வபாவம் உடையவர் (நீ மருவி அஞ்சாதே). தைரியமாக அவரை ஒரு சுற்று சுற்றிவிட்டு, 'உங்களை எதிர்பார்த்து ஒரு மாது காத்து கொண்டு இருக்கிறாளே!" என்று மட்டும் சொல்லி விட்டு, அவர் முகத்தை கவனித்து விட்டு வா" (நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே) என்று சொன்னாள்,
"மாது என்று மட்டும் சொன்னால் போதுமா? அவரிடம், பரகால நாயகி என்று உங்கள் பெயரை சொல்லவேண்டாமா?" என்று கேட்க,
"எனக்கு தரிசனம் கொடுத்து, என்னை கட்டிக்கொண்டு, என்னை அழ விட்டு சென்றார். அவரிடம் "ஒரு மாது" என்று சொன்னாலேயே என்னை பற்றி தான் நினைவுக்கு வரும்" என்று சொல்ல,
"அவரின் முகத்தை கவனி என்று சொன்னாயே?" என்று வண்டு கேட்க,
"நீ என்னை பற்றி சொன்னதுமே
அவளா! என்று என்னை அலட்சியமாக நினைக்கிறாரா? அல்லது
யாரை சொல்கிறாய் என்று தெரியவில்லையே! என்று நினைக்கிறாரா?
அல்லது
அப்படியா! என்று கருணையோடு கேட்கிறாரா?
என்று கவனித்து எனக்கு சொல்.
அவர் அப்படியா! என்று என்னை பற்றி நினைவோடு கேட்டால், அவர் என் மீது கருணை வைத்து இருக்கிறார் என்று அறிந்து கொள்வேன்" என்றாள் பரகால நாயகி.
பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
மின் இலங்கு திரு உருவும்
பெரிய தோளும்
கரி முனிந்த கை தலமும்
கண்ணும் வாயும்
தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கும்
மகரம்சேர் குழையும் காட்டி
என் நலனும் என் நிறையும்
என் சிந்தையும்
என் வளையும் கொண்டு
என்னை ஆளும் கொண்டு
பொன் அலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலின் ஊடே
புனல் அரங்கம் ஊரென்று போயினாரே
- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)
'மின்னல் போல ஜொலிக்கும் அவருடைய திரு உருவமும் (மின் இலங்கு திரு உருவும்),
அவருடைய அழகிய பெரிய தோளும் (பெரிய தோளும்),
குவலயாபீடம் என்ற யானை ஒரே குத்தில் வீழ்த்திய அந்த திரு கைகளும் (கரி முனிந்த கை தலமும்),
அவருடைய அழகிய கண்களும், மந்தஹாசம் செய்யும் திருவாயும் (கண்ணும் வாயும்),
அன்று மலர்ந்த நறுமணமிக்க பூக்களை கொண்டு, அவர் கழுத்தில் போட்டுக்கொண்டிருக்கும் பெரிய வைஜயந்தி மாலையும், அவர் காதில் போட்டுக்கொண்டிருக்கும் மகர குண்டலங்கள் அந்த வைஜயந்தி மாலையை ஸ்பரிசிக்கும் அழகையும் எனக்கு காட்டி (தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி),
எனக்கு எது நலமோ, எனக்கு எது நிறைவோ, அதை தானே நிர்வாகம் செய்வதாக ஆக்கி (என் நலனும் என் நிறையும்),
என் எண்ணத்தையும், என் வளையல்களையும் எடுத்து கொண்டு, கடைசியில் என்னையே அவருக்கு அடிமையாக்கி கொண்டு விட்டு (என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு) 'போய் வருகிறேன்' என்று சொல்லி கிளம்பிவிட்டார்.
அவருக்கு அடிமையாகிய நானும் அவர் எங்கு செல்கின்றார்? என்று பார்த்தேன்.
திடீரென்று மறைந்து விடாமல், தன்னுடைய பின் அழகையும் காண்பித்து, பொன் நிறத்தில் பூக்கும் பொய்கையில் புதர் புதராக வளரும் செருந்தி பூக்கள் (சம்பகா புஷ்பம்) பூத்த நந்தவனத்திற்கு இடையே புகுந்து, 'எங்கள் ஊர் திருவரங்கம் செல்கிறேன்' என்று சொல்லி போகின்றாரே ! (பொன் அலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலின் ஊடே புனல் அரங்கம் ஊரென்று போயினாரே)' என்று பெருமாள் தனக்கு தரிசனம் கொடுத்து விட்டு சென்று விட்டாரே என்று கண்ணீர் சிந்துகிறாள்.
இதை படிப்படியாக சீர்படுத்தப்பட்டு, இதில் மோஹினி அவதாரம், திருக்கைத்தல சேவை, வேடுபறி, மற்றும் நம்மாழ்வார் மோக்ஷம் போன்றவை சேர்த்து பிரமாண்ட உத்ஸவமாக நாதமுனிகள் ஆரம்பித்தார்.
அவரை தொடர்ந்து ஆளவந்தார், சுவாமி ராமானுஜர் மற்றும் மணவாளமாமுனிகள் என்னும் ஆச்சாரியார்கள், தொடர்ந்து, இன்று வரை நிர்வகித்து வருகின்றனர்.
இந்த உத்ஸவத்திற்காக ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள செய்வார்கள்.
இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசிமுதல் பத்து நாட்கள் நடைபெறும்.
இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி அரையர்களால் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும்.
இது பத்து நாட்கள் இரவில் நடைபெறும்.
எனவே ’இராப்பத்து’ எனப்படுகிறது.
இதுவே ’அத்யயன உத்ஸவம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.
அத்யயன உத்சவ காலத்தில், வைஷ்ணவ ஆசாரியர்கள் பெருமாளை விட்டு போகவே மாட்டார்கள்.
அத்யயனஉத்ஸவத்தில் தான், திவ்ய பாசுரங்களை, பெருமாளே உட்கார்ந்து கேட்பார்.
பரம ரசிகர்களான ஆசாரியர்கள் பாசுரத்தையும், பெருமாள் கேட்பதையும் அனுபவிக்காமல் வேறு எங்காவது போக ஆசைப்படுவார்களா?
இந்த அனுபவத்தை விடுவதற்கு யாருக்கு தான் மனம் வரும்?
இந்த அத்யயன உத்ஸவத்தை ஆரம்பித்தவரே நாதமுனிகள் தான்.
அவரை தொடர்ந்து நிர்வகித்து வந்தவர் ஆளவந்தார்.
"108 திவ்ய தேசங்களை நமது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, திவ்ய தேச தரிசனம் செய்ய சொல்லி இருக்கிறார்களே!
மேல் நாட்டு, மலை நாட்டு திவ்ய தேசங்கள் அனைத்தும் பார்க்க வேண்டுமே! பார்க்க வேண்டுமே!"
என்று ஆளவந்தார் ஆசைப்பட்டு கொண்டிருந்தார்.
அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மேலும், நம்பெருமான் அனுமதிக்காக காத்து இருந்தார்.
அத்யயன உத்சவம் நம்பெருமாளுக்கு ஆரம்பமானது.
பாசுரங்களை கேட்டு, பெருமாளையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தார் ஆளவந்தார்.
பத்மநாபன் மீதான பாசுரம் வந்த போது, "அனந்தபுர நகர் புகுதும் இன்றே" என்று சொல்லும்போது, கொஞ்சம் வீசி சொல்லி, ஆளவந்தாரை அரையர் பார்க்க, 'இது தான் நம்பெருமாள் நியமனம்' என்று, அப்படியே புறப்பட்டு விட்டார்.
ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு, போகும் வழியில் உள்ள திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்து கொண்டே, நடந்து நடந்து, 'திருவனந்தபுரம்' வந்து சேர்ந்தார்.
பத்மநாபனை அங்கு மூன்று வாசல் வழியாக தான் பார்க்க முடியும்.
முதலில் திருவடி, பிறகு திருநாபி, பிறகு திருமுகம் என்று மூன்று ஸ்தானமாக பெருமாளை இங்கு பார்க்கலாம்.
'மூன்று உலகங்களாக விராட் புருஷனாக (வ்யாஹ்ருதி - பூ: புவ ஸுவ:) தானே இருக்கிறேன்' என்கிறார்.
ஸ்ரீரங்கத்தில் இருந்து நடந்தே வந்து, ஆசையோடு பார்க்க வந்த ஆளவந்தார், கோவிலுக்குள் வந்து, முதல் வாசலில் பெருமாளின் "திருவடியை" பார்த்தார்.
பார்த்து விட்டு, உடனேயே, திரும்பி விட்டார்.
சேவை செய்து வைப்பவர்கள், ஆளவந்தாரை கூப்பிட்டு, 'இதோ பாருங்கள் பெருமாளின் நாபி கமலம். ப்ரம்ம தேவனை படைத்த நாபி கமலத்தை பாருங்கள்' என்று காண்பித்து அழைக்க,
ஆளவந்தார் அவர்களிடம், "அதற்கு அதிகாரம் நமக்கில்லை. திரு நாபியை தரிசிக்கவோ,திருமுகத்தை தரிசிக்கவோ பிராட்டிக்கு தான் அதிகாரம். அடியேனுக்கு திருவடியே போதும்" என்று சொல்லிவிட்டு திரும்பினார்.
ஆளவந்தாரை திருவனந்தபுரம் கொண்டு வர செய்த நம்மாழ்வார் பாசுரம் :
பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்
இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட,பெருவயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
பெரும் தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு
ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
என் பொரு கயல் கண்ணீர் அரும்ப புலவி தந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!
- திருநெடுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)
பெருமாளுடைய மகத்துவம் தெரிந்ததால், அவருடைய பிரிவினால் விரகம் ஏற்பட்டு, உடல் மெலிந்து, நான் அணிந்திருந்த வளையல்கள் கூட என் கையில் நிற்காமல், தானே கழண்டு விழுந்து விடுகிறதே ! (இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்),
அவர் எப்பேர்பட்டவர் தெரியுமா?
பேரொலி எழுப்பும் அலைகளை உடைய பெருங்கடலில் உள்ள நீரை தன்னுடைய பெரிய வயிற்றில் நிரப்பி கொள்ளும் காளமேகத்தின் நிறத்தை ஒத்து இருப்பார். கருமுகில் போல வண்ணம் உடையவர். (இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட, பெருவயிற்ற கருமுகிலே ஒப்பர் வண்ணம்)
உலகத்தையே உண்டவர். பூமி பிராட்டி மீது அத்தனை அன்பு அவருக்கு, (உலகுண்ட பெருவாயர்) அது போல, பரகால நாயகியான என்னிடத்திலும் பேரன்பு உடையவர். என்னையும் அப்படியே விழுங்கிவிடுவார்.
பெருமாள் ஆசையோடு என்னிடத்தில் பேசுவதற்காக அருகில் வந்தார் (இங்கேவந்து). நானும் குழைந்து குழைந்து அவர் முன் நின்றேன்.
என்னிடம் பேசிக்கொண்டிருந்த பெருமாள், திடீரென்று "சற்று இரு" என்று சொல்லிவிட்டு திரும்பி சென்றார்.
இப்படி எங்கே அவசரமாக செல்கிறார்? என்று கொஞ்சம் எட்டி பார்த்தேன்..
அங்கு பெருமாளை பார்க்க, கூட்டமாக ரிஷிகள் வந்திருந்தனர்.
பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்து, தவம் செய்து இப்போது பெருமாளை பார்க்க வந்து இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ரிஷிகளுக்கு தன் தரிசனத்தை கொடுக்க பெருமாள் கிளம்பி இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன் !
பெருமாளும் அந்த ரிஷிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்
இப்படி என்னை விட்டு விட்டு சென்றுவிட்டாரே! என்ற அசூயை எனக்கு இல்லை.
அவர்கள் தவத்துக்கு பலனாக பெருமாள் தரிசனம் தருகிறார் என்று அறிகிறேன்! (பெரும் தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ)
அவர்களிடம் பேசி விட்டு, ரிஷிகளுக்கு, 'ஒரு கையில் சங்கும், ஒரு கையில் கதை ஏந்தி தரிசனமும் கொடுத்தார்.'
(ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி)
இப்படி எப்பொழுதுமே இவரை சுற்றி ரிஷிகள் கூட்டமும், தேவர்கள் கூட்டமும் சூழ்ந்து கொண்டே இருக்க, எனக்கு நேரம் ஒதுக்க பெருமாளால் முடியவில்லையே! என்றதும் என் கண்களில் நீர் வழிய (என் பொரு கயல் கண்ணீர் அரும்ப புலவி தந்து), என்னிடம் பேரன்பு கொண்ட பெருமாள், இத்தனை காரியங்கள் இடையிலும் என்னை திரும்பி பார்த்து விட்டார்.
உடனே என்னை சமாதானம் செய்து, "நம்முடைய ஊர் ஸ்ரீரங்கம் உள்ளது. அங்கு உன்னையும் அழைத்து வைத்து கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றாரே ! (புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!) என்று பரகால நாயகி தன்னிடம் பிரியம் கொண்டுள்ள பெருமாளை நினைத்து உருகி நிற்கிறாள்.
சீதாதேவி ராமபிரானை முதன்முதலாக பார்த்த போது, சீதாதேவிக்கு ஏற்பட்ட நிலையை, பரகால நாயகி பார்த்து சொல்கிறாள்.
மை வண்ணம் நறுங்குஞ்சி
குழல் பின் தாழ
மகரம் சேர் குழை
இரு பாடு இலங்கி யாட
எய் வண்ண வெஞ்சிலையே துணை ஆ இங்கே
இருவராய் வந்தார்
என் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே,
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழீ.
அவரை நாம் தேவரென்று அஞ்சினோமே!
- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)
முதல் 10 பாசுரங்களை, 'பரகாலன்' என்ற புகழ் பெற்ற திருமங்கையாழ்வார், தன் நிலையில் இருந்து கொண்டே எம்பெருமானை நினைத்து உருகி பாடுகிறார்.
அடுத்த 10 பாசுரங்களை, பரகால நாயகி என்ற கோபிகையாக தானே ஆகி, எம்பெருமானை அடைய முடியாத விரகத்தில் கிடக்க, தனக்காக தன்னுடைய தாய், தன் மகள் படும் வேதனையை கண்டு வருந்தி புலம்புவது போல பாடுகிறார்.
கடைசி 10 பாசுரங்களில், 9 பாசுரங்களை பரகால நாயகி என்ற கோபிகையாகவே இருந்து, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பாடுகிறார்.
திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி, திருவாலி திருநகரில் இருக்கும் 'வயலாலி மணவாளனை' கோதண்டத்துடன் தரிசித்தார்.
நாயகியான இவள், சீதாதேவி, இந்த கோதண்ட ராமரை மிதிலையில் எப்படி பார்த்து இருப்பாள்? என்ன பாடுபட்டு இருப்பாள்? என்று நினைக்கிறார்.
பரகால நாயகியாக பாடும் முதல் பாசுரம் இது.
மிதிலாபுரியில் பெருமாள், இளைய பெருமாளான லக்ஷ்மணரோடு, விசுவாமித்திரர், மற்றும் பல ரிஷிகளின் கூட்டத்தின் மத்தியில் நடந்து வருகிறார்.
விசுவாமித்திரர், மற்றும் கூடவே வந்த மற்ற ரிஷிகளுக்கு ராமபிரானாக வந்திருப்பது "பரவாசுதேவன்" என்ற ஞானம் இருந்தது.
அன்று ராமபிரானை மிதிலாபுரியில் கண்ட சாதாரண மக்களுக்கு, "இவர் யார்? என்று தெரியாமல் போனாலும், இயற்கைக்கு அப்பாற்பட்ட இவருடைய பேரழகை பார்த்ததிலேயே மயங்கி இருந்தனர்.
"பல ஜென்மங்களாக யோகாப்யாஸம் செய்து, ஹ்ருதயத்தில் சாக்ஷாத்கரிக்க வேண்டிய பரம்பொருள், சர்வ சாதாரணமாக ரூபம் தரித்து அனைவரும் பார்க்கும் படியாக நடு வீதியில் வந்தால், அஞானிகள் என்ன பாடுபடுவார்கள்? என்ன நிலையில் இருந்தார்கள்?" என்று கம்ப ராமாயணத்தில் வர்ணிக்கிறார்.
ராமபிரானின் தோளை முதலில்பார்த்தவர்களால், அவர்கள் கண்ணை அவர்களாலேயே திருப்ப முடியாமல், தோளையே பார்த்து கொண்டிருந்தனர்.
ராமபிரான் மிதிலா வீதியில் திருவடி வைத்து நடந்து கொண்டிருக்க, அந்த திருவடியை முதலில் பார்த்தவர்களால், வைத்த கண்ணை பிரட்ட முடியாமல், திருவடியையே பார்த்து கொண்டிருந்தனர்.
'அவதார காலத்தில் தான் பெருமாள் இப்படி இருந்தார்' என்று இல்லாமல், வைகுண்டத்திலும் "ஸதா பஸ்யந்தி சூரய: ! ஸதைக ப்ரிய தர்சன:" என்றபடி பெருமாளை எப்பொழுதும் நித்ய சூரிகள் பார்த்து கொண்டே இருக்கிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும், பார்த்து கொண்டே இருந்தாலும், மேலும் மேலும் உற்சாகமே உண்டாகுமே தவிர, ஆசை உண்டாகுமே தவிர, அலுக்கவே அலுக்காத படி பெருமாள் இருக்கிறார்.
பார்க்க பார்க்க பிரியம் வளரும். பிரியம் வளர வளர மேலும் மேலும் பார்க்க தோன்றும். பார்க்க பார்க்க மேலும் பிரியம் வளரும்
வேறு ஒரு அந்நிய விஷயத்தை நினைக்க கூட தோன்றாது. வேறொரு விஷயத்தை பற்றி நினைக்க ஆசை கூட எழும்பாது. எப்பொழுதும் பெருமாளையே நினைத்து கொண்டிருக்க தோன்றும் படியாக இருக்கிறார்.
மோக்ஷமடைந்த நித்யசூரிகள் மட்டுமே வைகுண்டத்தில் அனுபவிக்கும் இந்த அனுபவத்தை, ராம அவதார காலத்தில், பெருமாள் அயோத்தியில் இருந்த போதும், மிதிலாவில் இருந்த போதும், வனவாசியாக மரவுரி தரித்து அலைந்த போதும், பார்ப்பவர்கள் அனைவருக்குமே இதே நிலை, இதே அனுபவம் ஏற்பட்டது.
காட்டில் ராமபிரான் இருந்த போது, ரிஷிகள் மட்டுமல்லாது, காட்டு மிருகங்கள் உட்பட, ராமபிரானையே பார்த்த வண்ணம் இருந்தது.
சபல புத்தியே கொண்ட, இங்கும் அங்கும் தாவக்கூடிய வானரர்கள் கூட ராமபிரானை வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டே இருந்தனர்.
வானரர்கள் மட்டுமா? பார்த்த மாத்திரத்தில், நரமாமிசம் உண்ணும் சூர்ப்பனகை கூட மனதை பறி கொடுத்து, நாணத்தை விட்டு, ராமபிரானிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்தி கேட்கிறாள்.
தன்னை அடித்து வீழ்த்திய ராமபிரானிடம் நியாயம் கேட்க வேண்டும் என்று நினைத்த வாலீ, ராமபிரானை முதன்முறையாக பார்த்ததுமே, "பார்க்க பார்க்க ப்ரியம் வளரும்படியாக இருக்கிறீரே!" ("ப்ரிய தர்ஸனா") என்று ஆரம்பிக்கிறான்.
'தன் கணவன் வாலியை அடித்து வீழ்த்தியவர் இவர் தான்' என்று தெரிந்தும், ராமபிரானின் ரூபத்தை தரிசனம் செய்த மாத்திரத்தில், "இவரை போய் மனிதன் என்று சொல்லமுடியுமா? இயற்கைக்கு அப்பாற்பட்ட ரூப சௌந்தர்த்துடன் இருக்கிறாரே!" என்று பேச ஆரம்பித்து விடுகிறாள் தாரை.
தன் கணவன் ராவணனை வீழ்த்திய செய்தி கேட்டு அலறி அடித்து கொண்டு வரும் மண்டோதரி, ராமபிரானின் ரூபத்தை தரிசனம் செய்த மாத்திரத்தில், சமாதானம் அடைந்து, "சங்கு சக்கரம் ஏந்தி இருக்கும் பரம்பொருளே" என்று பேச ஆரம்பிக்கிறாள்.
இப்படி "அப்ராக்ருதமான அழகுடன் இருக்கும் ராமபிரானை மிதிலையில் பலர் பார்த்து மயங்கினார்கள்!
உண்மையில் பார்க்க வேண்டியவள் இன்னும் பார்க்கவில்லையே!
அந்த சீதாபிராட்டி அல்லவோ இவரை பார்க்க வேண்டும்."
என்று பரகாலநாயகி நினைத்தாள்.
இப்படி இருக்க, அன்று சீதாதேவி, சிற்பவேலைபாடுகள் அமைந்த வித விதமான பதுமைகள் வைக்கப்பட்டிருந்த தன்னுடைய மாளிகைக்கு வந்தாள்.
மாடியில் ஏறி, அங்கிருந்து, மிதிலா நகர வீதியை, அங்கு விளையாடும் சிறுவர்களை பார்ப்பது சீதாதேவிக்கு வழக்கம்.
அன்றும், சீதாதேவி மாடியில் தன் தோழிகளோடு விளையாடி கொண்டிருந்த போது, மிதிலா நகர வீதியில், ராமபிரானும், கூடவே லக்ஷ்மணரும் விஸ்வாமித்ரருடன் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
ராமபிரான் மிதிலா நகரத்தின் அழகை பார்த்து கொண்டே வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது, அந்த மாளிகையை பார்க்கிறார்.
அதில் வைக்கப்பட்டு இருந்த பதுமைகளை ஒவ்வொன்றாக பார்த்து கொண்டே வந்த ராமபிரான், 'தங்க பதுமை போல அழகான ஒரு பொம்மை' ஒன்று நிற்பதை கவனித்தார்.
'பொம்மை தான்' என்று பார்த்த ராமபிரான், அதன் கண்கள் மட்டும் அங்கும் இங்கும் அலைவதை கவனித்து விட்டார்.
பொதுவாக பெண்களை பார்க்க மாட்டார். ஸதாச்சாரம் உடையவர் ராமபிரான்.
'தான் பார்த்தது பொம்மை அல்ல' என்று தெரிந்ததும், உடனே மறுபக்கம் தலையை திருப்பி கொண்டார்.
அடுத்த அடி எடுத்து வைக்க முயன்றும் முடியாமல், சீதாதேவியின் பொன் போன்ற முகம் மனதில் தெரிய, என்ன செய்வதென்று தெரியாமல் தலையை அங்கும் இங்கும் திருப்ப, ராமபிரான் காதுகளில் அணிந்து இருந்த மகர குண்டலங்கள் அசைந்தன.
"உத்தம குலத்தில் பிறந்துள்ள நாம், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, அப்பா சொல்லும் பெண்ணை தான் விவாஹம் செய்து கொள்ள வேண்டும்" என்று நினைத்து இருந்தார் ராமபிரான்.
மனதை எப்பொழுதுமே தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும், மற்ற பெண்களை பார்க்கும் பழக்கமே இல்லாத ராமபிரானுக்கு, "இப்படி தன் மனது கட்டுப்பாட்டை இழந்து நிற்கிறதே. அப்பா பார்த்து தனக்கு விவாஹம் செய்து வைக்க வேண்டியிருக்க, இப்படி நாமே ஒரு பெண்ணை பார்த்தோம் என்று ஆகி விட்டதே! " என்று நினைத்ததும், ராமபிரானுக்கு கண்ணீரே வந்து விட்டது.
கூடவே வரும் லக்ஷ்மணர், ராமபிரான் கண்ணீரை பார்த்து விட்டு, "அண்ணா அங்கே என்ன பார்த்தார்? யாரை பார்த்தார்?" என்று பார்க்காமலேயே ஹ்ருதயத்தை புரிந்து கொண்டு விட்டார்.
உடனே அண்ணாவை பார்த்து, "அண்ணா! உங்கள் மனம் கலங்கவே கலங்காது. அப்படி ஒருவேளை கலங்கி இருந்தால், நீங்கள் பார்த்தது என்னுடைய மன்னியே தான். உங்கள் ஹ்ருதயம் என்றுமே பவித்ரமானது தான்" என்று சொல்ல, சமாதானம் அடைந்தார் ராமபிரான்.
இப்படி 'பதுமை' என்று ராமபிரான் பார்த்து இப்படி திகைத்து நின்ற சமயத்தில், சீதாதேவியும் ராமபிரானை பார்த்து விட்டாள்.
"ராமபிரானின் அழகை யாரெல்லாமோ பார்த்து பார்த்து மயங்குகிறார்களே!
ராமபிரானின் அழகை கண்ட சீதாதேவி எப்படி மயங்கி இருப்பாள்?'
என்று நினைத்த திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகி "சீதாதேவிக்கு என்ன அனுபவம் ஏற்பட்டது?" என்று பாடுகிறாள்.
பெருமாளை பார்த்த அனைவருக்கும் அவர் மேல் ப்ரியம் வளரும்.
ப்ரியம் வளர வளர மேலும் பார்க்க ஆசை ஏற்படும்.
பெருமாளிடம் நமக்கு ஏற்படும் ப்ரியத்துக்கு (காதலுக்கு) தான் "பக்தி" என்று பெயர்.
இந்த பக்தி சீதாதேவிக்கு பெருமாளை பார்த்ததுமே ஏற்பட்டு விட்டது.
பொதுவாக,
பெரியோர்களை பார்க்கும் போதும், வணங்கும் போதும், அவர்களை உச்சந்தலை ஆரம்பித்துபார்க்க கூடாது.
பெரியோர்களை பார்க்கும் போது, "முதலில் அவர்களுடைய திருவடியை தான் பார்க்க வேண்டும். பிறகு தான் அவர்களின் முகத்தை பார்க்கவேண்டும்".
இது பெரியோர்களிடம் மரியாதையாக பழகும் முறை.
ஒரு அரசனை பார்த்தாலும், இப்படி தான் பார்க்க வேண்டும்.
நம்முடைய ஆசாரியனை பார்த்தாலும், முதலில் அவருடைய திருவடியை பார்த்து விட்டு தான் அவருடைய முகத்தை பார்க்க வேண்டும்.
தெய்வத்தை பார்த்தாலும், முதலில் திருவடியை பார்த்து விட்டு தான், அவருடைய திருமுகத்தை பார்க்க வேண்டும்.
இந்த பாசுரத்திலோ, ராமபிரானின் கேசத்தில் ஆரம்பித்து திருவடி வரை வர்ணனை உள்ளது.
திருவடியை பார்த்து விட்டு, முகத்தை பார்ப்பது என்பது "மரியாதை".
முகத்தை பார்த்து விட்டு, பிறகு வெட்கப்பட்டு தலை குனிந்து திருவடியை பார்ப்பது என்பது "ப்ரேமை".
இந்த ப்ரேமையை கிருஷ்ண அவதாரத்திலும் பார்க்கிறோம்.
ஸ்ரீமத் பாகவதத்தில், பலராமனோடு வந்த கண்ணன் வேணுகானம் செய்து கொண்டே பிருந்தாவனத்துக்குள் பிரவேசிக்க, அதை கோபியர்கள் பார்க்கிறார்கள்.
குழல் ஊதும் கண்ணனை, மயில் இறகிலிருந்து திருவடி வரை கோபியர்கள் பார்க்கிறார்கள்.
बर्हा-पीडं नटवर-वपु:
कर्णयो: कर्णिकारं
बिभ्रद् वास: कनक-कपिशं
वैजयन्तीं च मालाम् ।
रन्ध्रान् वेणो: अधर-सुधया
पूरयन् गोप-वृन्दै:
वृन्दारण्यं स्वपद-रमणं
प्राविशद् गीत-कीर्ति ||
- SrImad-BhAgavatam
கிருஷ்ண அவதாரத்துக்கு முன் ராம அவதாரம் இருப்பதால், கோபியர்களுக்கும் வழிகாட்டியாக சீதாதேவி இருக்கிறாள்.
இங்கு "சீதாதேவி என்ற நாயகி பெருமாளின் முகத்தை ப்ரியத்தோடு பார்த்து, பிறகு வெட்கி தலை குனிந்து அவர் திருவடியை பார்க்கிறாள்" என்பதை கவனித்த மற்றொரு நாயகியான 'பரகால நாயகி', சீதாதேவி பார்த்ததை இங்கு வர்ணிக்கிறாள்.
பொதுவாக, பிரம்மச்சாரிகள் தலையில் எண்ணெய் வைத்து கொள்வதில்லை. மேலும், நறுமணமிக்க பூக்களை அணிந்து கொள்வதுமில்லை.
மிதிலைக்கு வந்த போது ராமபிரான் பிரம்மச்சாரி.
பல நாட்களாக விஸ்வாமித்ரருடன் அயோத்தியிலிருந்து கிளம்பி, வந்து கொண்டு இருக்கிறார்.
மல்லிகை, சந்தனம் என்று நறுமணங்கள் பல விதமுண்டு.
அதில், சில நறுமணங்கள் அளவுக்கு அதிகமாக நெடியை உண்டாக்கினால், அதுவே தும்மல் கூட ஏற்படுத்தும்.எரிச்சல் உண்டாக்கும்.
ராமபிரானுடைய கேசத்தில் இயற்கையாகவே ஒரு தெய்வீக நறுமணம் நாற்புறமும் வீசும்.
அந்த நறுமணம் அளவுக்கு அதிகமாக வீசினாலும், நெடி உண்டாக்காமல், பெரும் ஆனந்தத்தை உண்டாக்கும்.
ராமபிரான் சீதாதேவி இருக்கும் மாளிகை பக்கம் வந்ததும், அவர் கேசத்திலிருந்து கம கமவென்று ஒரு நறுமணம் (நறு) வீச, 'விளையாடி கொண்டிருந்த சீதாதேவி, "அது என்ன சுகந்தம்?" என்று பார்க்க, மாடத்திலிருந்து குனிந்து மிதிலா 'நகரவீதியை பார்த்தாள்' என்று பரகால நாயகி கண்டு சொல்கிறாள்.
"எங்கிருந்து இந்த நறுமணம் வருகிறது?" என்று தேடிய சீதாதேவி, மிதிலா வீதியில் நடந்து வரும், ராமபிரானின் கேசத்தை பார்த்துவிட்டாள்.
'தான் அனுபவித்த அந்த நறுமணம் (நறு) அவருடைய கேசத்திலிருந்து தான் வருகிறது' என்று உணர்ந்த சீதாதேவி, அவருடைய கேசத்தை கண்டு மயங்கி விட்டாள்.
எண்ணெய் தடவாத கேசமாக இருந்தாலும், கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மை வண்ணத்தில் (மை வண்ணம்), நல்ல கருகருவென்று, இயற்கையான கருப்புடன் அடர்த்தியாக ராமபிரான் கேசம் இருப்பதை சீதாதேவி பார்க்கிறாள்.
மேலும்,
ஒவ்வொரு கேசமும் மூன்று சுருட்டைகளுடன் (त्रिशीर्ष:) (குஞ்சி) தோள் வரை நீண்டு வளர்ந்து (குழல் பின் தாழ) இருந்ததையும், சீதாதேவி கவனிக்கிறாள்.
ரத்தினங்கள் பல உண்டு.
பல வருடங்கள் வாழ்ந்த நாகத்திடம் 'நாகரத்தினம்' உண்டாகும்.
க்ஷத்ரியர்கள் பிறரிடம் யாசகம் வாங்கிஆபரணங்கள் அணிந்து கொள்ள மாட்டார்கள்.
தானே யானையை அடக்கி, விஷமுள்ள கருநாகத்தை அடக்கி, முதலையை அடக்கி, அதில் கிடைக்கும் ரத்தினத்தை எடுத்து குண்டலமாக, மாலையாக அணிந்து கொள்வார்கள்.
மஹா வீரர்கள் என்று அடையாளம் காட்ட, இது போன்ற குண்டலங்கள் அணிவார்கள் க்ஷத்ரியர்கள்.
ராமபிரானின் சுகந்தமான, கிருஷ்ணமான (கருமையான), குஞ்சித (சுருண்ட) கேசத்தை பார்த்த சீதாதேவி, அந்த கருமையான கேசத்தில் பளீச் பளீச்சென்று மின்னல் போல அவருடைய இரு காதுகளிலும் (இரு பாடு) மகர குண்டலங்கள் (மகரம் சேர் குழை) அலைவதையும் (இலங்கி ஆட) பார்க்கிறாள்.
சீதாதேவி மாடத்திலிருந்து மிதிலா வீதியை பார்க்கும் போது, "ராமபிரான் முகத்தை தானே முதலில் பார்த்து இருக்க வேண்டும்? சீதாதேவி கேசத்தை எப்படி முதலில் பார்த்து இருக்க முடியும்?"
என்ற கேள்விக்கு சேங்கனூரில் அவதரித்த பெரியவாச்சான்பிள்ளை அர்த்தம் சாதிக்கிறார்.
எங்கிருந்து இந்த சுகந்தம் வருகிறது? என்று அங்கும் இங்கும் சீதாதேவியின் கண்கள் அலைந்த போது, ராமபிரான் "தங்க பதுமை" என்று நினைத்து சீதாதேவியை பார்த்து விட்டார்.
"இது பொம்மை அல்ல" என்று அறிந்ததும், ராமபிரான் தலையை திருப்பி கொள்ள, அந்த சமயத்தில் சீதாதேவி "ராமபிரானின் கேசத்தை தரிசித்தாள்"
என்று ஆழ்வாரின் ஹ்ருதயத்தை பெரியவாச்சான் பிள்ளை நமக்கு காட்டுகிறார்.
"பல வருடங்களாக வாழும் முதலையில் இருந்து கிடைத்த மகர ரத்தினத்தை ராமபிரான் அணிந்து இருக்கிறார்" என்று ஆழ்வார் சொல்கிறாரே?
ராமபிரான் எந்த முதலையை அடக்கினார்? என்று கேட்டால், அது இந்த அவதாரத்தில் நடந்தது இல்லையாம்.
தான் நாராயணனாகவே இருக்கும் போது, கஜேந்திரன் "ஆதிமூலமே" என்று காப்பாற்ற அழைத்த போது, ஒரு முதலையை வதம் செய்தாரே! அந்த முதலையிடமிருந்து கிடைத்த மகர குண்டலத்தை தான், தன்னுடைய ராம அவதாரத்திலும், கிருஷ்ண அவதாரத்திலும் அணிந்து கொண்டாராம்.
இந்த மகர குண்டலத்தை தன்னுடைய வீரத்தை மட்டும் காட்ட அணியவில்லையாம். தானே ஆதிகர்தா என்று உலகுக்கு காட்டவும், அவதார காலத்திலும் அணிந்து கொண்டாராம்.
ராமபிரானின் காதில் அணிந்து இருக்கும் மகர குண்டலங்களை பார்த்த சீதாதேவி, ராமபிரானை போன்றே இருக்கும், வெளுப்பாக இருக்கும் இளையவரான லக்ஷ்மணரும், கூடவே துணையாக (எய்வண்ண வெஞ்சிலையே துணை ஆ) வருவதையும் பார்க்கிறாள் சீதாதேவி.
சூர்ப்பனகை ராமபிரானை பார்த்ததுமே, "மணந்து கொள்ள வேண்டும்" என்று ராமபிரானிடம் கேட்டு விடுகிறாள்.
'நான் ஏக பத்னி வ்ரதமுடையவன்' என்று ராமபிரான் சொல்ல,
"ஒரு பத்னியுடன் தானே இருக்க வேண்டும். சீதையை ஒழித்து விடுகிறேன். நான் மட்டும் உங்களுக்கு ஏக பத்னியாக இருக்கிறேன்" என்றாள்.
இப்படி அநாகரிகமாக பேசும் இவளிடம் மேலும் பேச கூசினார் ராமபிரான்.
உடனே அருகில் இருக்கும் லக்ஷ்மணரை காட்டி, "அதோ என் இளைய சகோதரன். இப்போது மனைவி கூட இல்லை. என்னை போல விரதமும் கிடையாது. அவனிடம் பேசி பார்" என்று சொல்லிவிட்டார்.
திரும்பி பார்த்த சூர்ப்பனகை, "அடடா! இவர் கருநீலமாக இருக்கிறார். இளையவர் இவரை போலவே இருக்கிறார். நல்ல சிவப்பாக இருக்கிறாரே! இவரையே மணந்து கொள்வோம்" என்று நினைத்து, லக்ஷ்மணரிடம் சென்று, "உங்கள் அண்ணா, உங்களுக்கு என்னை நிச்சயம் செய்து இருக்கிறார். என்னை மணந்து கொள்ளுங்கள்" என்றாள்.
ஒரு பதிவ்ரதை இப்படி செய்வாளா?
மிதிலா வீதியில் ராமபிரான், இளையவரோடு இருவராய் வந்தும், சீதாதேவியின் கண் முன்னே ராமபிரான் மட்டுமே நின்றார் (இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்) என்று பரகால நாயகி சீதாதேவியின் பதிவ்ரதா தர்மத்தை பார்த்து சொல்கிறாள்.
இப்படி இளையவரோடு வந்து நிற்கும் ராமபிரானை பார்த்த சீதாதேவி, கோதண்டத்தை பிடித்து இருக்கும் திருக்கைகளை கவனித்தாள்.
அந்த உள்ளங்கைகள் செந்தாமரை வண்ணத்தில் இருக்க (கைவண்ணம்தாமரை), அந்த சமயம் ராமபிரானின் முகமும் தெரிய, அவருடைய உதடும் சிவந்த தாமரை போல இருப்பதை பார்த்த (வாய் கமலம் போலும்), சீதாதேவி, தைரியத்தை வரவழைத்து கொண்டு, தலை தூக்கி, பெருமாளின் கண்களையும் பார்த்து விட்டாள்." என்கிறாள் பரகால நாயகி.
"பெருமாளின் வக்ஷஸ்தலத்தை, முகத்தை நேருக்கு நேராக பார்க்க எனக்கு தகுதி இல்லை. சீதாதேவிக்கு மட்டுமே அந்த தகுதி" என்று ஆளவந்தார் அனந்தபத்மநாபனின் திருவடியை மட்டும் சேவித்து விட்டு திரும்பினார் என்று பார்க்கிறோம்.
'சரணாகதி செய்தவனுக்கு, பெருமாள் காட்சி கொடுத்தால்,' அது நியாயம்.
சரணாகதி செய்வதற்கு முன்பேயே, வலிய வந்து பெருமாள் காட்சி கொடுத்தால்?,... சாகஷாத்காரம் பெற்றவன் "கைமாறு செய்ய முடியவில்லையே!" என்று எப்படி தவித்து, அவர் திருவடியை பார்ப்பானோ!
அது போல, தானே மிதிலா நகருக்குள் வந்து, தான் பார்ப்பதற்கு முன்பேயே அவர் பார்த்து, இப்பொழுது தனக்கு முன்னால் வந்து நிற்கும் ராமபிரானை கண்டதும், ஒரு பக்தையை போல உருகி, சீதாதேவியும் பெருமாளின் கண்ணை பார்த்த பிறகு, அவருடைய திருவடியை பார்த்தாள்" என்கிறாள் பரகால நாயகி.
மேலும்,
அந்த கண்களின் ஓரத்தில் இளம்சிவப்பு ஓடி, தாமரை போன்று குளிர்ச்சியாக இருக்க (கண் இணையும்அரவிந்தம்), பெண் என்பதாலும், அச்சம், மடம், நாணம் உள்ள சீதாதேவியின் கண்கள், அதற்கு மேல் பார்க்க தைரியத்தை இழந்து, தானாகவே கண்கள் தாழ்ந்து, பெருமாளின் திருவடியை பார்த்தது.
'அந்தோ! அந்த திருவடியும் தாமரை போன்று சிவந்து இருக்க' (அடியும் அஃதே), சீதாதேவி மனதை ராமபிரானிடம் பறிகொடுத்தே விட்டாள்.' என்கிறாள் பரகால நாயகி.
"இப்படி பார்த்தவர்கள் மயங்கும் பேரழகு உடைய பெருமாளிடம் நாம் அனைவரும் ப்ரேமை கொள்ளாமல், இது நாள் வரை ஏதோ பரதெய்வம் என்று தூர நின்றிருந்தோமே!" என்று தன் தோழியிடம் சொல்கிறாள்.
பெருமாள் இரண்டு விதமாக இருப்பார்.
"நாராயணன்" என்று பார்ப்பவர்களுக்கு, நெருங்க முடியாதபடி 'தேவாதி தேவனாக' இருப்பார். மரியாதையோடு பழக தோன்றும்.
"நம் கண்ணன், நம் ராமன்" என்று பார்ப்பவர்களுக்கு, சுலபமாக யாவரும் நெருங்கும்படி, 'நாயகனாக' இருப்பார். ப்ரேமையோடு பழக தோன்றும்.
இப்படி சீதாதேவியின் நிலையை அருகில் நின்று கொண்டு பார்த்த பரகால நாயகி, "இவரை தேவன் என்று நினைத்தோமே! இவர் நமக்கும் நாயகன் அல்லவோ" என்று நினைத்தாள்.
இவர் நம்முடைய நாயகன் என்று அறிந்தும், நெருங்க முடியாமல், ஒரு வித அச்சம் ஏற்பட்டதாம் பரகாலநாயகிக்கு.
"கையில் கோதண்டத்துடன் இருக்கிறாரே! கையில் கோதண்டம் இருக்கும் போது, இவரை சீதாதேவி மட்டும் தானே நெருங்க முடியும்.
ஏகபத்னி வ்ரதனான இவரிடம் சூர்ப்பனகை தன் ஆசையை சொல்லி என்ன பாடு பட்டாள் என்று அனைவருக்கும் தெரியுமே!!
இவருடைய இதயத்தில் சீதாதேவிக்கு மட்டுமே இடம் என்று தெரிந்த பின், இந்த நாயகனிடம் தன் விருப்பத்தை எப்படி சொல்வது என்று அஞ்சினோமே! என்கிறாள் பரகால நாயகி. (அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும், தோழீ! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே)
'அஞ்சினோமே' என்று சொல்லி பரகாலநாயகி, வயலாலி மணவாளனை பார்க்காமல் திரும்பி கொண்டாள்.
இவ்வாறு கடைசி 10 பாசுரங்களில், முதல் பாசுரத்தில், திருமங்கையாழ்வார், தானே பரகால நாயகியாக ஆகி, சீதாதேவிக்கு அன்று ஏற்பட்ட அனுபவத்தை நமக்கு காட்டி விட்டார்.