Followers

Search Here...

Monday, 7 December 2020

ஆபஸ்தம்ப ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே.. "ஆபஸ்தம்ப" என்றால் என்ன அர்த்தம்? நம் ரிஷிகளின் பெருமையை...

ஒரு சமயம், 
வேதம் கற்ற ப்ராஹ்மணர் ஒருவர் தன் கிரஹத்தில் ஸ்ராத்தம் (திவசம்) செய்தார். 
  
பித்ருக்களுக்கு கொடுக்கும் உணவை ஏற்று, போஜனம் செய்விக்க ஒரு பிராஹ்மணருக்காகக் காத்திருந்தார்.

வெகு நேரம் கழித்து ஒரு பிராஹ்மணர் வந்தார். 
அவர் நல்ல பசியுடன் இருந்தார். 
அவரை அமர்த்தி இலை போட்டு, தானே பரிமாறினார் கர்தா. 

வந்த பிராஹ்மணர், சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். 




"ப்ராஹ்மணனுக்கு நல்ல பசிபோலும்" 
என்று எண்ணி இவரும் கேட்கக் கேட்கப் போட்டார். 

போடப் போட அனைத்தும் ஒரு நொடியில் காலியாயிற்று!

கர்தாவின் கண்களில் முதலில் இருந்த 'வினயம்' மறைந்து 'ஏளனம்' குடிகொண்டது. 
அதைத் தன் செயல்களிலும் காட்டினார். 

அதைப் பொருட்படுத்தாத அதிதி 'இன்னும் போடு!¸ 'இன்னும் போடு!' என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

"அபரிதமாக உண்டும் திருப்தியடையாமல் தனக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுக்க இவர் வந்திருக்கிறார்" 
என்று கர்தா நினைத்தார். 

சமைத்தவை எல்லாம் காலியாகிவிட்டன! 

'இன்னும் வேண்டும்! கொண்டு வா!' 
என்று பிராஹ்மணர் கேட்கவே கர்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது. 

காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டுவந்து பிராஹ்மணரின் இலையின் மேல் கவிழ்த்து 'திருப்தியாயிற்றா!?' 
என்று கேட்டார். 

(போஜனம் முடிந்தபோது கர்தா பிராஹ்மணர்களை 'த்ருப்தாஸ்தா' என்று கேட்கவேண்டும். 
திருப்தியடைந்த ப்ராஹ்மணர்கள் 'த்ருப்தாஸ்ம:' என்று சொல்ல வேண்டும்.
அப்பொழுதுதான் ஸ்ராத்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று அர்த்தம்) 

ஆனால் அந்த பிராஹ்மணர் 'ந' ('எனக்கு திருப்தி இல்லை') என்று சொன்னார்! 
 
கர்தாவுக்கு கோபம் தலைக்கேறியது. 
'இவர் கேட்க கேட்க கொண்டு வந்து கொட்டினேனே! 
மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு திருப்தி இல்லை! என்று சொல்லி, என்னை அவமானப்படுத்தி, 
நான் செய்த ஸ்ராத்தத்தையும் இந்த பிராஹ்மணர் கெடுத்துவிட்டாரே!!' 
என்று சினந்தார். 

கர்தா நல்ல தபஸ்வி. 

கோபத்தால் முகம் சிவந்த அவர், சாபம் கொடுக்க, கையில் ஜலத்தை எடுத்து அபிமந்திரித்து பிராஹ்மணரின் தலையில் எறிந்தார். 

அப்பொழுது தான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. 

வந்த பிராஹ்மணர் தன் கை அசைவினால் அபிமந்திரித்து எறிந்த ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தினார்! 

கர்தா இதைப் பார்த்து பிரமித்து நின்றார். 

தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல¸ தன்னை விட உயர்ந்தவர் என்பதை அறிந்தார். 

'பூஜ்யரே! நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்?' 
என்று கேட்டார்.

அதற்கு அந்த பிராஹ்மணர், 
'நான் ஒரு முனிவன். நான் அதிகம் உண்டதால் என்னை ஏளனம் செய்தாய்.
உன் பார்வைகளாலும், செயல்களாலும் என்னை அவமதித்தாய்.

'ஸ்ராத்தத்திற்கு வரும் பிராமணர்களிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை வைத்து பகவான் அனுப்புகிறான்' 
என்பதை மறந்து நீ நடந்து கொண்டாய்.

உனக்கு புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். 

'ஸ்ரார்த்தம்' என்றாலே 'சிரத்தை' (ஈடுபாடு) என்று அர்த்தம்.
உன் தகப்பனுக்கு செய்ய, எத்தனை ஈடுபாட்டுடன் நீ இருக்கிறாய், என்பதே முக்கியம்.
எத்தனைக்கு எத்தனை சிரத்தையுடன் செய்கிறாயோ, அத்தனைக்கு அத்தனை பலன் பித்ருக்களிடமிருந்து உனக்கு கிடைக்கிறது.

ஸ்ராத்தத்தை பய பக்தியுடன் கோப தாபங்களை விட்டுச் செய்!' 
என்றார். 

அதற்குக் கர்தா¸ 
'ஸ்வாமி! என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். க்ஷமியுங்கள். 
இனி இம்மாதிரித் தவறுகளைச் செய்யமாட்டேன். 
நான் செய்த ஸ்ராத்தம் பூர்ணமாகவில்லையே! 
அதற்கு என்ன செய்ய வேண்டும்?' 
என்று வினவினார். 

அதற்கு அந்த பிராஹ்மணர்¸
"நான் 'ந' என்று சொல்லி ஸ்ராத்தம் பூர்ணமாகாமல் இருக்கிறது. 
புருஷ சூக்தம் பாராயணம் செய்! 
இந்த தோஷம் பரிகாரம் ஆகும்!" 
என்றார். 




அதை பாராயணம் செய்து ஸ்ராத்தத்தை முடித்தார் கர்தா.

ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியதால், அவரை "ஆபஸ்தம்பர்" என்று அழைத்தார்கள். 

ஸ்ராத்த காலத்தில், புருஷ சூக்தமும், காடகோபநிஷத்தும் பாராயணம் செய்யும் நியமம் இருக்கிறது. 

"ஆப" என்றால் நீர்
நீரை ஸ்தம்பிக்க வைத்து அந்தரத்தில் நிறுத்தியதால் அவர் ஆபஸ்தம்பரானார்
ஆபஸ்தம்பரின் சூத்ரம் பிரசித்தமானது. 

அதில் சில சூத்திரங்களை தெரிந்து கொள்ள, இங்கே படிக்கலாம்.

Sunday, 6 December 2020

குருவிடம் எப்படி பழக வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். சிலவற்றை தெரிந்து கொள்வோமே..

குருவிடம் எப்படி பழக வேண்டும்? 
'ஆபஸ்தம்ப ரிஷி' சொல்கிறார். தெரிந்து கொள்வோமே.. 
1.
ந ச ஏனம் அபிப்ரசாரயீத 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன் கால் நீட்ட கூடாது. 

2. 
கச்சந்தம் அனுகச்சேத் அணுகம்
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு நடந்தால், அவருக்கு பின்னால் நடக்க வேண்டும். 




3.
தாவந்தம் அனுதாவேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஓடினால், அவரை தொடர்ந்து ஓட வேண்டும் 

4. 
ந ஸ உபான: வேஷ்டிதசிரா அவஹித பானிர் அவதா வா ஆசீதேத் | 
அத்வா ஆபன்னாஸ் து கர்ம யுக்தோ வா ஆசீதேத் || 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகை வைத்து கொண்டோ போக கூடாது. 
ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க நேர்ந்தால், தவறில்லை. 

5. 
ந சேத் உபசீதேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு மிக அருகில் அமர கூடாது. 

6. 
தேவம் இவ ஆசார்யம் உபாசீத அவிகதயண் 
அவிமனா வாசம் சுஸ்ரூசமானோ ஸ்ய 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது. அவர் சொல்வதை கவனத்துடன், ஆசையுடன் கேட்க வேண்டும். 

7. 
அனுபஸ்த க்ருத: 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன், ஒரு கால் மேல் போட்டு கொண்டு அமர கூடாது. 

8. 
அணுவாதி வீத: 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
காற்று நம் மீது பட்டு பிறகு அவர் மீது படும் படி இருக்க கூடாது. உடனேயே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடமாக பார்த்து அமர வேண்டும். 


9. 
அப்ரதிஷ்டப்த: பாணினா 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, கையை ஊன்றிக்கொண்டு இருக்க கூடாது. 

10. 
அனபஸ்ரிதோ நியத்ர 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, எதிலும் சாய்ந்து கொண்டு இருக்க கூடாது. 

11. 
அபிமுகோ ந அபிமுகம் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவின் முகம் பார்த்து இருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் குருவின் முகத்துக்கு எதிரே இருக்க கூடாது. 

12. 
அனாஸன்னோ ந திதூரே | 
யாவத் ஆசீனோ பாஹுப்யாம் ப்ராப்நுயாத் || 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு மிக அருகிலோ, மிகவும் தூரத்திலோ அமர கூடாது. 
குரு கையை உயர்த்தி கூப்பிடும் தூரத்தில் அமர வேண்டும். 

13.
ஏக அதயாயீ தக்ஷிணம் பாஹும் ப்ரதி உபசீதேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
ஒரே ஒரு சிஷ்யனாக இருக்கும் சமயத்தில், குருவுக்கு வலது பக்கம் அமர வேண்டும். 

14. 
யதா அவகாசம் பஹவ: 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன்னால் பலர் இருந்தால், அவரவர் சௌகர்யத்துக்கு அமர்ந்து கொள்ளலாம். 

15. 
திஷ்டதி ச ந ஆசீத அனாசன யோக விஹிதே | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு நிற்கும் போது, அமர்ந்து இருக்க கூடாது. 
குருவுக்கு அமர இடம் இல்லாத சமயத்தில், தனக்கு இடம் கிடைத்தாலும் அமர கூடாது. 

16. 
ஆசீனே ச ந சம்விசேத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஆசனத்தில் அமராமல் தரையில் அமர்ந்து இருக்கும் போது, நாம் ஆசனத்தில் (chair) அமர கூடாது. 

17. 
சேஷ்டதி ச சிகீர்ஷன் தச் ஷக்தி விசயே 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஏதாவது காரியத்தை செய்ய முனையும் போது, சிஷ்யனின் அனுமதியை பொறுத்து, தன்னால் முடிந்த வரை உதவி செய்யலாம்.. 

18. 
ந ச யஸ்ய சகாஸே ந வக் ஸ்தானினம் உபசம்க்ருஹ்நீயாத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு இருக்கும் போது, அவருக்கு கீழ் உள்ள எவருக்கும் (பெரியோர்கள் ஆனாலும், தகப்பனே ஆனாலும்) காலில் விழ கூடாது. 

19. 
கோத்ரேன வா கீர்த்தயேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
தன் கோத்திர பெருமையை குருவுக்கு முன் பேச கூடாது. 

20. 
ந ச ஏனம் ப்ரதி உத்திஷ்ட்டே அனூத்திஷ்ட்டே வா | 
அபி சேத் தஸ்ய குரு ஸ்யாத் | 
தேசாத் த்வ ஆசனாச் ச சமஸர்பேத் | 
யஸ்மிம்ஸ் த்வ அனாசார்ய சம்பந்தாத் கௌரவம் 
வ்ருத்திஸ் தஸ்மின் அன்வக் ஸ்தாநீய பை ஆசார்யஸ்ய |
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
தன் குருவை மீறி அவரை விட தாழ்ந்த தகுதி உள்ள குருவை சந்திக்க கூடாது, அல்லது அவர்களை தன் குருவுக்கு இணையாக உயர்த்த கூடாது. 
குருவின் குருவே வந்தாலும் சரி. இது தன் குருவுக்கு அவமானம் செய்ததாகும். தேவைப்பட்டால், அமைதியாக அந்த இடத்தை விட்டு அப்போதைக்கு நகர்ந்து விடலாம். அல்லது, தன் குருவுக்கு கொடுக்கும் மரியாதை கொடுக்கலாம். 




21. 
ந ஸ்மயேத | 
யதி ஸ்மயேத அபிக்ருஹ்ய ஸ்மயேத இதி ஹி ப்ராஹ்மணம் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
வாயை திறந்து கொட்டாவி விட கூடாது. 
அப்படி நேர்ந்தாலும் குனிந்து, வாயை கையால் மூடிக்கொள்ள வேண்டும் 

22. 
விசம கதே த்வம ஆசார்ய உக்ரதா: சூத்ரதோ வா ஆஹரேத் | 
சர்வதா சூத்ரதா உக்ரதோ வா ஆசார்ய 
அர்தஸ்ய ஆஹரணம் தார்ம்யம் இதி ஏகே | 
தத்வா ச ந அனுகதயேத் | 
க்ருத்வா ச ந அனுஸ்மரத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
தன்னால் முடிந்தவரை சம்பாவனை செய்தும், குரு முழுதிருப்தி அடையவில்லை என்றால், வைஸ்யர்களிடமோ (business class), சூத்திரர்களிடமோ (employee class) யாஸித்து தானம் வாங்கி திருப்தி செய்யலாம். 
தேவைப்பட்டால், முழு சம்பாவனையுமே வைஸ்யர்களிடமோ (business class), சூத்திரர்களிடமோ (employee class) யாஸித்து தானம் வாங்கி திருப்தி செய்யலாம். குருவுக்கு கொடுத்ததை பெருமை பேசி கொள்ள கூடாது. 
குருவுக்கு செய்த சம்பாவனையை மறந்து விடுவது நல்லது. 

23. 
ஸய்யா ஆசனே ச ஆசரிதே ந ஆவிசே |  
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு அமர்ந்த ஆசனத்தில் அமர கூடாது. 

24. 
ந அநபிபாஷிதோ குரும் அபிபாஷேத ப்ரியாத் அன்யத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு கூப்பிடாமல், நல்ல விஷயத்தை தவிர மற்ற எதுவும் அவரிடம் சென்று பேச கூடாது. 

25. 
சமாவ்ருத்தஸ்ய அபி ஏதத் ஏவ சாமயாசாரிகம் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவிடம் உபதேசம் பெற்று, வீடு திரும்பினாலும், அவரிடம் பழகும் விதம் கடைசி மூச்சு வரை கடைபிடிக்க வேண்டும். 

26. 
சஹ வசன் சாயம் ப்ராத: 
அநாஹுதோ குரும் தர்சன அர்தோ கச்சேத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஒரே ஊரில் இருந்தால், அவர் கூப்பிடாமலேயே காலையும் மாலையும் அவரை பார்க்க செல்ல வேண்டும். 

27. 
முஹும்ஸ் ச ஆசார்ய குலம் தர்சன அர்தோ கச்சேத் 
யதா சக்தி அதிஹஸ்த்யம் ஆதாய அபி தந்த ப்ரக்ஸாலனானி இதி | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு வேறு ஊரில் இருந்தால், முடிந்தவரை அடிக்கடி அவரை பார்க்க செல்ல வேண்டும்.
தன் கையால் அவருக்கு ஒரு வேப்பங்குச்சியாவது பல் துலக்க கொடுக்க வேண்டும்.

குருநாதர் துணை

வேதம் படிக்கும் காலத்தில், எப்படி பிக்ஷை கேட்க வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்..

ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்..

1.

பவத் பூர்வயா ப்ராஹ்மனோ பிக்ஷேத் !

  - ஆபஸ்தம்ப சூத்திரம்


வேதம் படிக்கும் 'ப்ராம்மண' பிள்ளை, பிக்ஷை கேட்கும் போது, தாயே (பகவதி) என்று முதலில் சொல்லி கேட்க வேண்டும்.

(பவதி பிக்ஷாம் தேஹீ).


ப்ராம்மண வீட்டில் மட்டும் தான் கேட்க வேண்டும். கிடைக்காவிட்டால், அன்று பட்டினி கிடக்க வேண்டும், அல்லது குரு என்ன கொடுக்கிறாரோ அதை சாப்பிட வேண்டும்)


2.

பவத் மத்யயா ராஜன்யா

  - ஆபஸ்தம்ப சூத்திரம்


வேதம் படிக்கும் 'க்ஷத்ரிய' பிள்ளை, பிக்ஷை கேட்கும் போது, தாயே (பகவதி) என்று நடுவில் சொல்லி கேட்க வேண்டும்.

(பிக்ஷாம் பவதி தேஹீ).


ப்ராம்மண, க்ஷத்ரிய வீட்டில் மட்டும் தான் கேட்க வேண்டும். கிடைக்காவிட்டால், அன்று பட்டினி கிடக்க வேண்டும் அல்லது குரு என்ன கொடுக்கிறாரோ அதை சாப்பிட வேண்டும்)





3.

பவத் அந்த்யயா வைஸ்ய:

 - ஆபஸ்தம்ப சூத்திரம்


வேதம் படிக்கும் 'வைஸ்ய' பிள்ளை, பிக்ஷை கேட்கும் போது, தாயே (பகவதி) என்று கடைசியில் சொல்லி கேட்க வேண்டும்.

(பிக்ஷாம் தேஹீ பவதி).


ப்ராம்மண, க்ஷத்ரிய, வைஸ்ய வீட்டில் மட்டும் தான் கேட்க வேண்டும். கிடைக்காவிட்டால், அன்று பட்டினி கிடக்க வேண்டும் அல்லது குரு என்ன கொடுக்கிறாரோ அதை சாப்பிட வேண்டும்)

Saturday, 5 December 2020

For Business/Spiritual/Defence Class people (excluding employee) - 'உபநயனம் எப்பொழுது செய்து கொள்ள வேண்டும்?' என்று ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

ஆபஸ்தம்ப சூத்திரம் என்ன சொல்கிறது?

வஸந்தே ப்ராஹ்மனம் உபனயித க்ரிஷ்மே ராஜன்யம் 

சரதி வைஸ்யம்

கர்பாஸ்தமேசு ப்ராஹ்மனம் 

கர்பைகாதசேசு ராஜன்யம்

கர்ப த்வாதசேசு வைஸ்யம் 

   - ஆபஸ்தம்ப ரிஷியின் சூத்திரம்


'சூத்திர' என்ற சொல்லுக்கு அர்த்தத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.





ப்ராம்மணர்கள் (ப்ரம்மத்தை உபாசிப்பவர்கள்) வசந்த ருது (இளவேனில் காலம்)(spring) காலத்தில் (April to June) உபநயனம் போட்டுக்கொள்ள வேண்டும்.


க்ஷத்ரியர்கள் (காவலர்கள்) கிருஷ்ம ருது (முதுவேனில்காலம் வெயில் காலம் / summer) காலத்தில் (June to August) உபநயனம் போட்டுக்கொள்ள வேண்டும்.


வைஸ்யர்கள் (வியாபாரிகள்) சரத் ருது / குளிர்காலம் (autumn) காலத்தில் (October to December) உபநயனம் போட்டுக்கொள்ள வேண்டும்.


ப்ராம்மணர்கள் -> 8 வயதிலும்.

க்ஷத்ரியர்கள் -> 11 வயதிலும்.

வைஸ்யர்கள் -> 12 வயதிலும்

உபநயனம் போட்டுக்கொள்ள வேண்டும்.


சப்தமே ப்ரஹ்ம வர்சஸ காமம்

- ஆபஸ்த்மப சூத்ரம்

மிக முக்கியமாக, 

ஏழு வயதில், ப்ரம்மத்தை பற்றி அறிந்து கொள்ள ஆவலை வளர்க்க வேண்டும்.


On Upanayana :

Brāhmaṇa be initiated in spring, 

Kṣhatriya in summer, 

Vaiśya in autumn, 


Brāhmaṇa in the eighth year of age, 

Kṣhatriya in the eleventh year,

Vaiśya in the twelfth year.

தொட்டாச்சாரியார் கைங்கர்யம் செய்த தக்கான் பெருமாள்... பாசுரம் (அர்த்தம்) - "மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை". சோளிங்கர் பெருமாளுக்கு திருமங்கையாழ்வார் இங்கு மங்களாசாசனம் செய்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே!! !

சப்தரிஷிகளுக்கும் குருவாக கடிகாசலத்தில் இருக்கும் யோக ஆஞ்சநேயர், வழிபட்ட யோக நரசிம்மர் இன்றும் கடிகாசலத்தில் வீற்று இருக்கிறார்.

திருகடிகை என்றும் கடிகாசலம் என்றும் சோளிங்கர் என்றும் அழைக்கப்படும் இந்த திவ்ய தேசம், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட புண்ணிய க்ஷேத்திரம்.

திருமங்கையாழ்வார் இந்த திவ்ய தேசத்துக்கு வந்து மங்களாசாசனம் செய்த பாசுரம்:

மிக்கானை 

மறையாய் விரிந்த விளக்கை 

என்னுள் புக்கானை

புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை தக்கானை

கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை 

அடைந்து உய்ந்து போனேனே

என்று பாடுகிறார்.

பெரிய திருமொழியில் இந்த பாசுரம் உள்ளது.




கடிகாசலம் (சோளிங்கர்) பெருமாளை பார்த்து கொஞ்சி பேசுகிறார், திருமங்கையாழ்வார்.

பெருமாளின் பெருமையை நினைத்ததும்,

யாரும் சமமில்லாத, எல்லாருக்கும் மேற்பட்டவனே ! (மிக்கானை) என்று ரசிக்கிறார். 

மேலும்,

அழியாத வேத விளக்காக இருக்கிறார் (மறையாய் விரிந்த விளக்கை) என்றும் ரசிக்கிறார்.

அப்படிப்பட்ட பெருமைமிக்க பெருமாள், தன் ஆத்மாவாகவும் இருக்கிறாரே என்றதும், உடனே,

எனக்கு அந்தர்யாமியாக இருப்பவனே ! (என்னுள் புக்கானை) என்று ரசிக்கிறார்.

உடல் ரீதியாக பார்த்தால், பெருமாளும் நாமும் ஒன்றாகி விட முடியாது.. 

ஆனால், 

'ஆத்மா' என்று பார்க்கும் போது, நாமும் (ஜீவனும்), பெருமாளும் (பரமாத்மாவும்) ஞான ஸ்வரூபம் தானே..

வேதமும் ஜீவனையும், பரமாத்மாவையும் நண்பர்கள் என்று இரு கிளியை காட்டி சொல்வது ஞாபகம் வர, திருமங்கையாழ்வார், பெருமாளும், தானும் நண்பன் என்று வேதமே சொல்வதால், சமமானவன் (தக்கானை) என்று சொல்லி ஆனந்தப்படுகிறார்.

மேலும் வாக்குக்கு அப்பாற்பட்ட பெருமாளை! தெவிட்டாத இன்பமாக இருக்கும் பெருமாளை! எப்படி கொஞ்சுவது? என்று ஒரு பக்கம் திகைத்து, கொஞ்சவும் ஆசை ஏற்பட்டதால், உலகத்தில் கிடைக்கும் தித்திப்பான அக்கார வடிசில் (அக்காரமே!), கனியே! என்று ஆசை தீர கொஞ்சுகிறார்.

இப்படி திருமங்கையாழ்வார், கடிகாசலம் (சோளிங்கர்) பெருமாளை பார்த்து "தக்கானை" என்றும், "அக்கார கனி" என்றும் அழைத்ததே, பெருமாளுக்கு பெயரும் ஆனது.

இங்கு தாயார் திருநாமம் சுதாவல்லி நாச்சியார் என்ற அம்ருதவல்லி

பெருமாள் பெயரால் 'தக்கான் குளம்' எனற தீர்த்தம் உள்ளது.

தொட்டாச்சாரியார் (தொட்டையாசாரியார்) என்ற ஒரு மகான் இருந்தார்.
அவருக்கு அக்கார கனி எம்பெருமானிடம் தான் அதிக ஈடுபாடு.

சில சந்தர்ப்பம், காஞ்சி வரதன் சேவைக்கு இவர் வருவார்.

வரதராஜன் சந்நிதியில், பிரம்மோற்சவம் போன்ற உத்சவ காலங்களில், கைங்கர்யத்துக்கு வருவது வழக்கம்.

மற்ற கோவில்களின் அர்ச்சகர்களை, சில சமயம் ஆச்சார்யர்களையும்  உத்சவ காலங்களில் வரதனுக்கு கைங்கர்யம் செய்ய அழைப்பார்கள்.
அவரவர்கள் முடிந்த கைங்கர்யம் செய்வார்கள்.

கருட சேவைக்கு மிகவும் ப்ரஸித்தமானவர் காஞ்சி வரதன்.

இங்கு இருக்கும் விசாலமான வீதியில், கருடன் மேல் அமர்ந்து பெருமாள் புறப்படும் அழகும், வேகமும், ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத பெருமாள் கருடசேவையை காட்டிலும் அழகாக இருக்கும்.

பெருமாள் ஒவ்வொரு இடத்தில் ஒரு தனியான அழகுடன் இருக்கிறார்.
திருப்பதியில், ரத உத்சவம் ப்ரஸித்தி.
திருமாலிருஞ்சோலையில் குதிரை (வையாளி) சேவை மிகவும் ப்ரஸித்தி.
அதேபோல, 
ரங்கநாதருக்கும் குதிரை (வையாளி) சேவை மிகவும் ப்ரஸித்தி.
இது பக்தர்களின் அனுபவம்.

அந்த ஊரிலேயே பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யும் ஒருவர், கருட சேவையில் காஞ்சி வரதன் வரும் அழகை பார்த்து பெருமிதத்துடன், அருகில் நின்று கொண்டிருந்த, அக்காரகனி எம்பெருமானுக்கே கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் தொட்டாச்சாரியாரிடம் தன் மன உகப்பை பகிர்ந்து கொண்டார். 
அந்த வைஷ்ணவர், காஞ்சி வரதனை பார்த்து கொண்டே, 
"ஆஹா.. ஆஹா.. இந்த சேவை வேறு எங்கு கிடைக்கும்?..." என்று சொல்ல,தொட்டாச்சாரியார் "ஆஹா.. என்ன தரிசனம்..என்ன தரிசனம்" என்று என்று சொல்லியிருக்கலாம்!!.

அந்த வைஷ்ணவர் "இந்த சேவை வேறு எங்கு கிடைக்கும்?" என்று சொன்ன சொல் இவருக்கு சுருக்கென்று குத்த, 
அக்கார கனி (தக்கான்) பெருமாள் மீது கொண்ட அன்பினால், தொட்டாச்சாரியார் உடனே "தக்கானுக்கு மிக்கான் இல்லை" என்று தன் பெருமானிடம் உள்ள பிரியத்தால், சொல்லிவிட்டார்.
கடிகாசலத்தில் இருக்கும் பெருமாளுக்கு மிஞ்சி யாரும் இல்லை (தக்கானுக்கு மிக்கான் இல்லை) 
என்று இவர் சொன்னதும், கூட இருந்த வைஷ்ணவருக்கு, 'காஞ்சி வரதனை குறைத்து பேசி விட்டாரே!!' என்ற வருத்தம் உண்டானது. 

'பெருமாள் ஒன்று தான்' என்பதால், 'காஞ்சி வரதனை விட சோளிங்க பெருமாள் உயர்ந்தவரா?' என்று பெருமாளையே தாழ்த்தி பேசவும் முடியாது.. 

தக்கானிடத்தில் இருந்த பக்தி விசேஷத்தால் தொட்டாச்சாரியார் இப்படி பேசிவிட்டார் என்பதால், வைஷ்ணவர்களுக்குள் சண்டை வேண்டாம், பகவத் அபசாரமும் வேண்டாம் என்று  அமைதியாக இருந்து விட்டார்.

"இனி இது மாதிரியான சங்கடங்கள் ஏற்பட கூடாது. 
அதற்கு ஒரே வழி.. இனி தொட்டாச்சாரியாரை வரதன் கைங்கர்யத்துக்கு அழைக்க கூடாது" என்று தீர்மானித்து விட்டனர் அங்கு இருந்த வைஷ்ணவர்கள்.




வருடாவருடம் வரதன் கைங்கர்யத்துக்கு தொட்டாச்சாரியாரை அழைப்பது வழக்கம்.
அடுத்த வருடம், இவருக்கு அழைப்பு வரவில்லை.

அழைப்பு வராததால், இவர் காஞ்சிபுரம் வரவில்லை. 
சோளிங்க பெருமாளுக்கே கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.

அன்று விடியற்காலை வரதனுக்கு காஞ்சியில் கருட சேவை ஆரம்பமானது.
தொட்டாச்சாரியார் வழக்கமாக, தக்கான் குளத்தில் தான் விடியற்காலை தீர்த்தமாட வருவார்.

தீர்த்தமாடி முடித்து விட்டு வந்ததுமே, காஞ்சி வரதனின் கருட சேவை நினைவுக்கு வந்தது.
"போன வருடம் இதே சமயம் காஞ்சி வரதனின் கருட சேவையை தரிசனம் செய்து கொண்டிருந்தோமே!! தேவப்பெருமாள், இந்த சமயம் கருட சேவையில் கிளம்பி இருப்பாரே! இந்த வருடம் நாம் போக பிராப்தி இல்லையே!" 
என்று கண்ணீர் பெருகி நினைக்க, அந்த குள கரையிலேயே அவர் கண்ணெதிரே காஞ்சி வரதன் கருட சேவையில் காட்சி அளித்தார்.
உடனே "தேவப்பெருமாள்… இதோ வந்துட்டார்… தேவப்பெருமாள் இதோ வந்துட்டார்… தேவப்பெருமாள் … இதோ பாரும்…" என்று இவர் கத்த, அங்கே குளித்து கொண்டிருந்த மற்றொருவன், "பைத்தியம் ஏதாவது பிடித்து இருக்கோ? தேவப்பெருமாள் இங்கு வந்து இருக்கிறாரா?" என்று சொல்ல, தொட்டாச்சாரியார் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதே சமயம், இந்த ஊரிலிருந்து சிலர் கருட சேவையை பார்க்க, காஞ்சி வரதனை பார்க்க சென்று இருந்தனர்.
காஞ்சி வரதன், கருட சேவையில் கிளம்பி வாசலில் வேகமாக வரும் போது, ஜல் என்று நின்றுவிட்டார் அன்று.
ஸ்ரீபாதம் தாங்கிகளால் பெருமாளை சில நிமிடங்கள் நகர்த்தவே முடியவில்லை..
என்ன காரணம்? என்றே தெரியாமல் போக, பெருமாளிடமே இவர்கள் விண்ணப்பிக்க, காஞ்சி வரதனே, அர்ச்சகரிடம் ஆவேசித்து, 
"நாம் தொட்டாச்சாரியாருக்கு சேவை சாதிக்க, கடிகாசலம் போய் இருக்கிறோம்" என்று சொல்ல, 
அதை பார்த்த இந்த ஊர் ஜனங்கள், உத்சவம் முடிந்து, ஊர் திரும்பி, நடந்த விஷயத்தை பேசி கொள்ள, அதே சமயம், தொட்டாச்சாரியார் தக்கான் குளத்தில் "தேவப்பெருமாள்…இதோ வந்துட்டார்… தேவப்பெருமாள் இதோ வந்துட்டார்… தேவப்பெருமாள் … இதோ பாரும்…" என்று கத்தியதை சொல்ல, தொட்டாச்சாரியாரின் 'அனுபவம் சத்தியம்' என்று அறிந்து கொண்டார்கள்.

தொட்டாச்சாரியார் பெற்ற அனுகிரஹத்தை இன்று நாமும் ஸ்மரிக்க காஞ்சி வரதன் கருட சேவை சாதித்து புறப்படும் போது, கருடனை போல வேகமாக கிளம்பும் போது, ஒரு நிமிடம் நின்று விட்டு, செல்கிறார்.

அக்கார கனி எம்பெருமானையே ஆஸ்ரயித்து வாழ்ந்த தொட்டாச்சாரியார் போன்ற பக்தர்கள் வாழ்ந்த புண்ணிய ஸ்தலமாக இருக்கிறது "கடிகாசலம்" என்ற சோளிங்கர் என்ற திவ்ய தேசம்.