ராவணனின் தலையை கொய்து எறிந்தும், மீண்டும் அவன் தலை பழையது போலவே வளர்ந்தது. இப்படியே '101 தடவை தலையை கொய்து எறிந்தும்' சாகாமல் இருந்தான் ராக்ஷஸ தலைவன் ராவணன்.
"கர தூஷர்களை, வாலியை, 7 சால வ்ருக்ஷத்தை ஒரே அம்பினால் சாய்த்த தன் ராம பானம் ராவணனை சாய்க்க முடியாமல் இருக்கிறதே!"
என்று ஆச்சரியப்பட,
இந்திரன் கொடுத்த தேரை ஒட்டும் 'மாதலி' என்ற சாரதி, ராமபிரானை பார்த்து,
'தேவ ரகசியம் தெரியாதது போல இருக்கிறீர்களே!! ப்ரம்மாஸ்திரம் மட்டுமே இவனை கொல்லும் சக்தி உடையது என்று உங்களுக்கு தெரியாதா? அதை இப்பொழுதே செலுத்துங்கள்" என்றார்.
மாதலியின் வாக்கை ஏற்று கொண்ட ராமபிரான், ப்ரம்மாஸ்திரத்தை ராவணன் மார்பை நோக்கி செலுத்த, அவன் மார்பில் இடி போல விழுந்தது.
ராவணன் ஒழிந்தான்.
ராவணன் ஒழிந்த பின், தான் கைப்பற்றிய இலங்கையை, அப்படியே விபீஷணனுக்கு கொடுத்து, அவரையே இலங்கைக்கு அரசனாக்கினார் ராமபிரான்.
ராமபிரான், ஹனுமானிடம்
"இலங்கை அரசர் விபீஷணன் அனுமதியுடன், இலங்கை நகருக்குள் பிரவேசித்து, ராவணன் இருந்த இடத்திற்கு செல்லுங்கள்.
அங்கு சீதையிடம், சுக்ரீவன் மற்றும் லக்ஷ்மணனோடு சேர்ந்து நான் பெற்ற வெற்றி செய்தியை சொல்லுங்கள்.
மைதிலியிடம், ராவணன் எப்படி அழிக்கப்பட்டான்? என்றும் விவரித்து சொல்லுங்கள்.
ஓ ஜெய ஹனுமான்! என் வெற்றியை விவரமாக சொல்லி, சீதை எனக்கு சொல்லும் சேதியை என்னிடம் வந்து சொல்லுங்கள்."
இப்படி அழகாக நீங்கள் மட்டுமே பேச முடியும். நீங்கள் வாயு புத்திரன் என்ற பெருமை உடையவரல்லவா!
தர்மத்தில் நாட்டமுள்ளவரல்லவா நீங்கள்.
இதனோடு உங்களிடம் ஆச்சர்யமான வலிமையும், வீரமும், ஞானமும், திறமையும், சிறப்பும், சகிப்புத்தன்மையும், தைரியமும், பணிவும் சேர்ந்து கொண்டு மேலும் பிரகாசிக்கிறீர்கள்." என்று சீதா தேவி ஹனுமானை கண்டு ஆனந்தப்பட்டாள்.
கண்களில் க்ரூரமும், பயங்கரமான ரூபத்துடன் இருக்கும் இந்த ராக்ஷஸிகள், 'கணவனே தெய்வம் என்று இருக்கும் உங்களை', அசோக வனத்தில் சிறைவைத்து வேதனையுற்ற சமயத்தில் பெரும் தொந்தரவு செய்தனர்.
நான் இவர்களை அடித்து ஒழிக்கட்டுமா? நீங்கள் இந்த வரத்தை தாருங்கள்.
இவர்களை என் முஷ்டியாலும், கைகளாலும், கால்களாலும் ஓங்கி அடித்து, என் பற்களால் இவர்களை கிழித்து, தலை முடியை பிடுங்கி, இவர்கள் மீது பாய்ந்து, இவர்களை தூக்கி எறிந்து, இவர்கள் கன்னம், கழுத்து, தோள், விலா எலும்பை உடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
உங்களிடம் அத்துமீறி கொடுமையான வார்த்தைகளே பேசிய இவர்களை நான் கொல்ல ஆசைப்படுகிறேன்.
இவர்கள் எப்படி எல்லாம் உங்களை துன்புறுத்தினார்களோ, இவர்கள் அனைவரையும் அனைத்து விதத்திலும் தண்டிக்க ஆசைப்படுகிறேன்." என்று ஆத்திரம் தாங்கமுடியாமல் அனுமதி கேட்டார் .
இலங்கை அரசன் விபீஷணன் தன் மனைவியை முன்னிட்டு கொண்டு, சீதா தேவியிடம்,
"சீதா தேவி.. உங்களுக்கு மங்களம். சர்வ அலங்காரமும் செய்து கொண்டு இந்த பல்லக்கில் ஏறுங்கள்.
உங்கள் கணவர் உங்களை பார்க்க விரும்புகிறார்.'
என்றார்.
சீதாதேவி, "ராக்ஷஸ அதிபதியே! நான் எந்த வித ஸ்நானமும், அலங்காரமும் செய்து கொள்ள விரும்பவில்லை. நான் இப்படியே என் பர்தாவை பார்க்க ஆசைப்படுகிறேன்" என்றாள்.
பிறகு அங்கு இருந்த பெண்கள், சீதா தேவியை ஸ்நானம் செய்வித்து, அலங்காரம் செய்விக்க, சீதாதேவி தயாராக இருந்தாள்.
சீதாதேவியை அழைத்து செல்ல, பல்லக்கு கொண்டு வந்தார் விபீஷணன்.
அந்த பல்லக்கில் சீதா தேவி ஏறிக்கொள்ள, தன் ராக்ஷஸ படைகளை இருபுறமும் காவலுக்கு நிறுத்தி, ராமபிரான் இருக்குமிடத்திற்கு வர சொல்லி விட்டு, தானே ராமரை பார்க்க ஓடினார்.
ராமபிரானிடம், சீதாதேவி வந்து கொண்டிருப்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ராவணனின் மாளிகையில் பல மாதஙகள் சிறைப்பட்ட தன் சீதை வந்து கொண்டு இருக்கிறாள் என்றதும், ஒரே சமயத்தில் 'ஆனந்தமும், வருத்தமும், கோபமும்' ராமபிரானிடம் சேர்ந்து நுழைந்தது.
விபீஷணனை பார்த்து, ராமபிரான், "ராக்ஷஸ அரசனே! என் வெற்றிக்காக எப்பொழுதும் ஆசைப்படுபவரே! சீதையை வேகமாக என் அருகில் அழைத்து வாருங்கள்" என்றார்.
மூடு பல்லக்கில் சீதா தேவி, ராமர் இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
'சீக்கிரமாக சீதையை அழைத்து வாருங்கள்' என்று ராமபிரான் சொன்னதால், விபீஷணன் சீதாதேவிக்கு பாதை கிடைப்பதற்காக, சூழ்ந்து இருக்கும் லட்சக்கணக்கான வானர சேனை விலக்க முயற்சித்தார்.
பல்லக்கை சுற்றி பாதுகாப்புடன் வந்த ராக்ஷஸர்கள், தங்கள் கைகளில் உள்ள தடியால் அடித்தும், கைகளால் தள்ளியும், பெரும் உற்சாகத்தில் இருந்த வானர கூட்டத்தை விலக்கி கொண்டு, வேகமாக வரத்தொடங்கினர்.
பல்லக்கை சூழ்ந்து இருந்த வானரர்களும், பிற ராக்ஷஸர்களும், ருக்ஷர்களும், முன்னும் பின்னும் நகர்ந்து, முடிந்த வரை வழி விட்டு பின்னுக்கு சென்றனர்.
எந்த சீதைக்காக, தங்கள் உயிரையும் துச்சம் என மதித்து போர் புரிய வந்தார்களோ! அந்த சீதாதேவி, தங்கள் அருகில் மூடு பல்லக்கில் வருவதை பார்த்ததும்,
"ஜெய் சீதா ராம்...
ஆ.. இதோ இதில் தான் சீதா மாதா இருக்கிறார்.
ஆஹா... ஆஹாஹா..."
என்று ஆனந்தமும், வெற்றி கோஷமும் சேர்ந்து பேரிறைச்சலை உண்டாக்கி விண்ணை பிளந்தது.
சீதையை பார்க்கும் ஆவலால், பெரும் சலசலப்பு ஏற்பட, பாதுகாவலர்கள் தடியால் வானர கூட்டத்தை அடித்து விலக்க, முன்னுக்கு பின் தள்ள, வானர சேனையில் பெரும் உற்சாகம் தொற்றி கொண்டு, அதனோடு பெரும் சலசலப்பு ஏற்பட்டு பேரிறைச்சல் உண்டானது.
இது கடலில் அலை ஓசையும், காற்றின் ஒலியும் சேர்ந்து கொண்டால் எப்படி இருக்குமோ அது போல இருந்தது.
உற்சாகம் மிகுந்த வானர சேனை முன்னும் பின்னும் அலைந்து கொண்டு, சலசலப்பு ஏற்படுவதை பார்த்த ராமபிரான், அவர்களிடம் இரக்கமும், அதே சமயம் மறுபக்கம் கோபமும் கொண்டார்.
வந்து கொண்டிருந்த பல்லக்கை அங்கேயே நிற்க சொன்னார்.
மேலும், 'நானும் இங்கு இருக்கிறேன்' என்பதால், உயிரையே கொடுக்க தயாராக இருந்த என் பிரஜைகளான வானரர்களுக்கு, என் சமீபம் வரும் வரை சீதை தன் தர்சனத்தை கொடுப்பதில் தோஷமில்லை.
மூடுபல்லக்கில் வந்து கொண்டிருந்த சீதாதேவியிடம், ராமபிரானின் விருப்பத்தை விபீஷணன் தெரிவிக்க, சீதாதேவி மூடுபல்லக்கை விட்டு இறங்கி, நடந்து வர தொடங்கினாள்.
விபீஷணன் வானர சேனையை விலக்கி கொண்டு ராமரை நோக்கி வர, சீதை பின் தொடர்ந்து வந்தாள்.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் கிளம்பிய சீதாதேவி, தன்னை சூழ்ந்து ஆர்ப்பரிக்கும் வானர சேனையை பார்த்து,
திடீரென்று தன் முகத்தை யாரிடமும் காட்டி கொள்ள விரும்பாமல், தன் புடவை தலைப்பால் முகத்தை மறைத்து கொண்டு, கூனிக்குறுகி, பெரும் அவமானத்தை சுமந்து கொண்டு, அருவெறுப்புடன், விபீஷணனை தொடர்ந்து வந்தாள்.
(குறிப்பு: ராமபிரான் தன்னை ஏற்று கொண்ட பின், தன்னால், அவருக்கு ஏற்பட போகும் பழியை நினைத்து தாளாத வேதனையுற்றாள் சீதா தேவி.
தன் நிலையை நினைத்து தன்னையே வெறுத்தாள். கூனி குறுகி போனாள் சீதா தேவி..
'மானுக்கு ஆசைப்பட்டு, இப்படி மாட்டிக்கொண்டோமே!
உலகம் ராமபிரானை பேசுமே! தான் இந்த நிலையில் வாழ வேண்டுமா?
இங்கேயே உயிர் விட்டு விடலாமா?
அவர் அனுமதியை கேட்டு விட்டு உயிரை அவர் முன் தியாகம் செய்து விடலாமா?
தான் ஒழுக்கம் தவறாதவள் என்று எப்படி உலகத்திற்கு நிரூபிப்பேன்?'
என்ற பலவித எண்ணங்கள் சூழ, உயர்ந்த குலபெண்ணான சீதாதேவி தன்னை யாரிடமும் காட்டி கொள்ள பிரியப்படாமல் இப்படி முகத்தை மூடி, தன்னையே அருவெறுத்து கொண்டு நடந்தாள்.
'சீதா தேவியின் மன ஓட்டத்தை கவனித்து விட்டார்' ராமபிரான்.
"தன் ஒழுக்கத்தை உலகுக்கு எப்படி நிரூபிப்பேன்?" என்று கூனி குறுகி போன சீதையின் நிலையை கண்டு கலங்கினார்.
தன்னை கல்லாக்கி கொண்டு, அதற்கு வழியை தானே கொடுக்க தயாரானார் ராமபிரான்.
சீதையின் தர்ம சங்கடத்தை அறிந்த ராமபிரான், உலகை பொறுத்தவரை, தன்னை பொல்லாதவன் போல காட்டி, அவளை வெறுத்தது போல பேசி, சீதை என்ன நினைக்கிறாளோ அதை அறிந்து கொள்ள நினைத்தார்.
சீதைக்காக, தன்னை கோபக்காரனாக காட்டிக்கொண்டார்.)
தன்னால் ராமபிரானுக்கு பெரும் அவமானம் ஏற்படுமே ! என்ற வேதனையில், ராமபிரான் அருகில் வந்ததும், சீதாதேவிக்கு அடக்க முடியாத கண்ணீர் பீறிட்டது.
அதே சமயம்,
இனிமையான முகம் கொண்ட ராமபிரானை, நிலவு போன்ற சீதாதேவி கண்டதும், ஆச்சரியம், உற்சாகமும் அடைந்தாள்.
குறையே இல்லாத வெண்மையான முழு நிலவு போல இருந்த சீதை, வெகு காலம் கழித்து தன் நாதனின் முகத்தை பார்க்கிறாள்.
பார்த்தவுடனேயே அவள் மனதில் இருந்த கவலைகள் அழிக்கப்பட்டுவிட்டது.
சீதா தேவி பணிவுடன் ராமபிரான் அருகில் வந்து நிற்க, கோபத்தை தன்னில் அனுமதித்து கொண்டு, ராமபிரான் பேசலானார்…
"மங்களமானவளே! (भद्रे) என் எதிரிகளை வீழ்த்தி, உன்னை வென்றுள்ளேன்.
என் பராக்ரமத்தை எவ்வளவு காட்ட வேண்டுமோ! அவ்வளவும் காட்டி இதை சாதித்தேன்.
எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தனது சுய வலிமையால் அகற்றாது போனால், அந்த வலிமை இருந்து தான் பயன் என்ன?
ஹனுமான் கடலை தாண்டி, இலங்கையை கொளுத்தி செய்த பெருமுயற்சிக்கு, பலன் இன்று கிடைத்து இருக்கிறது.
சுக்ரீவன் இந்த போரில் எனக்கு செய்த உதவியும், அவருடைய திறனும், நிர்வாகமும் இன்று பலன் தந்து இருக்கிறது.
என்னிடம் பக்தி உள்ள விபீஷணன், குணம் கெட்ட தன் சகோதரனை விட்டதற்கான பலன் இன்று கிடைத்து இருக்கிறது."
என்றார்.
இவ்வாறு ராமபிரான் பேச ஆரம்பிக்க, தன்னை பற்றி ஒரு வார்த்தை பேசாத ராமபிரானை பார்த்து, பெண் மானின் கண்களை ஒத்து இருந்த, சீதையின் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது.
ஆனால்,
தீயில் நெய் ஊற்ற ஊற்ற எப்படி தீ இன்னும் கொழுந்து விட்டு எரியுமோ! அது போல, ராமபிரானுக்கு சீதையை பார்க்க பார்க்க கோபம் இன்னும் அதிகமானது.
சீதையை பார்த்து கூட பேசாமல், வேறு பக்கம் பார்த்து கொண்டே, வானரர்கள், ராக்ஷஸர்கள் சூழ்ந்து இருக்க, மேலும் கடுமையான சொற்களை கொண்டு பேசலானார்..
"பகைவர்கள் என் மேல் சுமத்திய அவமானத்தை துடைக்க என்ன முயற்சி எல்லாம் செய்ய வேண்டுமோ! அதை நான் ஒரு ஆண் மகனாக செய்து முடித்தேன்.
(குறிப்பு: சீதை 'ஒளியை போன்று தூய்மையானவள்' என்று தான் சொல்கிறார். உலகில் 'கண் நோய் உள்ளவனுக்கு நீ களங்கம் போல தெரிகிறாய்' என்று மறைமுகமாக உன் மீது குற்றமில்லை என்று சொல்கிறார்.
ராமபிரானுக்கு துளியும் சந்தேகமில்லை என்று தெரிகிறது.
ராமபிரான் மனதை புரிந்தவள் சீதா தேவி).
ஆதலால், நீ என்னை விட்டு, எங்கு விருப்பப்பட்டாலும் செல்லலாம்.
மங்களமானவளே! பத்து திசைகளும் உனக்காக பரந்து விரிந்து இருக்கிறது.
நீ விருப்பப்பட்டால், அவர்கள் இருக்கும் இடத்தில் கூட பாதுக்காப்பாக இருக்கலாம்.
ராவணன் உன்னிடம் இருந்த திவ்யமான அழகை கண்டு சகித்திருக்க மாட்டான்."
என்று பேசினார் ராமபிரான்.
'ஆறுதலாக ராமபிரான் தன்னிடம் பேசுவார்' என்று நினைத்த சீதை, ராமபிரானின் கடுமையான சொற்களை கேட்டதும், மலர்கொடியை ஒரு யானை தன் துதிக்கையால் பிடுங்கி, அசைத்து நாசமாக்குவது போல, துடிதுடித்து அழுதாள்.
மயிர்கூச்சு ஏற்படும் படி ராமபிரான் பேசிய பின், சீதை தாளமுடியாத துன்பத்தை அடைந்தாள்.
இது போன்று கடும் சொற்களை, தன் வாழ்நாளில் என்றுமே பேசாத ராமபிரான், இன்று அனைவருக்கும் எதிராக, இப்படி பேசி விட, சீதை பெரும் அவமானத்தை அனுபவித்தாள்.
தன் நிலையை நினைத்து கூனி குறுகினாள்.
காயம் பட்ட இடத்திலேயே மேலும் காயம் பட்டது போல, ராமபிரானின் கடும் சொற்களால், கலங்கி இருந்த கண்களில் நீர் வழிந்தோடியது.
க்ஷத்ரிய பெண்ணான சீதை, உடனேயே தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு, தழுதழுத்த குரலில், தன் கணவன் ராமபிரானை பார்த்து கம்பீரமாக பேசலானாள்..
"நாகரீகம் இல்லாதவனை போல, தரம் தாழ்ந்த வார்த்தைகளை கொண்டு என் காது பட, ஏன் பேசினீர்கள்?
நீங்கள் என்னை சந்தேகித்தது போல, நான் உங்களை என்றுமேசந்தேகித்தது கிடையாதே!
நான் உங்கள் ஒழுக்கத்தை என்றுமே திடமாக நம்புகிறேனே!!
இத்தனை வருடங்கள் நாம் சேர்ந்து வாழ்ந்தோமே! இந்த அனுபவத்திற்கு பிறகும், நீங்கள் என் ஒழுக்கத்தின் தூய்மையை புரிந்து கொள்ள முடியாமல் போனது என்றால், நான் இறந்ததற்கு சமமல்லவா!
(யா க்ஷமா மே கதிர்கந்தும் ப்ரவேக்ஷ்யே ஹவ்ய வாஹனம் - வால்மீகி ராமாயணம்) என்று கூறினாள்.
கோபத்தை வரவழைத்து கொண்டு அமர்ந்து இருந்த ராமபிரானின் முகத்தை, லக்ஷ்மணன் பார்த்தார்.
ராமபிரான் முகத்தில் இதற்கு எதிர்ப்பு இல்லாமல் இருந்ததை குறிப்பு அறிந்த லக்ஷ்மணன், சிதையை மூட்டினார்.
(குறிப்பு: லக்ஷ்மணன் 'ராமபிரான் இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார்' என்று தைரியமாக இருந்தார்.
ஹனுமான் தன் வாலில் தீயிட்ட போது, இலங்கையே தீக்கு இறையான போதும், சீதையின் பிரார்த்தனையே தன்னை காத்தது என்ற போது "சீதாதேவிக்கு ஒன்றும் ஆகாது" என்று திடமாக இருந்தார்.
ராமபிரான் "சத்தியத்தில் தான் நியமித்த தெய்வங்கள் இருக்க நினைக்கிறதா?" என்று பரிக்ஷை செய்தது போல இருந்தது. இது சம்பந்தமாக ராமபிரான் பேசவும் போகிறார்...)
சீதா தேவி தலை குனிந்து, மெதுவாக ராமபிரானை வலம் வந்து, அக்னி குண்டத்திற்கு அருகில் வந்தாள்.
தேவதைகளையும், ப்ராம்மணர்களையும் மனதில் நமஸ்கரித்து விட்டு, அக்னி தேவதையை பார்த்து பேசலானாள்,
"என் இதயம் ராமபிரானை விட்டு விலகியதில்லை என்பது சத்தியமானால்! இந்த அக்னி என்னை காப்பதை இந்த உலகத்தில் உள்ளோர் பார்க்கட்டும்.
(குறிப்பு: 'தான் காக்கப்பட வேண்டும்' என்று சீதை ஆசைப்படுகிறாள் என்று தெரிகிறது. மேலும் 'ராமபிரானோடு அயோத்தி சென்று மாதா கௌசல்யாவை பார்க்க வேண்டும்'என்றுஆசை சீதைக்கு உள்ளது என்பதும் தெரிகிறது.)
நான் தூய்மை அற்றவள் என்று புரிந்து கொள்ளாமல் பேசினார் ராகவன்!
நான் தூய்மையானவள் என்பது சத்தியமானால்! இந்த அக்னி என்னை காப்பதை இந்த உலகத்தில் உள்ளோர் பார்க்கட்டும்.
உடலாலும், மனதாலும், வாக்கினாலும், தர்மமே உருவான ராகவனையே நினைத்து இருந்தது சத்தியமானால், இந்த அக்னி என்னை காப்பதை இந்த உலகத்தில் உள்ளோர் பார்க்கட்டும்.
குபேரன், எம தர்மன், 1000 கண்களையுடைய இந்திரன், வருணன், மஹாதேவனான முக்கண்ணன், பிரம்மா அனைவரும் பல சூரியனை போல இலங்கையில் ராமபிரான் முன் ப்ரத்யஷமாகிவிட்டனர்.
தாங்களே மூன்று உலகங்களையும் படைத்தவர். தாங்களே ப்ரபு. ஸித்தி அடைந்தவர்களுக்கும் லட்சியம் தாங்களே. மோக்ஷம் அடைய முயற்சி செய்பவர்களுக்கும் லட்சியம் தாங்களே! முதலில் இருந்தவரும் தாங்களே!
தங்களை ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவர் கிடையாது. தாங்களை யாருமே அறிந்து கொள்ளவும் முடியாது.
(த்வம் யஞ்யஸ்த்வம் வஸத்காரஸ்த்வம் ஓங்கார: பரந்தப:! ப்ரபவம் நிதனம் வா தே ந விது: கோ பவாநிதி !! - வால்மீகி ராமாயணம்)
தாங்களே எங்கும் அனைவரிடத்திலும் இருந்தாலும், ப்ரம்மத்தையே உபாசிக்கும் ப்ரம்மணர்களிடமும், பசுக்களிடமும், அனைத்து திசைகளிலும், ஆகாயத்திலும், மலைகளிலும், மரங்களிலும் குறிப்பாக தெரிகிறீர்கள்.
ஒரு பெரிய சர்பம் தன்னை சுருட்டி கொண்டு இருப்பது போல, லோகங்கள் ஸ்ருஷ்டி ஆகாத காலத்தில், தேவ கந்தர்வர்கள் உட்பட 14 லோகங்களையும் (பொதுவாக மேலுலகம், பூலோகம் , பாதாள லோகம் என்று மூன்று லோகம் என்று சொல்வோம்) சேர்த்து தனக்குள் அடக்கி கொண்டு, நீங்கள் மட்டுமே அன்று இருந்தீர்கள்.
நானே உங்கள் இதயம். சரஸ்வதியே உங்கள் நாக்கு. தேவர்கள் உன் தலை கேசம். ரூபமில்லாத நிலையில் ப்ரம்மமாக நீங்கள் இருக்கும் நிலையில் இப்படி தானே வேதம் உங்களை வர்ணிக்கிறது.
நீங்கள் விழித்து இருந்தால், அதுவே பகல். நீங்கள் உறங்கினால், அதுவே இரவு. வேதங்கள் உங்களை பற்றியும், உங்கள் குணங்களை பற்றியும் தான் சொல்கிறது! நீங்கள் இல்லாமல் வேதமே இல்லை.
நீங்களே புராண காலத்தில் மூன்று அடியால் பூலோகம் முதல் சத்ய லோகம் வரை பலி சக்கரவர்த்தியிடம் இருந்து மூன்று லோகங்களையும் கைப்பற்றி, இந்திர தேவனை மீண்டும் மகேந்திரன் ஆக்கினீர்கள்.
ஆதி புருஷரான உங்களை சரணடைந்து பக்தி செய்பவர்கள் எவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும், இக லோகத்தில் தான் விரும்பியது அனைத்தையும் அடைந்து, விண்ணுலகத்திலும் ஆனந்தத்தை பெறுகிறார்கள்.
சத்ய லோகத்தை விட்டு விட்டு, உலகுக்கே தாத்தாவான (பிதாமஹ) ப்ரம்ம தேவனே, ராமபிரான் முன் வந்து, இவ்வாறு ஸ்தோத்திரம் செய்து நிற்க,இதை கேட்ட அக்னி தேவன், சிதையை விலக்கி கொண்டு, சீதாதேவியுடன் வெளிப்பட்டு விட்டார்.
ராவணன் தன் வலிமையை காட்டி, சீதையை கடத்தி சென்றான். சீதையை சிறை வைத்தான்.
ஆனால், அவள் எப்பொழுதும் உங்கள் தியானத்திலேயே இருந்தாள். ராக்ஷஸிகள் சூழ்ந்து சீதையை காவல் காக்க, சீதை உங்கள் தியானத்தில் அடைக்கலம் அடைந்து இருந்தாள்.
ராவணன் பல வித முறைகளில் சீதையை கவர நினைத்தும், ராக்ஷஸிகள் பல விதத்தில் மிரட்டியும், சீதாதேவி தன் உயிரை உங்களிடம் சமர்ப்பித்து, ராவணனை சிறிதும் பார்க்காமல் இருந்தாள்.
சீதை இதய பூர்வமாக புனிதமானவள்.
ஒரு குறையும் அற்றவள்.
ஓ ராமா! சீதையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சீதையிடம் கடுமையான வார்த்தைகளை பேசாதீர்கள். இது என் ஆணையும் கூட",
(குறிப்பு: மூன்று உலகமும் சேர்ந்து கொண்டு சீதைக்கு துன்பங்களை கொடுத்தீர்கள்!! என்று மறைமுகமாக ப்ரம்ம, ருத்ர, மற்றும் தேவர்களை பார்த்து சொல்கிறார், ராமபிரான்)
சீதையை நான் அப்பொழுதே ஏற்று கொண்டிருந்தால், என்னை விளையாட்டு பிள்ளை என்றோ, அல்லது காம புத்தி உடையவன் என்றோ உலகம் பேசி இருக்கும்.
இவ்வாறு சிவபெருமான் சொல்ல, ராமபிரான், லக்ஷ்மணனோடு சேர்ந்து, தேவ ரதத்தில் இருக்கும் தன் 'தகப்பனாருக்கு' நமஸ்காரம் செய்தனர்.
தன் தகப்பனார் திவ்ய விமானத்தில், ஜொலிப்பதை கண்டு ஆனந்தப்பட்டார் ராமபிரான்.
தன் உயிரையும் விட மேலான தன் மகன் ராமனை பார்த்த ஆனந்தத்தில் திளைத்தார் தசரதர்.
தன் மடியில் ராமபிரானை அமர்த்தி கொண்டு, ராமபிரானை கட்டி அணைத்து பேசினார் தசரதர்..
"ராமா! நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா?.. எனக்கு கிடைத்த சொர்க்க லோக வாழ்க்கையும், தேவர்களும் ரிஷிகளும் என் மீது காட்டும் பக்தியும் கூட எனக்கு நீ இல்லாமல் ரசிக்கவில்லை.
இப்பொழுது உன்னை பார்த்ததால், இதயப்பூர்வமாக பேரானந்தம் அடைந்தேன்.
நீ எனக்காக 14 வருட வனவாச காலத்தை ஏற்று, விஜயராகவனாக நிற்பதை கண்டு பூரண திருப்தி கொண்டேன்.
கைகேயி சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை.
சூரியன் க்ரஹன காலத்தில் மறைக்கப்பட்டு, பிறகு மீண்டும் பிரகாசம் ஆவது போல, பெரும் துக்கத்தில் இருந்த நான், இன்று உன்னை, லக்ஷ்மணனோடு கட்டி அணைக்கும் போது, துக்கம் விடுபட்டு இருக்கிறேன்.
மகனே! என் வாக்கை உயர்ந்த ஆத்மாவான நீ காப்பாற்றினாய்.
தேவனாகி போனதால், இந்த லீலை யாவும் ராவணனை கொல்வதற்கு ஏற்படுத்தப்பட்ட திட்டமே என்று அறிகிறேன்.
எதிரிகளை ஒழிப்பவனே! உன்னால் கௌசல்யா பெருமைப்படுகிறாள். அவள் பாக்கியசாலி.
நீ திரும்பி அயோத்தி வருவதை பார்க்க கொடுத்து வைத்தவள்.
யாரெல்லாம் உன்னை அயோத்தியில் பார்க்க இருக்கிறார்களோ, அவர்கள் யாவருமே பாக்கியசாலிகள்.
அவர்கள் உன்னுடைய பட்டாபிஷேகத்தை பார்க்க இருக்கிறார்கள்.
தவறான குற்றச்சாட்டுகள் ஏற்படுமோ? என்ற உன் மன பயத்தை அகற்றவுமே,
பாராமுகம் போல, கோபம் உள்ளது போல காட்டிக்கொண்டான்.
நீ உன் புகழை, உன் ஒழுக்கத்தை அனைவருக்கும் நிரூபித்தாய்.
பதி சேவையை பற்றி நான் உனக்கு சொல்ல வேண்டியதே இல்லை. நீயே பதி சேவையின் இலக்கணம்.
இருந்தாலும், நான் உனக்கு மாமனார் என்ற ரீதியில், உனக்கு இதை சொல்ல ஆசைப்பட்டேன்.
உன் கணவன் சாகிஷாத் அந்த பரப்ரம்மமே! உனக்கும் இது நன்றாக தெரியும்.. ", என்றார்.
இப்படி தான் இரண்டு புத்ரர்களிடமும், சீதையுடன் பேசிவிட்டு, தசரத மன்னர், தான் வந்து இருந்த விமானத்தில் பயணித்து, திரும்பி இந்த்ர லோகம் சென்று மறைந்து விட்டார்.
"விஜய ராகவா! என்னிடம் திவ்யமான புஷ்பக விமானன் (flight) உள்ளது. அதில் நீங்கள் ஒரே நாளில் சென்று விடலாம்.
(அஹ்நா த்வாம் ப்ராபயிஷ்யாமி தாம் புரீம் பார்திவாத்மஜ | புஷ்பகம் நாம பத்ரம் தே விமானம் சூர்ய சந்நிதம் | - வால்மீகி ராமாயணம்)
(குறிப்பு:த்ரேதா யுகத்தில் 'விமானம்' (12 லட்சம் வருடங்கள் முன்பு நடந்த நம் சரித்திரத்தில் விமானம் இருந்துள்ளது) சொல்லப்படுகிறது.
1000 வருட அந்நிய ஆக்கிரமிப்பால், நம் கலாச்சாரம், கல்வி, மொழியை நாசமாக்கி விட்டனர் என்பது, ஹிந்துக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.)
இந்த விமானம் என் சகோதரன் குபேரனுடையது.
இதை ராவணன் குபேரனோடு போர் செய்து, கைப்பற்றி வைத்து இருந்தான்.
பெரிய மேகத்தை போல பறந்து செல்லும் இந்த விமானத்தில், உங்களை அழைத்து செல்கிறேன்.
இதில் நீங்கள் ஒரு கவலை இல்லாமல் வேகமாக சென்று விடலாம்.
நான் உங்கள் அபிமானத்துக்கு கொஞ்சம் பாத்திரமாகி இருந்தாலும்,
நீங்கள் ஏதாவது ஒரு நல்லதை என்னிடம் பார்த்து இருந்தாலும்,
நான் உங்களிடம் உண்மையான அன்பு வைத்து இருந்தால்,
நீங்கள் சிறிது நேரம் தங்கி, நான் 'உங்களுக்கும், சீதா தேவிக்கும், லக்ஷ்மணருக்கும் செய்யும் மரியாதையை ஏற்று கொள்ள வேண்டும்'.
நான் உங்களை வற்புறுத்தி ஆணையிடவில்லை.
நான் உங்கள் சேவகன். உங்களிடம் உள்ள அன்பினால், நட்பால், மரியாதையால் இதை பிரார்த்திக்கிறேன்."
என்று வேண்டினார் விபீஷணன்.
கருணையே வடிவான ராமபிரான், விபீஷணனை பார்த்து பேசலானார்..
"விபீஷணா! உங்களுடைய உதவியாலும், நடத்தையாலும், அன்பினாலும், என்னிடம் உங்களை இதயப்பூர்வமாக சமர்ப்பித்தும், நீங்கள் எனக்கு பெரும் மரியாதை செய்துள்ளீர்கள்.
எந்த முதலாளி (employer) தன் தனிப்பட்ட விருப்பத்தை ஒதுக்கி விட்டு, புலனடக்கம் உள்ளவனாக, இரக்கம் உள்ளவனாக இருக்கிறானோ, அப்படிப்பட்டவனுக்கு வேலை செய்யும் தொழிலாளி என்றுமே உறுதுணையாக இருப்பான்.
இதை உங்களுக்கு ஞாபப்படுத்தி கொள்வதற்காக சொல்கிறேன்.
எப்போதும் தண்டிக்கும், கொலை செய்ய துணியும், அன்பும், நற்பண்பும் இல்லாத படைதலைவனை (army general) சமயத்தில் படை வீரர்கள் கைவிடுவார்கள்."
என்று சிறு ராஜ உபதேசம் செய்தார் ராமபிரான்.
விபீஷணன் அனைத்து வானரர்களுக்கும், ராமபிரான் ஆணைக்கு உட்பட்டு, தகுந்த மரியாதை செய்தார்.
அனைவரும் மரியாதை பெற்றவுடன், ராமபிரான் புஷ்பக விமானத்தில் ஏறினார்.
அவர் அருகில் சீதா தேவி அமர்ந்து கொண்டாள். அருகில் லக்ஷ்மணன் நின்று கொண்டான்.
விபீஷணனோடு, வானர சேனையோடு இருக்கும் சுக்ரீவனையும் பார்த்து, ராமபிரான்,
"நீங்கள் அனைவரும் எனக்கு பேருதவி செய்துள்ளீர்கள்.
நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். நீங்கள் உங்கள் இடத்துக்கு செல்லலாம்.
ஓ சுக்ரீவ மகாராஜா ! தர்மத்துக்கு பயந்து நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நண்பனாகவும், நலம் விரும்பியாகவும் இருந்து செய்து முடிக்க உதவினீர்கள். நீங்கள் உங்கள் சேனையுடன் கிஷ்கிந்தை செல்லுங்கள்.
ஓ விபீஷண மஹாராஜா! நான் கைப்பற்றி கொடுத்த இந்த இலங்கை நகரம் இனி உங்களுடையது.
விஸ்வகர்மா ஸ்ருஷ்டி செய்த திவ்யமான விமானம் (flight), ஏற ஏற அனைவருக்கும் இடம் கொடுத்தது.
அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டனர்.
ராமபிரான் ஆணைக்கு உட்பட்டு, விமானம் வானில் பறக்க ஆரம்பித்தது.
ராமபிரான் பெரும் மகிழ்ச்சியோடு, தந்தையின் வாக்கை நிறைவேற்றிய திருப்தியோடு 'விஜய ராகவனாக' அமர்ந்து இருந்தார்.
அவருடன் குழுமி இருந்த அனைத்து ராக்ஷஸர்களும், வானரர்களும் பெரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
தான் வந்த வழியே மேகத்தை போல பறந்து கொண்டிருந்த புஷ்பக விமானத்தில், ராமபிரான், அருகில் இருந்த சீதா தேவியிடம்இலங்கையில் "விஸ்வகர்மா ஸ்ருஷ்டி செய்த த்ரிகூட மலையை பார்" என்று காட்டினார்.
ரத்தமும் சதையும் விழுந்த போர்க்கள இடத்தை காட்டினார்.
ராக்ஷஸர்களும், வானரர்களும் ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக சண்டை இட்ட இடங்களை காட்டினார்.
பெரும் வரங்களை வாங்கி வைத்து இருந்த ராவணன் தன்னால் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
கும்பகர்ணன் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
ப்ரஹஸ்தன் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
ஹனுமானால் தூம்ராக்ஷஸன் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
சுசேனரால் வித்யுன்மாலி கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
லக்ஷ்மணன் இந்திரஜித்தை கொன்ற இடத்தை காட்டினார்.
அங்கதன் விகடனை கொன்ற இடத்தை காட்டினார்.
மேலும், விரூபாக்ஷன், மஹாபார்ஷ்வா, மஹோதரா, அகம்பனா, மற்றும் பல ராக்ஷஸர்கள் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
மண்டோதரி, ராவணனின் மற்ற ஆயிரக்கணக்கான மனைவிகளுடன், ராவணனின் உடலை கண்டு அழுத இடத்தை காட்டினார்.
(குறிப்பு: இந்த சமயத்தில் மதுராந்தகம் வந்து விபண்டகர் (ருஷ்ய ச்ருங்கரின் தந்தை), தனக்காக காத்து இருக்கிறார் என்று தெரிந்து ஒரு சில நிமிடங்கள் இறங்கி சென்றார் என்று, திவ்ய தேச சரித்திரம் நமக்கு சொல்கிறது.)
பிறகு, சுக்ரீவன் வாழும் அழகிய கிஷ்கிந்தையை காட்டினார்.
'வாலி' கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
சீதை, கிஷ்கிந்தையை கண்டதும், ராமபிரானிடம், தன்னோடு சுக்ரீவனின் மனைவி தாரா மற்றும் அனைத்து வானர ஸ்திரிகளையும் அயோத்தி செல்ல ஆசைப்பட்டாள்.
பிறகு, ராவணனுடன் ஜடாயு போர் செய்த இடத்தை காட்டினார்.
பிறகு, கர, தூஷன் கொல்லப்பட்ட இடத்தையும், த்ரிசிரஸ் தோற்கடிக்கப்பட்ட இடத்தையும் காட்டினார்.
பிறகு, ராவணன் சீதையை கடத்தி கொண்டு போன இடத்தையும் கண்டனர்.
பிறகு, கோதாவரி நதியை, அகஸ்தியர் ஆசிரமத்தை தரிசித்தனர்.
சுதீக்ஷணரின் ஆசிரமத்தை கண்டனர்.
இந்திர தேவன் வந்த, சரபங்கர் ஆசிரமத்தை கண்டனர்.
பிறகு விராதனை கொன்ற இடத்தை சீதைக்கு காட்டினார்.
பிறகு, தாங்கள் தரிசித்த பல ரிஷிகளின் ஆசிரமத்தை கண்டனர்.
அத்ரி ரிஷியின் ஆசிரமத்தை பார்த்தனர்.
சீதைக்கு அங்கு அனசூயை பார்த்த தருணத்தை நினைவு கூர்ந்தார்.
பிறகு, கைகேயின் புதல்வன் பரதனை கண்ட சித்ரகூடம் வந்தனர்.
பிறகு அழகான யமுனா நதியை கண்டனர்.
பிறகு பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்தை கண்டனர்.
பிறகு புனிதமான கங்கையை கண்டனர்.
ஸ்ருங்கபேரிபுரத்தை கண்ட ராமபிரான், குஹனை நினைத்துக்கொண்டார்.
பிறகு, சீதையை பார்த்து,
"சீதா! அதோ பார்.. சரயு நதி.. கரை முழுவதும் யாகங்கள் நடக்கும் சரயு நதியை பார்.
இதோ... என் தந்தை தசரத மன்னரின் அயோத்தி நகரம்.
நான் இந்த அயோத்தியை நோக்கி தலை வணங்குகிறேன்."
என்றார்.
இதை கேட்ட வானரர்கள் தலையை தூக்கி, எட்டி எட்டி அயோத்தி நகரின் அழகை கண்டனர்.
அயோத்தி நகரமே வெண் நிற விரிப்பு போர்த்தி, வெயில் படாமல் இருந்தது.
இந்திரனின் சொர்க்க லோகமோ? என்று சொல்லும் அளவிற்கு ஜொலித்தது.
14 வருடம் முடிந்து... 5வது நாள், புஷ்பக விமானத்தை விட்டு இறங்கி, ராமபிரான், பரத்வாஜ ஆசிரமத்துக்கு நுழைந்தார்.
"அயோத்தி எப்படி உள்ளது. அயோத்தி மக்கள் எப்படி உள்ளனர். பரதன் எப்படி இருக்கிறான். என்னுடைய தாயார் எப்படி இருக்கிறார்? அனைவரும் உயிரோடு இருக்கிறார்களா?"
என்று விஜாரித்தார்.
பரத்வாஜ ரிஷி, "அனைவரும் நலம். உன் வருகைக்காக, தானும் மரவுரி அணிந்து தவ கோலத்தில் இருக்கும் பரதன் காத்து கொண்டு இருக்கிறான்.
அன்று கைகேயின் வரத்தை நிலை நாட்ட, இதோ இந்த காட்டு வழி பாதையில், சீதா, லக்ஷ்மணனுடன் நீ சென்றது நினைவில் வருகிறது.
தசரதர் கொடுத்த வாக்குக்காக, அப்பாவை மீற கூடாது என்ற தர்மத்தை காக்க, கிடைத்த பதவியை உதறி விட்டு, தன் சொத்தை எல்லாம் தானம் செய்து விட்டு, தன் சுகத்தை எல்லாம் உதறி விட்டு,
14 வருடமும் காய், கனி, கிழங்குகள் மட்டுமே உட்கொண்டு நீ செய்த பெரும் காரியம் இன்று சபலமானது.
இப்போது, நீ உன் நலன் விரும்பிகள், நண்பர்கள் அனைவருடனும் இருக்கிறாய்.
உன் எதிரிகளை அழித்து, விஜய ராகவானாக இருக்கும் உன்னை கண்டு நான் ஆனந்தம் கொள்கிறேன்.
சாதுக்களான ரிஷிகளை காக்கவே, நீ ஜனஸ்தானத்தில் அட்டகாசம் செய்த ராக்ஷஸர்களை ஒழித்தாய் என்று அறிகிறேன்.
ஒரு குறையும் இல்லாத சீதையை, ராவணன் அபகரித்து சென்றுள்ளான். மாரீசன் மாய மான் போல வந்து நிற்க, அதை கண்டு ஆசைப்பட்டு, சீதை பெரும் துன்பத்திற்கு ஆளாகி விட்டாள்.
பிறகு நீ கபந்தனை கண்டு, பிறகு பம்பா நதி அருகில் இருந்த சபரி என்ற தபஸ்வினியை கண்டாய்.
பிறகு சுக்ரீவனுடன் நட்பு கொண்டு, அவன் மனைவியை தன்னிடம் வைத்து இருந்த வாலியை வதைத்து, வானர சேனை முழுவதும் சீதையை தேட புறப்பட்டது.
ஹனுமான் இந்த காரியத்தில் வெற்றி பெற்று, சீதை இருக்குமிடத்தை கண்டறிந்தார்.
பிறகு நலன் பாலம் அமைக்க, வானர சேனையோடு இலங்கையை சூழ்ந்து முற்றுகை இட்டீர்கள்.
ராவணன், தன் பிள்ளைகள், சொந்தங்கள், மந்திரிகள் மேலும் அவர்கள் படைகளோடு சேர்ந்து அழிந்து போனான்.
விண்ணுலக தேவர்கள், தேவதைகள் அனைவரும் உனக்கு ப்ரத்யக்ஷம் ஆனார்கள். அவர்கள் அனைவரும் உனக்கு வரமும், ஆசீர்வாதமும் செய்தனர்.
ஓ ராமா! என் தனி மனித ஒழுக்கத்தால், தவ வலிமையால், உனக்கு நடந்த சம்பவங்கள் யாவையும் அறிந்தேன்.
ஓ மஹாவீரனே! இப்போது நானும் உனக்கு வரம் தர ஆசைப்படுகிறேன். இந்த நீரை எடுத்து உன் கைகளை அலம்பிக்கொண்டு, அயோத்தி நகருக்குள் பிரவேசம் செய்."
என்றார் பரத்வாஜர்.
ராமபிரான், பணிவுடன் வணங்கி,
"அயோத்தியா நகரம் செல்லும் பாதை முழுவதும், மரங்கள் எங்கும் பூக்கள் பூத்து, தேன் சொட்டும் பழங்கள் இருக்க வேண்டும்." என்று வரமாக கேட்டார்.
பரத்வாஜ ரிஷி, "இன்னும் 3 யோஜனை தூரம் இருக்கும் அயோத்தி வழி எங்கும், மரங்களில் கனிகள் கொட்டி கிடக்கும், பூக்கள் பூத்து குலுங்கும். அப்படியே ஆகட்டும்" என்று ஆசிர்வதித்தார்.
அயோத்தியை நோக்கி சேனை முழுவதும் நடந்து வர, வானரர்கள் அனைவரும் வரும் வழியில் கொட்டி கிடக்கும் பழங்களை சுவைத்து கொண்டே உற்சாகமாக வந்தனர்.
அயோத்தியை நெருங்கி விட்ட ராமபிரான், ஹனுமானை பார்த்து,
குகனை பார்த்து நலம் விஜாரித்து விட்டு, பிறகு பரதனை பார்த்து, "தானும், சீதை, லக்ஷ்மணன் அனைவரும் நலம், வந்து கொண்டு இருக்கிறோம்" என்ற தகவலை சொல்ல அனுப்பினார்.
மேலும், சீதையை ராவணன் அபகரித்து சென்றதையும், சுக்ரீவனுடன் தனக்கு ஏற்பட்ட நட்பையும், வாலியை கொன்றதையும், பாலம் அமைத்ததையும், ராவணன் கொல்லப்பட்டதையும், பிறகு அனைத்து தேவர்களும் ப்ரத்யக்ஷம் ஆனதையும், சிவபெருமான் அணுகிரஹத்தால் தனக்கு தந்தையின் தரிசனம் கிடைத்ததையும் சொல்லி, 'தான் வருவதை பற்றி பரதன் என்ன நினைக்கிறான்' என்று அறிந்து வர அனுப்பினார்.
குறிப்பாக ஹனுமானை பார்த்து,
"பரதனின் அங்க அசைவுகளை, அவனுடைய முக பாவனையை, பேச்சை கவனியுங்கள்.
என்று சொல்லி, ஹனுமானை வேகமாக பார்த்து விட்டு வர அனுப்பினார் ராமபிரான்.
அடுத்த நொடி, ஹனுமான் கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் ப்ரயாகையை கடந்து, ஸ்ருங்கபேரிபுரம் வந்து அடைந்தார்.
ராமபிரான் பரத்வாஜ ஆசிரமத்தில் இப்போது இருப்பதை தெரிவித்து, உங்கள் நண்பன் உங்களை விஜாரித்தார் என்று சொன்னார்..
குஹனிடம் 'ராமபிரான் உங்களை தரிசிக்க வர போகிறார்' என்ற தகவலை தெரிவித்து, ஆகாய மார்க்கமாக பறந்து அயோத்தியை நெருங்கினார்.
அங்கு 'நந்தி கிராமம்' என்ற இடத்தில் பரதன் தங்கி இருக்கும் குடிலை கண்டார்.
பரதன் ப்ரம்ம ரிஷியை போன்று, ப்ரம்மசர்யத்தோடு, ராமபிரானை போன்றே மரவுரி அணிந்து, ஜடை அணிந்து, சகோதரனை பிரிந்த வேதனையுடன் இருப்பதை கண்டார்.
ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்தாலும், 'ராம பாதுகை ஆளுகிறது' என்று பாதுகைக்கு மரியாதை செய்து கர்வம் இல்லாமல் இருந்தார்.
நான்கு வர்ணத்தாரையும் குறையில்லாமல் கவனித்து கொண்டார்.
தன்னுடன் இதயத்தில் நல்ல குணம் கொண்டவர்களையே மந்திரியாகவும், புரோகிதராகவும், பாதுகாப்பு தளபதியாகவும் வைத்து இருந்தார்.
ஆதலால், தங்கள் அரசன் மரவுரி தரித்து வாழ்கிறான் என்று இவர்களும் தங்கள் கடமையை தவறவில்லை, மேலும் அரசனை கைவிடவும் இல்லை.
பரதனின் பக்தியை கண்டு கண்ணீர் விட்டு ஹனுமான், பாதனிடம் சென்று,
"தண்டக வனத்தில் இருந்த ராமபிரான், எப்பொழுதும் உங்களை பற்றியே பேசுவார்.
ஓ தர்மாத்மா! உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை கொண்டு வந்துள்ளேன்.
உங்களுடைய துக்கம் இன்றோடு ஒழிந்தது.
நீங்கள் ராமபிரானோடு இணைய போகிறீர்கள்.
ராவணனை கொன்று, சீதா தேவியை மீட்ட ராமபிரான், தன் நலன் விரும்பிகளோடு வந்து கொண்டு இருக்கிறார்.
சீதா தேவியுடன், கூடவே லக்ஷ்மணனும் வருகிறார்."
என்று ஹனுமான் கூற,
14 வருடங்கள் எப்போது கழியுமோ, என்று வேதனையோடு காத்து இருந்த பரதன், மூர்ச்சையாகி கீழே மயங்கி விழுந்தார்.
உடனேயே தன்னை நிதானப்படுத்தி கொண்டு, இப்படி ஒரு செய்தியை சொன்ன ஹனுமானை, ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்து கொண்டார்.
ஹனுமானை பார்த்து,
"நீங்கள் உண்மையில் மனிதனா? அல்லது தேவனா? எனக்கு கருணை செய்வதற்காகவே வந்தது போல இருக்கிறதே!
நான் உங்களுக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்.
லட்சக்கணக்கான பசுக்களை உங்களுக்கு தரட்டுமா? நூற்றுக்கணக்கான கிராமங்கள் தரட்டுமா?
அல்லது,
16 நற் குணங்களும் நிரம்பிய, நல்ல பரம்பரையில் பிறந்த, அங்கங்கள் அழகாக உள்ள, ஆபரணங்கள் அணிந்த, நிலவு போன்ற, தங்க நிறம் கொண்ட ஒரு பெண்ணை உங்களுக்கு மணம் செய்து கொடுக்கவா?"
என்று ஆனந்தத்தின் எல்லைக்கு சென்று விட்ட பரதன் ஹனுமானை கண்டு பேரானந்தம் அடைந்து விட்டார்.
மேலும், ஹனுமானை பார்த்து,
"பல வருடங்கள் முன், என் அண்னா வனம் புகுந்து சென்றார்.
அதற்கு பிறகு, இத்தனை வருடங்கள் கழித்து தான், அவர் சம்பந்தமாக ஒரு சொல் கேட்கிறேன்.
இது என்னை தாங்க முடியாத ஆனந்தத்துக்கு இழுத்து செல்கிறது.
'பொறுமையை கடைபிடிப்பவனுக்கு கண்டிப்பாக ஏதோ ஒரு நாள் மீண்டும் சந்தோஷம் கிடைக்கும்' என்று சொல்வார்கள்.
இந்த வாக்கு சத்தியம் என்று உணர்கிறேன்.
எப்படி வானரர்களும், ராமபிரானும் இணைந்தார்கள்? எப்படி இது நடந்தது? எங்கு நடந்தது? ஏன் நடந்தது? தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்.."
என்று கேட்க, ஹனுமான் தன் வாயால் ராமாயண சரித்திரத்தை பரதனுக்குவிளக்கமாக சொல்கிறார்.
'ராவணன் வதைக்கப்பட்டு, சீதையை மீட்டு, புஷ்பக விமானத்தில் ஏறி, பரதவாஜ ஆஸ்ரமத்தில் வந்து தங்கி இருக்கிறார், நாளை உங்களை பார்க்க அயோத்தி வந்து விடுவார்'
என்று நடந்த விவரங்களை ஹனுமான் பரதனுக்கு விளக்கினார்.
பரதன் ஹனுமானை பார்த்து கை குவித்து "பல வருடங்கள் கழித்து, நாளை என் மனோரதம் பூர்த்தி ஆக போகிறது." என்றார்.
ஹனுமான் மூலம் ராமாயணம்கேட்கும் பாக்கியம் பெற்ற பரதன், பேரானந்தம் அடைந்தார்.
பிறகு, சத்ருக்னனை பார்த்து தேவையான ஏற்பாடுகள் செய்ய சொன்னார்.
இதை கேட்ட ஹனுமான், பரதனின் தாபத்தை உணர்ந்து, அழகாக பேசினார்.
"பாருங்கள்.. மரங்கள் அனைத்திலும் கனிகளும், பூக்களும், அளவில்லாமல் பூத்து குலுங்கி இருக்கிறது. அதை மொய்க்க மயக்கமுற்ற நிலையில் தேனீக்கள் வட்டமிடுகின்றன.
இவை பரத்வாஜ ரிஷியின் அணுகிரஹத்தால் ஏற்பட்டது.
பரத்வாஜ ரிஷி தன் ஆசிரமத்தில், தற்போது ராமபிரானுக்கும், வானர, ராக்ஷஸ சேனைக்கும் அதிதி சத்காரம் செய்து கொண்டு இருக்கிறார்."
என்று சொல்லும் போதே, வானர சேனையின் பேரொளி கேட்க தொடங்கியது.
"அதோ வானரர்கள் கோமதி நதியை கடந்து வருகின்றனர். பாருங்கள் புழுதி கிளம்பி வானத்தை தொடுகிறது." என்றார்.
அப்போது, வானில் புஷ்பக விமானம் (Flight) பறந்து வருவது தெரிந்தது.
உங்களை போன்ற திறமையுடன் நிர்வாகம் செய்ய திறனில்லாமல் தவிக்கிறேன்.
தோட்டத்தில் ஒரு பெரிய மரம் நன்றாக உயர்ந்து வளர்ந்து, பெரிய பெரிய கிளைகளுடன் இருந்து, பூக்கள் பூத்த பின், பழமாக ஆகாமல் வாடி போனால், அந்த மரத்தை வைத்தவன் பழத்தை அனுபவிக்க முடியாமல் தவிப்பான்.
அது போல,
நிர்வாக திறன் இருந்தும், இத்தனை தாசர்கள், வேலையாட்கள் இருந்தும், நீங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்று கொள்ளாமல் இருக்க கூடாது.
இந்த உலகம் நீங்கள் 'பட்டாபி ராமனாக' இருப்பதை பார்க்கட்டும்.
அயோத்தி நகருக்குள் ராமபிரான் நுழைந்ததும், சங்க நாதமும், மேளமும் விண்ணை பிளந்தது.
அயோத்தி மக்கள், ராமபிரானை வெகு நாட்கள் கழித்து, பார்த்தனர்.
"ஸ்ரீ ராமருக்கு வெற்றி.. ஜெய் ஸ்ரீ ராம்" என்று ராமபிரானுக்கு முன் கோஷமிட்டனர்.
அவர்களின் உற்சாகத்தை கண்டு, ராமபிரான் பெரிதும் மகிழ்ச்சி உற்றார்.
தேர் நகர்ந்து செல்ல, ராமபிரானை தொடர்ந்து கொண்டே, ஜெயகோஷம் செய்து கொண்டே பரதனோடு வந்தனர் அயோத்தி மக்கள்.
மந்திரிகள், புரோகிதர்கள், மேலும் பலர் சூழ்ந்து இருக்க, ராமபிரான் நக்ஷத்திரங்களுக்கு நடுவே, குளிர் தரும் நிலவு போல இருந்தார்.
ராமபிரானுக்கு வாழ்த்து கோஷங்களை, தாளத்தோடு பாடி கொண்டே, பாடகர்கள் ராமபிரானுக்கு முன் சென்றனர்.
மேலும், பசுக்கள், புரோகிதர்கள், பாலால் செய்யப்பட்ட இனிப்பு தின்பண்டங்கள், தங்க ஆபரணங்கள், அரிசி போன்ற தானியங்கள் அனைத்தையும் ராமபிரான் முன் எடுத்து கொண்டு சென்றனர்.
ராமபிரான், மந்திரிகளிடம், 'சுக்ரீவனின் நட்பு பற்றியும், ஹனுமானின் வலிமையையும், வானர வீரர்களின் கட்டுப்பாட்டையும், ராக்ஷஸர்களின் பலத்தை பற்றியும், தான் விபீஷணனோடு சேர்ந்ததை பற்றியும்' விவரித்து கொண்டு இருந்தார்.
பிறகு, பரதனை பார்த்து, "முத்தும், வைரமும் கொட்டி கிடக்கும், அசோக மரங்கள் அடர்ந்து அழகாக இருக்கும் என்னுடைய பெரிய மாளிகையை சுக்ரீவனுக்கு கொடுத்து தங்க சொல்." என்றார் ராமபிரான்.
உடனே பரதன், சுக்ரீவன் கையை பற்றிக்கொண்டு, தானே மாளிகைக்கு கூட்டி சென்றார்.
இதற்கிடையில், சத்ருக்னன் ஆணையின் படி, வேலையாட்கள் விரிப்புகள், கட்டில் மெத்தகள், விளக்குகள் எடுத்து கொண்டு சென்றனர்.
சத்ருக்னன் சுக்ரீவனை பார்த்து, "அரசே! ராம பட்டாபிஷேகத்துக்கு தயார் ஆவதற்கு உங்கள் வானரர்களுக்கு ஆணை இடுங்கள்"
உடனேயே சுக்ரீவன், முத்துக்கள் பதித்த 4 தங்க குடங்களை எடுத்து, தன் நான்கு வானர தலைவர்களை அழைத்தார்.
பிறகு அவர்களை பார்த்து,
"வானரர்களே! நாளை காலை விடுவதற்கு முன், இந்த குடங்களில் நான்கு திசைகளில் உள்ள கடலின் தீர்த்தமும் நிரப்பப்பட்டு, என் அடுத்த உத்தரவுக்காக நீங்கள் காத்து இருக்க வேண்டும்" என்று நியமித்தார்.
'ஜாம்பவான், ஹனுமான், வேகதர்சி, ருஷபன்' ஆகிய நால்வரும் கருடனை போல வேகமாக செல்ல கூடியவர்கள். மகா பலசாலிகள்.
இவர்கள் நான்கு திசைக்கும் பறந்து சென்று சமுத்திர ஜலத்தை எடுத்து வந்தனர்.
மேலும் பல வானரர்கள் 500 நதிகளின் தீர்த்தத்தை எடுத்து கொண்டு வந்து விட்டனர்.
இதை தவிர, சுசேனன் 'கிழக்கு சமுத்திரம்' சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்.
ருஷபன் சந்தன கட்டைகள் கலந்து, 'தெற்கு சமுத்திரம்' சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்.
கவயன் குளிர்ந்த 'மேற்கு சமுத்திரம்' சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்.
காற்றை போல பறக்க கூடிய நலன், 'வடக்கு சமுத்திரம்' (arctic ocean) சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்.
உலகத்தில் உள்ள சமுத்திர தீர்த்தம் அனைத்தும், நதிகளின் தீர்த்தம் அனைத்தும் அயோத்திக்கு வந்து சேர்ந்து விட, சத்ருக்னன், வஷிஷ்டரை 'ராம பட்டாபிஷேகத்தை நடத்துமாறு' கேட்டுகொண்டார்.
தொடர்ந்து, வசிஷ்டர் மற்றும் தலைமை புரோகிதர்கள் 'ராமபிரானை, சீதையோடுரத்தினங்கள் பதித்த ராஜ சிம்மாசனத்தில்' அமர செய்தார்கள்.
வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், காத்யாயனர், சுயக்னா, கௌதமர், விஜயர் போன்ற 8 ரிஷிகள் பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
8 வசுக்கள் சேர்ந்து கொண்டு, இந்திரனுக்கு ராஜ்ய அபிஷேகம் செய்தது போல, ராமபிரானுக்கு செய்து வைத்தனர்.
புரோகிதர்கள், பின் கன்னிப் பெண்களும், மந்திரிகளும், அதன் பின் போர் வீரர்களும் ராமபிரானுக்கு அபிஷேகம் செய்வித்தனர்.
வேத மந்த்ரங்களோடு அபிஷேகம் செய்தனர்.
மகிழ்ச்சியுடன் செய்தனர்.
தேவ லோகத்திலும், ஆகாயத்திலுமாக நின்ற படி, தேவதைகள் அபிஷேகம் செய்தனர்.
உலகத்தை காக்கும் பொறுப்பில் உள்ள நால்வரும் (இந்திரன், குபேரன், வருணன், யமன்) சேர்ந்து கொண்டு, அனைத்து விதமான ஔஷதிகள் கலந்த, திவ்யமான ஜலத்தால் அபிஷேகம் செய்தனர்.
ப்ரம்மாவால் நிர்மாணிக்கப்பட்டு, ரத்னங்கள் பதித்த கிரீடம், முன்பு ஸ்வாயம்பு மனுவுக்கு முடி சூட்டபட்டது.
அதன் பின், அந்த வம்சத்தில் வரிசையாக அதே கிரீடத்தை அரசர்கள் முடி சூட்டிக்கொண்டார்கள்.
அதே கிரீடத்தை இப்போது இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய ராமபிரான் தலையில் சூட்டினார் வசிஷ்டர்.
'தேஜஸ், தன்னம்பிக்கை, மகிமை, திறமை, சாமர்த்யம், பணிவு, இனிமை, வலிமை, வீரம், புத்திசாலித்தனம்' இவை யாரிடம் எப்பொழுதுமே இருக்கிறதோ! அந்த 'வாயு புத்திரனுக்கு' தன் முத்து மாலையை கரு விழியாளான வைதேஹி கொடுத்தாள்.
அந்த மாலையணிந்து ஹனுமான், விசேஷமாகத் தெரிந்தார்.
மலை மீது, சந்திரனின் கிரணங்கள், வெண்மையாகப் படிந்து இருப்பது போல, சோபித்தார் ஹனுமான்.
இதன் பின் த்விவிதன், மைந்தன், நீலன் ஆகியோருக்கு ராமபிரான் அவர்களின் எல்லா விதமான நல்ல குணங்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
வயதில் மூத்த வானரர்கள், பிற வானர அரசர்கள் என்று அனைவரும் வஸ்திரங்களாலும், பூஷணங்களாலும் முறைப்படி பூஜிக்கப்பட்டனர். கௌரவிக்கப்பட்டனர்.
விபீஷணனும், சுக்ரீவனும், ஹனுமானும், ஜாம்பவானும், மற்ற முக்கியமான வானர வீரர்களும், ராமபிரானுடைய குறைவற்ற தெளிவான செயலால், முறைப்படி கௌரவிக்கப் பட்டனர்.
அவரவர்கள் விரும்பியபடி ரத்னங்களோ, மற்ற பொருட்களோ, கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியுடன் நிறைந்த செல்வந்தர்களாகவே அனைவரும் திரும்பிச் சென்றனர்.
ராஜா ராமபிரானை வணங்கி விடை பெற்று, வானரர்கள் கிஷ்கிந்தை சென்றனர்.
வானர ஸ்ரேஷ்டரான சுக்ரீவனும், ராமனின் அபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டு, முறைப்படி கௌரவிக்கப் பட்டவராக விடை பெற்று கிஷ்கிந்தை சென்றார்.
விபீஷணனும் தன்னுடன் வந்த ராக்ஷஸ வீரர்களுடன் விடை பெற வந்தார்.
விபீஷணனுக்கு குலதனம் கிடைத்தது.
(குறிப்பு: இங்கு குலதனம் என்பதை தன் குல தனமான இலங்கை ராஜயம் என்றும் சொல்லலாம். ஆனால் இலங்கை ராஜ்யத்தை இலங்கையிலேயே கொடுத்து விட்டார் ராமபிரான்.)
ராமபிரானின் குல தெய்வம் "ரங்கநாதரை" எடுத்து சென்றார்.
ரங்கநாதரை பெற்றுக் கொண்டு இலங்கையை நோக்கி விபீஷணன் புறப்பட்டார்.
(குறிப்பு: இலங்கை செல்லும் வழியில், ஸ்ரீ ரங்கம் வந்த போது, இரு புறமும் ஓடும் காவிரியை பார்த்து, சந்தியா வேளை வந்து விட்டதால், அங்கேயே சந்தியா வந்தனம் செய்து விட்டு பிறகு இலங்கைக்கு புறப்படலாம் என்று நினைத்து, ரங்கநாதரை வைத்து விட்டு, ஸ்நானம் செய்து, சந்தியா வந்தனம் செய்ய சென்றார்.
திரும்பி வரும் போது, ரங்கநாதர் அங்கேயே தான் காவிரி நதி கரையில் இருக்க விரும்புவதாக சொல்லி, 'தெற்கு முகமாக இலங்கையை பார்த்து அணுகிரஹம் செய்கிறேன்' என்று சொல்லிவிட்டார்.
மீற முடியாத விபீஷணன் அங்கேயே ரங்கநாதரை வைத்து விட்டு, அன்றிலிருந்து தினமும் ரங்கநாதரை சேவிக்க வரும் பழக்கம் கொண்டார்.
ராம அவதாரம் த்ரேதா யுகத்தில் நிகழ்ந்தது. கணக்கிட்டு பார்த்தால், குறைந்தது சுமார் 8 லட்சம் வருடம் முன் த்ரேதா யுகம்.
ஸ்ரீ ரங்கநாதர், ப்ரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டு, பிறகு ஸ்வாயம்பு மனுவால் பூலோகம் வந்து, பிறகு இக்ஷவாகு அரசர்கள் வழிபட்டு, நாராயணனே ராமபிரானாக வந்து, தன்னையே குலதெய்வமாக வழிபட்டு, தான் அயோத்தியில் இருக்க, ரங்கநாதராக இருக்கும் இவரே தென் தேசம் வந்து விட்டார். குறைந்தது 8 லட்சம் வருடங்களாக 'ஸ்ரீரங்கநாதர்' ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது.
ராமபிரானின் குலதெய்வமான, குலதனமான 'ரங்கநாதர்' தமிழ் நாட்டுக்கு வந்தது, தமிழர்களுக்கு கிடைத்த பாக்கியம்.)
ராஜ்யம் முழுவதுமாக பரந்த எண்ணத்துடன், பரிபாலித்துக் கொண்டு, பெரும் புகழுடன், எதிரிகள் யாரும் இன்றி மிகவும் சந்தோஷமாக ஆண்டு வந்தார் ராகவன்.
கிராமத்தில் உள்ள அனைவரிடமும் கபடம் இல்லாது பழகுவார். அனைவருக்கும் பிடித்தமான பிள்ளையாக இருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.
அக்ரூரர், பிருந்தாவனம் வந்து கண்ணனை மதுராவுக்கு அழைக்க வந்தார்.
'கம்சன் கொல்வதற்காக தான் அழைக்கிறான்' என்ற உண்மையையும் சொல்லிவிட்டார்.
சிரித்து கொண்டே வரவேற்ற கண்ணன், சித்தப்பா அக்ரூரரை வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அருகில் யாருமில்லாத நேரம் பார்த்து அக்ரூரர் அருகில் சென்ற கண்ணன், அவர் காதருகில் அழுது கொண்டே "என்னை பெற்ற அம்மா தேவகி எப்படி இருக்கிறாள்? என்னை பெற்றவள் எத்தனை கஷ்டத்தை அனுபவிக்கிறாள். அப்பா வசுதேவர் எப்படி இருக்கிறார்?" என்று கேட்க,
"10 வயது வரை இந்த சோகத்தை நெஞ்சில் சுமந்தும், யசோதைக்கும் நந்தகோபருக்கும் கூட இது நாள் வரை தன் சோகத்த்தை காட்டாமல் இருந்து இருக்கிறாரே!!"
என்று கண்ணனின் காம்பீர்யத்தை கண்டு பிரமித்து நின்றார் அக்ரூரர்.
தனக்கு உள்ள சோகத்தை பிறரிடம் சொல்லி, வெளிக்காட்டாத குணம் கொண்ட ராமபிரானை, பொதுவாக "காம்பீரிய புருஷன்" என்று சொல்வோம்.
நாராயணனின் அடுத்த அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண அவதாரமும் "காம்பீர்ய" அவதாரமே.
தன் சோகத்தை வெளிக்காட்டாமல், அதே சமயம் பிறரை ஆனந்தமாகவும் வைத்து இருந்தார், ஸ்ரீ கிருஷ்ணர்.
நம் சோகத்தை காட்டி பிறரை துக்கப்படுத்துவதை விட, ஆறுதல் தேடுவதை விட, தன் சோகத்தை மறைத்து பிறரை ஆனந்தமாக வைத்து கொள்ள, நாமும் முயர்சிக்கலாம்.