ராவணன்,
சீதையை அபகரித்து இலங்கைக்கு கொண்டு சென்று விட்டான்.
அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை, "
ஸ்ரீராமர் வந்து காப்பாற்றுவார்" என்று பத்து மாதங்கள் காத்திருந்தாள்.
சீதையை மீட்க,
பெரும் வானர படை திரட்டி, கடலில் சேது அமைத்து,
பெரும் போர் செய்து, ராவணன் 10 தலையையும் கீழே சாய்த்து,
விபீஷணனை இலங்கை அரசனாக்கி,
மகிழ்ச்சியுடன் விபீஷணனை பார்த்து,
சீதையை தன்னிடம், அழைத்து வர சொன்னார் ஸ்ரீ ராமர்.
சீதையை சகல மரியாதையுடன், மூடு பல்லக்கில் அழைத்து வந்தார் விபீஷணன்
.
"எந்த சீதைக்காக, தங்கள் உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருந்தார்களோ! அந்த சீதையை, வானரர்கள் தரிசனம் செய்ய வேண்டும்"
என்று ஆசைப்பட்ட ஸ்ரீ ராமர்,
சீதையை பல்லக்கை விட்டு இறங்கி, வானரர்கள் பார்க்க நடந்து வர சொன்னார்.
க்ஷத்ரிய பெண்ணான சீதை, ராவணனை கூட கண்டு அஞ்சாத வீரமிக்கவள், என்ன காரணத்தாலோ, '
திடீரென்று, தன் முகத்தை தன் புடவையால் மூடி கொண்டு, முகத்தை காட்டிக்கொள்ள பிரியப்படாமல், தலை குனிந்து கொண்டே', வானரர்களுக்கு இடையே நடந்து, ராமபிரான் அருகில் வந்து நின்றாள்.
தன் உயிருக்கு உயிரான சீதையை மீட்க, இலங்கை வரை படையை திரட்டிக்கொண்டு சென்று, ராவணனை கொன்று, '
தன் பத்னியான சீதையை ஆசையுடன் அழைத்து வர சொன்ன ஸ்ரீ ராமர்',
தலை குனிந்து கொண்டே தன் அருகில் வந்து நிற்கும் சீதையை கவனித்ததும்,
அவளை பார்க்க கூட செய்யாமல், எங்கோ பார்த்து கொண்டு,
யாருமே எதிர்பார்க்காத கடும் சொற்களை பேசினார்.
இந்த கடும் சொற்களை கேட்ட சீதை, துளியும் பயம் இல்லாமல், லக்ஷ்மணரை பார்த்து,
"லக்ஷ்மணா! எனக்கு இங்கேயே அக்னியை மூட்டு, நான் அக்னி பிரவேஷம் செய்கிறேன்." என்றாள்.
"அக்னியை மூட்டுவதா? வேண்டாமா?" என்ற நிலையில், லக்ஷ்மணன் ராமபிரானை பார்க்க,
ஸ்ரீ ராமர் முகத்தில் சம்மதம் தெரிந்தது. உடனே அக்னி மூட்டிவிட்டார்.
ஸ்ரீ ராமருக்காக 'சீதையை தேடி இலங்கை சென்று பார்த்த'
ஆஞ்சநேயரும் இங்கு நடக்கும் நிகழ்வை கண்டு துக்கப்படவில்லை.
வெளியோட்டமாக பார்க்கும் போது,
யாரிடமும் கடிந்து பேசாத ஸ்ரீ ராமர், சீதையை பார்த்து ஏன் இப்படி பேசினார்? என்று தோன்றும்.
ராமபிரான் கடிந்து பேசியதே ஆச்சர்யம்!
அதற்கு சீதை பதிலாக
"நான் அக்னி பிரவேசம் செய்து என்னை நிரூபிக்கிறேன்" என்று சொன்னதும் ஆச்சர்யம்.
இதை கண்டு,
பதட்டம் அடையாத லக்ஷ்மணரும், ஹனுமனும் கூட ஆச்சர்யமே !!
நடப்பது அநியாயம் போல தோன்றும் இந்த நிகழ்வில்,
ஏன் ஹனுமனும், லக்ஷ்மணனும் அமைதியாக இருந்தனர்? என்றும் கேள்விகள் தோன்றும்.
ஸ்ரீ ராமரும், சீதையும் திவ்ய தம்பதிகள்.
சாதாரண தம்பதிகளுக்கும்,
திவ்ய தம்பதிக்கும் பல வித்யாசம் உண்டு.
சாதாரண உலக தம்பதிகளுக்கு,
மற்றவர் என்ன சொல்ல நினைக்கிறார்? என்ன ஆசைப்படுகிறார்? என்பதை சொன்னால் தான், புரிந்து கொள்ள முடியும்.
திவ்ய தம்பதிகளுக்கு,
தன் கணவன் என்ன சொல்ல நினைக்கிறார்? தன் மனைவி என்ன சொல்ல நினைக்கிறாள்? என்ன ஆசைப்படுகிறார்? என்பதை அவர்கள் குறிப்பு அறிந்தே புரிந்து கொள்ள முடியும்.
திவ்ய தம்பதிகள்
தன் தேவைகளுக்கு பேச கூட அவசியமில்லாமல் இருப்பர்.
திவ்ய தம்பதிகள் பேசினால்,
பேசுவதற்கு ஆசை பட்டு தான் பேசுவார்களே தவிர, தேவைக்கு பேசக்கூட அவசியமில்லாமல் இருப்பார்கள்...
ஸ்ரீ ராமரும், சீதையும் திவ்ய தம்பதிகள் என்பதை நாம் மறக்க கூடாது.
நம்மை போன்ற சாதாரண தம்பதிகள் என்ற பார்வையில் பார்த்தாலே,
அது நமக்கு பாவத்தை தரும்.
இவர்கள் சாக்ஷாத்
அந்த 'விஷ்ணுவும், லட்சுமியும்' என்ற உணர்வில் பார்க்க வேண்டும்.
உண்மையில் என்ன நிகழ்ந்தது?
ஸ்ரீ ராமர், ராவணனை கொன்ற பின், விபீஷணனை பார்த்து சீதையை சகல மரியாதையுடன் அழைத்துவர சொன்னார்.
சுக்ரீவனும் அவனுடைய சேனைகளும், சீதையை பார்த்தது கூட இல்லை. ஆனால், சீதைக்காக தங்கள் உயிரை கூட விட துணிந்து போர் செய்தனர்.
யாருக்காக தன் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருந்தார்களோ! அந்த சீதையின் தரிசனம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கருணை கொண்டார் ஸ்ரீராமர்.
இதன் காரணமாக,
சீதையை ஸ்நானம் செய்து,
சர்வ ஆபரணத்துடன் சேனைகளுக்கு நடுவே நடத்தி அழைத்து வருமாறு சொன்னார்.
பத்து மாதம் சிறையில் இருந்த சீதையை, விபீஷணன் தன் மனைவியை முன்னிட்டு, "
ஸ்ரீ ராமர் தங்களை பார்க்க ஆவலாக, அழைப்பதாக" சொன்னார்.
இந்த ஒரு சொல்லுக்காக காத்திருந்த சீதை,
உடனே சந்தோசத்துடன் கிளம்ப தயாரானாள்.
ஸ்ரீ ராமர்,
"சீதையை ஸ்நானம் செய்து, சர்வ ஆபரணத்துடன் அழைத்து வருமாறு" சொன்னதாக சொல்ல,
பணிப்பெண்களும், விபீஷணனின் பத்னியும்,
சீதைக்கு ஸ்நானம், அலங்காரம் செய்து, மூடு பல்லக்கில், மகாராணி சீதையை சர்வ மரியாதையுடன் அழைத்துக் கொண்டு, ஸ்ரீ ராமரை நோக்கி வந்தனர்.
வானர சேனைகள்,
சீதையை காண முடியாமல், மூடு பல்லக்கை ஆச்சர்யமாக பார்த்தனர்.
வானர படைகளின்
"ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷம் விண்ணை முட்டியது.
'வானரர்கள் யாருக்காக தன் உயிரையும் துறக்க துணிந்தார்களோ! அவர்களுக்கு சீதையின் தரிசனம் கிடைக்க வேண்டும்' என்று எண்ணினார் ஸ்ரீ ராமர்.
உடனே, ஸ்ரீ ராமர், வானரர்கள் சீதா தேவியை பார்க்க வேண்டும் என்ற கருணையால், மூடு பல்லக்கு இல்லாமல்,
சீதையை சகல மரியாதையுடன் நடத்தி அழைத்து வருமாறு சொன்னார்.
கம்பீரமான, தாயுள்ளம் கொண்ட
சீதை,
மகிழ்ச்சியுடன் பெரும் சேனைக்கு நடுவே ஸ்ரீ ராமரை நோக்கி நடக்கலானாள்.
'தனக்காக பெரும் படையை திரட்டி, ஜெயராமனாக இருக்கும் ஸ்ரீராமரை காணப்போகிறோம்' என்று ஆனந்தப்பட்டாள் சீதை.
பெரும் வானர படை வீரர்களை கண்டு, ஸ்ரீ ராமருக்கும், தனக்கும் கிடைத்த குழந்தைகள் போல நினைத்தாள், சீதை.
தாயுள்ளதோடு அனைவரையும் கண்டாள்.
சீதையை கண்டதும், பேரிரைச்சல் உண்டானது.
வானர்கள்,
"இதோ சீதா மாதா...",
"ஆஹா... இவள்தான் சீதா தேவியோ !",
"சீதா ராம் கீ ஜெய்"
என்று எங்கும் பேரிரைச்சல் உண்டானது.
மூடு பல்லக்கில் வரும் வரை மனம் சஞ்சலம் அடையாமல்,
ஸ்ரீ ராமரை அடையப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தாள் சீதை.
மூடு பல்லக்கில் இருந்து இறங்கி, வானர படைகளின் பேரிரைச்சல் நடுவில் நடக்கும் போது,
சீதைக்கு திடீரென்று மனம் சஞ்சலம் அடைந்தது. பெரும் துக்கம் சூழ்ந்தது.
தன்னை வெளிக்காட்டி கொள்ள விரும்பாத சீதை, உடனே தன் புடவை தலைப்பு கொண்டு, தன் முகத்தை முழுவதுமாக மூடி, அவமானத்தால் கூனி குறுகி நடந்து வந்து, ஸ்ரீ ராமர் முன் நின்றாள்.
சீதையின் நிலை என்ன? என்ன துக்கத்தை அடைந்தாள் சீதை?
கற்புக்கரசியான சீதை,
தான் களங்கப் படாதவளாக இருந்தாலும்,
பத்து மாதங்கள் ஒருவன் பிடியில் அகப்பட்டதையும்,
அதனால் உலகம் தன்னையும், ஸ்ரீ ராமரையும் கேட்கப் போகும் கேள்விக்கும்,
அதனால் ஸ்ரீ ராமருக்கு உண்டாக போகும் தர்ம சங்கடத்திற்கு தான் காரணமாகிவிட்டோமே!!
என்று தன்னை தானே வெறுத்தாள்.
"இப்படி ஒரு நிலையை ஸ்ரீ ராமருக்கு தந்து விட்டோமே!!" என்று சொல்லமுடியாத துக்கம் அடைந்தாள்.
"இப்பொழுதே அக்னிப்ரேவேசம் செய்து பிராண தியாகம் செய்து விடலாமா?" என்று எண்ணினாள்.
"இருந்தாலும் ஸ்ரீ ராமர் மனம் தெரியாமல் தானாக முடிவு செய்யக் கூடாது" என்ற மனசஞ்சலத்தோடு ஸ்ரீ ராமரை நோக்கி நடந்தாள்.
ஸ்ரீ ராமரும், சீதையும், மனம் ஒத்த திவ்ய தம்பதிகள்.
சாக்ஷாத் நாராயணனும் லக்ஷ்மியும் ஆவார்கள்.
பேசிக்கொள்ளாமலேயே, இருவருக்கும் மற்றவர் என்ன நினைக்கிறார்? என்ன ஆசைப்படுகிறார்? என்று தெரியும்.
சமாதானமே செய்யமுடியாத சோகத்துடன் வரும் சீதையின் மன சஞ்சலத்தை அறிந்து கொண்டார் ஸ்ரீராமர்.
தன்னை இந்த உலகிற்கு கொடியவனாக காட்டி கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் '
சீதையை யாரும் குறை சொல்ல கூடாது' என்று எண்ணினார்.
உடனே, சீதையின் முகத்தையும் பாராமல்,
"சீதை, உன்னை காப்பாற்றியது, என்னுடைய கடமை.
நானும் ஒரு புருஷன் என்று நிருபித்தேன்.
உன்னிடம் மீண்டும் வாழவேண்டும் என்றில்லை.
நீ வாழ்வதோ! உயிரை போக்கி கொள்வதோ! உன் இஷ்டம்.
நீ வாழவேண்டும் என்றால், கவலை படாதே. நான் உன்னை வாழ வைக்கிறேன்.
உன்னை தாயை போன்று, என் தம்பிகள் உன்னை காப்பாற்றுவார்கள்.
அயோத்யாவிலேயே நீ வாழலாம்.
இல்லை என்றால், கிஷ்கிந்தையில் நீ வாழலாம்.
சுக்ரீவனும் உன்னை தாயை போல காப்பாற்றுவான்.
இல்லை என்றால், இங்கேயே வாழலாம்.
விபிஷணன் உன்னை காப்பாற்றுவான்.
எதுவும் பிடிக்க வில்லை என்றால், நீ எங்கு வேண்டுமானாலும் வாழ்.
நான் உன்னை வாழ வைக்கிறேன்."
என்றார்.
சீதைக்காகவே
1000 மைல் நடந்து,
சீதைக்காகவே
படைகளை திரட்டி,
சீதைக்காவவே
கடலில் பாலம் அமைத்து,
சீதைக்காகவே
ராக்ஷஸர்களுடன் போர் செய்து,
சீதைக்காகவே
ராவணனை கொன்று,
சீதையை மீட்ட பின், ராமபிரான் இப்படி கடுமையாக பேசியது, அங்கு கூடி இருந்த சுக்ரீவன் போன்றவர்களுக்கே திகைப்பை ஊட்டியது.
ஆனால், இந்த கடுஞ் சொற்கள்,
சீதைக்கு மன சமாதானமாக இருந்தது.
இதை ஒரு வாய்ப்பாக எடுத்து, லக்ஷ்மணனை பார்த்து சீதை கட்டளை இட்டாள்,
"லக்ஷ்மணா, இந்த இடத்திலேயே எனக்கு அக்னியை மூட்டு, நான் அக்னி பிரவேசம் செய்யப்போகிறேன்.
நான் பதிவ்ரதை!! என்பது உண்மையானால்,
ஸ்ரீ ராமரும் ஏக பத்னிவ்ரதன்!! என்பது உண்மையானால்,
இந்த அக்னி என்னை பாதுகாக்கட்டும்"
என்றாள்.
லக்ஷ்மணன்,
ஸ்ரீ ராமர் முகத்தை பார்த்தார்.
ஸ்ரீ ராமர் முகத்தில் சம்மதம் தெரிந்தது.
தைரியமாக சிதை மூட்டினார்.
அருகில்,
ஆஞ்சநேயர் எந்த ஒரு மன சஞ்சலமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார்.
லக்ஷ்மனின் நிலை என்ன? ஆஞ்சநேயர் நிலை என்ன?
லக்ஷ்மணன், ஸ்ரீ ராமரை நன்கு உணர்ந்தவர்.
ஸ்ரீராமர், எந்த ஒரு நிலையிலும் நீதி தவறாதவர், குற்றமற்றவர், நிதானமனாவர், தர்மம் தெரிந்தவர், சர்வ நல்ல குணங்களும் உள்ளவர் என்று நன்கு உணர்ந்தவர் லக்ஷ்மணன்.
இப்படிப்பட்ட "ஸ்ரீ
அண்ணாவுக்கு சம்மதம் என்றால், அதுவே சாஸ்த்ரம்.
மறு கேள்வி இல்லை." என்று நினைத்தார்.
இது லக்ஷ்மணனின் நிலை.
ஆஞ்சனேயர்,
"சீதைக்கு அக்னியால் ஒன்றும் ஆகாது" என்று திடமாக முடிவு செய்திருந்தார்.
தான் இலங்கையை நெருப்பால் பொசுக்கிய போது,
சீதை செய்த சபதம் அவருக்கு ஞாபகம் வந்தது.
"நான் பதிவ்ரதை என்பது உண்மையானால், இந்த அக்னி, ஹனுமனை சுடாமல், குளிர்ச்சி கொடுக்கட்டும்" என்றாள் சீதை .
"சீதையின் கற்பிற்கு தானே சாட்சி" என்பதாலும்,
சீதை இப்பொழுது செய்த சபதத்தில்,
"நான் பதிவ்ரதை என்பது உண்மையானால்,
ஸ்ரீ ராமர் ஏக பத்னிவ்ரதன் என்பது உண்மையானால்,
இந்த அக்னி என்னை பாதுகாக்கட்டும்"
என்று சொன்னதால், துளியும் கவலை இல்லாமல், அமைதியாக
இருந்தார், ஹனுமார்.
சீதை உடனே அக்னி பிரவேசம் செய்தாள்.
புகைக்கு உள்ளே சென்று வெளியே வருவது போல, சீதை தன் நெற்றியில் வியர்வை கூட இல்லாமல், வெளியே வந்தாள்.
அக்னி பிரவேசம் செய்து வெளி வந்ததால், சீதை
"தன் கற்பை நிரூபித்த திருப்தி அடைந்தாள்".
இப்பொழுது சீதையின் மனோநிலை,
சமாதானம் அடைந்தது.
"தன்னை சேர்த்து கொண்டால், தேசத்தின் அரசனான ஸ்ரீ ராமரை இந்த உலகம் என்ன கேட்குமோ? என்ற சங்கடம் நீங்கி, நிம்மதி அடைந்து இருந்தாள் சீதை.
தன் நிலையை உணர்ந்து, வெளி உலகத்திற்கு தன்னை கோபக்காரனாக காட்டினாலும், ஸ்ரீ ராமரின் அனுக்ரஹத்தை எண்ணி உருகினாள்.
சீதையை கோபமாக பேசியது
ஸ்ரீராமரின் நோக்கம் அல்ல.
அக்னி பிரவேசம் செய்த பின், மன சஞ்சலம் இல்லாமல் இருந்தாள் சீதை.
உற்சாகத்துடன் ஸ்ரீ ராமர் அருகில் நின்றாள்.
மனதில் குறை அகன்று இருந்த சீதையை கண்டு,
ஸ்ரீ ராமர், மகிழ்ச்சியுடன் சீதையை அருகில் அமர செய்து, சீதா ராம தம்பதிகளாய் காட்சி கொடுத்தனர்.
சற்று முன் ராமபிரான் காட்டிய கோபமும், அக்னி பிரவேசம் செய்த பின், சீதையை மகிழ்ச்சியுடன் சேர்த்து கொண்ட காரணத்தையும் புரிந்து கொள்ள,
சீதையின் நிலை எவ்வாறு இருந்தது என்று நம்மால் பார்க்க முடிந்தால் மட்டுமே, "ராமபிரானின் இதயத்தை" புரிந்து கொள்ள முடியும்.
வாழ்க திவ்ய தம்பதிகள் புகழ். வாழ்க சீதா ராம புகழ்.
வாழ்க அயோத்தியா.