Followers

Search Here...

Sunday, 20 October 2019

கருவுற்று இருக்கும் தாய் நினைத்தால், கெட்ட குணத்தோடு பிறக்க போகும் குழந்தையையும் தெய்வ குழந்தையாக ஆக்க முடியும்.. நல்ல குழந்தைகள் பெறுவது எப்படி?




  • நல்ல குணங்கள் கொண்ட குழந்தைகள், 
  • தேசிய பற்று உள்ள குழந்தைகள், 
  • ஆன்மீக பற்று உள்ள குழந்தைகள், 
  • தீய குணங்கள் கொண்டவர்களை எதிர்க்க நெஞ்சுரம் கொண்ட குழந்தைகள்,
  • பணத்திற்காக தெய்வத்தையும், தேசத்தையும் பழிக்காத குழந்தைகள்,
  • பணத்திற்காக தெய்வத்தையும், தேசத்தையும் பழிப்பவர்களை ஆதரிக்காத குழந்தைகள்,
  • தீய பழக்கம் கொண்டவர்களுடன் பழக நேர்ந்தாலும், தீய பழக்கங்கள் ஏற்காத குழந்தைகள்,
  • ஹிந்துவாகவே வாழ விரும்பும் குழந்தைகள்,
  • ஹிந்து தெய்வங்களை மதிக்க தெரிந்த குழந்தைகள்,
  • மனித நேயம் உள்ள குழந்தைகள்,
  • ஹிந்து தெய்வங்களை கேலி செய்யும் மிலேச்ச, வாலிகர்கள் கையால் எதையும் வாங்காத குழந்தைகள், 
  • தேசபற்றுள்ள குழந்தைகள்,

நம் இந்திய நாட்டில் பிறந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஹிந்துவாக பிறந்த நாதீகனுக்கும் இது போன்ற நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும்..

பாரத தேசம் உயிர் பெற்று என்றுமே இருக்க, நம் தேசத்தில் பிறக்க போகும் எதிர்கால குழந்தைகளின் குணம், பழக்கம், தேச பற்று, தெய்வ நம்பிக்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது..

தீயவனுக்கு கூட,
வாலிகனுக்கு கூட,
நாதீகனுக்கு கூட,
தேச பற்றுள்ள குழந்தைகள்,
ஹிந்து தெய்வங்கள் மீது பற்றுள்ள குழந்தைகள்,
ஆன்மீக சிந்தனை உள்ள குழந்தைகள்
பிறக்க வேண்டும்.

நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறக்க செய்ய நம்மால் முடியும்.. அது சாத்தியமே.. 



ஹிந்து பெண்கள் கையில் தான் இந்த பாரத தேசத்துக்கு அப்படிப்பட்ட குழந்தைகளை கொடுக்கவல்ல பெரும் வாய்ப்பு உள்ளது.
நம் பாரத நாட்டின் பெண்கள், குறிப்பாக கருவுற்று இருக்கும் போது,
பொறாமை, வஞ்சம், கேலி, பேராசை, தெய்வ நிந்தை, கோபம் போன்ற குணங்களை தவிர்த்து,
முடிந்தவரை நல்ல குணத்துடனேயே 10 மாதமும் இருக்க பழக வேண்டும். அதற்கு ஏற்ற சத்சங்கத்தில் இருக்க வேண்டும்.

  • நம் நாட்டின் மீது தேச பற்றை அதிகமாக்கும் புத்தகங்களையே கர்ப்ப காலங்களில் படிக்க வேண்டும்..
  • ஆன்மீக சிந்தனையை அதிகமாக்கும் புத்தகங்கள் அதிகம் படிக்க வேண்டும்.. 
  • ஆன்மீக பெரியோர்கள் பேசும் ஆன்மீக விஷயங்களையே கேட்க வேண்டும்..
  • குமுதம், ஆனந்த விகடன் போன்ற கேளிக்கை நிறைந்த மனதை சபலப்படுத்தும் புத்தகங்கள், நாவல்கள் போன்ற ஆன்மீக சிந்தனை தராத புத்தகங்களை இந்த சமயத்திலாவது பிறக்க போகும் குழந்தைக்காகவாவது தவிர்க்க வேண்டும்.
  • தீய குணங்கள் கொண்டவர்களை தன்னிடம் நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  • எப்பொழுதும் மகிழ்ச்சியாக மன கொதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
  • பிறக்க போகும் குழந்தை, தாய் தந்தை மதிக்கும், ராம கிருஷ்ணரை போன்று உலகம் ஆளும் திறமையுடன், பலத்துடன்,  ஹிந்துவாகவே வாழ அதிகம் விரும்பும் பிள்ளையாக பிறக்க வேண்டும் 

என்று எப்பொழுதும் ஆசை பட வேண்டும்.



  • வேதத்தில் உள்ள ஹிந்து தெய்வங்களை தினமும் பிரார்த்திக்க வேண்டும்.
  • ஹிந்து தெய்வங்களை கேலி செய்யும் மிலேச்ச, வாலிகர்கள் நட்பை, அவர்கள் கொடுத்ததை வாங்குவதை தவிர்க்க வேண்டும்..
  • அதிக நேரம் ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்...

இப்படி ஒரு கருவுற்ற பெண் 10 மாதமும் வாழ்ந்தால்,

  • நாத்தீகன் குடும்பத்திலும் ஆத்தீகன் பிறப்பான்..
  • குணம் கெட்ட தகப்பனுக்கும், குணசீலன் பிறப்பான்...
  • வாலிக குணம் கொண்ட தகப்பனுக்கும், ஹிந்துவாக வாழ விரும்பும் நல்லவன் பிறப்பான்...
  • தீயவன் குடும்பத்திலும் நல்லவன் பிறப்பான்.. 

என்று நமது சாஸ்திரம் சொல்கிறது..

பொதுவாகவே,
பிறக்கும் குழந்தைகளின் குணம்,
பூர்வ ஜென்ம வாசனையாலும், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் குணத்தாலும் தான் நிர்ணயிக்கப்படுகிறது..

பூர்வ ஜென்ம குணங்கள்
தீய குணங்களா? நல்ல குணங்களா? என்று நமக்கு தெரியாது...
ஆனால், கருவுற்று இருக்கும் போது தாய்,
எதை கேட்கிறாளோ,
எதை பார்க்கிறாளோ,
எதை ருசிக்கிறாளோ,
எதை நினைக்கிறாளோ
அவை எல்லாம் குழந்தையின் பிறவி குணத்தையும் மாற்றவல்லது..

இதை சத்யம் ஆக்கியவள் "கயாது". பிரகலாதனின் தாய்.



ஹிரண்யகசிபு மகா பலசாலி...
அசுரர் குல அரசன்.

அசுரர்களும், தேவர்களும் காஷ்யப ரிஷியால் படைக்கப்பட்டவர்கள்..

அசுரர்கள், சுயமாகவே மகா பலம் கொண்டவர்கள்.
இது தவிர, தவம் செய்து பல வரங்களையும் பெற்று இருந்தனர்..

நாத்தீகன் "கடவுளே இல்லை" என்று சொல்லி திரிபவன்..

மனித படைப்புக்கு முன் படைக்கப்பட்டவர்கள் அசுரர்கள்.
அசுரர்கள் "கடவுள் இல்லை" என்று உளரும் நாத்தீகன் கிடையாது..
"நானே கடவுள்" என்று ஈஸ்வரனையும் எதிர்க்க வல்லவர்கள்.

சிவனையும், ப்ரம்மாவையும் நேரில் பார்த்த இவர்கள் "தானே தெய்வம்" என்று சொல்லும் அளவுக்கு பலமுடையவர்களாக இருந்தனர்..
தேவர்களை அடக்கிய ஹிரண்யகசிபு, பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை கைப்பற்றி விட்டான்..

பாற்கடலில் உள்ள விஷ்ணுவை மட்டும் அவனால் பார்க்க முடியவில்லை..
நாராயணனையும் வென்று விட்டால், 'இனி ஒரு தெய்வமும் தனக்கு மேல் கிடையாது' என்று சொல்லி கொள்ள ஆசைப்பட்டான்.

ஒரு வருடமல்ல, இரண்டு வருடமல்ல, ஒரு மனுவின் முழு கால அளவான 71 சதுர் யுகத்தை ஹிரண்யகசிபு ஒருவனே ஆண்டு வந்தான்.



அவனுக்கு பல குழந்தைகள் உண்டு. அனைவருமே அசுர குழந்தைகள்.. யாருக்கும் அடங்காதவர்கள்.. மகா பலசாலிகள்..

தேவர்கள் சொர்க்க லோகத்தில் ஹிரண்யகசிபுவுக்கு பயந்து, அவன் கட்டளைப்படி, வேலை செய்து கொண்டு இருந்தனர்..
வரம் கொடுத்த பிரம்மாவும் இவனுக்கு பயந்து மறைந்து இருந்தார்.. சிவனும் அமைதியாக இருந்தார்.




அந்த சமயத்தில், ஹிரண்யகசிபுவின் மனைவி "கயாது" கருவுற்றாள்.
அப்பொழுது ஹிரண்யகசிபு சில வருடங்கள் தவம் செய்ய சங்கல்பித்து இருந்தான்..

தன் மனைவி கருவுற்று இருப்பதால், அவளுக்கு பிறக்க போகும் தன் குழந்தையை தான் இருந்து பார்க்க ஆசைப்பட்டான்.

"தான் தவம் முடித்து திரும்பி வரும் வரை, அவளுடைய கர்ப்பம் தங்கட்டும்" என்று தன் வலிமையால் நிறுத்தி விட்டு, தவம் செய்ய புறப்பட்டான்.

71 சதுர் யுகங்கள் தலை தூக்க முடியாமல், தேவர்கள் அவமானப்பட்டனர். மும்மூர்த்திகளும் கூட அமைதி காத்த நிலையில், பெருந்துயரை தேவர்களாக இருந்தும் அனுபவித்து கொண்டிருந்தனர்.

'வேத மந்திரங்களையே' இவன் காலத்தில் மாற்றி விட்டான்..
எந்த தேவனுக்கும் 'பூஜை' கிடையாது, 'மரியாதை' கிடையாது என்று செய்து விட்டான்..
"ப்ரம்ம" தேவனுக்கும், "சிவனுக்கும்", மறைந்து இருக்கும் "விஷ்ணுவுக்கும்" கூட பூஜை இல்லாமல் செய்து விட்டான் ஹிரண்யகசிபு.

பூமியில் உள்ள மக்கள் வேதத்தில் உள்ள தெய்வங்கள் பெயரே மறந்து விட்டனர்..
அனைவரின் வாயிலும் "ஹிரண்யாய நம:' என்ற கோஷம் தான்.


ஹிரண்யகசிபுவுக்கு கோவில்கள், ஹிரண்யகசிபுவுக்கு பூஜைகள், ஹிரண்யகசிபுவுக்கு ஸ்தோத்திரங்கள், ஹிரண்யகசிபுவின் பெயரில்  வேதங்கள் 
என்று 71 சதுர் யுகமும் சர்வவல்லமையுடன் ஆட்சி செய்து வந்தான். எதிர்க்க ஆள் இல்லாமல் அசுரர்கள் ஆட்சி நடந்தது.
தன் தவ வலிமையால், "கயாது தான் வரும்வரை பிரசவிக்காமல் இருக்கட்டும்" என்று சொல்லி ஹிரண்யகசிபு தவம் செய்ய சென்று விட்டான்.
இது தெரிந்ததும், தேவர்கள் பெரும் பதட்டத்திற்கு உள்ளாகினர்..

"ஹிரண்யகசிபு என்ற இந்த அசுரனையே எதிர்க்க வழி தெரியவில்லை, இவனுக்கு இன்னோரு மகன் வேறு பிறக்க போகிறானே!!!
நம்மை நிரந்தரமாக தலை தூக்க விட மாட்டான் போல உள்ளதே"
என்று நினைத்த தேவர்களின் தலைவன் இந்திரன், 'இது தான் சமயம்' என்று அதர்மம் நடக்க போவதை தடுக்க சில சமயம் அதர்மத்தை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்...

ஹிரண்யகசிபு இல்லாததால், தைரியம் கொண்டு, கருவுற்று இருக்கும் கயாது முன் தோன்றினார்.

பிறக்க போகும் குழந்தை அசுரன் என்பதால், வரப்போகும் அபாயத்தை நினைத்து, கயாதுவின் பிடித்து தன் இடத்திற்கு இழுத்து சென்றார் இந்திர தேவன்..

இந்திரனை எதிர்க்க பலமில்லாத கயாது, கதறினாள், கூச்சலிட்டாள்..
அப்பொழுது ப்ரம்ம தேவனின் மானஸ புத்ரர் நாரத முனி ப்ரத்யக்ஷமானார்..

நாரதர் இந்திரனை தடுத்து, "கயாதுவை கொல்வதால் ஒரு பயனும் இல்லை.
மேலும் நீ இப்படி செய்தாய் என்று ஹிரண்யகசிபுவுக்கு தெரிந்தால், உன் நிலையை நினைத்து பார்" என்று நிதானப்படுத்தினார்.


"பிறக்கப்போகும் குழந்தையும் அசுர குணத்துடன் பிறக்குமே, எங்களுக்கு விமோசனமே கிடையாதா?" என்று இந்திரன் கேட்க,
"இந்த குழந்தை மூலம் தான் உங்களுக்கு நல்ல காலம் ஏற்பட போகிறது" என்று சமாதானம் பேசி இந்திரனை விலக்கினார்.

கயாதுவை மீண்டும் அவள் அரண்மனையிலேயே விட்டு விட்டு செல்ல நினைத்தார் நாரதர்.

தேவ அசுரர்கள் எப்பொழுதும் பகைமை உணர்வு கொண்டவர்கள் என்பதால், 'ஹிரண்யகசிபு திரும்பி வரும் வரை தனக்கு பாதுகாப்பு நாரதர் மட்டுமே தர முடியும்' என்று தீர்மானித்தாள் கயாது.

நாரதர் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினாள்.

நாரதர், இவள் நிலையை புரிந்து கொண்டு தன் ஆசிரமத்துக்கு கூட்டி சென்றார்..
ரிஷிகளில், முனிவர்களில் சிறந்தவர் நாரதர்.

ரிஷிகள், முனிவர்கள் எப்பொழுதும் தியானம், தவம் செய்வதில் ஆர்வம் மிக்கவர்கள்.
சில ரிஷிகள் கோபமிக்கவர்கள் கூட.
தவம் செய்து சிவபெருமானை, விஷ்ணுவை வழிபடுபவர்கள்..


முனியான நாரதரோ,
அனைவரும் ரசிக்கும் படியாக கழுத்தில் துளசி மாலை அணிந்து கொண்டு, நெற்றியில் திலகம் இட்டு கொண்டு, எப்பொழுதும் நாராயண நாமத்தை பஜித்து கொண்டே இருப்பார்..

கடும் தவம் செய்து தெய்வங்களை நெற்றியின் புருவத்தில் ஜோதி ஸ்வரூபமாக தரிசிக்கும் ரிஷிகள் மத்தியில்,
நாரதர் தன் பஜனையால் நேராக கைலாயம் சென்று ருத்ரனை தரிசித்து விடுவார்.
பாற்கடலில் உள்ள தன் இஷ்ட தெய்வமான நாராயணனையும் எந்த தடையும் இல்லாமல் தரிசித்து விடுவார்.
ப்ரம்ம லோகம் முதல், பாதாள லோகம் வரை,
தேவர்கள் ஆட்சி செய்தாலும்,
அசுரர்கள் ஆட்சி செய்தாலும்
இவருக்கு எங்கும் மதிப்பு.
எப்பொழுதும் ஆனந்தமாகவே உள்ள இவர் முகத்தை பார்த்தாலே, தேவர்கள் மட்டுமல்ல, கம்சன், ஹிரண்யகசிபு போன்றவர்கள் கூட இவரை தடுப்பதில்லை..

நாராயண நாமத்தில் ஸித்தி அடைந்தவர் நாரதர்..



இப்படி ஒரு மகான், கயாதுவின் கர்ப்ப காலத்தில் கூடவே இருந்தார் என்றால், அவள் பாக்கியத்தை கேட்கவும் வேண்டுமா?..

நாரதர் கயாதுவுக்கு
ஸத் விஷயங்களை, நல்ல பண்புகள், ஒழுக்கத்தின் பெருமைகளை, தர்மங்களை,
தான் எப்படி ப்ரம்ம புத்ரன் ஆனேன் என்ற காரணத்தை தினமும் சொல்வார்..

தினமும் நல்ல விஷயங்களை கேட்டு கொண்டே, மன சாந்தியுடன், நிம்மதியாக நாரதர் ஆசிரமத்தில் இருந்து வந்தாள்.

நாரதர் இப்படி நல்ல தர்மங்களை சொல்லி கொண்டே இருக்க, கர்பவதியான கயாது கேட்டு கொண்டே தூங்கி விடுவாள்..
இவள் தூங்கி இருக்கும் போதும்,
நாரதர் பிரத்யேகமாக தூங்கி கொண்டு இருக்கும் அவளுக்கு, நாராயணனின் மகத்துவத்தை, பர தத்துவத்தை சொல்ல ஆரம்பிப்பார்.
நாராயண நாமத்தை அகண்டமாக சொல்வார்.

இப்படி அவள் விழித்து இருக்கும் போது பொதுவான தர்மங்களையும்,
அவள் தூங்கும் போது நாராயணனின் பெருமையையும் சொல்ல சொல்ல, அவள் கர்ப்பத்தில் இருந்த அசுர குணங்களுடன் உள்ள குழந்தை பிரகலாதன், பக்த பிரகலாதனாக தயாராகி கொண்டு இருந்தார்.

பல வருடங்கள் தவம் செய்து விட்டு, திரும்பி வந்தான் ஹிரண்யகசிபு.
கர்பத்துடனேயே உள்ள தன் மனைவியை தேவர்கள் ஹிம்சை செய்யாமல் நாரதர் தான் பார்த்து கொள்கிறார் என்றதும், ஹிரண்யகசிபுவுக்கு நாரதர் மேல் தனி பிரியம் ஏற்பட்டது..

கயாது அழகான ஆண் குழந்தையை பெற்றாள்.
பிரகலாதன், பிறவியிலேயே நாராயண ஸ்மரணையுடனேயே பிறந்தான்.
மற்ற அசுர குழந்தைகள் மத்தியில், இவன் குணம் மட்டும் தனித்து இருந்தது.

'ராஜா மகன் ஆயிற்றே, அப்படித்தான் இருப்பான்' என்று ஹிரண்யகசிபு நினைத்து கொண்டான்.



தகுந்த வயதில் பாடசாலை அனுப்பினான்..
அங்குள்ள, மாணவர்கள் அனைவரையும் நாராயண கீர்த்தனை செய்ய வைத்து விட்டான்.

71 சதுர் யுகங்களாக, மக்கள் மனதில் இருந்து மறைந்து போய் இருந்த 'நாராயண' நாமத்தை வெளிப்படுத்தி விட்டான் பிரகலாதன்.

தன் பிள்ளை, அசுர குணத்துடன் இல்லாமல் சாத்வீகமாக இருப்பதை பொறுத்து கொண்ட ஹிரண்யகசிபுவால், 'நாராயண' நாமம் மீண்டும் உலகிற்கு வெளிப்பட்டதை ஒப்புக்கொள்ள முடியவில்லை..

பிரகலாதன் தன் பிள்ளை என்பதால் அறிவுரை சொல்லி நிறுத்த பார்த்தான்.. பலிக்கவில்லை..
அசுர குணம் கொண்ட இவன், தன் பிள்ளை என்பதை கூட மறந்தான்.
யானையை ஏவி மிதிக்க வைத்தான்.. விஷ பாம்புகள் கடிக்க செய்ய பார்த்தான்..
எங்கும் நாராயணன் இருப்பதை ஞானத்தால் பார்த்த பிரகலாதனுக்கு எதுவும் ஆகவில்லை.
இவன் பலத்தை கண்டு ஹிரண்யகசிபுவே பிரமித்தான்..
"தான் செய்த தவம் எல்லாம் இவனுக்கு பலித்து விட்டதோ" 
என்று நினைத்தான்.

"உலகமே என்னை வணங்கும் போது நீயும் என்னை வணங்கு" என்று சொல்ல,
"நீங்கள் என் தந்தை என்ற காரணத்துக்கு உங்களை என் தெய்வமாக வணங்குகிறேன்.. 
ஆனால் நம் அனைவருக்கும் தெய்வம் அந்த நாராயணனே"
என்று பிரகலாதன் பதில் சொல்ல,
மகா ஆத்திரம் கொண்டான்..
"யாரடா நீ?.. சந்தன காட்டுக்குள் முளைத்த கருங்காலி மரமே...
அசுர குலத்தில் பிறந்து, எனக்கு மகனாக பிறந்தும், எப்படி உனக்கு இந்த புத்தி வந்தது?
உனக்கு யார் "நாராயணன் பரப்ரம்மம்" என்று சொன்னான்?.."
என்று மிரட்டி உண்மையை அறிந்து கொள்ள பார்த்தான்....
பிரகலாதன் பதில் சொல்லவில்லை...



நா ப்ருஷ்ட கஸ்யசித் ப்ரூயாத்
ந ச அந்யாயேன ம்ருச்சத:

"கேட்காமல் யாருக்கும் நல்ல வார்த்தைகளை சொல்லாதே..
நேர்வழி தவறி இருப்பவர்கள் விஷமமாக கேட்டாலும் நல்ல வார்த்தைகளை சொல்லாதே!!" என்று சாஸ்திரம் சொல்கிறது..

"நாராயணா என்ற சொல்லை யார் உனக்கு சொல்லி கொடுத்தார்கள்?" என்று தந்தை கேட்டும், அவன் கேட்பதில் விஷமம் உள்ளதால், பிரகலாதன் பதில்
சொல்லாமல் மௌனமாக இருந்தான்..

"நாரதர் தான் எனக்கு உபதேசம் கருவில் இருக்கும் போதே செய்தார்" என்று ரகசியத்தை சொல்லவில்லை.

நினைத்ததை நடத்தியே தீர வேண்டும் என்று அசுர குணம் கொண்ட ஹிரண்யகசிபு, தன்னிடம் இவன் சொல்ல தயங்கினாலும், இவனுக்கு பாடம் சொல்லி தரும் ஆசிரியர்கள் கேட்டால் சொல்வான் என்று நினைத்து, அவர்களை கேட்க சொன்னான்.

"குரு கேட்டால் சிஷ்யன் எதையும் மறைக்க கூடாது.. யார் உனக்கு நாராயண நாமத்தை சொல்லி தந்தது"
என்று ஆசிரியர்கள் கேட்டும், ரகசியத்தை சொல்லவில்லை பிரகலாதன்..

உண்மையை சொன்னால், இவர்கள் தன் தந்தையிடம் சொல்லி விடுவார்கள் என்பதால், அதர்மத்துக்கு வழி செய்ய குருவே கேட்டாலும், சொல்லக்கூடாது என்று அமைதியாக இருந்தார் பிரகலாதன்.

ஆனால், மனதில் ஒன்று நினைத்து, வெளியில் ஒன்று பேசும் குணம் குழந்தைகளுக்கு கிடையாது...

நாராயண நாமத்தின் மகிமையை தன்னுடன் படிக்கும் அசுர குழந்தைகளுக்கு சொல்லும் போது, அவர்கள் "யார் நாராயணன்.. யார் உனக்கு சொன்னார்கள்?" என்று கேட்ட பொழுது மறைக்காமல்
ரகசியத்தை அவர்களுக்கு சொன்னான் பக்த பிரகலாதன்.

இப்படி அசுர குலத்தில் பிறந்தும், ஹிரண்யகசிபுவுக்கே மகனாக பிறந்தும், அசுர குணங்கள் இல்லாமல், ஞானியாக,
"பிரகலாத ஆழ்வான்" என்றும்,
"பக்த பிரகலாதன்" என்றும் ஆனதற்கு, கயாது கருவுற்ற காலத்தில் அவள் கேட்ட ஸத் சங்கமே காரணம்..

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் பிறவி குணங்கள் கூட, தாயின் ஸத் சங்கத்தால் மாறி விடும்.

தாய் கேட்காவிட்டாலும், ஸத் சங்கத்தில் இருந்து கொண்டிருந்தால், அவள் கருவில் உள்ள குழந்தையின் குணங்கள் மாறி, நல்ல குழந்தைகள் பிறக்கும்..

இந்த ரகசியம் நம் பாரத நாட்டில் இது நாள் வரை காக்கப்பட்டது..
கர்ப்ப காலங்களில் பெண்களை பிறந்த வீட்டுக்கு அனுப்புவது கூட அவள் வேலை சிரமம் கூட இல்லாமல் ஸத் சங்கத்தை அனுபவிப்பாள் என்பதற்காக தான்.



மன உளைச்சல் கொண்டு, பணத்திற்காக வேலைக்கு சென்று, ஸத் சங்கம் இல்லாமல் தின்று தூங்கி வழியும் பெண்கள், தாமஸ குணம் கொண்ட சோம்பேறிகளையும்,
கோபம், ஆத்திரம், பொறாமை வளர்க்கும் புத்தகங்கள், நாடகங்கள், சினிமா கேளிக்கைகளில் பொழுது போக்கும் பெண்கள் ராஜஸ குணம் கொண்ட கோபப்படும் பொறாமைப்படும் குழந்தைகளை பெற்று விடுகின்றனர்.

வீட்டுக்கு வீடு நம் பாரத நாட்டில் பிறக்கும் குழந்தைகள் நல்லவர்களாகவும், தெய்வ சிந்தனை உடைவர்களாகவும், மகான்களாகவும், ஞானிகளாகவும் பிறந்தனர்.
இன்று வரை ஏறத்தாழ 90 சதவீத பாரத பெண்கள் கர்ப்ப காலங்களில் ஸத் சங்கத்தில் ஈடுபட்டு கொண்டுள்ளனர்.
பெரும்பாலும் இந்த மண் நல்ல குழந்தைகளை தான் பெற்றுள்ளது.

1000 வருடங்கள், நம் பாரத நாட்டை அந்நிய மதங்கள் சூழ்ந்த போதும், வீட்டுக்கு வீடு தேசபற்றுள்ளவர்கள், தெய்வ பக்தியுடன் ஹிந்துவாகவே வாழ முடிந்ததற்கு காரணம் நம் ஹிந்து தாய்மார்களே..

இனி வருங்காலத்தில் பிறக்க போகும் குழந்தைகள், 
தேசபற்றுள்ளவர்களாக, 
தெய்வ பக்தியுடன் ஹிந்துவாகவே வாழ விரும்புபவர்களாக 
வாழ வழி செய்ய போவதும் நம் ஹிந்து தாய்மார்களே...

அசுர தகப்பனுக்கு, அசுர குலத்தில் பக்தனான பிரகலாதன் பிறந்தது போல, பெற்றவர்கள் தீய பழக்கம், குணம் கொண்டிருந்தாலும்,
நல்ல பிள்ளைகள் பிறக்க வழி செய்ய போவது கருவுற்று இருக்கும் பெண்களே.
கருவுற்று இருக்கும் தாய் நல்ல குழந்தைகளை பெற்று நம் பாரத நாட்டுக்கு தர வேண்டும்.



நம் பாரத நாட்டுக்கு, மகான்களை தேச பற்றுள்ளவர்களை, ஹிந்து தெய்வங்களை மதிக்கும் குழந்தைகளை பெற்று தர, கயாதுவை போன்ற தாய்மார்களே தேவை. 

வாழ்க ஹிந்து மதம்..
வாழ்க ஹிந்துக்கள்..