மனிதர்கள்
மிகவும் நெருக்கமான ஒருவர் மரணிக்கும் போது, சொல்ல முடியாத மன துயரை அடைகிறார்கள்..தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்...
அவர்களால் சில காலங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் போகிறது.
சிலருக்கு ஆயுள் முழுக்க சிலரது மரணம் முடக்கி போடுகிறது...
இழப்பை நினைத்து துக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
தலைவர்கள், அரசர்கள்
மிகவும் நெருக்கமான ஒருவர் மரணிக்கும் போது, மன துயர் அடைந்தாலும், சோர்ந்து விடுவதில்லை.இவர்களுக்கு ஒரு சிலரல்ல, மிகவும் நெருக்கமானவர்கள் பல ஆயிரம் பேர் இருப்பதால்,
நெருக்கமான ஒரு இழப்பை பார்த்தாலும்,
இன்னும் பல நெருக்கமானவர்கள் இருப்பதால், உற்சாகத்தை இவர்கள் இழப்பதில்லை.
தன்னம்பிக்கையை இழப்பதில்லை.
சோர்ந்து விடுவதில்லை.
அவர்களால் காரியங்கள் தடைப்படுவதில்லை.
"மரணம் தவிர்க்க முடியாத ஒன்று" என்று புரிந்து கொள்கிறார்கள்..
இன்னும் பல ஆயிரம் நெருக்கமானவர்களை பார்த்து, உற்சாகம் அடைகின்றனர்.. அவர்களுக்காக ஓடுகின்றனர்.
இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியம்:
நம்மால் ஒரு நெருக்கமானவர் இழப்பை தாங்கி கொள்ளும் சக்தி, பக்குவம் இல்லாது இருந்தால்,
நம் வட்டத்தை பெரிது படுத்த முயற்சிக்க வேண்டும்.
"அன்பினால், உதவியால், தனி மனித ஒழுக்கத்தால்"
மனித உள்ளங்களை தன் அருகில் சேர்த்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
எத்தனைக்கு எத்தனை நம் உறவுகள் பரந்து விரிகிறதோ!!
அத்தனைக்கு அத்தனை, நம்மால் இது போன்ற தவிர்க்க முடியாத இழப்புகளில் இருந்து விரைவில் வெளி வர முடியும்..
மகான்கள், ஞானிகள்
மிகவும் நெருக்கமான ஒருவர் மரணிக்கும் போது, மன துயர் அடைந்தாலும், 'ஆத்மா அழிவற்றது, உடல் அழிய கூடியது' என்ற உண்மையை தெளிவாக புரிந்து கொள்கிறார்கள்.தன்னுடன் இது நாள் வரை, நெருக்கமாக இருந்த ஜீவன் இந்த உடலை விட்டு சென்று விட்டான், 'அவ்வளவு தான்' என்று அறிகிறாகள்.
'அந்த ஜீவன் நற்கதி அடைய "பாகவதம், நாம சங்கீர்த்தனம்" போன்றவை சொல்லி, ஜீவனை கேட்க செய்து புண்ணிய லோகங்களுக்கு செல்ல வழி செய்கின்றனர்' மகான்கள்.
அவர்கள் தங்கள் ஆனந்த ஸ்வரூபத்தை மறப்பதில்லை.
அவர்கள் செயலில் மாறுபடும் தெரிவதில்லை.
உண்மையான அறிவை பெற்றவர்களாகவே (ஞானியாகவே) இருக்கின்றனர், மகான்கள்.
அத்தகைய மகான்களை, "கண்ணால் கண்டவர்கள் கூட" அந்த மனப்பக்குவத்தை பெற்று விடுகிறார்கள்.
பாரத மண்ணில் மட்டுமே, அத்தகைய மகான்கள் அவதரிக்கிறார்கள் என்பது இந்த பாரத மண்ணின் சிறப்பு.
ஏன் மகான்கள், ஞானிகள் மற்ற தேசங்களில் பிறப்பதில்லை? தெய்வங்கள் கூட பாரத மண்ணில் மட்டுமே அவதரிக்க நினைப்பதை ஏன்? பாரத மண்ணின் பெருமையை தெரிந்து கொள்ள இங்கு படியுங்கள்.
குருவாகவும் இருக்கும் மகான்கள்
மிகவும் நெருக்கமான ஒருவர் மரணிக்கும் போது, மன துயர் அடைந்தாலும், 'ஆத்மா அழிவற்றது, உடல் அழிய கூடியது' என்ற உண்மையை மகான்கள் சாதாரணமாகவே புரிந்து கொள்கிறார்கள்.இந்த ஞானத்தாலேயே அவர்கள் துக்கப்படுவதில்லை.
இது தவிர,
குருவாக இருக்கும் போது, பல ஆயிரம் பக்தர்கள் அவரை குருவாக ஏற்று இருப்பார்கள்.
தன் ஞானத்தாலேயே மனப்பக்குவம் கொண்ட மகான்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில்,
சில நெருக்கமான பக்தர்கள் காலகதி (மரணம்) அடைவதை, தவிர்க்க முடியாத ஒன்று என்றும் ஏற்க முடிகிறது.
ஞானியே மரணத்தை கண்டு துக்கப்படமாட்டார் என்று சொல்லும் போது,
ஞானியாக இருந்து, ஆயிரக்கணக்கான நெருக்கமான பக்தர்களை தன்னிடம் சேர்த்து வைத்துள்ள குருவாகிய ஞானிக்கு துக்கம் ஏற்படுவதே இல்லை.
அப்படிப்பட்ட "ஞானியாகிய குரு" நமக்கு கிடைத்து விட்டால், அதுவே பாக்கியம்.
அவர் நினைவே, நமக்கு அனைத்து நல்லதையும் கிடைக்க செய்யும்.
அவர் நினைவே, நமக்கு பக்குவத்தை தரும்.
அவர் நினைவே, வரப்போகும் பெரும் சவால்களை பனி போல விலக செய்யும்.
'சத்குருவை' அடைந்தவன், கோடி கோடி ஜென்மங்கள் புண்ணியம் செய்தவன்.
பகவான் நாராயணன்
மிகவும் நெருக்கமான ஒரு பக்தன் மரணிக்கும் போது, நாராயணனே மன துயர் அடைந்தாலும், ஆத்மா அழிவற்றது, உடல் அழிய கூடியது என்ற உண்மையை அறிந்தவர்.அந்த ஜீவனை தன்னுள் சேர்த்து கொண்டு "மோக்ஷம் என்ற பரமபத்தை" கொடுத்து விடுகிறார்.
அவர் பார்வையில் ஞானியின் மரணம், ஒரு ஆனந்தம்.
அந்த ஜீவனை "தன்னிடம் கூட்டி செல்ல போகிறேன்" என்று ஆனந்த படுகிறார்.
மோக்ஷத்துக்கு தகுதி இல்லாத பக்தனாக இருந்தாலும், அந்த ஜீவனுக்கு அதை விட அற்புதமான மற்றொரு பிறவியை கொடுத்து, மேலும் தன்னிடம் பக்தி செய்ய, வாழ்க்கையை அமைத்து கொடுத்து, ஒரு ஜென்மத்தில் தன்னிடம் சேர்த்து கொண்டு விடுகிறார்..
தன்னிடம் சேர்த்து கொண்ட பின், பகவான் அந்த ஜீவனை மீண்டும் பிறக்க வைப்பதில்லை.
பூலோகத்தில் அந்த ஜீவன் தனக்கு என்னென்ன சேவை செய்ய ஆசைப்பட்டானோ, அதை, பரமபதத்தில் எப்பொழுதும் செய்து கொண்டே ஆனந்தமாகவே இருக்க செய்கிறார்.
மோக்ஷம் அடைந்தவர்கள், "திவ்ய பார்ஷத" ரூபத்துடன் வைகுண்டத்திலேயே இருக்கிறார்கள்.
ப்ரம்ம தேவன் ஆயுசு முடிந்து. ப்ரம்ம லோகம் உட்பட 14 லோகங்களும் அழிந்தாலும், வைகுண்டம் அழிவதில்லை.
மோக்ஷம் அடைந்தவர்கள், எப்பொழுதுமே பரமாத்மாவுடன் இருக்கின்றனர்.
"திவ்ய பார்ஷத ரூபம்" பெற்று மோக்ஷம் அடைந்தவர்கள், பரவாசுதேவனை போலவே அழகான ரூபத்தை பெறுகிறார்கள்.
தன்னிடம் உள்ள அனைத்தையும், அவர்களுக்கும் கொடுத்து விடுகிறார்.
மோக்ஷம் அடைந்த இவர்களும் நான்கு கைகள் கொண்டு, நாராயணன் போலவே அவர்களும் சங்கு சக்கரம் வைத்து இருக்கிறார்கள்.
மோக்ஷம் அடைந்த இவர்கள் இஷ்டப்பட்டால், 14 லோகங்களுக்கும் செல்ல முடியும், தானே அருள் செய்யவும் முடியும்.
ஆதி சேஷனின் அவதாரமான ராமானுஜர் (1017AD-1137AD), தன் உடலை விட்டு மோக்ஷம் சென்று விட்டார்.
"ராமானுஜ தாசனாக" இன்றும் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.
ராமானுஜரை பக்தியுடன் தியானித்து ஒரு காரியம் செய்தால், இன்றும் அவர் அருள் கிடைக்கிறது பக்தர்களுக்கு.
பரமாதமா நாராயணன், "மோக்ஷம் அடைந்த" தன் பக்தர்களுக்கு, தன்னை போலவே அவர்களும் அணுகிரஹம் செய்யும் பலத்தை கொடுக்கிறார்.
"நாராயணன் வேண்டாம், ராமானுஜரே போதும்" என்று சொன்னாலும், ராமானுஜ தாசனுக்கும் மோக்ஷ வாசலை திறந்து விடுகிறார்.
கருணையே வடிவானவர் 'ஸ்ரீமந் நாராயணன்'.
சாகும் தருவாயில் அஜாமிளன் "நாராயணா" என்று கதற,
எம பாசத்தை எம கிங்கரர்கள் வந்து போட்டு, ஜீவனை உடலை விட்டு வெளியே எடுத்து எம லோகம் இழுத்து செல்ல முயற்சிக்கும் போது,
மோக்ஷம் அடைந்த "திவ்ய பார்ஷதர்கள்" அங்கு வந்து, எம கிங்கரர்களை மிரட்டி, "இந்த ஜீவன் மோக்ஷத்துக்கு செல்ல தகுதி பெற்றவன்" என்று அவன் மரணத்தை தடுத்தார்கள் என்று பார்க்கிறோம்.
பயந்து போன எம கிங்கரர்கள், ஓடி சென்று, "நாராயணா.. என்று சாகும் போது சொல்லி விட்டான்" என்று எம தர்மனிடம் சொல்ல,
"இனி அந்த ஜீவனை தொடாதீர்கள்..." என்று எம தர்மன் கட்டளை இட்டு விட்டான்.
அங்கு திவ்ய பார்ஷத ரூபத்தில் வந்த மோக்ஷம் அடைந்தவர்களும், நாராயணனுக்கு நிகராக 'அழகையும், நான்கு கைகளில் சங்கு சக்கரம் வாள் ஏந்தி இருந்தார்கள்' என்று கவனிக்கும் போது தான், மோக்ஷம் அடைந்தவர்கள் எத்தனை ஆனந்த நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது புரியும்.
மரண வாயிலை பார்த்த அஜாமிளன், "நாராயணா" என்று தன் மகனை நினைத்து கூப்பிட்டதற்கே, இப்படி திவ்ய பார்ஷதார்கள் வந்து "அஜாமிளன் மோக்ஷம் அழைத்து செல்ல தகுதி பெற்றவன்" என்று சொன்னதை கேட்டதும், சில காலங்கள் பூமியிலேயே நாராயணனையே தியானம் செய்து கொண்டு இருந்து, கடைசியில், அஜாமிளனும் மோக்ஷம் என்ற வைகுண்டத்தை அடைந்தான்.
அஜாமிளனும் திவ்ய பார்ஷத ரூபம் பெற்று விட்டான்.
நாராயணன் தன்னிடம் உள்ள அனைத்து "ஐஸ்வர்ய"த்தையும், "அணுகிரஹம் செய்யும் உரிமை"யையும், மோக்ஷம் அடைந்தவர்களுக்கு கொடுத்து விடுகிறார்.
அனைத்தையும் மோக்ஷம் அடைந்தவர்களுக்கு கொடுத்து விட்டாரே!! அனைத்தையும் மோக்ஷம் அடைந்தவர்களும் "சர்வ சக்தியுள்ளவர்கள்" என்றால்,
'பல பரமாத்மா வைகுண்டத்தில் உண்டு என்று ஆகி விடுமே?'
என்ற கேள்வி நமக்கு எழலாம்.
அவர்களும் பரமாத்மாவா? என்ற கேள்வி நமக்கு எழலாம்...
தன்னிடம் உள்ள அனைத்து ஐஸ்வர்யத்தையும்,
தன்னை போன்றே திவ்ய ரூபத்தையும்,
அணுகிரஹம் செய்யும் சக்தியையும்,
எங்கும் தடையில்லாமல் செல்ல சக்தியையும், உரிமையையும்,
மோக்ஷம் அடைந்தவர்களுக்கு கொடுத்த பரவாசுதேவன்,
'இரண்டு ஐஸ்வர்யங்களை' மட்டும் தன்னிடம் மட்டுமே வைத்துள்ளார்.
தன்னிடம் உள்ள அனைத்தையும், மோக்ஷம் அடைந்த ஜீவனுக்கு கொடுத்தாலும்,
- 'கௌஸ்துபம்' என்ற மாலையையும்,
- 'ஸ்ரீவத்ச'த்தையும் மட்டும்
"இந்த இரண்டை மட்டும், தன்னிடம் மட்டுமே வைத்துள்ளார்" பரமாத்மா நாராயணன்.
கோடிக்கணக்கான 'ஜீவாத்மாக்களை' படைத்து, அவர்களை தரிப்பவர் பரவாசுதேவன்.
ஜீவாத்மாக்களின் கூட்டத்தை "கௌஸ்துப மாலை"யாக அணிந்துள்ளார்.
ஜீவாத்மாக்கள் கோடி ஜென்ம புண்ணியத்தால்,
மனித (நர) பிறவி எடுத்து, பக்தி செய்து கடைசியில், பிறவா நிலை அடைய, பரவாசுதேவனை அடைக்கலம் (அயணம்) அடைவதால்,
பரவாசுதேவனுக்கு "நாராயணன்" என்று பெயர் உண்டு.
'நர'ர்கள் பரவாசுதேவனை அடைக்கலம்(அயணம்) புகுந்து மோக்ஷத்தை பெறுவதால், பரமாத்மாவுக்கு 'நாராயணன்' என்றும் பெயர்.
'நாராயணன்' பரவாசுதேவனுக்கு காரண பெயர்.
"ஸ்ரீவத்சம்" என்பது மஹாலக்ஷ்மியை குறிக்கும்.
பரமாத்மா படைத்த, இந்த அனைத்து உலகங்கள், மனித உடல்கள், பறவைகள், மிருகங்கள்,
அதில் காணப்படும் வித விதமான 'அழகுகள்', அனைத்தும் மஹாலக்ஷ்மியிடம் கடாக்ஷத்தால் வெளிப்படுகிறது.
"கௌஸ்துபம்" அணிந்தவராக, "ஸ்ரீவத்சம்" கொண்டவராக, பரமாத்மா ஒருவரே இருக்கிறார்.
ஆதலால்,
பரமபதத்தில், பரமாத்மாவின் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுக்கொண்டு, ஆனந்தமாக பரவாசுதேவனை தரிசித்து கொண்டே இருக்கிறார்கள் "மோக்ஷம் அடைந்தவர்கள்".
பரமாத்மா, ஆனந்த ஸ்வரூபனாக இருந்தாலும், உலக நிர்வாகம் என்ற பெரும் பொறுப்பை தான் ஒருவனே செய்கிறார்.
கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களுக்கு "ஆதாரமாக" இருந்து கொண்டு, உலகை படைத்து,
ப்ரம்ம தேவனை நியமித்து,
தானே விஷ்ணுவாக உலகை காத்து,
தானே ருத்ரனாக அந்தந்த காலங்களில் உலகை அழித்து,
உலகில் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தை கிடைக்க செய்து,
இஷ்டப்படும் போதெல்லாம் தானே அவதரித்து கொண்டு,
ஜீவாத்மாக்கள் அனைத்தும் தன்னிடம் பக்தி செய்து மோக்ஷம் அடையும் வரை,
முடிவில்லா 'லீலையை' தன் சங்கல்பத்தாலேயே செய்து கொண்டே இருக்கிறார்.
ஓம் நமோ நாராயணாய...