Followers

Search Here...

Wednesday 26 December 2018

பாசுரம் (அர்த்தம்) - அகலகில்லேன் இறையும் என் - நம்மாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா? தெரிந்து கொள்வோமே!!

அகலகில்லேன் இறையும் என்று*
அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்.
உலக மூன்றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே'
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)





திருவேங்கடமுடையானிடம் தன்னை ஒப்படைத்து, சரணாகதி செய்யும் பாசுரம்.
நம்மாழ்வார் அருளியது. மிகவும் பிரசித்தி பெற்ற பாசுரம்.

'பூலோகத்தில் அவதாரம் செய்ய போகிறேன்' என்று பெருமாள், 'ராம' அவதாரம் செய்த போது, தாயார் 'சீதை'யாக அவதரித்தாள். 
தாயார் உலக கஷ்டங்களை விட, பெருமாளை பிரிந்து வாடும் படியாக ஆகி விட்டது.
'கிருஷ்ண' அவதாரம் செய்த போதும் 'ருக்மிணி' தேவியாக தாயார் அவதரித்து விட்டாள்.
எங்கோ ஒரு அரண்மனையில் திரௌபதி "கோவிந்தா" என்று கதற, அவளுக்காக ஓடினார்.
அர்ஜுனனுக்காக, தர்மபுத்திரருக்காக ஓடினார்.

"தான் தனித்து இனி அவதாரம் செய்வதே கூடாது" என்று முடிவு செய்து, தாமரை (அலர்) மேல் வீற்று இருக்கும் பத்மாவதி தாயார், பெருமாள் அர்ச்சா ரூபத்துடன் திருமலையில் கலி ஆரம்பத்தில் அவதரிக்க சங்கல்பிக்க,
'இனி தனித்த அவதாரம் தான் செய்ய போவதில்லை'
என்று முடிவு செய்து, அந்த மஹாலக்ஷ்மியான பத்மாவதி தாயார், பெருமாளின் ஸ்ரீவத்ச சின்னம் உடைய மார்பில் அவதரித்து விட்டாளாம்.

பெருமாள், "தனியாக அவதாரம் செய்யேன்" என்று சொன்னாலும், "முடியவே முடியாது" என்று பிடிவாதம் செய்து பெருமாளின் மார்பை விட்டு பிரியாமல் உறைகிறாளாம்.

பெருமாளின் மார்பில், உறைந்து இருக்கும் தாயாரை கவனித்த நம்மாழ்வார்,
அகலகில்லேன் இறையும் என்று*
அலர்மேல் மங்கை உறை மார்பா  

என்று பெருமாளை அழைக்கிறார் நம்மாழ்வார்.
அலர் (தாமரை) மேல் மங்கை (அலமேலு தாயார்)
என்ற தமிழ் பெயருக்கு சமஸ்க்ருதத்தில் "பத்மாவதி" என்று பொருள்.
ப்ரம்மாவுக்கும் ஆயுசு உண்டு.
மகா பிரளய காலத்தில், பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், ப்ரம்ம லோகம் முதல் பாதாளம் வரை, அழிந்து விடும்.
ப்ரம்மாவுக்கு பின், மீண்டும் ஒரு ப்ரம்மாவை படைத்து, மீண்டும் உலக ஸ்ருஷ்டி செய்ய செய்கிறார் பரமாத்மாவாகிய நாராயணன்.
  • சொர்க்கத்தில் உள்ள தேவர்கள்,
  • ஜன, தப லோகத்தில் இருக்கும் ரிஷிகள்,
  • சத்ய லோகத்தில் இருக்கும் ப்ரம்மா உட்பட
அனைவரும் ஒரு நாள் அழிந்து விடுவார்கள். 
ஆனால், "வைகுண்டம் அழிவதில்லை".

சொர்க்கலோகத்தில் உள்ள தேவர்களுக்கும் - "அமரர்கள்" என்ற பெயர் உண்டு.

அம்ருதம் குடித்ததால் இவர்களுக்கும் "அமரர்கள்" என்று பெயர் வந்ததே தவிர, 
உண்மையான அமரர்கள் வைகுண்டத்தில் இருக்கிறார்கள்.

இங்கு ஆழ்வார் "நிகரில் அமரர்" என்று குறிப்பிட்டு சொல்கிறார் என்று கவனிக்கிறோம்.
வைகுண்டத்தில் இருக்கும் பரவாசுதேவனுக்கு "நிகராக" என்றுமே "அமரராக" இருக்கும், மோக்ஷம் அடைந்த "நித்ய பார்ஷதர்களை" இங்கு "நிகரில் அமரர்" என்று குறிப்பிடுகிறார் நம்மாழ்வார்.

வைகுண்டத்தில் உள்ள "நித்ய பார்ஷதர்கள்" வைகுண்ட நாதனை போல, அவர்களும் எப்பொழுதும் இருப்பவர்கள். மோக்ஷம் அடைந்தவர்கள்.

பரமாத்மாவாக இருப்பதால், வைகுண்டநாதனுக்கு,
                      உலகத்தை ஸ்ருஷ்டி செய்ய வேண்டும், 
                      உலகத்தை ரக்ஷிக்க வேண்டும் 
என்ற பொறுப்பு உண்டு.

நித்ய பார்ஷதர்களான இவர்களுக்கு, அந்த பொறுப்பு கிடையாது.
இவர்கள் லட்சியம் வைகுண்ட நாதனுக்கு கைங்கர்யம் செய்வதே.
தேவைப்பட்டால், இவர்களே "ப்ரம்ம லோகம் முதல், பூலோகம் வரை" வந்து போகவும் முடியும்.
இவர்கள் சுதந்திரமானவர்கள், அமரர்கள்.
இனி பிறவி (பிறப்பு, மரணம்) எடுக்காதவர்கள்.






அப்படிப்பட்ட "அழிவில்லாத" வைகுண்டத்தில் இருக்கும்
"அமரர்களான" நித்ய பார்ஷதர்களும் (அமரர் முனிக்கணங்கள்), ஆசைப்பட்டு (விரும்பும்) பூலோகத்தில் உள்ள "திருமலை"க்கு வந்து, சாதாரண மனிதர்களை போலவே ரூபம் தரித்து,
நம்மை போன்ற சாதாரண ஜனங்களோடு ஜனங்களாக நம் கூடவே நின்று கொண்டு, நம்மை நெருக்கி கொண்டு, பெருமாளை தரிசனம் செய்ய வருகிறார்களே !! 
என்று தன் ஞான திருஷ்டியால் பார்த்து சொல்கிறார் நம்மாழ்வார்.

நித்ய பார்ஷதர்களும் சேவை செய்ய விரும்பும் பெருமையுடைய 'திருவேங்கடத்தானே' என்று
"நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே"
என்று நம்மாழ்வார் திருமலையப்பனின் புகழை, பெருமையை நமக்கு இந்த பாசுரத்தில் காட்டுகிறார்.
வைகுண்டத்திலேயே எம்பெருமானை சேவிக்கும் பாக்கியம் பெற்ற நித்ய பார்ஷதர்களே, "திருமலை வந்து விரும்பி சேவிப்பார்கள்" என்றால்,
"இந்த உலகத்திலேயே உள்ள எனக்கு உன் திருவடியை தவிர வேறு என்ன கதி இருக்க முடியும்?"
என்று சொல்லுமிடத்தில், நம்மாழ்வார்,
"மோக்ஷத்தின் சாவி அவர் கையில் மட்டுமே உள்ளது. 
வெங்கடேச பெருமாளை சரணாகதி செய்யாமல் இருந்தால் நாம் பிறவி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
சரணாகதி  செய்வதை தவிர, நம் மோக்ஷத்திற்கு வேறு கதியே இல்லை
என்று நம்மை  எச்சரிக்கிறார்.

மேலும் நம்மாழ்வார் சொல்கிறார்,
"நித்ய பார்ஷதர்களுக்கு 'திருமலை' இல்லையென்றால், 'வைகுண்டம்' இருக்கிறது. அங்கு போய் அவர்களால் உமக்கு சேவை செய்ய முடியும்.
ஆச்சரியம்,
நித்ய பார்ஷதர்களே எங்களுக்கு வைகுண்டம் வேண்டாம் !! திருமலை தான் வேண்டும் !!
என்று வரும்போது,
'பூலோகத்தில் புகலிடம் இல்லாத எனக்கு, நீஙகள் ஒருவர் தானே கதி' என்று,
"புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்று உள்ளம் உருகுகிறார் நம்மாழ்வார்.
மேலும் நம்மாழ்வார் சொல்கிறார்,
"வைகுண்டம் சென்று உங்கள் திருவடியை பிடிக்க இயலாத எனக்கு, திருமலையில் உள்ள நீங்கள் தானே கதி !!
'புகலிடம் இல்லாத அடியேன், 
உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே'" 
என்று சொல்லி ஏழுமலையானுக்கு தன்னையே ஆத்ம சமர்ப்பணம் செய்கிறார் நம்மாழ்வார்.

இங்கு பாசுரத்தை கவனித்தோம் என்றால்,
"உன் திருவடியில் புகுந்தேனே" 
என்று சொல்லாமல்,
"உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே"
என்று நிதானித்து ஏழுமலையானிடம் விண்ணப்பிக்கிறார் நம்மாழ்வார்.
இங்கு "அமர்ந்து" என்ற சொல்லை சொல்லி, சரணாகதி செய்த நம்மாழ்வார்,
"நான் 'மோக்ஷத்திற்கு தகுதி உடையவன்' என்றாலும், உடனே தந்து விட வேண்டாம்.
கொஞ்ச காலம், 
திருமலையில் தங்கி (அமர்ந்து) உங்களுக்கு இங்கேயே சில காலம் சேவை செய்ய அணுகிரஹம் செய்து, என் ப்ராரப்த காலம் முடிந்த பின்னர் மோக்ஷம் கொடுங்கள்"
என்கிறார் நம்மாழ்வார்.

ஒவ்வொரு சொல்லிலும் தெய்வீக அர்த்தம் உள்ளதினாலேயே ஆழ்வார்கள் கொடுத்த பாசுரங்கள் வேதத்திற்கு சமமாக மதிக்கப்படுகிறது.



பொதுவான ஒரு கேள்வி !!

பூமியில் புண்ணியம் செய்பவர்களுக்கு, "சொர்க லோகம்"  கிடைக்கிறது.
புண்ணியம் தீர்ந்த பின், மீண்டும் பூமியில் பிறக்கிறோம்.
பூமியில் பாவம் செய்பவர்களுக்கு, "நரக லோகம்"  கிடைக்கிறது.
பாவத்திற்கான தண்டனை தீர்ந்த பின், மீண்டும் பூமியில் பிறக்கிறோம்.

மீண்டும் பிறக்காமல் இருக்க, மோக்ஷம் அடைவதே (வைகுண்டம் புகுவதே) வழி.
மோக்ஷத்திற்கான அனுமதியை தருபவர் வெங்கடேசபெருமாள் மட்டுமே. நாராயணன் மட்டுமே. பரவாசுதேவன் மட்டுமே.

பெருமாள் யாருக்கு மோக்ஷம் கொடுக்கிறார் ?
மோக்ஷத்திற்கான தகுதி என்ன?

இரண்டு விதமான நிலைக்கு, மோக்ஷம் கொடுக்கிறார் பெருமாள்.

1. "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்தால், உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

2. "இனி தரிசனம் அடையாமல் உயிர் தரிக்காது. இனி தாளாது" என்ற ஆர்த்தி (துடிப்பு) இல்லாமல், ஆனால் பூரண சரணாகதி செய்து விட்டால், அவன் ப்ராரப்தம் முடியும் வரை, உடம்போடு வாழ்ந்து தான் ஆக வேண்டும். ப்ராரப்தம் முடிந்த பின், மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா?
கோபிகைகள் போல "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து விட்டால், ப்ராரப்த கர்மாவும் பொசுங்கி, உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

இதே நிலையில்,
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் பூரி ஜெகந்நாத்தில், ஸ்ரீ கிருஷ்ணருடன் உடம்போடு மறைந்து விட்டார்.
அதே போல,
பக்த மீரா பிருந்தாவனத்தில் மறைந்து விட்டாள்.

ஞானியும், 'ப்ராரப்த கர்மா'வை அனுபவிக்கிறார்கள்.

நம்மாழ்வார் திருமலையப்பனை பூரண சரணாகதி செய்தவர்.
"இனி தாளாது" என்ற ஆர்த்தியும் (துடிப்பு) உள்ளவர் நம்மாழ்வார்.

மோக்ஷம் வேண்டி ஏழுமலையானை கேட்கும் போது, பெருமாள் இவருக்கு "உடனேயே மோக்ஷம் தர" தயாராக இருந்தாராம்.
உடனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி இருந்தும்,
'ப்ராரப்த காலம் முடியும்வரை, இந்த உடலோடு இருந்து, திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டாராம்" நம்மாழ்வார்.

"உடனேயே மோக்ஷம் வேண்டாம், கொஞ்சம் கைங்கர்யம் செய்து விட்டு பின் வைகுண்டம் வருகிறேன்"
என்கிறார் நம்மாழ்வார்.

நித்ய பார்ஷதர்களே, வைகுண்டத்தை விட்டு, திருமலை வந்து ஸ்ரீனிவாச பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யும் போது, தனக்கு உடனே மோக்ஷம் வேண்டும் என்றா கேட்பார், நம்மாழ்வார்?!
இதையே,
"உன் திருவடியில் அமர்ந்து" 
என்று சொல்லி,
"எப்பொழுது ப்ராரப்த காலம் முடியுமோ ! அது வரை  திருவேங்கடமுடையானுக்கு திருமலையில் சேவை செய்து, ப்ராரப்த காலம் முடிந்த பின், வைகுண்டம் சென்று அங்கு போய் பெருமானுக்கு சேவை செய்வோம்"
என்று பிரார்த்தித்தார்.
"தெய்வ பக்தியை வளர்த்தவர்கள்" ஆழ்வார்கள், நாயன்மார்கள்.
தெய்வபக்தியோடு, "தமிழையும் அழியாமல் வளர்த்தவர்கள்", காத்தவர்கள்  ஆழ்வார்கள், நாயன்மார்கள்.

போலி தமிழர்களை புறக்கணிப்போம்.
ஹிந்துக்களை அழிக்க முயற்சிக்கும் போலிகளை இனம் கண்டு, பதில் கொடுப்போம்.

உண்மையான தமிழ் பாசுரங்களின் அழகை ரசிப்போம்.



"தமிழ் பற்றையும், தெய்வ பக்தியையும்"
நம் நாட்டில் வாழ்ந்த, வாழும் மகான்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் அருளால் அடைவோம்.
ஊர் முழுக்க பறை கொட்டி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் நமக்கு கொடுத்த, தமிழின் அழகை பெருமையை முழக்கமிடுவோம்.

உண்மையான தமிழர்கள்,
ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் கொண்டாடுவார்கள். பகிர்வார்கள்.