Followers

Search Here...

Showing posts with label adithya hrudhaya. Show all posts
Showing posts with label adithya hrudhaya. Show all posts

Sunday, 20 September 2020

आदित्य हृदय स्तोत्र (ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரம்) அர்த்தத்துடன் தெரிந்து கொள்வோம். யுத்தத்தில் யார் யாரை கொன்றார்கள்? தெரிந்து கொள்வோம், தமிழர் வால்மீகி கொடுத்த ராமாயணம். தெரிந்து கொள்வோம், தமிழ் முனி அகத்தியர் உபதேசித்த சூரிய வழிபாடு.

"தமிழ் முனி" அகத்தியர் உபதேசித்த आदित्य हृदय स्तोत्र (ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரம்) - அர்த்தத்துடன்…

"அன்பில்" என்ற தேசத்தில் அவதரித்து, "திருநீர்மலையில்" முக்தி பெற்ற வால்மீகியும், சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்தியரும், "தமிழர்கள்" என்பது தமிழன் பெருமைப்பட வேண்டிய விஷயம். 

அகத்தியர் ராமபிரானின் சரணங்களில்  தன்னிடம் இருந்த சஸ்திரங்களையும், எதிரிகளை வெல்லும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தையும் சமர்ப்பணம் செய்தார். ராமபிரான் அன்புடன் ஏற்று கொண்டார்.

ராமபிரான் இவர்களை பெரிதும் மதித்தார். 

ராமபிரான் இல்லாத சமயம் பார்த்து, சீதா தேவியை ராவணன் 'பேடியை போல' கடத்தி சென்றான்.

ராமபிரான் வானர படையை சேர்த்து கொண்டு, தெற்கு கடற்கரை வந்து, ஐந்தே நாளில் பாலம் அமைத்து, இலங்கை அடைந்தார்.

இரவு பகலாக தொடர்ந்து போர் நடந்தது.

'வித்யுன்மாலி'யை சுக்ரீவனின் மாமனார் 'சுசேஷனா' பெரிய பாறையை நெஞ்சில் போட்டு கொன்றார்.

'இந்திரஜித்' மாயையால் தன்னை மறைத்து கொண்டு, வானரர்கள் மேல் அம்புகளை மழையாக பொழிந்தான்.




ராமரையும், லக்ஷ்மணரையும் நாக அஸ்திரம் எய்து சாய்த்து விட்டான்.

மயங்கி போன இவர்கள் பலநேரமாகியும் எழுந்திருக்காமல் இருக்க, இவர்கள் 'யமலோகம் சென்று விட்டார்கள்' என்று தீர்மானித்து இலங்கை நகருக்குள் சென்று ராவணனிடம் வெற்றி செய்தியை சொன்னான்.

இதற்குள் விஷ்ணுவின் வாகனமான கருடன் ப்ரத்யக்ஷமாகி ராமர் கிடக்கும் இடத்திற்கு தானாக வந்து விட்டார்.

தானாக நாகபாசம் உடனே விலகியது. ராம லக்ஷ்மணர்கள் எழுந்து விட்டனர்.

ராவணன் பிறகு 'தூம்ராக்ஷஸன்' தலைமையில் பெரும் படையை அனுப்பினான்.

'தூம்ராக்ஷஸ'னை 'ஹனுமான்' பெரிய கல்லை அவன் தலையில் போட்டு கொன்றார்.

பிறகு, 

'வஜ்ரதம்ஸ்ட்ரா' போர் புரிய வந்தான். வாலியின் மகன் 'அங்கதன்' கத்தியால் இவன் தலையை அறுத்து எறிந்து விட்டார்.

பிறகு, 

'அகம்பனா' போர் புரிய வந்தான். கேசரியின் மகன் 'ஹனுமான்' மரத்தை பிடுங்கி இவன் தலையை உடைத்தார்.

பிறகு, 

ராவணனின் தலைமை படைத்தளபதி ப்ரஹஸ்தன், அவனோடு 'நராந்தகா, கும்பஹனு, மஹாநாதா, சமுன்னதா' போர் புரிய அனுப்பினான்.

'நராந்தகா' தலையில் 'த்விவிதன்' பெரிய பாறையை போட்டு உடைத்தான்.

'சமுன்னதா'வை 'துர்முகன்' என்ற வானரன் மரத்தால் அடித்தே கொன்றான்.

'மஹாநாதா'வை, 'ஜாம்பவான்' பெரிய பாறையை தூக்கி எறிந்து நெஞ்சை பிளந்தார்.

கடைசியாக, 

'ப்ரஹஸ்தன்' தலையில் 'நீலன்' பெரிய பாறையை போட்டு உடைத்தான்.

தன்னுடைய முக்கிய தளபதி ப்ரஹஸ்தன் கொல்லப்பட்டவுடன், ராவணனே போர் புரிய வந்தான்.




அவனோடு, அகம்பனா என்ற பெயர் கொண்ட மற்றொருவன், இந்திரஜித், ஆதிகாயா, மகோதரா, பிசாசா, த்ரிசிரஸ், கும்பன், நிகும்பன், நராந்தகா போர் புரிய வந்தார்கள்.

ராவணன் முதலில் சுக்ரீவனை போரிட்டு கீழே விழ வைத்தான்.

உடனே, 

கவாக்ஷன், கவயன், ருஷபன், ஜ்யோதிமுகன், நபன் ஆகிய ஐவரும் பெரிய மலை பாறைகளை எடுத்து கொண்டு ராவணனை நோக்கி பாய்ந்தனர்.

அனைவரையும் சக்தி வாய்ந்த அம்புகளால் அடித்து நொறுக்கினான் ராவணன்.

அனைவரும் ராமபிரானை நோக்கி ஓடினர்.

லக்ஷ்மணன் ராவணனுடன் போர் புரிய வரும் முன், 'ஹனுமான்' பாய்ந்து வந்து ராவணன் நெஞ்சில் தன் வலது கையை தூக்கி ஓங்கி ஒரு அடி கொடுத்தார்.

நிலைகுலைந்த ராவணன் சில நிமிடங்களில் நிதானத்துக்கு வந்து விட்டான்.

கடும் கோபம் கொண்ட ராவணன், கையை மடக்கி ஓங்கி ஒரு குத்து ஹனுமான் நெஞ்சில் விட்டான்.

ஹனுமானும் சிறிது நிலைகுலைந்து போனார்.

இதை பார்த்த நீலன், பாய்ந்து வந்து ராவணனை தாக்கினான்.

மரத்தையும், பாறைகளையும் கொண்டு பயங்கரமாக சண்டையிட்டான் நீலன். 

திடீரென்று தன் உருவத்தை சிறியதாக்கி கொண்டு ராவணன் தேர் மீது தாவி, தேர் கொடி மீது நின்றுவிட்டான்.

மாயமும், பலமும் கொண்ட நீலனை ராவணன் அக்னி அஸ்திரம் கொண்டு தாக்கினான்.

உடம்பு முழுக்க தீ பற்ற நீலன் தேர் கொடியில் இருந்து குதித்து விழுந்தான். 

அதற்குள் லக்ஷ்மணன் வந்து விட, ராவணன் வெகு நேரம் லக்ஷ்மணனுடன் சண்டையிட்டான். 

கடைசியில் புகையில்லாத அக்னி அஸ்திரம் போட்டு, லக்ஷ்மணனை சாய்த்தான். 


மயங்கி விழுந்த லக்ஷ்மணனை தூக்கி இலங்கையில் சிறை வைப்போம் என்று நினைத்த ராவணன், அருகில் வந்து தூக்க முயன்றான்.




ஹிமாலயத்தை, மந்தரா மலையை, மேரு மலையை, கைலாசத்தை தூக்கிய ராவணன், பரதனின் சகோதரனை தூக்க முடியாமல் தவித்தான்.

(ஹிமான் மந்தரோ மேரு கைலாசோ வா மஹா கிரி:! சக்யம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந சங்க்யே பரத அனுஜ: - வால்மீகி ராமாயணம்)

விஷ்ணுவின் ஆதிஷேஷ அம்சமான லக்ஷ்மணன் 'நிஜத்தில் தான் யார்?' என்ற நினைவுடன் அப்பொழுது படுத்து இருந்தார். 

(விஷ்ணோ சிந்தயம் ஸ்வம் பாகம் ஆத்மானம் ப்ரத்யனுஸ்மரத் - வால்மீகி ராமாயணம்).

லக்ஷ்மணனை தூக்க முடியாமல் ஆச்சரியத்தில் இருந்த ராவணனை பாய்ந்து வந்து நெஞ்சில் ஒரு குத்து விட்டார் ஹனுமான்.

வாயில் ரத்தம் கொட்ட, சிறிது நேரம் மூர்ச்சை ஆகி விட்டான் ராவணன்.

அதற்குள் ஹனுமான் பக்தியுடன் லக்ஷ்மணனை வணங்கி, பூவை தூக்குவது போல தூக்கி சென்று வேறு இடத்தில் இறக்கி விட்டு விட்டார்.

வானரர்கள் ராவணனை அடக்க முடியாமல் இருப்பதை அறிந்த ராமபிரான் தானே ராவணன் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்.

கருடனை போல, ஹனுமான் ராமபிரானை தன் தோளில் வைத்து கொண்டார். 

ராமபிரான் ராவணனை பார்த்து, 

"நில். நில். எனக்கு பிரியப்பட்ட விஷயத்தில் பாதிப்பை ஏற்படுத்திய நீ எங்கும் தப்பிக்க முடியாது. 

பார்க்கிறேன்! உனக்கு எங்கு பாதுகாப்பு கிடைக்க போகிறது என்று.. 

பார்க்கிறேன்! எப்படி நீ என்னிடம் இருந்து தப்பிப்பாய் என்று..

(திஷ்ட திஷ்ட மம த்வம் ஹி க்ருத்வா விப்ரியம் த்ருஷம்! கவ ராக்ஷஸ சார்தூள கதோ மோக்ஷம் அவாப்ஸ்யசி! - வால்மீகி ராமாயணம்)

நீ இந்திர லோகம், எம லோகம், சூர்ய லோகம், ப்ரம்ம லோகம், அக்னி லோகம், சிவலோகம் அல்லது பத்து திசைகளில் எங்கு சென்றாலும், என்னிடமிருந்து தப்பிக்க முடியாது.

ராக்ஷஸ தலைவனே! உன் ஆயுதங்களால் அழிக்கப்பட்ட அனைவரும் என் ரூபத்தில் இன்று வந்து உன்னையும், உன் குடும்பத்தையும் மரணத்திற்கு அனுப்பி வைக்க உள்ளார்கள்.

இதோ இந்த பானத்தால் தான் 14,000 ராக்ஷஸர்கள் ஜனஸ்தானத்தில் என்னால் அழிக்கப்பட்டார்கள்." என்றார்.

இதை கேட்டவுடனேயே கடும் கோபம் கொண்ட ராவணன், ராமபிரானை தூக்கிக்கொண்டு இருக்கும் ஹனுமானை நோக்கி அக்னியை கக்கும் அம்புகளை பாய்ச்சினான்.

பொன் நிறமான ஹனுமான் அக்னி பட்டு மேலும் ஜொலிப்பது போல ஜொலித்தார். 

இருந்தாலும் தன் பக்தனான ஹனுமானுக்கு காயம் ஏற்பட்டது என்றதும், பெரும் கோபத்தை வரவழைத்து கொண்டார் ராமபிரான்.


அடுத்த நொடி, ராமரின் அம்புகள் ராவணனின் தேரில் இருந்த தோரணங்கள், தேர் சக்கரங்களை, தேர் கொடியை உடைத்து எரிந்தது.

தேர் குதிரைகள், தேரோட்டி யமலோகம் சென்றனர்.

அடுத்த நொடி இந்திரனின் வஜ்ராயுதம் தாக்கியும் அசையாத ராவணன் இரும்பு நெஞ்சில் ராமபானம் விழுந்தது.

நிலைகுலைந்து போன ராவணனை கண்ட ராமபிரான், கழுத்தை அறுக்காமல், கொஞ்சம் மேலே குறிபார்த்து, அவன் ராஜ கிரீடத்தை தன் பானத்தால் அடித்து கீழே தள்ளினார்.

ஒரு சில நொடிகளில், உலகையே மிரட்டிய ராவணன் ஒளி இழந்த சூரியன் போல, அணைந்து போன நெருப்பு போல, விஷம் பிடுங்கப்பட்ட பாம்பு போல, கிரீடம் உடைந்து, தன் பலத்தை இழந்து தனியாக நின்று கொண்டு இருந்தான்.

ராமபிரான் ராவணனை பார்த்து பேசினார்,

"பெரிய திறமைசாலி தான் நீ. மஹாபலம் கொண்ட என் சேனையை எதிர்த்து வென்றுள்ளாய். 

பலருடன் போர் செய்ததால் நீ சோர்ந்து போய் இருக்கலாம்.

அதனால், உன்னை இப்போது யமலோகம் அனுப்ப நான் நினைக்கவில்லை.

(தஸ்மாத் பரிஸ்ராந்தம் இவ வ்யவஸ்ய ந த்வாம் சரைர் ம்ருத்யு வசம் நயாமி!! - வால்மீகி ராமாயணம்)

ராக்ஷஸ அரசனே! திரும்பி செல். இலங்கை நகருக்குள் சென்று ஓய்வெடு. 

ஓய்வெடுத்து பிறகு உன் அம்புகளை எடுத்து கொண்டு, தேரில் ஏறி வா.

அப்பொழுது உனக்கு என் பலத்தை காட்டுகிறேன்."

என்று சொன்னார்.

இந்த வார்த்தையை கேட்ட ராவணன் மானம் இழந்தவனை போல ஆனான்.

அவன் கிரீடம் உடைந்து கீழே கிடந்தது.

அவனுடைய வில்லும், தேரும், தேரோட்டியும் கீழே கிடக்க, இலங்கை நகரத்துக்குள் தனி மனிதனாக நடந்து சென்றான்.


பெரும் அவமானத்தை கண்ட ராவணன், "எப்படியாவது ராமபிரானை கொன்றே தீர வேண்டும்" என்று நினைத்தான்.

தூங்கி கொண்டிருந்த கும்பகர்ணனை எழுப்பி போருக்கு அனுப்பினான்.

600 வில் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிய உயரமும், 100 வில் அடுக்கிய அகலமும் கொண்டிருந்த கும்பகர்ணன் போருக்கு வந்தான்.

(தனுஸ் சத பரீனாஹ: ச ஷட் சத சமுச்சித: - வால்மீகி ராமாயணம்)




ராமபிரான் அவன் கைகளை வெட்டி எறிந்தார். மேலும் பாய்ந்து வர, அவன் இரு கால்களையும் வெட்டினார். 

வாயால் அனைவரையும் கடித்து துப்ப முயன்றான். அவன் வாய் முழுவதும் அம்புகளை பாய்ச்சினார்.

அப்படியும், உயிர் போகாமல் இருந்த கும்பகர்ணன் தலையை தன் பானத்தால் வெட்ட, தலை மட்டும் பறந்து இலங்கையை பாதுகாக்கும் மதில் மேல் விழுந்து சுவரை உடைத்தது.

தலையில்லா உடம்பு தெறித்து கடலில் போய் தண்ணீரை பிளந்து கொண்டு அதன் தரையில் போய் இடித்தது. 

அந்த வேகத்தில் இவன் முண்டமான சரீரம் விழுந்ததால், கடல்நீர் வானுயர பறந்து தெறித்தது. 


நிலைகுலைந்து போன ராவணன், "இனி இந்த ராஜ்யம் இருந்து எனக்கு என்ன பயன்? 

சீதையை வைத்து இருந்தும் என்ன பயன்? 

இனிமேல் வாழ்ந்து என்ன பயன்? 

நான் அந்த ராமனை கொல்ல முடியாவிட்டால் நான் உயிரோடு இருந்து என்ன பயன்? 

விபீஷணன் சொன்னதை கேட்காமல் இருந்ததால் தான் கும்பகர்ணனை இழந்தேனோ? பெரிய அவமானத்துக்கு ஆளாகி விட்டேன்.

தர்மம் தெரிந்த விபீஷணனை அவமானப்படுத்தியதால் தான் இந்த துயரம் எனக்கு வந்து விட்டது...."

(ந்யபத் அதத தசானனோ ப்ருசார்த்தஸ்தம் அனுஜம் இந்த்ரரிபும் விலப்ய கும்பகர்ணம்! - வால்மீகி ராமாயணம்)

என்று புலம்ப ஆரம்பித்தான் இலங்கை அரசன் ராவணன்.


த்ரிசிரஸ், தன் தந்தை ராவணனிடம் "நீங்கள் ஒருவர் மட்டுமே இருந்து கூட மூவுலகையும் வெல்ல முடியும். இப்படி நீங்கள் வருந்த கூடாது. நான் சென்று கருடன் பாம்பை கொத்தி வருவது போல ராமபிரானை கொன்று விட்டு வருகிறேன்" என்று கிளம்பினான்.

த்ரிசிரஸ் என்ற ராக்ஷஸனோடு, ராவணனின் மற்ற பிள்ளைகளான நராந்தகா, தேவாந்தகா, அதிகாயா சேர்ந்து கொண்டு கிளம்பினர்.

இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க, யுத்தோன்மத்தன், மத்தன் (ராவணன் சகோதரன்), ப்ரமத்தன், மகோதரன், மஹாபார்ஷ்வன் அனைவரும் சேர்ந்து புறப்பட்டனர்.

போரில், ராவணன் பிள்ளை 'நராந்தகா'வின் நெஞ்சில் ஓங்கி குத்து விட்டு, நெஞ்சை உடைத்து கொன்றான் வாலியின் பிள்ளை 'அங்கதன்'.

ராவணனின் மற்றொரு பிள்ளை 'தேவாந்தகா', ஹனுமானுடன் போர் செய்யும் போது, 'ஹனுமான்' தன் இரு கைகளால் தலையில் அடிக்க, தலை பிளந்து, கண்கள் வெளியே விழுந்து, நாக்கு வெளியில் தொங்க இறந்தான்.

இவர்களுக்கு மாமனான 'மகோதர'னை 'நீலன்' பெரிய மலை பாறையை எறிந்து கொன்றான்.

மாமனும், மற்ற சகோதரர்களும் கொல்லப்பட்டு கிடக்க, த்ரிசிரஸ் ஹனுமானை எதிர்கொண்டான். 

'ஹனுமான்' 'த்ரிசிரஸி'ன் மூன்று தலைகளை கையால் பிடுங்கி தூக்கி எறிந்து விட்டார்.

ராவணன் சகோதரன் 'மத்தன்' இதை பார்த்து கோபத்துடன் கதையை எடுத்து வர, அங்கு 'ருஷபா' என்ற வானரன் அவன் கதையை பிடுங்கி, பலமுறை வேகமாக சுழற்று சுற்றி மத்தாநிகன் மேல் அடிக்க, தன் கதையாலேயே மண்டை உடைந்து இறந்தான்.

'யுத்தோன்மத்தன்' (உன்மத்தன்) தன் சகோதரன் மத்தன் கொல்லப்பட்டதை அறிந்து வேகமாக பாய்ந்து வர, 'கவாக்ஷன்' தன் கதையால் ஓங்கி அடிக்க, கண்கள் தெறித்து, பல் உடைந்து கீழே விழுந்து மடிந்தான்.

கும்பகர்ணன் போல பெரிய உருவம் கொண்ட 'அதிகாயா', தன் நராந்தகா, தேவாந்தகா, த்ரிசிரஸ் போன்ற சகோதர்களும், யுத்தோன்மத்தன், மத்தன் போன்ற மாமனும் இறந்து கிடக்க, கடும்கோபத்துடன் போர் செய்தான்.

தன்யமாலினிக்கும் ராவணனுக்கும் பிறந்த 'அதிகாயா', லக்ஷ்மணன் எய்த ப்ரம்மாஸ்திரத்தால் கழுத்து அறுக்கப்பட்டு இறந்தான்.

இந்த போரில் தும்ராக்ஷன் போன்றோரும் இறந்தனர்.

தன் பிள்ளைகள், சகோதரர்கள் அனைவரும் இறந்தனர் என்று ராவணன் அறிந்தான்.


போனவர்கள் யாருமே திரும்பாமல் இருக்க தலை சுற்றி போனான் ராவணன்.


சமாதானம் செய்த இந்திரஜித், அனைவரையும் கொன்று விட்டு வருவதாக கிளம்பினான்.

மாய போர் மூலம், தான் எங்கு இருக்கிறேன் என்பதையே காட்டாமல், அனைவரையும் சாய்த்தான். 

ராம லக்ஷ்மணர்களை மீண்டும் மயக்கமுற செய்தான்.

விபீஷணன், ஜாம்பவான், ஹனுமானை தவிர அனைவரையும் சாய்த்து விட்டான்.

இனி போர் செய்ய ஆளில்லை என்ற அளவுக்கு வெற்றி பெற்று இலங்கை நகருக்குள் மீண்டும் வெற்றியுடன் சென்றான்.


ஜாம்பவான் ஹனுமானை சஞ்சீவினி மலையை ஹிமாலயம் சென்று எடுத்து வர சொன்னார்.

ஒரே இரவில் ஹிமாலயம் வரை வந்து, சஞ்சீவினி இருக்கும் மலையை கண்டுபிடித்து அதை பெயர்த்து கொண்டு இலங்கைக்கே வந்து விட்டார் ஹனுமான்.

அனைத்து வானரர்களும், ராம லக்ஷ்மணன் அனைவரும் எழுந்து விட்டனர்.




அதே இரவோடு இரவாக மீண்டும் சஞ்சீவினி பர்வத்தை ஹிமாலயத்தின் அதே இடத்தில் கொண்டு போய் வைத்து விட்டு, மீண்டும் ராமர் இருக்கும் இடத்துக்கு வந்து விட்டார் வீர ஹனுமான்.

(ததோ ஹரிர் கந்த வஹாத்மஜஸ்து தம் ஓஷதீ சைலம் உதக்ரவீர்ய:! நிநாய வேகாத்திம் அவந்தமேவ புனஸ்ச ராமேன சமாஜகாம!! - வால்மீகி ராமாயணம்)

"இனியும் பொறுமையாக இருக்க கூடாது.. 

ராமபிரான் எந்த நகரத்துக்குள்ளும் 14 வருடங்கள் வனவாச காலத்தில் செல்வதில்லை என்ற விரதத்தில் இருக்கிறார். 

நாம் இலங்கைக்குள் உள்ளே சென்று ராவணனையும், மற்ற ராக்ஷஸர்களையும் அடித்து நொறுக்குவோம்."

என்று ஆணையிட்டார் சுக்ரீவன்.

வானர சேனை உள்ளே பாய்ந்து, ஊரையே கொளுத்தியது.


நிலைமை கைமீற, ராவணன், கும்பகர்ணனின் மகன்களான கும்பன், நிகும்பனை ராக்ஷஸ படைகளோடு அனுப்பினான்.

இவர்களுடன் சோனிதாக்ஷா, யூபாக்ஷா, ப்ரஜன்கா, கம்பனா போன்ற ராக்ஷஸ தளபதிகளை அனுப்பினான்.

'ப்ரஜன்கா'வின் கத்தியை பிடுங்கி, அவன் தலையை வெட்டி எறிந்தான் 'அங்கதன்'.

'சோனிதாக்ஷ'னை 'த்விவிதன்' தன் நகத்தால் முகத்தை கிழித்து கொன்றான்.

மாமன் ப்ரஜன்கா இறந்ததை பார்த்து, யூபாக்ஷா கோபம் கொண்டான், கண்ணீர் சிந்தினான்.

'யூபாக்ஷா'வை த்விவிதனின் சகோதரனும் வானர தலைவனுமான 'மைந்தன்' கைகளால் அடித்தே கொன்றான்.

அங்கதனின் மாமாவான த்விவிதனும், மைந்தனும், கும்பனோடு போர் புரிந்து கீழே விழ, பாய்ந்து வந்து தாக்க ஆரம்பித்தான்.

'கும்பன்' அங்கதனையும் வீழ்த்த, 'சுக்ரீவன்' போர் செய்து, கடைசியில் கும்பனின் நெஞ்சில் ஓங்கி ஒரு குத்து விட்டு, உயிரை பறித்தான்.

'தன் சகோதரன் இறந்து விட்டான்' என்றதும் சுக்ரீவனை நோக்கி வந்தான் நிகும்பன்.

'நிகும்ப'னை 'ஹனுமான்' ஓங்கி தலையில் அடித்து, அவன் தலையை பிடுங்கி எறிந்து விட்டார்.

அனைவரும் இறந்து விட்டார்கள் என்றதும், ராவணன் ஜனஸ்தானத்தில் கர-தூஷனோடு, 14000 ராக்ஷஸர்களை சேர்த்து கொன்ற ராமபிரானை கொல்ல, கரணின் பிள்ளை 'மஹாராக்ஷஸனை' அனுப்பினான்.

'ராம'பிரானே தன் அம்பு மழையால் 'மஹாராக்ஷஸனை' சாய்த்து தள்ளினார்.


ராவணன் பெரும் வேதனையில் தவிக்க, இந்திரஜித் "நிகும்பிளை என்ற இடத்தில் முழுமையான வெற்றிக்கான யாகம் செய்ய தீர்மானித்தான்".

'இதற்கு தடங்கல் வர கூடாது' என்பதற்காக மீண்டும் போர் களம் வந்து, மாயையால் தன்னை மறைத்து கொண்டு அம்புகளை அனைவர் மீதும் பொழிந்து, வானரர்களுக்கு பயத்தை உண்டு செய்தான்.

பெரும் குழப்பத்தை உண்டு செய்ய, மாயா சீதையை தேரில் கொண்டு வந்து, மேற்கு வாசலில் வானர படைகளோடு இருக்கும் ஹனுமான் முன் வந்தான்.

சீதையை பார்த்தவர், ஹனுமான் மட்டுமே.

'சீதை தான்' என்றே நம்பி விட்டார் ஹனுமான்.

அவர் கண் முன்னே, மாயா சீதையின் கழுத்தை அறுத்து விட்டு, 'இனி யாருக்காக போர் செய்ய போகிறீர்கள்?' என்று சிரித்து கொண்டே நகருக்குள் சென்று விட்டான்.

பதறி அழுத ஹனுமான், வடக்கு திசையில் இருக்கும் ராமபிரானிடம் ஓடிச்சென்று சொல்ல, ராமபிரான் மயங்கி விழுந்தார்.


லக்ஷ்மணன் "தர்மமாவது? அதர்மமாவது? உலகில் பணம் உள்ளவனுக்கும், பலத்தை காட்டுபவனுக்கும் தான் மதிப்பு. தர்மம் சத்தியம் என்று சொல்லி உங்கள் சொத்தை தியாகம் செய்தீர்களே.. இப்படி ஆகி விட்டதே!" என்று புலம்ப ஆரம்பித்தார். 

இந்த குழப்பத்தை எதிர்பார்த்த இந்திரஜித், நிகும்பலி சென்று யாகத்தை ஆரம்பித்தான்.

விபீஷணன் ஓடி வந்து, 

"இந்திரஜித் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை. சீதையை விடுவதற்கு துளியும் மணமில்லாத ராவணன், என்னை உதறவும் துணிந்தான். 

இந்திரஜித் சீதையை தொடுவதற்கு கூட அனுமதித்து இருக்க முடியாது. 

மாயா வேலைகள் தெரிந்த இவன் நம்மை ஏமாற்றவே இப்படி செய்து இருக்கிறான். 

அநேகமாக இவன் நிகும்பலிக்கு சென்று மேலும் பலத்தை கூட்ட சென்று இருப்பான். 

உடனே சென்றால்,  இந்திரஜித்தை கொன்று விடலாம்" என்றார்.


லக்ஷ்மணன், மஹாகோபத்துடன் வானர சேனையுடன் செல்ல, விபீஷணன் நிகும்பலி இடத்திற்கு கூட்டி சென்றார்.

ஜம்புமாலி, சுப்தக்னா, யஃயகோபா, சம்ஹ்ராதி, விகடா, நிக்னா, தபனா, தமா, ப்ரகாஸா, ப்ரகஸா, ப்ரஜங்கா, ஐங்கா, அக்னிகேது, ரஷ்மிகேது, வித்யுஜிஹ்வா, த்விஜிஹ்வா, சூர்யசத்ரு, சுபார்ஸ்வா, சக்ரமாலி, கம்பனா, விரூபாக்ஷா என்று ராவணன் அனுப்பிய பல ராக்ஷஸ படைத்தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.


தன் யாகத்தை தடுத்து விட்ட விபீஷணனை கண்டு வாய்க்கு வந்தபடி திட்டினான்.

பதிலுக்கு விபீஷணன் கடுமையாக எச்சரிக்க, லக்ஷ்மணனுக்கும் இந்திரஜித்துக்கும் 3 நாட்கள் கடுமையாக போர் நடந்தது. 

கடைசியாக, லக்ஷ்மணன் இந்திரஜித் கழுத்தை இந்திராஸ்திரம் போட்டு சீவி எறிந்தார்.

இவர்கள் ஒவ்வொருவர் தலைமையில் வந்த லட்சக்கணக்கான ராக்ஷஸர்கள் அனைவரும் மடிந்தனர்.


ராவணன் இரண்டாவது முறையாக போர் புரிய வந்தான். 

கூடவே மஹோதரன், மஹாபார்ஷவன், விரூபாக்ஷன் போன்றோர் போருக்கு வந்தனர்.

விரூபாக்ஷனின் காதுக்கு பின் மண்டையில் சுக்ரீவன் ஓங்கி அடிக்க, ரத்த வாந்தி எடுத்து உயிர் விட்டான்.

மஹோதரன் தலையை சுக்ரீவன் சீவி எறிந்தார்.

மஹாபார்ஷவன் நெஞ்சில் ஓங்கி குத்தி பிளந்தான் அங்கதன்.





ராவணன் மஹாகோபத்துடன் அங்கு இருந்த வானரர்கள் அனைவரையும் அக்னி அஸ்திரம் செலுத்தி கொளுத்தினான்.


விபீஷணனை பார்த்த ராவணன் கோபத்துடன் அவன் மீது அம்பு பாய்ச்ச, லக்ஷ்மணன் ஓடி வந்து அந்த பானத்தை தன் அம்புகளால் தடுத்தார்.

ராவணன் லக்ஷ்மணனுடன் சண்டையிட்டு, கடைசியில் மார்பில் அம்பு பட்டு கீழே மயங்கினார் லக்ஷ்மணன்.


மயங்கி கிடக்கும் தம்பியை கண்டு தாளமுடியாத துக்கத்தை அடைந்தார். 

சுக்ரீவனின் மாமனார் சுசேனன் ராமபிரானை சமாதானம் செய்து, ஹனுமானை பார்த்து, ஓஷதி மலையில் உள்ள சஞ்சீவினி, விசல்யா கரணி, சந்தான கரணி போன்ற மூலிகையை எடுத்து வர சொன்னார்.

ஹனுமான் மீண்டும் ஹிமாலயம் வரை பறந்து, மீண்டும் அந்த ஓஷதி மலையை தூக்கி வந்து விட்டார்.

சுசேனன் மூலிகையை கொண்டு லக்ஷ்மணன் மூக்கில் பிழிய, லக்ஷ்மணன் உடனே எழுந்து விட்டார்.

லக்ஷ்மணன் எழுந்து விட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைந்த ராமபிரான், 

கடும் கோபத்துடன் ராவணனை ஒழிக்கும் எண்ணத்தில் போர் புரிய வந்தார்.

ராமபிரான் தரையில் நின்று கொண்டே போர் புரிய, பத்து தலைகளுடன் 20 கைகளுடன் பயங்கரமான ரூபத்துடன் ப்ரம்ம தேவன் வரமாக கொடுத்த தேரில் நின்று போர் புரிந்தான்.


இனி ராவணன் பிழைக்கப்போவதில்லை என்று தைரியம் அடைந்த தேவேந்திரன், தன் தேரோட்டி "மாதலி"யை உடனே அழைத்து, தன் தேரை எடுத்து கொண்டு, ராமபிரானுக்கு உதவ சொன்னான்.

மாதலி, ராமபிரானை தேவரதத்தில் ஏறி போர் செய்ய வேண்டினார்.

ரதத்தில் ஏறி, ராமபிரான் அதி ஆச்சர்யமாக போர் செய்தார். 


கடுமையான யுத்தம் ராவணனுடன் செய்து, ஒரு சமயத்தில் ராவணன் களைத்து போய், அடுத்து என்ன அஸ்திரம் எடுப்பது? என்று குழம்பி இருந்தான்.

இதை கவனித்த தேரோட்டி, ராவணனை காப்பாற்ற, போர்க்களத்தில் இருந்து சாமர்த்தியமாக தேரை திருப்பிக்கொண்டு நகருக்குள் சென்று விட்டான்.

தன் சுய நினைவுக்கு திரும்பிய ராவணன், தன்னை அவமானப்படுத்தி விட்டதாக திட்டினான்.

உங்களை காப்பதும் தேரோட்டியின் கடமை என்று தன் நியாயத்தை சொன்னான் தேரோட்டி. ராவணன் சமாதானம் ஆனான்.

மீண்டும் ராமபிரானை எதிர்கொள்ள தயார் ஆகி கொண்டிருந்தான்.

"ஓடி சென்ற ராவணன், மீண்டும் பலத்துடன் வருவான்" என்று எதிர்பார்த்து கொண்டிருந்தார் ராமபிரான்.


"ராவணனை அழிப்பது அத்தனை எளிதல்ல" என்று உணர்ந்த புலஸ்திய ரிஷியின் மகனாக அவதரித்த அகத்தியர், ராமர் முன் இலங்கையில் போர்க்களத்தில் தோன்றினார். 

ராமபிரான், ராவணனோடு செய்யப்போகும் அடுத்த போரில் நிச்சயமாக வெல்ல, "ஆதித்ய ஹ்ருதயம்" ஸ்தோத்ரம் உபதேசித்து ஆசிர்வதித்தார்.

இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற 30 ஸ்லோகத்தை ராமபிரானே சொன்னார் என்பதும், தமிழ் முனி அகத்தியர் சொன்ன ஸ்தோத்ரம் என்பதும் கவனிக்க வேண்டியது.

ராம பக்தர்கள் அனைவரும் படிக்க  வேண்டும்.

தமிழர்கள், தமிழ் முனி அகத்தியர் சொன்ன இந்த ஸ்தோத்திரத்தை, கட்டாயம் படிக்க வேண்டும்.





ततो युद्ध परिश्रान्तं समरे चिन्तया स्थितम्|

रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम् ||

ததோ யுத்த பரிஷ்ராந்தம் 

ஸமரே சிந்த்தயா ஸ்திதம் |

ராவணம் ச்சாக்ரதோ த்ருஷ்ட்வா 

யுத்தாய ஸமுபஸ்த்திதம் ||

ராம ராவணசுர யுத்தம் முடிவுறும் தருவாயில், ராமனுக்கு சீதையை மீட்க வேண்டுமே என்ற துயரில் இருந்தார். அந்த சமயத்தில், ராவணாசுரன் வல்லமை படைத்தவனாக தென்பட்டான்.


दैव तैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम् ।

उपागम्या ब्रवीद् रामम् अगस्त्यो भगवान् ऋषिः ।

தைய்வ தைஷ்ச ஸமாகம்ய 

த்ருஷ்டுமப்யாக தோரணம் |

உபாகம்யா ப்ரவீத் ராமம் 

அகஸ்த்யோ பகவான் ருஷி: ||

போர்க்களத்தின் வாயிலிலே, அகத்திய முனிவர், ராமபிரானை சந்தித்தார். ராமபிரானின் நிலையைக் கண்டு பின்வருமாறு கூறினார்.


राम राम महाबाहो शृणु गुह्यं सनातनम् ।

येन सर्वानरीन् वत्स समरे विजयिष्यसि ।।

ராம ராம மஹா பாஹோ 

ஷ்ருனு குஹ்யம் ஸனாதனம் |

ஏன ஸர்வானரீன் வத்ஸ 

ஸமரே விஜயிஷ்யஸி |

பலமான ஆயுதம் ஏந்தி இருக்கும் ராம பிரானே! சத்ருக்க்ளை தோற்கடித்து போரில் வெல்வதற்கான நிரந்தரமான தீர்வை உமக்கு இப்போது சொல்கிறேன்.


आदित्य हृदयं पुण्यं सर्वशत्रु विनाशनम् ।

जयावहं जपेन्नित्यम् अक्षय्यं परमं शिवम् ।

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் 

ஸ்ர்வ சத்ரு வினாஷனம் |

ஜயாவஹம் ஜபேன்னித்யம் 

அக்ஷய்யம் பரமம் சிவம் || 

ஆதித்ய ஹ்ருதயம் ஒரு புண்ணிய மிக்க மந்திரம் ஆகும். எதிரிகளை வீழ்த்தும். தினமும் பக்தியுடன் அதை பாராயணம் செய்பவர்களுக்கு நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும்.


सर्वमङ्गल माङ्गल्यं सर्व पाप प्रणाशनम्।

चिन्ताशोक प्रशमनम् आयुर्वर्धनम उत्तमम् ।।

ஸர்வ மங்கள மாங்கல்யம் 

ஸர்வ பாப ப்ரனாஷனம் |

சிந்தா ஷோக ப்ரஷமனம் 

ஆயுர்வர்தனம் உத்தமம் || 

ஸர்வ ஸௌபாக்யங்களையும் அளிக்கும்; ஸர்வ பாபங்களையும் அழிக்கும்; சிந்தையில் உள்ள கவலைகளை ஒழிக்கும்; ஆயுளை அதிகரிக்கும்.

रश्मि मन्तं समुद्यन्तं देवासुर नमस्कृतम् ।

पूजयस्व विवस्वन्तं भास्करं भुवनेश्वरम् ।

ரஷ்மி மந்தம் ஸமுத்யந்தம் 

தேவாசுர நமஸ்க்ருதம் |

பூஜ்யஸ்வ விவஸ்வந்தம் 

பாஸ்கரம் புவனேஸ்வரம் ||

ஸூர்ய பகவான் தனது பொன்னான கிரணங்களை எங்கும் பரப்புகிறார். தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப் படுகிறார். திவ்யமான ஒளியின் வண்மையால் அண்ட சராசரத்திற்க்கும் அதிபதியாக விளங்குகிறார்.


सर्व देवात्मको ह्येष तेजस्वी रश्मि भावनः ।

एष देवासुर गणान् लोकान् पाति गभस्तिभिः ।।

ஸர்வ தேவாத்மகோ ஹ்யேஷ: 

தேஜஸ்வி ரஷ்மி பாவன: |

ஏஷ தேவாசுர கணான் 

லோகான் பாதி கபஸ்திபி: ||

ஸூர்ய பகவான் தனது ஒளிமிக்க கிரணங்களால், தேவர்களும் அசுரர்களும் கூட அடங்கிய எல்லா உலகங்களையும் காப்பாற்றுகிறார்.


एष ब्रह्मा च विष्णुश्च शिवः स्कन्दः प्रजापतिः ।

महेन्द्रो धनदः कालो यमः सोमो ह्यपां पतिः ।।

ஏஷ ப்ரம்மா ச விஷ்ணுஸ் ச 

சிவ ஸ்கந்த: ப்ரஜாபதி: |

மஹேந்த்ரோ தனத: காலோ 

யம: சோமோ ஹ்யபாம் பதி: ||

ஸூர்ய பகவானே ப்ரம்மன், விஷ்ணு, சிவன், ஸ்கந்தன், ப்ரஜாபதி, தேவேந்திரன், குபேரன், காலன், யமன், சந்த்ரன், மற்றும் வருணன்.





पितरो वसवः साध्या ह्यश्विनौ मरुतो मनुः ।

वायुर्वह्निः प्रजाप्राणः ऋतुकर्ता प्रभाकरः ।

பிதரோ வஸவ: ஸாத்யா 

ஹ்யஷ்வினௌ மருதோ மனு: |

வாயுர்வஹ்னி ப்ரஜா ப்ராண: 

ருது கர்தா ப்ரபாகர: ||

ஸூர்ய பகவானே பித்ரு, வசு, சாத்யர், தேவர்கள், தேவலோக வைத்தியர்களான அஸ்வினி குமாரர்கள், மருத்துக்கள், மனு, வாயு, அக்னி ஆவார். அவரே எல்லா பருவங்களையும் சீதோஷ்ணங்களையும் ஷ்ருஷ்டிக்கிறார். எல்லா உயிர்களையும் காக்கிறார். தனது ஒளியால் ஞானத்தை கொடுக்கிறார். உதயத்தை ஏற்படுத்துகிறார்.


आदित्यः सविता सूर्यः खगः पूषा गभस्तिमान् ।

सुवर्णसदृशो भानुः हिरण्यरेता दिवाकरः ।

ஆதித்ய ஸவிதா ஸூர்ய: 

கக: பூஷா கபஸ்திமான் |

சுவர்ண ஸத்ருசோ பானு: 

ஹிரண்யரேதா திவாகர: ||

ஸூர்ய பகவான் அதிதியின் புதல்வன். அதிதி தேவி தேவர்களுக்கெல்லாம் தாய். அண்ட சராசரங்களையும் படைத்தவள். தங்கத்திற்கு நிகரான ஒளியைக் கொண்டவள். அவளே எல்லா உலகங்களுக்கும் வாழ்வாதாரம். அவளே விடியலின் தேவதை.

हरिदश्वः सहस्रार्चिः सप्तसप्ति-र्मरीचिमान् ।

तिमिरोन्मथनः शम्भुः त्वष्टा मार्ताण्डको‌ऽशुमान् ।।

ஹரித்ஸ்வ: ஸஹஸ்ரார்ச்சி: 

சப்த சப்தி: மரீசிமான் |

திமிரோன்மதன: ஷம்பு: 

த்வஷ்ட மார்த்தாண்ட அம்ஷுமான் ||

ஸூர்ய பகவான் ஆயிரம் கிரணங்களை உடையவர். ஏழு பசுமஞ்சள் நிறமுடைய குதிரைகளை உடையவர். இருளை அகற்றுகிறவர். துரத்ரிஷ்டத்தை விரட்டுகிறவர். தனது கிரணங்களை எங்கும் நிறைக்கிறார். எங்கும் நிறைந்திருக்கிரார்.


हिरण्यगर्भः शिशिरः तपनो भास्करो रविः ।

अग्नि गर्भो‌ दितेः पुत्रः शङ्खः शिशिरनाशनः ।।

ஹிரண்ய கர்ப்ப ஷிஷிரஸ்

தபனோ பாஸ்கரோ ரவி:|

அக்னி கர்ப்போ திதே புத்ர: 

ஷன்க: ஷிஷிர நாஷன: ||

ஸூர்ய பகவான் சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர். கடுங்குளிரை அகற்றுபவர். நெருப்பே உருவானவர். தீய எண்ணங்களையும் தீமைகளையும் அகற்றுபவர்.


व्योमनाथ स्तमोभेदी ऋग्यजुःसाम-पारगः ।

घनवृष्टि-रपां मित्रो विन्ध्यवीथी प्लवङ्गमः ।

வ்யோம னாத ஸ்தமோபேதி 

ருக் யஜு ஸாம பாரக: |

கனவ்ருஷ்டி ரபாம் மித்ரோ 

விந்த்யவீதீ ப்லவங்கம: ||

ஸூர்ய பகவான் அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர். மழையை பொழிவிக்கிறார். நீர் நிலைகளை நேசிக்கிறார். விந்த்ய மலைகளை தெய்வீகமாக கடக்கிறார்.


आतपी मण्डली मृत्युः पिङ्गलः सर्वतापनः ।

कविर्विश्वो महातेजा रक्तः सर्वभवोद्भवः ।

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: 

பிங்கள ஸர்வ தாபன: |

கவிர்விஷ்வோ மஹாதேஜா 

ரக்த ஸர்வ பவோத்பவ: ||

ஸூர்ய பகவான் அண்ட வெளியின் ஆசான். அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார். எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.


नक्षत्र ग्रह ताराणाम् अधिपो विश्वभावनः ।

तेजसामपि तेजस्वी द्वादशात्मन्-नमोऽ‌स्तु ते ।।

நக்ஷத்ர க்ரஹ தாராணாம் 

அதிபோ விஸ்வ பாவன: |

தேஜஸாமபி தேஜஸ்வீ 

த்வாதஷாத்மன் நமோஸ்துதே ||

ஸூர்ய பகவான் நக்ஷத்ரங்களுக்கும் க்ரஹங்களுக்கும் தலைவர். அவரே இந்த அகிலத்தை உருவாக்கிக் காக்கிறவர். கதிரவனின் பன்னிரெண்டு (தத, அர்யாமா, மித்ரா, வருணா, இந்த்ரா, விவஸ்வன், த்வஷ்டா, விஷ்ணு, அம்ஷுமான், பாகா, புஷா, பரஞ்ஜா) உருவிலும் ஒளி மயமாக இருக்கிறார். ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம்.


नमः पूर्वाय गिरये पश्चिमायाद्रये नमः ।

ज्योतिर्गणानां पतये दिनाधिपतये नमः ।।

நம: பூர்வாய கிரயே 

பஸ்சி மாயாத்ரயே நம: |

ஜ்யோதிர் கணாணாம் பதயே 

தினாதிபதயே நம: ||

ஸூர்யன் உதிக்கும் கிழக்கு மலைகளுக்கும் ஸூர்யன் அஸ்தமிக்கும் மேற்கு மலைகளுக்கும் நமஸ்காரம். வானுலகில் உள்ள அனைத்து தேவதைகளுக்கும் தினமும் உதிக்கும் நாளுக்கும் அவரே அதிபதி.





जयाय जयभद्राय हर्यश्वाय नमो नमः ।

नमो नमः सहस्रांशो आदित्याय नमो नमः ।।

ஜயாய ஜயபத்ராய 

ஹர்யஷ்வாய நமோ நம: |

நமோ நம: ஸஹஸ்ராம்ஷோ 

ஆதித்யாய நமோ நம: ||

வெற்றியாளனுக்கு நமஸ்காரம். அந்த வெற்றியால் கிட்டும் அனைத்து செல்வங்களுக்கும் நமஸ்காரம். ஆயிரம் கதிர்களுடையவனுக்கு நமஸ்காரம். அதிதியின் புத்ரனுக்கு நமஸ்காரம்.


नम उग्राय वीराय सारङ्गाय नमो नमः ।

नमः पद्मप्रबोधाय मार्ताण्डाय नमो नमः ।

நம: உக்ராய வீராய 

ஸாரங்காய நமோ நம: |

நம: பத்ம ப்ரபோதாய 

மார்த்தாண்டாய நமோ நம: ||

மிகுந்த உக்கிரமும் தைரியமும் வாய்ந்தவனுக்கு நமஸ்காரம். தடைகளற்றவனுக்கு நமஸ்காரம். தாமரையை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம். வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.


ब्रह्मेशान अच्युतेशाय सूर्याय आदित्य-वर्चसे ।

भास्वते सर्वभक्षाय रौद्राय वपुषे नमः ।।

ப்ரஹ்மேஷான் அச்யுதேஷாய 

ஸூர்யாய ஆதித்ய வர்ச்சஸே |

பாஸ்வதே ஸர்வ பக்ஷாய 

ரௌத்ராய வபுஷே நம: ||

அதிதியின் புத்ரனாகிய ஸூர்ய பகவானே ப்ரம்மா, சிவன், விஷ்ணு ஆவார். அவருக்கு நமஸ்காரம். எங்கும் வியாபித்து எங்கும் நிறைந்திருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.


तमोघ्नाय हिमघ्नाय शत्रुघ्नाय अमितात्मने ।

कृतघ्नघ्नाय देवाय ज्योतिषां पतये नमः ।।

தமோக்னாய ஹிமக்னாய 

ஷத்ருக்னாய அமிதாத்மனே |

க்ருதக்னாக் னாய தேவாய 

ஜ்யோதிஷாம் பதயே நம: ||

இருளையும் குளிரையும் போக்கி எதிரிகளை என்றும் அழிக்கும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம். செய் நன்றி மறத்தலை அகற்றி ஒளியால் திகழும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.


तप्त चामी कराभाय वह्नये विश्वकर्मणे ।

नमस्तमो‌ऽभि निघ्नाय रुचये लोकसाक्षिणे ।।

தப்தசாமி கராபாய 

வஹ்னயே விஷ்வகர்மனே |

நமஸ் தமோபி னிக்னாய 

ருசயே லோக ஸாக்ஷினே ||

ஸூர்ய பகவான் ஒளிப்பிழம்பானவர். அவருக்கு நமஸ்காரம். அவரே உலகத்தை வடிவமைத்தவர். இருளை அகற்றி உலகத்தோர் காணும் வண்ணம் அமைந்துள்ள ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.


नाशयत्येष वै भूतं तदेव सृजति प्रभुः ।

पायत्येष तपत्येष वर्षत्येष गभस्तिभिः ।

நாஷயத்யேஷ வை பூதம் 

ததேவ ஸ்ருஜதி ப்ரபு: |

பாயத்யேஷ தபத்யேஷ 

வர்ஷத்யேஷ கபஸ்திபி: ||

ஸூர்ய பகவானே இந்த உலகத்தை உருவாக்கி, காத்து ரக்ஷிப்பவர். அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம். அவரது அபரிமிதமான ஒளியாலேயே மழையைத் தருகிறார். அவரே இவ்வுலகை ஆள்கிறார்.


एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्ठितः ।

एष एवाग्निहोत्रं च फलं चैवाग्नि होत्रिणाम् ।।

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி 

பூதேஷு பரினிஷ்டித: |

ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச 

பலம் சைவாக்னி ஹோத்ரிணாம். ||

உலகத்து உயிர்களெல்லாம் உறங்கும் போதும் ஸூர்ய பகவான் விழித்து இருக்கிறார். அவர் அக்னியால் ஹோமம் செய்கிறார். அவரே அக்னி. அக்னி ஹோமத்தின் கனிகளும் பலனும் அவரே.


वेदाश्च क्रतवश्चैव क्रतूनां फलमेव च ।

यानि कृत्यानि लोकेषु सर्व एष रविः प्रभुः ।।

வேதாஸ்ச க்ரதவஷ்சைவ 

க்ரதூனாம் பலமேவ ச |

யானி க்ருத்யானி லோகேஷு 

ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: ||

ஸூர்ய பகவான் வேதங்களின் சாரத்தில் இருக்கிறார். தத்தம் கடமைகளை உண்மையுடன் செய்பவர்களுக்கு, கடமையின் பலனாக இருக்கிறார். வல்லமை பொருந்திய ஸூர்ய பகவானே எல்லா செயல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.


एन मापत्सु कृच्छ्रेषु कान्तारेषु भयेषु च ।

कीर्तयन् पुरुषः कश्चिन्-नावशीदति राघव ।।

ஏன மாபத்ஸு க்ருச்ரேஷு 

காந்தாரேஷு பயேஷு ச |

கீர்த்தயன் புருஷ: கஸ்சின் 

நாவ சீததி ராகவ ||

ஓ ராகவனே! அவமானத்திலோ, பயத்திலோ, துன்பத்திலோ இருப்பவர்கள் ஸூர்ய தேவனின் நாமத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.


पूजयस्वैन मेकाग्रो देवदेवं जगत्पतिम् ।

एतत् त्रिगुणितं जप्त्वा युद्धेषु विजयिष्यसि ।।

பூஜயஸ்வைன மேகாக்ரோ 

தேவதேவம் ஜகத்பதிம் |

ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா 

யுத்தேஷு விஜயிஷ்யஷி ||

தேவர்களின் அதிபதியும் இந்த உலகின் அரசனுமான ஸூர்ய பகவானை முழுமையான அர்ப்பணிப்போடு வணங்க வேண்டும். இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை மும்முறை ஜபித்தால் வாழ்வின் எல்லா போராட்டங்களிலும் வெற்றி கிட்டும்





अस्मिन् क्षणे महाबाहो रावणं त्वं वधिष्यसि ।

एवमुक्त्वा तदागस्त्यो जगाम च यथागतम् ।।

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ 

ராவணம் த்வம் வதிஷ்யஸி |

ஏவமுக்த்வா தத் அகஸ்த்யோ 

ஜகாம ச யதாகதம் ||

அகத்திய முனிவர், தான் கிளம்பும் முன், ராமபிரானைப் பார்த்து "ஓ ராமா, வலிமையான தோள்கள் உள்ளவனே, இந்த க்ஷணம் முதல், ராவணனை நிச்சயமாக வெற்றி கொள்வாய்." என்று கூறி ஆசிர்வதித்தார்.


एतच्छ्रुत्वा महातेजाः नष्टशोको‌ऽभवत्-तदा ।

धारयामास सुप्रीतो राघवः प्रयतात्मवान् ।।

ஏதச் ஸ்ருத்வா மஹாதேஜா 

நஷ்ட சோகோ பவத் ததா |

தாரயா மாஸ சுப்ரீதோ 

ராகவ ப்ரயதாத் மவான் ||

அக்ஸ்த்ய முனிவரின் மொழிகளைக் கேட்ட ராமபிரான், தனது துன்பங்களையும் கவலைகளையும் துறந்தார். தனக்கு மிகப் பெரிய பலம் வந்து சேர்ந்ததைப் போல உணர்ந்தார்.


आदित्यं प्रेक्ष्य जप्त्वा तु परं हर्षमवाप्तवान् ।

त्रिराचम्य शुचिर्भूत्वा धनुरादाय वीर्यवान् ।।

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து 

பரம் ஹர்ஷ மவாப்தவான் |

த்ரிராசம்ய சுசிர் பூத்வா 

தனுராதாய வீர்யவான் ||

ஸ்ரீராமன் ஸூர்ய பகவானைப் பார்த்து இந்த ஸ்லோகத்தைச் சொன்னார். வீறு பெற்றார். மும்முறை அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று சொல்லி நீரை அருந்தி ஆசமனம் செய்து, தன்னை சுத்தி செய்து கொண்டு, வீரத்துடன் தனது வில்லை எடுத்தார்.


रावणं प्रेक्ष्य हृष्टात्मा युद्धाय समुपागमत् ।

सर्वयत्नेन महता वधे तस्य धृतो‌ऽभवत् ।

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா 

யுத்தாய ஸமுபாகமத் |

ஸர்வயத்னேன மஹதா 

வதே தஸ்ய த்ருதோ பவத் ||

யுத்தக் களத்தில் ராவணனைக் கண்ணுற்ற ராமபிரான், அவனைக் கொல்லும் பொருட்டு முன்னேறினார்.


अथ रविरवदन्-निरीक्ष्य रामं मुदितमनाः परमं प्रहृष्यमाणः ।

निशिचरपति सङ्क्षयं विदित्वा सुरगण मध्यगतो वचस्त्वरेति।।

அத ரவிரவதன் நிரீக்ஷ்ய ராமம் 

முதிதமனா: பரமம் ப்ரஹ் ருஷ்யமான: |

நிஷி சரபதி ஸங்க்ஷயம் விதித்வா 

சுரகண மத்யகதோ வச்ஸ்த்வ ரேதி ||

யுத்த களத்தில் ராமபிரானை பார்த்த ஸூர்ய பகவான், ராவணனின் முடிவு உறுதி எனத் தெரிந்து கொண்டார். ராமபிரானுக்கு, அதற்கான வழியையும் காண்பித்தார்.

ராவணனை ஒழிக்கப்பட்டான். 

விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கி, சீதையை மீட்டு அயோத்தி திரும்பினார் ராமபிரான்.

ஜெய் ஸ்ரீ ராம்.