கையில் பணம் வரும் போது,
"பகவான் கருணை செய்கிறார்" என்றும்,
அதே பணம் செலவழிந்து போகும் போது,
"பகவான் சோதிக்கிறார்" என்றும்,
சொல்வது 'உண்மையான பக்தி' என்று சொல்லிவிட முடியாது.
கடவுள் நம்பிக்கை இருப்பதால், 'ஆஸ்தீகமான பக்தி' என்று வேண்டுமானால் சொல்லலாம்.
கஷ்டம் வந்தாலும், லாபம் வந்தாலும், 'பகவான் கருணை தான் செய்கிறார்' என்று, அவரை நினைத்து கொண்டே இருப்பது தான் உண்மையான பக்தி.
லாபம் வந்தால் 'பகவான் கருணை செய்கிறார்' என்று ஏற்று கொள்கிறோம்.
கஷ்டம் வந்தால் 'பகவான் கருணை செய்கிறார்' என்று ஏற்று கொள்ள முடிவதில்லை.
'கஷ்டமும் அவர் தான் தருகிறார்.. அவருக்கு அது இஷ்டமென்றால், கஷ்டம் வந்தால் வந்து விட்டு போகட்டுமே! அவர் ஆசைப்பட்டால் துக்கத்தை போக்கட்டும்"
என்ற பக்குவம் நமக்கு எப்படி ஏற்பட முடியும்?
நம்முடைய கடைசி சுவாசத்தை விடும் சமயத்தில்,
சொந்தங்கள் கை விட்ட நிலையில்,
டாக்டர்களும் கை விட்ட நிலையில்,
உடம்பு வெலவெலத்து,
மரண பயம் உண்டாகும் போது, 1000 தேள் ஒரே சமயத்தில் கொட்டும் மரண வலி உண்டாகும் போது,
'மரண பயத்தை போக்கி, கடைசி மூச்சு விடும் சமயத்தில், எனக்கு அபயம் தரப்போவது அந்த நாராயணனே!'
என்ற தெளிந்த ஞானம் (அறிவு) இன்றே நமக்கு ஏற்பட்டால் மட்டுமே, நமக்கும் இந்த பக்குவம் ஏற்படும்.
பிராணன் விடும் சமயத்தில் மரண பயத்தை போக்கி காப்பாற்ற போகும் "பரமாத்மா நாராயணன்" நமக்கு துணை என்ற ஞானம் (அறிவு) நமக்கு ஏற்படும் போது,
சுகம் வந்தாலும், துக்கம் வந்தாலும், இரண்டையும் மன சஞ்சலசம் அடையாமல் சமாளிக்க துணிவு வரும்.
இப்படி 'பகவான் இஷ்டம்' என்று திட பக்தி உள்ள பக்தனுக்கு ஏற்படும் துன்பமும், வருவது போல வந்து பனி போல தானே விலகி விடும்.
இந்த திடபக்தியின் காரணமாக, மகாத்மாக்கள் தங்கள் கடைசி சுவாசம் விடும் சமயத்தில், மரண அவஸ்தைகள் இல்லாமல் பகவத் தரிசனம் பெற்று, மோக்ஷம் அடைந்து விடுகிறார்கள்.
பக்தி இல்லாதவர்களுக்கும், துன்பங்கள் ஏற்படுகிறது. ஆஸ்தீகமான பக்தி உள்ளவர்களுக்கும், துன்பங்கள் ஏற்படுகிறது.
திட பக்தி உள்ளவர்களுக்கும், துன்பம் நேருகிறது.
'காலம்' என்ற விதி யாவருக்கும் பொதுவாக தான் செயல்படுகிறது.
காலம் கொடுக்கும் துன்பத்தை சமாளிக்க, துன்பத்தை போக்க, பகவான் தயாராக இருந்தாலும், நம்மிடம் இந்த திட பக்தியை எதிர்பார்க்கிறார். குறைந்த பட்சம் ஆஸ்தீக பக்தியாவது எதிர்பார்க்கிறார்.
திட பக்தி உள்ளவர்களை துன்பங்கள் தாக்குவது போல நமக்கு தோன்றினாலும், அது உண்மையில் அவர்களை தாக்குவதில்லை.
காரணம்,
திட பக்தி உள்ளவர்களுக்கு துன்ப காலங்களில் 'தன்னுடைய நினைவை கொடுத்து' பகவான் காப்பாற்றி விடுகிறார்.
திரௌபதிக்கு ஹஸ்தினாபுர சபையில் அவமானம் ஏற்பட, பாண்டவர்கள், பீஷ்மர் அனைவரும் செய்வதறியாது இருக்க, துன்பத்தின் அருகில் தள்ளப்பட்டாள்.
புடவையை பிடித்து இழுக்க துச்சாதனன் முயற்சிக்க, இந்த பெரும் துன்பத்தில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்த திரௌபதிக்கு 'திடீரென்று துவாரகையில் இருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஞாபகம்' வந்தது.
திரௌபதியிடம் இந்த திட பக்தி இல்லாமல் போயிருந்தால், 'கிருஷ்ணர் காப்பாற்றுவார்' என்ற நினைவே எழுந்து இருக்காது.
'ஸ்ரீ கிருஷ்ணரை பகவான் என்று இன்று நாம் நினைப்பது ஆச்சரியமில்லை.
அப்போது, சம காலத்தில் மனித ரூபத்தில் துவாரகையில் இருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.
துவாரகைக்கும் ஹஸ்தினாபுரத்துக்கு எத்தனை தூரம் இருக்கிறது?
ஹஸ்தினாபுர சபையில் தான் அவமானப்படும் போது, இங்கு அழைத்தால், அவர் எப்படி காப்பாற்ற முடியும்?
வருவதற்கே ஒரு நாள் ஆகுமே?
அதுவரை துச்சாதனன் சும்மா இருப்பானா?
என்ற எந்த கேள்வியும் திரௌபதிக்கு எழவில்லை.
எங்கும் உள்ள பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர், நம் கூக்குரலை கேட்பார் என்று "கோவிந்தா.. கோவிந்தா.." என்று கதறினாள்.
துவாரகையில் சத்யபாமாவுடன் சொக்கட்டான் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணர் "அக்ஷையம்" என்று சொல்லி தாயக்கட்டையை உருட்டி போட,
ஹஸ்தினாபுரத்தில் இருந்த திரௌபதிக்கு பல வண்ண வண்ண புடவைகள் வர தொடங்கியது.
துச்சாதனன் புடவையை இழுத்து சளைத்து மயங்கினான்.. ஆனால் பகவான் திரௌபதியின் மானத்தை காக்க சளைக்கவில்லை.
திட பக்தி இல்லாதவர்களுக்கு, கஷ்ட காலம் வந்ததும், நம்பிக்கை குலைந்து விடுகிறது.
ஆபத்து சமயத்தில் பகவான் நினைவும் எழாமல், மறந்து விடுகிறது.
திட பக்தி உள்ளவர்கள் கஷ்ட காலத்தில் தெய்வத்தை மறப்பதில்லை.
அவர்கள் மறந்தாலும் பகவான் தன்னை நினைக்க வைத்து, வரும் கஷ்டங்கள் பனி போல விலகி விடுகிறார்.
மேலும் பக்தி அவர்களுக்கு அதிகமாகிறது.
திருப்பதியில் ஸ்ரீனிவாச பெருமாளை பார்த்து "கோவிந்தா! கோவிந்தா!" என்று சொல்லி நாம் கோஷம் இடும் போது, பெருமாள் ஆபத்தில் சிக்கி இருந்த திரௌபதியை காப்பாற்றியது போல, நம்மையும் காக்கிறார்.
திரௌபதியை காப்பாற்றிய, திரௌபதியின் பயத்தை போக்கிய "கோவிந்தா.." என்ற நாமத்தை, நாமும் உணர்ந்து சொல்லும் போது, நம்மை எதிர்கொண்டு இருக்கும் ஆபத்துக்கள் பனி போல விலகி விடும்.
கஷ்டம் வந்தாலும், "பகவான் துணை" என்று திட பக்தியை வளர்த்து கொள்வோம்.
வரும் இன்னல்கள் பனி போல விலகுவதை கண்டு அனுபவிப்போம்.