Followers

Search Here...

Showing posts with label காயத்ரீ.. Show all posts
Showing posts with label காயத்ரீ.. Show all posts

Sunday, 10 December 2023

சந்தியா வந்தனத்தில் மிக முக்கியமானது எது? காயத்ரீ மந்திர உபதேசம் பெற்று பூணூல் அணிந்து இருப்பவர்கள், கட்டாயம் செய்ய வேண்டியது எது?

சந்தியா வந்தனத்தில் மிக மிக முக்கியமானது எது? அர்க்ய ப்ரதானம், 

சந்தியா வந்தனத்தில் 4 முக்கியமாக சொல்லப்படுகிறது.

1. அர்க்ய ப்ரதானம் (சூரியனுக்கு ஏற்படும் விபரீத மாற்றங்கள் சரியாக, காயத்ரீ மந்திரம் ஜபித்து பிரார்த்தனை செய்து தெளிக்கப்படும் ஜலம்) 

2. காயத்ரீ ஆவாஹனம் (காயத்ரீ என்ற வேத மாதாவை (அம்மாவை) தன்னோடு ஆவாஹனம் கொண்டு, பிதாவை தியானிக்க தயாராவது)

3 காயத்ரீ ஜபம் (எந்த பரமாத்மா (அப்பா) உள்ளே இருப்பதால் என் புத்தி, புலன்கள் இயங்குகிறதோ, அந்த பரமாத்மாவை தியானிக்கிறேன் என்று காயத்ரீ என்ற மாதா காட்டியபடி தியானம்/ஜபம் செய்வது)

4 உபஸ்தானம். (மீண்டும் காயத்ரீ மாதாவை அவள் இருப்பிடத்திற்கு செல்ல அனுமதிப்பது)

இதில் மிகவும் முக்கியமான விஷயம் "அர்க்ய ப்ரதானம்" என்று ரிஷிகள் சொல்கிறார்கள்.

மந்தேஹா என்ற ராக்ஷஸ கூட்டம் தங்கள் மந்திர பலத்தால் சூரியனின் செயல்பாட்டை தடுக்கும் போது, சூரியனுக்கு ஏற்படும் மந்திர உபாதையை விரட்ட, காயத்ரீ உபதேசம் பெற்ற பூலோகவாசிகள், "காயத்ரீ ஜபித்த ஜலத்தால் சூரியன் இருக்கும் திசை நோக்கி வீசினர்". அந்த மந்திர ஜலம் வஜ்ரமாக இருந்து சூரியனின் கிரணங்களில் பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. 


அர்க்ய ப்ரதானம் செய்பவனுக்கு, "அன்றைய நாள் நல்ல நாளாகவே அமையும்

அர்க்ய ப்ரதானம் செய்யாமல் இருப்பவனுக்கு, "மனக்குழப்பம் ஏற்படும்

என்பது ரிஷி வாக்கு.


காலையில் (நின்று கொண்டு) - 3 முறையும் (கிழக்கு பார்த்து கொஞ்சம் குனிந்து அர்க்யம் விட வேண்டும்)

பகலில் (நின்று கொண்டு) - 2 முறையும் (சூரியனை பொறுத்து கிழக்கு/வடக்கு பார்த்து நிமிர்ந்து அர்க்யம் விட வேண்டும்)

மாலையில் (அமர்ந்து கொண்டு) - 3 முறையும் (மேற்கு பார்த்து அர்க்யம் விட வேண்டும்)

காயத்ரீ சொல்லி, இரண்டு கைகளாலும் அர்க்ய ப்ரதானம் கொடுக்க வேண்டும்.

மாட்டின் கொம்பு உயரத்திற்கு இரு கைகளை உயர்த்தி, காயத்ரீயை சொல்லி 3 முறை ஜலத்தை வீசி விட வேண்டும். 

கட்டைவிரல் ஆள்காட்டி விரலோடு சேரகூடாது.

ஜலத்தை வீசும் பொழுது, கை விரல்களை விரித்து கொள்ள வேண்டும், எந்த வித முத்திரையும் கூடாது.

மாலையில் (அமர்ந்து கொண்டு) அர்க்யம் விடும் போது, பசு மாடு அமர்ந்து இருப்பதாக நினைத்து, அப்பொழுது அதன் கொம்பு எந்த அளவு இருக்குமோ அந்த அளவு கைகளை உயர்த்தி கொண்டு, 3 முறை காயத்ரீ சொல்லி அர்க்யம் கொடுக்க வேண்டும்.


தொடர்ந்து உட்கார்ந்து ப்ராணாயாம் செய்து, 

காலாதீத ப்ராயச்சித்தார்த்தம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து, பிறகு மீண்டும் 

காயத்ரீ சொல்லி ஒரு முறை "அர்க்ய ப்ரதானம்" செய்ய வேண்டும்.


கேள்விகள்:

குளத்தில் இருக்கும் போது சந்தியா காலம் வந்தால்?

ஆசமனம்:  ஒரு கால் தண்ணீரிலும், மற்றொரு கால் கரையில் வைத்து கொண்டு செய்ய வேண்டும்.

அர்க்ய பிரதானம்: இரண்டு கால்களும் தண்ணீரில் இருக்கும் படி நின்று கொண்டு, அர்க்யம் விட வேண்டும்.

வீட்டில் இருக்கும் போது, சந்தியா காலம் வந்தால்?

அர்க்ய பிரதானம்:  இரண்டு பாதங்களும் சேர்த்து வைத்து கொண்டு ஜலத்தை வீசும் பொழுது, குதி காலை உயர்த்தி கொண்டு வீச வேண்டும். 


ஜலம் இல்லாத இடத்தில் இருக்கும் போது, சந்தியா காலம் வந்தால்?

மண் எடுத்து செய்ய வேண்டும்...

கங்கா ஜலம் கையில் இருக்குமாறு நினைத்து கொண்டு, செய்ய வேண்டும்.


"அர்க்யம் கொடுக்காமல் இருக்காதே" என்று ரிஷி சொல்கிறார்கள்.

"காயத்ரீ உபதேசமும், பூணூலும் இருந்தால், அர்க்ய பிரதானம் கட்டாயம் செய்ய வேண்டும்" என்று ரிஷி சொல்கிறார்கள்


அர்க்ய பிரதானம் தரையில் நின்று தான் செய்ய வேண்டும். மாடியில் செய்ய கூடாது. சுத்தமான இடத்தில் செய்ய வேண்டும். மாடு அருகில் செய்ய கூடாது. மாடு இருந்த இடத்தில் செய்யலாம்.


அர்க்யம் விடும் போது, கை விரித்து ஜலத்தை வீச வேண்டும்.

அர்க்யம் விடும் போது, கட்டை விரல் ஆள் காட்டி விரலோடு சேர்த்து செய்தால், ரத்தத்தை தெளித்தது போல ஆகும். ஆதலால், கட்டை விரல் சேர கூடாது.


தர்ப்பை தண்ணீரை அம்ருதமாக்கும்.

அர்க்யம் விடும் போது, கைகளில் உள்ள ரேகைகளையே தர்ப்பை போல தியானித்து கொண்டு, ஜலத்தை விட வேண்டும்.

காயத்ரீ மந்திர உபதேசம் பெற்று பூணூல் அணிந்து இருப்பவர்கள், அர்க்ய பிரதானம் கட்டாயம் செய்ய வேண்டும்.

அர்க்ய பிரதானம் செய்யாமல் இருப்பவர்கள், மனம் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பார்கள்.

உலகில் ஒரு பிராம்மணன் கூட இல்லாமல், அர்க்யம் விடாத நிலை ஏற்பட்டால், சூரியனின் கதிர் வீச்சு பல பாதகங்களை உண்டாக்கும்.