Followers

Search Here...

Showing posts with label ஆண்டாள். Show all posts
Showing posts with label ஆண்டாள். Show all posts

Saturday, 4 April 2020

பாசுரம் (அர்த்தம்) - நாறு நறும்பொழில்... ஆண்டாள் (மதுரை) கள்ளழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?


நாறு நறும்பொழில்
மாலிருஞ்சோலை நம்பிக்கு,
நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்,
நூறு தடா நிறைந்த
அக்காரவடிசில் சொன்னேன்,
ஏறு திருவுடையான்
இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ
-  நாச்சியார் திருமொழி (ஆண்டாள்)




வராக அவதாரம் செய்த போது இந்த பூமியை பிரளய ஜலத்தில் இருந்து தூக்கிய அதே பகவான்,
வாமன அவதாரம் செய்த போது இந்த பூமியை பலிசக்கரவர்த்தியிடம் இருந்து மீட்க உலகை அளந்த அதே பகவான்,
கிருஷ்ண அவதாரம் செய்த போது இந்த பூமியை உண்டு, லோகங்கள் அனைத்தும் தனக்குள் அடக்கம் என்று யசோதையிடம் லீலை செய்த அதே பகவான்,

இந்த அழகர் மலையில் கள்ளழகனாக (மாலிருஞ்சோலை நம்பி) வீற்று இருக்க,
இங்கு வாழும் பலதரப்பட்ட பக்தர்களான கள்ளர்கள், மறவர்கள், பிராம்மணர்கள் எவரானாலும்,
தனக்கு கிடைத்த கேழ்வரகானாலும், ஆடு கோழியானாலும், பால், நெய் என்று எந்த பொருளானாலும்,
அதில் ஒரு பாகம் "என் அழகருக்கு" என்று உரைத்து, அவர் பாதத்தில் சமர்ப்பித்து விடுகிறார்கள். 

அழகர் பெருமாள் ஜாதி பார்க்காமல், குணம் பார்க்காமல் இங்கு மட்டும் தான், அவரவர்கள் ஜாதிக்கு ஏற்ப, அவரவர்கள்  பேச்சுக்கு ஏற்ப, அவரவர்கள் நாகரீகத்து ஏற்ப, அவரவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப, அவரவர்கள் குணத்திற்கு ஏற்ப பழகுகிறார்.

பொருளை கொள்ளை அடிக்கும் கள்ளர்களின் மத்தியில் நின்று கொண்டு, கள்ளர்களின் மனதையும் கொள்ளையடிக்கும் கள்ளனுக்கு கள்ளனாக கள்ளழகர் இங்கு இருக்கிறார். 

ஸ்ரீரங்க நம்பெருமாள் போல இங்கு கள்ளழகர் இருக்க மாட்டார்.
அங்கு பெருமாள், யார் கொடுத்தாலும் ஏற்க மாட்டார். ஒரு அரசனாக இருப்பார்.

இங்கோ, பெருமாள் 'கம்பு சாப்பிடுவீர்களா?' என்று கேட்டால், "சாப்பிடுவேனே !" என்று சொல்கிறார். 
'கள்ளர்களை போல கருப்பு துணி கட்டி கொள்வீர்களா?' என்று கேட்டால், 'சரி' என்று கட்டி கொள்கிறார்.

பெருமாள் ஒரு நாள் கருப்பு துணி கட்டிக்கொள்ளும் அதிசயம் அழகர்மலையில் மட்டுமே காண முடியும். 

கள்ளர்களும் ரசிக்க கருப்பு துணி, கருப்பு தொப்பி அணிந்து கொண்டு, கையில் ஒரு கோலுடன் தரிசனம் தருகிறார் அழகர்.

அழகரை பார்த்தால் அனைவருக்குமே என் பெருமாள் (எம்பிரான்) என்று தோன்றிவிடும்.

மற்ற ஊர்களில் பெருமாளுக்கு நேரடியாக எதையும் சமைத்து நெய்வேத்யம் செய்து விட முடியாது.
பெருமாள் இங்கு மிகவும் சுலபமாக இருப்பதால், அழகர்மலையை சுற்றி ஆயிரக்கணாக்கான மக்கள், நூபுர கங்கையில் (சிலம்பாறு) ஸ்நானம் செய்து விட்டு, தாங்களே அடுப்பு மூட்டி, பொங்கல் வைத்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யும் அழகை நாம் ரசிக்கலாம்.

சமயத்தில், கிராம மக்கள், தான் சாப்பிடும் ஆடு கோழியை சமர்ப்பித்தால் கூட, இந்த பெருமாள் அதையும் ஏற்கிறார்.

இப்படி பிரார்த்தனை எல்லாம் இங்கு பலித்து விடும் என்பதை அறிந்து கொண்ட பெரியாழ்வார் பெற்ற ஆண்டாள்,
"ஸ்ரீ ரங்க பெருமாளை மணக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து, நம் அழகருக்கு பொங்கல் (அக்காரவடிசில்) செய்கிறேன் என்று வேண்டிக்கொண்டாள்.

மாலிருஞ்சோலை நம்பிக்கு,
நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்,
நூறு தடா நிறைந்த
அக்காரவடிசில் சொன்னேன்,
என்று ஆண்டாளே  பாடுகிறாள்.




ஆண்டாள் அவதரித்த காலத்துக்கு பிறகு, ராமானுஜர் அவதரித்தார் (1017AD).

ஆண்டாள் பாடிய இந்த பாட்டில், "அக்காரவடிசில் சமர்ப்பித்தேன்" என்று சொல்லாமல், "அக்காரவடிசில் சொன்னேன்" என்று இருப்பதை கவனித்து விட்டார் ராமானுஜர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த ஆண்டாள், ரங்கநாதரை மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையினால், மதுரையில் உள்ள கள்ளழகரிடம் பிரார்த்தனை செய்து, "பொங்கல் வைக்கிறேன்" என்று சொன்னாளாம்.

ஆண்டாள் தன்னிடம் சொன்னதற்கே, கள்ளழகர் அவள் ஆசையை பூர்த்தி செய்து விட்டாராம். 
ஆண்டாள் ஸ்ரீ ரங்கநாதருடன் ஐக்கியமாகி விட்டாள்.

தங்கை மனதில் ஆசைப்பட்டதை கூட, அண்ணன் தானே பூர்த்தி செய்து கொடுக்க வேண்டுமாம். 

"அக்காரவடிசில் செய்கிறேன்" என்று சொல்லியும், ஆண்டாள், கள்ளழகருக்கு அக்காரவடிசில் செய்யமுடியாமல் போனது. 

ஆண்டாள் ரங்கநாதரை திருமணம் செய்து கொண்டு புக்ககம் போய் விட்டாள் என்பதால், அண்ணனாக தான் இருந்து, தன் தங்கை ஆண்டாள் செய்த பிரார்த்தனையை முடித்து கொடுக்க ஆசைப்பட்டார்.

இதற்காக மதுரை வந்து, கள்ளழகரை தரிசித்து, அவருக்கு நூறு தடா அக்காரவடிசில் செய்து ஆண்டாள் செய்த பிரார்த்தனையை நிறைவேற்றி கொடுத்தார்.

தான் அண்ணனாக செய்த இந்த காரியத்தை தன் தங்கைக்கு சொல்ல, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற ராமானுஜர், ஆண்டாள் சன்னதிக்கு செல்ல,

அந்த சன்னதியில் இருந்து 7 வயது பெண் குழந்தை ஓடி வந்து"அண்ணா..." என்று ராமானுஜரை நோக்கி ஓடி வந்து கட்டிக்கொண்டாளாம்.
வந்திருப்பது ஆண்டாள் என்று உணர்ந்த ராமானுஜர், தன் தங்கையின் பிரார்த்தனையை தான் செய்து முடித்த ஆனந்தத்தை அடைந்தார்.

ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணனாகி விட்டதாலேயே, அவருக்கு "கோயில் அண்ணன்" என்றும் பெயர் ஏற்பட்டது.

ராமானுஜர் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவம் இது.

மதுரையில் உள்ள அழகரை காண ராமானுஜர் வந்தார் என்பதும்,
ஆண்டாள் பிரார்த்தனை கூட இந்த அழகரால் தான் நிறைவேறியது என்று பார்க்கும் போது, நம் பிரார்த்தனையும் கள்ளழகர் மூலம் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.

நாமும் கள்ளழகரை தரிசிப்போம்.