ஸுந்தன் உபஸுந்தன் இருவரும் அசுரர்கள்.
இவர்கள் நிகும்பன் என்ற அசுரகுல அரசனின் பிள்ளைகள். நிகும்பன் ஹிரண்யகசிபுவின் பேரன்.
ஸுந்தன் உபஸுந்தன் இருவருக்கும் ஆச்சர்யமான ஒற்றுமை இருந்தது.
இவர்கள் நினைப்பது ஒன்றாகவே இருந்தது.
இவர்கள் செய்யும் செயலும் ஒன்றாகவே இருந்தது.
இவர்கள் அடைய ஆசைப்படுவதும் ஒன்றாகவே இருந்தது.
இவர்கள் சுகமாக நினைப்பதும் ஒன்றாகவே இருந்தது,
இவர்கள் துக்கமாக நினைப்பதும் ஒன்றாகவே இருந்தது.
இவர்களிடம் எண்ணத்திலோ, செயலிலோ வித்யாசம் காணப்படவில்லை.
ஒருவனை விட்டு மற்றொருவன் சாப்பிடக்கூட மாட்டான்.
ஒருவனை விட்டு மற்றொருவன் பேசக்கூட மாட்டான்.
ஒருவனுக்கு ஒருவன் பிடித்ததை செய்து கொண்டும், ஒருவனுக்கு ஒருவன் பிடித்ததையே பேசி கொண்டும் இருந்தனர்.
ஒரே ஒழுக்கம் கொண்டிருந்தனர்.
ஒரே செய்கைகள் கொண்டிருந்தனர்.
இவ்வாறு, ஒரே ஒருவன், இரண்டாக தெரிவது போல வாழ்ந்து கொண்டிருந்தனர்.
ஒரு சமயம், இவர்கள் 3 லோகங்களையும் ஜெயிக்க ஆசைப்பட்டு, விந்திய மலையில் கால் கட்டை விரலில் நின்று கொண்டு கடுமையாக தவம் செய்ய ஆரம்பித்தனர்.
செல்வங்களும், தேவ லோக பெண்களையும் அனுப்பி தேவர்கள் முயற்சி செய்தும், இவர்கள் தவத்தை கலைக்க முடியவில்லை.
இவர்களின் தாயார், சகோதரிகள், மனைவிகள் இவர்களை ராக்ஷஸர்கள் இவர்களை தாக்க, இவர்கள் காப்பாற்று என்று கதறுவது போல மாயையை உருவாக்கினர்.
எதற்கும் அசையாமல் தவத்திலேயே இருந்தனர்.
இவர்கள் தவம் விந்திய மலையையே கொதிக்க செய்தது.
இவர்கள் தவத்தால், ப்ரம்ம தேவன் ப்ரத்யக்ஷம் ஆனார்.
என்ன வரம் வேண்டும்? என்று கேட்க,
நாங்கள் மாயைகள் அறிந்தவர்களாகவும், ஆயுதங்கள் அறிந்தவர்களாகவும், அதிக பலம் கொண்டவர்களாகவும், நினைத்த ரூபங்களை எடுக்கும் சக்தியுள்ளவர்களாகவும், மரணம் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கேட்க,
மரணம் மட்டும் தர இயலாது. மற்ற அனைத்தும் தருகிறேன் என்றார். மரணத்திற்கு பதில் வேறு கேளுங்கள் என்றார்.
அப்படியென்றால், நாங்கள் இருவரும் யாரிடத்திலும் பயம் இல்லாமல், யாரினாலும் மரணம் ஏற்படாமல் இருக்க வேண்டும். மரணம் என்று உண்டு என்றால் நாங்களே எங்களை கொன்றால் தான் மரணம் எங்களுக்கு நேர வேண்டும் என்று கேட்டனர்.
தந்தேன் என்று சொல்லி மறைந்தார் ப்ரம்மா.
மகா பலத்தை அடைந்த இந்த சகோதரர்கள், அசுர லோகம் சென்றனர். இவர்களால் அசுரர்கள் பெரும் சுகத்தோடு வாழ தொடங்கினர்.
அசுர லோகத்தில் எங்கு பார்த்தாலும், சாப்பிடு, இதோ வாங்கி கொள், குடி, விளையாடு, பாடு என்ற சப்தங்களே எங்கும் கேட்டது.
பல வருடங்கள் நாட்கள் போல போனது.
மேல் லோகங்கள், கீழ் லோகமான நாக லோகங்கள் அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த இந்த சகோதரர்கள், இந்திரலோகத்தை கைப்பற்றினார்கள். தேவர்கள் ப்ரம்மலோகம் ஓடினர். பிறகு யக்ஷர்கள், ராக்ஷஸர்களை, ஆகாசத்தில் இருக்கும் பறவைகள் அனைத்தையும் கொன்றனர். பிறகு நாக லோகம் சென்று அவர்களையும் ஜெயித்தனர். சமுத்திர தீவுகளில் வசிக்கும் மிலேச்சர்களையும் ஜெயித்தனர்.
பிறகு, பூமியில் ராஜ ரிஷிகள் மஹாயாகங்கள் செய்து, பிராம்மணர்கள் ஹோமங்கள் ஸ்ரார்த்தங்கள் செய்து தேவர்களுக்கு பலம் கொடுக்கின்றனர். இவர்களையும் கொன்று குவிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
பூமியில் உள்ள அரசர்கள் அனைவரையும் கொன்றனர்.
பூமியில் எங்கெங்கெல்லாம் பிராம்மணர்கள் இருந்தனரோ, அவர்களை தேடி தேடி கொன்றனர். ஒளிந்து இருந்தவர்களை தன் மாயையால் பல ரூபங்கள் எடுத்து கொண்டு கண்டுபிடித்து கொன்றனர்.
பிராம்மணர்கள் கொடுக்கும் சாபமும், ப்ரம்மாவின் வரத்தால் பாறையில் விழுந்த நீர் போல ஆனது.
தன் கன்னத்தில் வழியும் வியர்வையில் மதம் கொண்ட யானைகளை மாயையால் உருவாக்கி, ப்ராம்மணர்களை தேடி தேடி மிதித்து கொன்றனர். புலி சிங்கம் போன்ற ரூபங்கள் எடுத்து கொண்டு மறைந்து இருந்தவர்களை பிடித்து கொன்றனர்.
பூமியில் அரசர்கள், ப்ரம்மமானர்கள் இல்லாது போனார்கள்.
பூமியில் எங்கு பார்த்தாலும் யாகங்கள் இல்லை. ஹோமங்கள் இல்லை. வேதம் இல்லை. திருமணம் போன்ற சுப காரியங்கள் இல்லை. பூமி பயத்தால் சூழ்ந்து இருந்தது. நகரங்கள் நாசம் செய்யப்பட்டு கிடந்தது. பயிர் செய்வது நின்று விட்டது. எங்கும் எலும்பு கூடுகள்.
இதை கண்டு சூரியனும், சந்திரனும், நவ க்ரஹமும், 7 ரிஷிகளும், அஸ்வினி போன்ற அனைத்து நக்ஷத்திரங்களும் தேவர்களும் துக்கம் அடைந்தனர்.
பூமியில் குருக்ஷேத்ரம் என்ற இடத்தில் வாசம் செய்ய தொடங்கினர் இந்த அசுர சகோதரர்கள்.
அப்போது தேவ ரிஷிகளும், ப்ரம்ம ரிஷிகளும் பூமியில் நடக்கும் இந்த நிலையை பார்த்து கவலை கொண்டு பிரம்மாவிடம் சென்றனர்.
ப்ரம்மா இவர்கள் சொல்வதை கேட்ட பின், விஸ்வகர்மாவை அழைத்து, நீ உலகத்தில் யார் பார்த்தாலும் ஆசைப்படும் அளவுக்கு ஒரு பெண்ணை ஸ்ருஷ்டி செய்" என்றார்.
உடனே நமஸ்காரம் செய்து விட்டு, மூன்று உலகங்களிலும் அசையும் மற்றும் அசையாத பொருட்களில் பார்ப்பதற்கு எது இனியதோ அது அதை எடுத்து ஒரே ஒரு பெண் ரூபத்தில் சேர்த்தான்.
கோடி கொடியான ரத்தினங்களை அவள் தேகத்தில் சேர்த்தான். இப்படி உருவாக்கப்பட்ட இந்த பெண் அழகில் கண்ணை கவர்ந்தாள்.
யாராவது இவளை பார்த்தால், பார்த்த இடம் சரியாக இல்லை என்று கண்ணை விலக்க முடியாதபடி இருந்தாள்.
ஸ்ரீ தேவி போன்றவளும், திடமான உடல்வாகு கொண்டவளாகவும் இருந்தாள்.
அந்த பெண் பிராம்மாவை பார்த்து "என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள்.
பார்த்தாலே கண்களும் மனமும் கவரப்படும் படியாக இருந்த இவளை பார்த்த பிறகு ப்ரம்மா விஸ்வகர்மாவை பார்த்து, "நீ இவளை கோடிக்கணக்கான ரத்தினங்களில் உள்ள சாரமான அழகை கொண்டு எள் (திலம்) எள்ளாக பார்த்து படைத்து இருக்கிறாய். அதனால் இவளுக்கு திலோத்தமா என்று பெயர் வைக்கிறேன் என்றார்.
அதை கேட்ட அவள், மீண்டும் அவரை வணங்கி, என்னை எதற்காக படைத்தீர்கள்? நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டாள்.
திலோத்தமா! நீ உன் அழகினால் அசுரர்களான ஸுந்தன் உபஸுந்தன் இருவரையும் மதி மயங்க செய். உன்னை பார்த்தத்தினால் அவர்களுக்குள் சண்டை உருவாகும் படி செய்" என்றார்.
அப்படியே செய்கிறேன் என்றாள்
புறப்படும் முன் அங்கிருந்த தேவர்கள், சங்கரர், ப்ரம்ம தேவன் அனைவரையும் சுற்றி வலம் வந்து நமஸ்கரித்தாள்.
அப்படி அவள் வலம் வரும் போது, ப்ரம்மா கிழக்கு முகமாக அமர்ந்திருந்தார். சங்கரர் தெற்கு பக்கமாகவும், இந்திரன் வட பக்கமாவும் இருந்தார்கள். ரிஷிகள் நான்கு புறத்திலும் சூழ்ந்து இருந்தனர்.
இவர்கள் அனைவரையும் சுற்றி வந்தாள் திலோத்தமை. சங்கரரும் இந்திரனும் இவளால் மனதை நிறுத்த முடியாமல் பார்த்தனர். அப்போது வைத்த கண்ணை எடுக்க முடியாமல் சங்கரருக்கு, தெற்கு பக்கம் ஒரு தலையும், மேற்கு பக்கம் ஒரு தலையும், வடக்கு பக்கம் ஒரு தலையும் உருவாக்கி, சதுர் முகம் உண்டானது.
அதே சமயம், இந்திரன் ஒரு கண் போதாது என்று பார்க்க, ஆயிரம் கண்கள் அவனுக்கு உருவானது.
அங்கிருந்த மற்ற தேவர்கள், ரிஷிகள் அனைவரது கண்களும் அவளையே பார்த்தன.
இந்த ஆச்சர்யத்தை பார்த்தே அனைவரும் அந்த அசுரர்களுக்கு முடிவு ஏற்பட்டு விடும் என்று நிச்சயித்தனர்.
யாரும் ஜெயிக்க முடியாதபடி வாழ்ந்து கொண்டிருந்த இந்த சகோதரர்கள் ஒரு சமயம் மேடு பள்ளம் இல்லாத விந்திய மலை சாரல் வீசும் இடத்திற்கு சென்று அங்கு மரங்களில் பூக்கள் பூத்து குலுங்கும் இடத்திற்கு சென்றனர்.
அங்கு தேவலோக பெண்களை அழைத்து விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது உடல் தெரியுமாறு சிவந்த ஒற்றாடை உடுத்திக்கொண்டு, அந்த காட்டில் பூத்த பூக்களையும், நதியில் பூத்திருந்த கொன்றை பூக்களையும் பறித்து கொண்டு இவர்கள் அருகில் வந்தாள் திலோத்தமை.
மதுபானம் செய்திருந்த இவர்கள், இவளை பார்த்ததும் திடுக்கிட்டனர்.
இவளை இருவரும் அனுபவிக்க ஆசைப்பட்டனர்.
ஸுந்தன் திலோத்தமையின் வலது கையை பிடிக்க, உபஸுந்தன் அவளின் இடது கையை பிடித்தான்.
வரத்தினால் இவர்கள் பெற்று இருந்த பலத்தாலும், செல்வத்தாலும், அதனால் உண்டான கர்வத்தாலும், மது உண்ட மயக்கத்தாலும், கொழுத்து இருந்த இருவரும் ஒருவரை பார்த்து ஒருவர் புருவத்தை நெறித்தனர்.
மதம் கொண்டதாலும், காமம் கொண்டதாலும் "இவள் என்னுடைய மனைவி. நீ மரியாதை செய்யத்தக்கவள்" என்று ஸுந்தன் சொன்னான்.
உபஸுந்தன், "இவள் என் மனைவி. உனக்கு மருமகள்" என்றான்.
"இவள் உனக்கில்லை. எனக்கு தான்" என்று இருவரும் சொல்லிக்கொண்டனர்.
இந்த பேச்சு கோபமாக மாறியது.
இவள் ரூபத்தில் மயங்கி கிடந்த இருவரும், நேசத்தையும், மன ஒற்றுமையையும் இழந்து, இரண்டு கதைகளை எடுத்து கொண்டு அடித்து கொண்டனர்.
இவ்வாறு இருவரும் அடித்து கொள்ள, ரத்தம் பீறிட்டு இருவரும் தரையில் விழுந்து மடிந்தனர்.
இதை கண்ட அசுர பெண்கள் பெரும் துக்கமுற்று, பயம் ஏற்பட்டு பதைபதைப்போடு பாதாள லோகம் சென்றனர்.
ப்ரம்மா திலோத்தமையை பார்த்து ஆசிர்வதித்து, "நீ யார் கண்ணிலும் தென்பட கூடாது என்பதால், நீ ஆதித்யன் சஞ்சரிக்கும் லோகங்களில் சஞ்சரி. நீ யார் கண்ணிலும் தெரிய மாட்டாய்" என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.
திலோத்தமையின் இந்த சரித்திரத்தை சொன்ன நாரதர், பாண்டவர்கள் திரௌபதியின் காரணமாக எக்காரணம் கொண்டும் சண்டையிட்டு கொள்ளாமல் குடும்பம் நடத்த வேண்டும் என்று உபதேசம் செய்தார்.
அதற்கு பிறகு, இந்திரபிரஸ்தத்தில் பாண்டவர்கள் சுகமாக வசிக்க தொடங்கினர்.
பாண்டவர்கள் தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர்.
"திரௌபதி நம் ஒவ்வொருவரோடும் ஒரு வருஷம் வசிப்பாள். திரௌபதியோடு இருக்கும் போது மற்றொருவர் பார்த்தால், 12 மாதங்கள் ப்ரம்மச்சர்யத்தோடு வனத்தில் வசிக்க வேண்டும்" என்று உடன்படிக்கை செய்து கொண்டனர்.
நாரதர் இவர்களின் உடன்படிக்கையை கண்டு சந்தோஷப்பட்டு ஆசிர்வதித்து, பிறகு தான் லோகத்துக்கு சென்றார்.
No comments:
Post a Comment