Followers

Search Here...

Saturday, 20 January 2024

ஆபத்துக்கள் நீங்க.. இமம் மே வருண ஸ்ருதி என்ற மந்திரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோம்..

பெரிய ஆபத்துக்கள் நீங்க… சொல்ல வேண்டிய மந்திரம். எந்த அனுபவத்தில் சொல்ல வேண்டும்?

வேத மந்திரம்: 

இமம் மே வருண ஸ்ருதி....


ஶ்ரீ ஶ்ரீ அண்ணா (ஶ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள்) இந்த ஒரு வரிக்கு மட்டும் கொடுக்கும் ஆச்சர்யமான விளக்கம்…  (visit srisrianna.com to download discourses)

इमम् मे वरुण श्रुधि

Rigveda: Mandala 1 - Suktam 25 Mantra 19  

YajurVeda: Chapter 21 Mantra 1

இமம் மே வருண ஸ்ருதி.... என்ற வேத மந்திரம், பொதுவாக வருணனை குறித்து சொல்லப்படுகிறது. 

ஆனால், 

இதே மந்திரம், சந்தியா வந்தனத்தில், சூரியனை பார்த்து சொல்லும்படியாகவும் இருக்கிறது என்று பார்க்கிறோம்

"ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி) என்பது இந்த மந்திரத்துக்கு அர்த்தம்.


சூரியனை பார்த்து, "ஹே வருணா" என்று சந்தியாவனத்தில் அழைக்கிறோம்.

சூரியனும், வருணனும் வேறு வேறு தேவன் அல்லவா? இந்த சந்தேகம் பொதுவாக உண்டாவது சகஜம்.

பொதுவாக, எந்த வேத மந்திரத்தை எடுத்தாலும், அதில் 3 தெய்வங்கள் அடக்கம்...  ராம மந்திரம், திருவஷ்டாக்ஷர மந்திரத்துக்கும் இது பொருந்தும்.


1. "ராம நாமமே (சப்தமே) பகவான் தான்" என்று தியானிப்பது ஒரு முறை 

(ஹனுமான் ராம நாமத்தை ஜபம் செய்து கொண்டிருந்தார். ராம நாமத்திலிருந்தே, பகவான், ஶ்ரீ ராமபிரானாக அவதாரம் செய்தார்.

2. ராம ஜபம் செய்யும் போது, ராமபிரானை தியானிப்பது ஒரு முறை

3. ராம ஜபம் செய்யும் போது, பரமாத்மா நாராயணனை தியானிப்பது ஒரு முறை.

இவ்வாறு, ராம நாமம் என்ற தாரக மந்திரத்தை, மூன்று விதத்தில் ஜபிக்கலாம்.


இங்கு "வருணா" என்று சொல்லும் போது, 

1. வருணன் என்ற வேத மந்திரமே (ஒலியே) பரமாத்மா தான் என்று ஜபிப்பது ஒரு நிலை.

2. வருணன் என்று சொல்லும் போது, வருண தேவனை தனியாக தியானித்து ஜபிப்பது ஒரு நிலை.

3. வருணன்  என்று சொல்லும் போது, அந்த வருண தேவனும் விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனுக்குள் அடக்கம் என்று உணர்ந்து, நாராயணனை ஜபிப்பது ஒரு நிலை.

உண்மையான மெய் ஞானிகள் 3ம் நிலையில் இருந்து கொண்டு த்யானம் செய்கிறார்கள்.


பரவாசுதேவன் நாராயணனின் அறிவு "வேதம்" என்று சொல்லப்படுகிறது.

ப்ரம்ம தேவன் படைக்கப்பட்ட போது, வேதத்தை கொடுத்தார்.

வேதம் சொன்னபடி உலகங்கள் படைக்கப்பட்டன. சப்த ரிஷிகள் படைக்கப்பட்டனர். அவர்கள் மூலம் தேவர்கள், அசுரர்கள், பக்ஷிகள், மிருகங்கள், மனிதர்கள் படைக்கப்பட்டனர்.


இந்திரன் படைக்கப்படும் முன்பேயே வேதம் இருந்தது. வேதம் "இந்திராய ஸ்வாஹா" என்று சொல்கிறது 

தேவர்களை படைத்த ப்ரம்ம தேவன், "இந்திராய ஸ்வாஹா" என்று சொல்லும் போது, தன்னை படைத்த நாராயணனின் புஜமே இந்திரன் என்று த்யானம் செய்கிறார். 

தான் படைத்த தேவேந்திரனை ப்ரம்மா தியானிப்பது இல்லை. 

அந்த தேவேந்திரன் நாராயணனின் புஜமாக இருக்கிறான் என்றே த்யானம் செய்கிறார்.


ஞானிகள் வேதத்தில் சொல்லப்படும் தெய்வத்தின் பெயர்களை, விராட் ரூபமாக உள்ள நாராயணனின் அங்கங்களாகவே தியானிக்கிறார்கள்.


இங்கு "ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி), என்று சொல்லும் போது, இந்த வேத மந்திரமே பரமாத்மா தான் என்று நினைப்பது ஒரு முறை.

"ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி), என்று சொல்லும் போது, வருண தேவனை நினைத்து ஜபம் செய்வது ஒரு முறை. வருண தேவன் மூலம் நமக்கு புஷ்டியும், மழையும் (தண்ணீர்) கிடைக்கும்.


அதே சமயம் "ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி), என்று சொல்லும் போது, 

ஞானிகள், வருணன் என்ற பெயரில் கருணையை வர்ஷிக்கும் நாராயணனின் கண்களை த்யானிக்கிறார்கள்.


பகவான் எங்கேயோ வைகுண்டத்தில் இருக்கிறார். நாம் கூப்பிடுவது அவர் காதில் கேட்குமா?

கஜேந்திரன் என்ற யானை, "ஹே ஆதி மூலமே" என்று அழைத்தது. பகவான் நாராயணனுக்கு கேட்டதே! 

உடனே அபயம் கொடுத்து காப்பாற்றினாரே ! 

அது மட்டுமா!

பகவான், மனித வடிவம் எடுத்து ஶ்ரீ கிருஷ்ணனாக துவாரகையில் இருக்கிறார்

மனித உருவில் தான் இருக்கிறார் 

பல மைல் தூரத்தில் உள்ள ஹஸ்தினாபுர அரச சபையில், யாருமே காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கும் திரௌபதி, தன் மானத்தை இழக்கும் பேராபத்தில் இருந்த போது, மனித உருவத்தில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணன் தன்னை நிச்சயம் காப்பாற்றுவார் என்று திடமாக நம்பினாள்.

மனித உருவில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணர், துவாரகையிலிருந்து எப்படி உடனே வருவார்? என்று சந்தேகப்படவில்லை.

உடனே "ஹே கோவிந்தா" என்று அழைத்தாள்.

பல மைல் தூரம் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணருக்கு இவள் அழைப்பது கேட்டது.

மனித உருவில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணர், தேரை கிளப்பி கொண்டு அஸ்தினாபுரம் வரை சென்று திரௌபதியை காப்பாற்றலாம். ஆனால் அதற்கு இப்பொது அவகாசமில்லை.

அப்பொழுது துவாரகையில் ருக்மணியோடு சொக்கட்டான் ஆடி கொண்டிருந்தார். 

திரௌபதி காப்பாற்ற படவேண்டும் என்று சங்கல்பித்து "அக்ஷயம்" என்று சொக்கட்டானை உலுக்கி போட, துச்சாதனன் திரௌபதியின் புடவை பிடித்து இழுக்க, மலை மலையாக பல பல வண்ண வண்ண புடவைகள் திரௌபதி அணிந்திருந்த புடவை வழியே வெளி வர தொடங்கியது.

எதிரியான துச்சாதனன் களைத்து விட்டான்..  இன்னும் புடவைகள் திரௌபதியை காக்க காத்து இருந்தது.

திரௌபதியின் ஆபத்து விலகியது.


உள்ளும் புறமும் உண்மையாக பகவானை நினைத்து, தன்னை நிச்சயம் காப்பாற்றுவார் என்று நினைத்த கஜேந்திரன், திரௌபதி இருவரும், பகவானின் பெயரை, சந்தேகமில்லாமல், திடமான எண்ணத்தோடு சொல்லி  பயனை அடைந்தார்கள்.

அது போல, 

ஸாயங்கால சந்தியா வந்தனம் செய்யும் போது, கஜேந்திரன், திரௌபதி கொண்டிருந்த விசுவாசத்தை போல, "ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி) என்று அழைத்தால், நமக்கு நேர இருக்கும் பெரும் ஆபத்திலிருந்து பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுவார். 


இப்படி ஒரு அர்த்தம் கொண்ட சாயங்கால சந்தியா வந்தனத்தை தெரிந்து கொண்ட பிறகும், ஒருவன் செய்யாமல் இருக்க முடியுமா?

No comments: