Followers

Search Here...

Tuesday, 7 June 2022

கவலைகள் தீர வழி என்ன? தெய்வம் நம்மை பார்க்க, என்ன செய்ய வேண்டும்?.. திருமங்கையாழ்வார் சொல்கிறார்... அறிவோம்..

மனசு, வாக்கு, காயம் - நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் இவை.

இந்த மூன்றையும் நமக்கு கொடுத்த எம்பெருமான் நாராயணன்,'இந்த மூன்றினாலும் தன்னை ஆட்படுத்தி கொள்கிறானா?' என்று பார்க்கிறார்.

மனசு:

எப்பொழுதும் தன்னை மனதில் தியானித்து (நினைத்து) கொண்டே இருக்கிறானா? என்று பார்க்கிறார் பகவான்.

வாக்கு:

எப்பொழுதும் தன்னை பற்றியே பேசிக்கொண்டே இருக்கிறானா? என்று பார்க்கிறார் பகவான்.

காயம்:

சரீரத்தால் எப்பொழுதும் தனக்கு தொண்டு செய்து கொண்டே இருக்கிறானா? என்று பார்க்கிறார் பகவான்.

மனசு, காயம், வாக்கு இந்த மூன்றும் ஒழுங்காக தானே நமக்கு இருக்கிறது. 

இவை ஒழுங்காக இருக்குமாறு செய்த தன்னை நன்றியுடன் பார்க்கிறானா என்று எதிர்பார்க்கிறார் பகவான். 

இவை மூன்றும் ஒழுங்காக இல்லாத போது, எத்தனை கஷ்டங்களை ஜனங்கள் அனுபவிக்கிறார்கள்? என்று உலகத்தை பார்த்தாலேயே நமக்கு புரிந்து விடுமே!


காயம்:

கை கால்கள் இழுத்து, முடமாகி படுத்து கிடந்தோமானால், பகவானுக்கும், பாகவதர்களுக்கும் கைங்கர்யம் செய்ய முடியுமா?

நமக்கோ, கை கால்களை நன்றாக தானே பகவான் கொடுத்து இருக்கிறார்!

மனசு:

மனசு பித்து பிடித்து போய் விட்டால், பகவானை பற்றி சொல்ல முடியுமா?, பகவானை பற்றி கேட்கவும் முடியுமா?

நமக்கோ, மனசை நன்றாக தானே பகவான் வைத்து இருக்கிறார்

வாக்கு:

வாக்கு சிலருக்கு குளறிபோய் விடுகிறது. 

சிலர் பிறக்கும் போதே ஊமையாக பிறக்கிறார்கள். 

சிலருக்கு ரத்த கொதிப்பு உண்டாகி திடீரென்று பேச்சு நின்று விடுகிறது. 

வாக்கு போய் விட்டால், பகவந்நாமா சொல்ல முடியுமா?

நமக்கோ, வாக்கையும் நன்றாக தானே பகவான் கொடுத்து இருக்கிறார்.


இந்த மூன்றும் சரியாக இல்லாத போது, எத்தனை துன்பத்தை அனுபவிக்கிறார்கள்? என்று உலகத்தில் தினம் தினம் பார்க்கிறோமே!


வாக்கும், மனசும், காயமும் இன்று வரை நமக்கு ஸ்வாதீனமாக தானே இருக்கிறது? 

இதை கொடுத்தவரிடம் நமக்கு ஒரு நன்றி வேண்டாமா?


சரீரம்:

சரீரம் நன்றாக இருக்கும் போது, கண்ட இடத்துக்கெல்லாம் ஓடி சென்று பார்க்கிறோமே! ஓடி ஓடி சத்சங்கம் வரக்கூடாதா?

வாக்கு:

வாக்கு நன்றாக இருக்கும் போது, ஓயாமல் வம்பு பேசி கொண்டு, பிறரை நிந்தை செய்து கொண்டு, தற்புகழ்ச்சி செய்து கொண்டே இருக்கிறோமே! ஹரி நாமம் சொல்ல கூடாதா?

மனசு:

மனசு நன்றாக இருக்கும் போது, எதை எதையோ நினைக்கிறோமே! எதை எதையோ நினைத்து ஆசைப்படுகிறோமே! பெருமாளையே எப்பொழுதும் நினைத்து கொண்டு இருக்க கூடாதா? அவரை அடைய ஆசை படக்கூடாதா?

ஊமையாக பகவான் நம்மை படைக்கவில்லையே! 

அடிக்கடி உட்காரும் போதும், நடக்கும் போதும், எழுந்திருக்கும் போதும், சாப்பிடும் போதும், துயர் வரும் போதும், துயர் இல்லாத போதும், "நாராயணா" என்று எளிமையான நாமத்தை சொல்லக்கூடாதா?


'இந்த மூன்றையும் பகவானுக்கு ஆட்படுத்துவதே எனது லட்சியம்' என்று இருக்க வேண்டாமா?


உலகத்தில் எப்பொழுது நாம் பிறந்தோமோ! 

உடலால் உலக காரியங்கள் செய்து தான் ஆக வேண்டும், 

மனதால் உலக விஷயங்களை நினைத்து தான் ஆக வேண்டும்,

வாக்கால், உலக விஷயங்களை பேசி தான் ஆக வேண்டும்.


உலக விஷயங்களை தவிர்க்க முடியாது என்பது உண்மையானாலும், அதில் ஒரு கட்டுப்பாடு வைத்து கொள்ள வேண்டாமா?

வாக்கு:

இதை பேசலாம். இதை பேச கூடாது. 

பிறர் மனம் புண்படும்படி பேச வேண்டாமே! 

அடுத்தவர் குறையை பேச வேண்டாமே! 

பொய் பேச வேண்டாமே!

சத்தியத்தையே பேசுவோமே!

அடுத்தவருக்கு நன்மை உண்டாகும் படி பேசுவோமே!

பகவானை பற்றி பேசலாமே!

இப்படி நாம் வாக்கை கட்டுபடுத்தினால், அது தானே, வாக்கால் செய்யப்படும் "தவம்" என்று சொல்லப்படுகிறது.

மனசு:

பிறர் கெடவேண்டும் என்று நினைக்காமல் இருக்கலாமே!

உலகத்தில் எல்லோருமே சௌக்யமாக இருக்க வேண்டும் என்று நினைக்கலாமே.

மனதால் பகவானை தியானம் செய்வது சிறந்தது. பகவானை மனதால் நினைக்கலாமே! 

இப்படி நாம் மனதை கட்டுபடுத்தினால், அது தானே, மனதால் செய்யப்படும் "தவம்" என்று சொல்லப்படுகிறது.


மனசு, வாக்கு, காயம் இந்த மூன்றையும் பகவான் நம் அனைவருக்கும் கொடுத்து இருக்கிறாரே!

இவையெல்லாம் நமக்கு உபயோகப்படும்படியாக, தாறுமாறாக போகாமல், பகவான் கொடுத்து இருக்கிறாரே! நமக்கு நன்றி உணர்ச்சி வேண்டாமா?

இதை அவருக்கு அர்ப்பணம் செய்வது தானே, நாம் பகவானுக்கு செய்யும் நன்றி


அப்படி பகவானுக்கு அர்ப்பணம் செய்யாமல், வாக்கு, மனசு, காயம் அனைத்தையும் உலக விஷயங்களுக்கே உபயோகம் செய்தால்,"நன்றிகெட்ட இவனை சுமப்பது வீண்" என்று பாரமாக நினைப்பாளே பூமா தேவி தாயார்.


பிரளயகாலத்தில் சரீரம், வாக்கு, மனசு இல்லாமல் இருளில் (தமஸ்) கிடந்த நம்மை,

உலகத்தை படைத்து, தூங்கும் குழந்தையை தாய் எழுப்பி பால் கொடுப்பது போல, நம்மை எழுப்பி, வாக்கு, சரீரம், மனசு கொடுத்தாரே!


சரீரத்தில் கண்ணை கொடுத்து, காதை கொடுத்து, மூக்கு கொடுத்து, நாக்கு கொடுத்து, எழுப்பி விட்டார்.

இப்படி ஒரு உதவி செய்த பிறகும், நன்றி கெட்டு பகவானை பார்க்காமல், இருக்கலாமா? 


நன்றி உடையவன், 

காதினால் பகவானை பற்றி கேட்க வேண்டும்,

வாயால் அவர் நாமத்தை சொல்ல வேண்டும்

மூக்கினால், அவர் மேனியில் பட்ட துளசியை முகர வேண்டும்.

நாக்கினால் அவருக்கு காண்பித்த பிரசாதத்தையே சாப்பிட வேண்டும்.

கைகளாலே அவருக்கு தொண்டு செய்ய வேண்டும்.

கால்களாலே அவர் இருக்கும் திவ்ய தேசம் தேசமாக செல்ல வேண்டும்.

மனதால், அவரையே தியானம் செய்ய வேண்டும்.


பொதுவாக மனசும், வாக்கும், காயம் மூன்றும் நன்றாக இருந்தாலும், நமக்கு பல சங்கடங்கள் கொடுத்து கொண்டே இருக்கும்.

காயம்:

சரீரம் அடிக்கடி நமக்கு தொந்தரவு கொடுத்து கொண்டே இருக்கும்.

பலவிதமான வியாதிகள் வந்து கொண்டே இருக்கும்.

முடியாத நிலை, தள்ளாமை போன்ற சங்கடங்கள் சரீரத்துக்கு வரும்.

மனசு:

சந்தேகம், எதிலும் ஈடுபாடு இல்லாத தன்மை (அஸ்ரத்தை), உற்சாகமின்மை இவையெல்லாம் மனசுக்கு வரும் சங்கடங்கள்.

வாக்கு:

வம்பு பேச துள்ளும். ஆனால் பகவந்நாமம் சொல்ல சொன்னால் தூக்கம் வரும், இவை மனசுக்கு வரும் சங்கடங்கள்.

இந்த மூன்றும் நன்றாக இருந்தாலும், அதை கட்டுப்படுத்துவது என்பது நம்மால் ஆகாத காரியம்.


'பகவான் தான் நமக்கு சரீரம் கொடுத்தார், மனசு கொடுத்தார், வாக்கு கொடுத்தார்.

அவரிடம் இந்த மூன்றையும் அர்ப்பணிக்க வேண்டும்' என்று நன்றி உணர்ச்சி நமக்கு இருந்தாலும், 'அர்ப்பணிக்க முடியவில்லையே!' என்று பக்தன் வருத்தப்படுகிறான்.

இப்படி கவலைப்படும் பக்தனின் நிலையை பார்த்த

திருமங்கையாழ்வார், "கட்டுப்படுத்தும் அந்த வேலையை பகவானிடம் கொடு" என்கிறார்.


"எம்பெருமானே! உனக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று தானே இந்த சரீரத்தை பெற்றேன். நீயும் கொடுத்தாய்.

நீ கொடுத்த இந்த சரீரம், இந்த வாக்கு, இந்த மனசு உங்களுக்கு உபயோக பட வேண்டும்.

இது தான் என்னுடைய பிரார்த்தனையும் கூட.

இந்த மூன்றினாலும் தொண்டு செய்ய (தொண்டு எல்லாம்) வேண்டி கொண்டு (பரவி) உங்கள் உத்தரவுக்காக (நின்னை) நிற்கிறேன்.

'என்னை தொழுது கொண்டு, அடி பணிந்து (தொழுது அடி பணியுமாறு) இந்த கைங்கர்யத்தை "செய்" என்று நீங்கள் ஒருமுறை சொல்லி நியமித்து விட்டால், யாருக்கும் கட்டுப்படாத இந்த மூன்றும், கட்டுப்பட்டு உங்களுக்கு வேலை செய்யுமே!' என்கிறார் திருமங்கையாழ்வார்.


வைகுண்டத்திலும் நித்யசூரிகள் உங்களுக்கு கைங்கர்யமே செய்கிறார்கள். 

மோக்ஷம் அடைந்தவர்களே உங்களுக்கு கைங்கர்யம் செய்யும் போது, உலகத்தில் பிறந்துள்ள நாம் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யாமல் இருக்கலாமா?


மனசு, காயம், வாக்கு மூன்றினாலும் நாம் கைங்கர்யம் செய்வதற்காக தான் கோவில் கோவிலாக அரச்சா மூர்த்தியாக பெருமாள் வீற்று இருக்கிறார்.


நம் சார்பாக ஆழ்வார் சொல்கிறார்,

"உலகத்தில் பிறந்தநாளாக, உங்களுக்கே வாக்கு, மனசு, காயத்தால் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற நன்றியோடு தான் இருக்கிறேன்.


இந்த சரீரத்தை கொடுத்த உங்களை தரிசிக்க, அருகில் இருக்கும் கோவிலுக்கு தினமும் செல்வோமே! என்று ஆசைப்படுவேன்.


அங்கு சென்று, கூட்டலாம், கோலம் போடலாம், ஒட்டடை அடிக்கலாம், புற்களை செதுக்கலாம், பூந்தோட்டம் போடலாம் என்று ஆசைப்படுவேன்.


சரி, இப்படி கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு தொண்டு செய்வோமே! என்று நினைத்தால், அப்புறம் குடும்பம் என்னாவது? என்று நினைவு வருகிறது.


கணவனாக இருந்தால், வீட்டில் மனைவிக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

மனைவியாக இருந்தால், வீட்டில் கணவனுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

பிள்ளையாக இருந்தால், வீட்டில் இருக்கும் அப்பா அம்மாவுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

அப்பா அம்மாவாக இருந்தால், வீட்டில் பிள்ளைகளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

இவர்கள் எல்லோருக்கும் தொண்டு செய்த பிறகு, நேரம் கிடைத்தால் தானே, பகவானுக்கும், பாகவதர்களுக்கும் (அடியார்கள்) தொண்டு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.


பகவானை பார்க்க கோவிலுக்கு செல்வோம், தொண்டு செய்வோம் என்று நினைத்தால், இவர்கள் எல்லோரும் வீட்டில் இருந்து கொண்டு என் தொண்டை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்களே!


ஒரு வயசான கிழம், நான் வெந்நீர்போட்டு தருவேனா? என்று காத்து கிடக்கிறது.

மற்றொன்று மனம் பித்து பிடித்து என் தயவை நம்பியே வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

மற்றோன்று, மனம், வாக்கு, சரீரம் மூன்றும் ஒழுங்காக இருந்தும், ஒரு காரியமும் செய்யாமல், நான் செய்து தருவேன் என்று காத்து கொண்டு இருக்கிறது.

இப்படி தானே குடும்பம் இருக்கும். இவர்களுக்கு தேவையான தொண்டை செய்ய தானே வேண்டும். 

ஏகப்பட்ட குடும்ப கவலைகள் வேறு சேர்ந்து விடுகிறது.

இத்தனைக்கும் மத்தியில் 'பகவான் தானே நமக்கு வாக்கு, மனசு, சரீரம் கொடுத்து நன்றாக செயல்படும்படி வைத்து இருக்கிறார்' என்ற நன்றி உணர்ச்சி ஏற்பட்டு, எப்படியோ நேரத்தை ஒதுக்கி ஓடி கோவிலுக்கு வந்து, ஒரு விளக்கு மட்டும் ஏற்றுவேன். கோவிலில் உங்ககளை ஒழுங்காக தரிசித்தேனா? என்று கூட தெரியாது... உடனே திரும்பும் படியாக என் நிலைமை உள்ளதே! என்று பக்தன் தவிக்கிறான்..


மனசை கொடுத்து, சரீரம் கொடுத்து, வாக்கை கொடுத்தும், பகவானுக்கு நன்றி செய்யாமல் இருப்பவர்களை பூமாதேவி "பாரம்" என்று நினைக்கிறாள்.

பகவானுக்கு இந்த மூன்றையும் ஆட்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும், குடும்ப பாரம் சுமக்கும் பக்தனால் முடியவில்லையே! என்று பகவான் பார்க்கிறார்.


"இவனுக்கு சம்சாரத்தில் எத்தனை பொறுப்பு, சங்கடங்கள் உள்ளது. எத்தனை சரீர சங்கடங்கள், மன சங்கடங்கள்.

இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில், எப்படியோ தப்பித்து, என் கோவிலுக்கு வந்து, ஒரு நிமிடம் வந்து நின்று விட்டானே!" என்று பெருமாள், நம்மை பார்த்து விடுவாராம் (கண்டு).


இருக்கும் குடும்ப வேலைகளில், கோவிலுக்கு வந்து இவன் ஒரு நிமிடம் பெருமாள் முன் நின்றானேவொழிய, இவன் பெருமாளை ஒழுங்காக பார்க்கவில்லையாம். 

ஆனால், பெருமாள் இந்த பக்தனை பார்த்து (கண்டு) விடுவாராம்.


"இத்தனை கஷ்டத்திலும், தவறாமல் எனக்கு ஒரு தீபம் ஏற்ற நேரம் ஒதுக்கி வருகிறானே! 

இவனுக்கு இருக்கும் கஷ்டங்களை, குடும்ப சூழ்நிலையை சரி செய்து கொடுத்தால், இன்னும் உற்சாகமாக நமக்கு கைங்கர்யம் செய்ய காலையும் வருவான், மாலையும் வருவான். என்னையே சுற்றிக்கொண்டு இருப்பானே!" என்று எம்பெருமான் நினைப்பாராம்.


"இவனுடைய 'யோக க்ஷேமத்தை' நாம் பார்த்து கொண்டால், இவன் 'அனன்யா சிந்தையோ மாம்' என்றபடி நிம்மதியாக எனக்கு தொண்டுசெய்து கொண்டிருப்பானே!" என்று எம்பெருமான் நினைப்பாராம்.


"பெருமாள் நம்மை பார்த்து விட்டால், பக்தனுக்கு இருந்த கவலைகள் எல்லாம் தானாக விலகுமே. 

'நான் பார்த்து கொள்கிறேன்.. நீ கோவிலுக்கு போய் வா' என்று சொல்லும்படியாக அனுகூலம் செய்து விடுவாரே.

'உடல் சரியில்லை' என்று படுத்து கிடந்தவர்கள், 'இப்பொழுது பரவாயில்லை' என்று சொல்லி அனுகூலமாக ஆகி விடுவார்களே!

குடும்ப கஷ்டங்கள் தானாக தொலையுமே! (தான் கவலை தீர்ப்பான்)"

என்று திருமங்கையாழ்வார் சொல்கிறார்.


நம் குடும்ப, மன கஷ்டங்கள் தீர, நன்றி உணர்ச்சியை மட்டுமே, எம்பெருமான் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.


"வாக்கு, மனம், காயம் இதை கொடுத்த எம்பெருமானுக்கு, இதை ஆட்படுத்த ஆசையும், நன்றி உணர்ச்சியுமே நமக்கு இருக்க வேண்டும்" என்று குருநாதரை பிரார்த்திப்போம்.

தொண்டெல்லாம் பரவி நின்னை தொழுது அடி பணியுமாறு

'கண்டு' தான் கவலை தீர்ப்பான் 

- திருமங்கையாழ்separatorவார்



No comments: