போர் முடிந்த பிறகு, 100 பிள்ளைகளை இழந்த த்ருதராஷ்டிரன், அருகில் வந்த பீமனை ஆத்திரத்தில் கொல்ல நினைத்தான்.
வாசுதேவ கிருஷ்ணர், த்ருதராஷ்டிரன் மனநிலை அறிந்து, இரும்பினால் செய்யப்பட்ட பீமனின் சிலையை அருகில் நிறுத்த, அதை இறுக கட்டி உடைத்து விட்டான்.
கிருஷ்ணர், பிறகு விதுரர் தர்ம உபதேசம் செய்து சமாதானம் செய்தனர்.
காந்தாரிக்கு திவ்ய ஞானம் கொடுத்தார் வியாசர்.
காந்தாரி, போர்க்களம் சென்று இறந்து கிடக்கும் தன் பிள்ளைகளையும், பாண்டவர் பக்கம் இறந்த அபிமன்யு போன்றவர்களையும் பார்த்து புலம்பினாள்.
கோபத்தில், 'யாதவ வீரர்கள் அடித்து கொண்டு மடிவார்கள், குல பெண்கள் கதறி அழுவார்கள். கிருஷ்ணா! வனத்தில் அனாதை போன்று சென்று மறைவாய்', என்று சபித்தாள்.
ஸ்ரீகிருஷ்ணர் சமாதானம் செய்தார்.
பிறகு,
அனைவருக்கும் தகனம் முறையாக செய்து, கங்கை கரையில் ஜல தர்ப்பணம் செய்ய கிளம்பினார் யுதிஷ்டிரர்.
அனைவருக்கும் தர்ப்பணம் செய்த பிறகு, குந்தி தனது மகனான கர்ணனுக்கும் தர்ப்பணம் செய்ய சொன்னாள்.
'கர்ணன் தன்னுடைய மூத்த சகோதரன்' என்று தெரிந்ததும் இதுவரை இருந்த துக்கத்தை காட்டிலும், மீள முடியாத துக்கத்தில் மூழ்கி விட்டார் யுதிஷ்டிரர்.
நாரதர், கர்ணனை பற்றியும், அவன் பெற்ற பல சாபத்தை பற்றியும் சொல்லி, 'துக்கப்பட வேண்டாம்' என்று சொன்னார்.
அப்பொழுதும், சமாதானம் அடைய முடியாமல் இருந்த யுதிஷ்டிரரிடம் குந்திதேவி மீண்டும் வந்து சமாதானம் செய்ய முயற்சித்தாள்.
"நானும், சூரிய தேவனும் கர்ணனிடம் உள்ள ஒற்றுமையை கண்டும், உன்னிடம் சொல்ல சக்தி இல்லாமல் இருந்தோம். தர்மத்தை காப்பதில் சிறந்த கர்ணன், உங்களிடம் விரோதம் பாராட்ட ஆரம்பித்த பிறகு, நானும் அவனை பற்றி உன்னிடம் சொல்லாமல் இருந்து விட்டேன்' என்று சொன்னாள்.
தர்ம புத்தி உள்ளவரும், கண்ணீரால் நிரம்பிய கண்களை உடையவரும், மிக்க தேஜஸ் உடையவருமான யுதிஷ்டிரர், தாயார் இப்படி சொன்னதும், சோகத்தின் மிகுதியால்,
"ரகசியத்தை மூடி வைத்து கொண்டதால் உன்னால் இப்பொழுது நாங்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம்" என்று சொல்லி, மேலும் துக்கம் தாளாமல்,
"எல்லா உலகங்களிலும் இன்று முதல் பெண்களிடம் ரகசியம் தங்காமல் போகட்டும்" என்று சாபமிட்டார்.
भवत्या गूढमन्त्रत्वात् पीडितॊ ऽस्मीत्य उवाच ताम् |
शशाप च महातेजाः सर्वलॊकेषु च स्त्रियः |
न गुह्यं धारयिष्यन्तीत्य अतिदुःख समन्वितः ||
- வியாசர் மஹாபாரதம் (சாந்தி பர்வம்)
பெரும் சோகமும், மன நடுக்கமும் கொண்ட யுதிஷ்டிரர், ராஜ்யம் ஆள்வதில் வெறுப்பை அடைந்தார்.
No comments:
Post a Comment