Followers

Search Here...

Friday, 14 January 2022

'என்னை அடிமையாக்கி விட்டு, ஸ்ரீரங்கம் சென்றாரே' என்று பரகால நாயகி சொல்கிறாள். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்... மின்னிலங்கு திருவுருவும்...

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

மின் இலங்கு திரு உருவும்

பெரிய தோளும்

கரி முனிந்த கை தலமும்

கண்ணும் வாயும்

தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கும் 

மகரம்சேர் குழையும் காட்டி

என் நலனும் என் நிறையும்

என் சிந்தையும்

என் வளையும் கொண்டு 

என்னை ஆளும் கொண்டு

பொன் அலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலின் ஊடே

புனல் அரங்கம் ஊரென்று போயினாரே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

'மின்னல் போல ஜொலிக்கும் அவருடைய திரு உருவமும் (மின் இலங்கு திரு உருவும்), 

அவருடைய அழகிய பெரிய தோளும் (பெரிய தோளும்), 

குவலயாபீடம் என்ற யானை ஒரே குத்தில் வீழ்த்திய அந்த திரு கைகளும் (கரி முனிந்த கை தலமும்), 

அவருடைய அழகிய கண்களும், மந்தஹாசம் செய்யும் திருவாயும் (கண்ணும் வாயும்), 

அன்று மலர்ந்த நறுமணமிக்க பூக்களை கொண்டு, அவர் கழுத்தில் போட்டுக்கொண்டிருக்கும் பெரிய வைஜயந்தி மாலையும், அவர் காதில் போட்டுக்கொண்டிருக்கும் மகர குண்டலங்கள் அந்த வைஜயந்தி மாலையை ஸ்பரிசிக்கும் அழகையும் எனக்கு காட்டி (தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி), 

எனக்கு எது நலமோ, எனக்கு எது நிறைவோ, அதை தானே நிர்வாகம் செய்வதாக ஆக்கி (என் நலனும் என் நிறையும்), 

என் எண்ணத்தையும், என் வளையல்களையும் எடுத்து கொண்டு, கடைசியில் என்னையே அவருக்கு அடிமையாக்கி கொண்டு விட்டு (என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு) 'போய் வருகிறேன்' என்று சொல்லி கிளம்பிவிட்டார். 

அவருக்கு அடிமையாகிய நானும் அவர் எங்கு செல்கின்றார்? என்று பார்த்தேன். 

திடீரென்று மறைந்து விடாமல், தன்னுடைய பின் அழகையும் காண்பித்து, பொன் நிறத்தில் பூக்கும் பொய்கையில் புதர் புதராக வளரும் செருந்தி பூக்கள் (சம்பகா புஷ்பம்) பூத்த நந்தவனத்திற்கு இடையே புகுந்து, 'எங்கள் ஊர் திருவரங்கம் செல்கிறேன்' என்று சொல்லி போகின்றாரே ! (பொன் அலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலின் ஊடே புனல் அரங்கம் ஊரென்று போயினாரே)' என்று பெருமாள் தனக்கு தரிசனம் கொடுத்து விட்டு சென்று விட்டாரே என்று கண்ணீர் சிந்துகிறாள்.

No comments: