Followers

Search Here...

Thursday, 20 January 2022

'என்னையெல்லாம் இப்படி பெருமாள் மதிக்கிறாரே' என்று நினைத்தேன். அந்த நினைவிலேயே பேரின்பம் பெற்றேன் என்று பரகால நாயகி நிம்மதி அடைகிறாள். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்... அன்றாயர் குலமகளுக்....

"பெருமாள் தன்னையும் அவருடைய நாயகிகளோடு சேர்த்து கொண்டாரே!" என்று பேரின்பத்தில் பாடுகிறார்.

அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை

அலைகடலை கடைந்து 

அடைத்த அம்மான் தன்னை

குன்றாத வலி 

அரக்கர் கோனை மாள

கொடுஞ்சிலைவாய் 

சரம் துரந்து 

குலம் களைந்து வென்றானை, 

குன்றெடுத்த தோளினானை

விரி திரை நீர் விண்ணகரம் மருவி 

நாளும் நின்றானை, தண்குடந்தை கிடந்த மாலை

நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

அன்று, நீளா என்ற நப்பினைக்காக (கோபிகைக்கு) 7 காளையை அடக்கி, அவள் துயரத்தை போக்கிய தலைவனே!

(அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை)

மஹாலக்ஷ்மியை அடைவதற்காக அலை எறிகின்ற பாற்கடலை கடைந்தவரே !

(அலைகடலை கடைந்து


சீதாதேவியை மீட்பதற்காக, இலங்கைக்கு பாலம் அமைத்து, செல்வத்தில், படை பலத்தில் குறைவில்லாத வலிமையான ராக்ஷஸ அதிபதி ராவணனை தன்னுடைய தீர்க்கமான கோதண்டத்தில்,  அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து அரக்கர் குலத்தையே நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரே (அடைத்த அம்மான் தன்னை குன்றாத வலி அரக்கர் கோனை மாள கொடுஞ்சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை)

கோபிகைகள் மேல் ஒரு தூரல் கூட விழ கூடாதென்று, கோவர்த்தன மலையையே தன் கையால் குடையாக எடுத்தவரே! (குன்றெடுத்த தோளினானை)


இப்படி நீங்கள் செய்த ஒவ்வொரு காரியத்தை கவனிக்கும் போது, நீங்கள் ஒவ்வொரு நாயகிக்கும் பரிந்து கொண்டு அவரகளுக்கு வேண்டிய ரக்ஷணத்தை செய்கிறீர்கள் என்று தெரிகிறதே!

'நானும் ஒரு நாயகி இருக்கிறேன்' என்று தெரிந்து கொண்டு, பரந்த அலைகளையுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே, அந்த நாயகியில் என்னையும் ஒருவளாக சேர்த்து கொண்டு, ஸர்வோத்தமருமான ஒப்பிலியப்பனாக நிற்கிறாரே! குடந்தையில் ஆராவமுதனாக எனக்காக படுத்து இருக்கிறாரே

நான் அல்பமானவள். 'என்னையெல்லாம் இப்படி மதிக்கிறாரே பெருமாள்' என்று நினைத்தேன். அந்த நினைவிலேயே பேரின்பம் பெற்றேன். (விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை, தண்குடந்தை கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே)

திருநெடுந்தாண்டாகம் என்பது ஆச்சர்யமான பிரபந்தம். மிகவும் ரசமானது.

இப்படி 9 பாசுரங்கள் திருமங்கையாழ்வார் பரகால நாயகியாக ஆகி, பெருமாளை தன் இதயத்தில் பூட்டி விட்டார்.

No comments: