பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.
கார்வண்ணம் திருமேனி !
கண்ணும், வாயும், கைத்தலமும், அடியிணையும் கமல வண்ணம் !
பார்வண்ண மடமங்கை பத்தர் !
பித்தர் பனிமலர்மேல் பாவைக்கு !
பாவம் செய்தேன் !
ஏர் வண்ண என் பேதை! என் சொல் கேளாள் !
'எம்பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்
'நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்' என்னும்
இதுவன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே?
- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)
பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.
"எம்பெருமானின் ரூப சௌந்தர்யத்தையே நினைத்து நினைத்து மயங்கி போகிறாள் என்னுடைய பெண்குழந்தை.
அவர் திருமேனி அங்கம் எப்படி இருக்கும் தெரியுமா? 'நீருண்ட மேகம் போல இருக்கும்' என்று சொல்கிறாள்.
(கார்வண்ணம் திருமேனி)
அவர் கண்கள் எப்படி இருக்கும் தெரியுமா?
அவர் உதடுகள் எப்படி இருக்கும் தெரியுமா?
அவர் திருக்கைகள் எப்படி இருக்கும் தெரியுமா?
அவர் திருவடிகள் எப்படி இருக்கும் தெரியுமா?
'இவை ஒவ்வொன்றும் செந்தாமரை பூத்தது போல சிவந்து இருக்கும்' என்று சொல்கிறாள்.
(கண்ணும், வாயும், கைத்தலமும், அடியிணையும் கமல வண்ணம்)
'எம்பெருமானுக்கு 'ஸ்ரீதேவி, பூதேவி' என்று இரு பிராட்டி.
பூதேவியின் பக்தியை மதிக்கிறார். அவள் அன்புக்கு (பற்றுக்கு) கட்டுப்பட்டு இருக்கிறார்' என்று சொல்கிறாள்.
(பார்வண்ண மடமங்கை பத்தர்)
'தாமரை மேல் அமர்ந்து இருக்கும் ஸ்ரீதேவிக்கோ இவர் ஒரு பித்தர். அவளிடத்தில் அவ்வளவு மோகம் கொண்டு இருக்கிறார்.' என்று சொல்கிறாள்.
(பனிமலர்மேல் பாவைக்கு பித்தர்)
உடனே
'நானும் ஒரு நாயகி இங்கு இருக்கிறேனே! ஆனால் எனக்கு மட்டும் இவர் கிடைக்கவில்லையே! என்ன பாவம் செய்தேனோ?' என்று சொல்லி அழுகிறாள் என் குழந்தை.
என்னுடைய பெண்பிள்ளை இப்படி இருக்கிறாளே! இது நான் செய்த பாவமோ?" என்று பரகால நாயகியின் தாயும் வருந்துகிறாள்.
(பாவம் செய்தேன்?)
மேலும்,
"நல்ல அழகான வண்ணமுடைய என்னுடைய பெண் குழந்தை, முக்தமான ஸ்வபாவமுடைய என்னுடைய மகள், என்னுடைய பேச்சை கேட்காமல், எப்பொழுது பார்த்தாலும் 'எம்பெருமான் திருவரங்கம் எங்கே? எங்கே? என்றே பாடிக்கொண்டு இருக்கிறாளே!
(ஏர் வண்ண என் பேதை ! என் சொல் கேளாள் ! எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்)
'இப்படியெல்லாம் பாடாதே! நிறுத்து !' என்று இவளை அதட்டினால்,
'நான் நீர்வண்ணன் இருக்கும் (சென்னை) திருநீர்மலைக்கே போய் விடுகிறேன்.' என்று பேசுகிறாளே!
(நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்! என்னும்)
ஒரு பெண்ணுக்கு, 'அச்சம், மடம், நாணம்' என்ற ஸ்த்ரீ லக்ஷணம் இருக்க வேண்டாமா?
இப்படி வெட்கத்தை விட்டு, 'ரங்கா ரங்கா ரங்கா.. கோவிந்தா கோவிந்தா கோவிந்தா' என்று உரக்க சொல்கிறாளே!
இப்படி வெட்கத்தை விட்டு, ஒரு பெண் இருப்பாளோ? வெட்கத்தை விட்ட பெண்ணை பெற்றவர்களின் நிலைமை இப்படி தான் இருக்குமோ!"
(இதுவன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே?)
என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.
No comments:
Post a Comment