பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.
பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப !
பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று
செங்கால மட புறவம் பெடைக்கு பேசும்
சிறு குரலுக்கு உடலுருகி சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி
தண்கோவலூர் பாடி ஆட கேட்டு
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன?
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!
- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)
பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.
இளம் கன்னிகையாக பொற்குடம் போன்ற அழகிய மார்புடைய என் பெண் குழந்தை, கிருஷ்ண விரகம் என்ற அக்னியால், சாம்பல் பூத்தது போல ஆகிவிட்டாளே! என்னுடைய பெண், இப்படி விரகத்தில் உருக்குலைந்து போய் விட்டாளே!
(பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப)
கண்களில் எப்பொழுதும் கண்ணீரோடு இருக்கிறாளே! நிலைகொள்ள முடியவில்லையே ! ஒரு இடத்தில இவளால் உட்கார முடியவில்லையே! எழுந்திருந்து எழுந்திருந்து யாரையோ தேடி தேடி எதிர்பார்க்கிறாள், உட்காருகிறாள். மறுபடியும் எழுந்திருக்கிறாள். மறுபடியும் உட்காருகிறாளே !
(பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று)
பாம்புக்கு பயந்து, புலியின் வாயிலே விழுந்தது போல, தாய் கண்டிக்கிறாள் என்று வாசலுக்கு சென்ற என் பெண் இரண்டு ஜோடி புறா கொஞ்சிக்கொள்வதை கேட்டு விட்டு, "அதைவிட கொடிய சொல் செவியிலே விழுந்தது" என்கிறாளே!
அழகியதான சிவந்த கால்களை உடைய இரண்டு ஜோடி புறாக்கள் கொஞ்சி கொண்டு இருக்க, அவை கொஞ்சி பேசிக்கொள்ளும் குரலை கேட்டு விட்டு, இவள் உடலுருகி போய் விடுகிறாளே !
"இவை கூட தம் தம் ஜோடியோடு களித்து இருக்கிறதே! நம் நிலைமை இப்படியாயிற்றே!" என்று சிந்தித்து உடலுருகி அங்கேயே நிற்கிறாளே!
(செங்கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடலுருகி சிந்தித்து ஆங்கே)
இப்படியே நிற்கும் இவள், அடுத்த நொடி, காஞ்சியில் இருக்கும் விளக்கொளி பெருமாளை நினைத்து கொண்டு 'திருத்தண்கால்" (தூப்புல்) என்று திவ்ய தேசத்தின் பெயரை சொல்கிறாள்.
"என்னடிம்மா சொல்கிறாய்? என்று கேட்டால்,
கும்பகோணத்தில் இருக்கும் சாரங்கபாணியை நினைத்துக்கொண்டு "திரு குடந்தை" என்று சொல்கிறாள்.
(தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி)
'இவள் ஒரு நிலையில் இல்லையே !' என்று கவலைப்பட்டு இருக்க,
இவளோ த்ரிவிக்ரம பெருமாளை நினைத்து கொண்டு "திருக்கோவலூர்" என்று சொல்லி பாடுகிறாள், ஆடுகிறாள்.
இப்படி இவள் சொல்வதை கேட்டு, "குழந்தை! நம்முடைய குடும்பத்திற்கு இது பழக்கமா? இப்படி செய்யலாமா? நீ ஒரு பெண் குழந்தையாக இருந்து கொண்டு, இப்படி செய்யலாமா? நம்முடைய குடும்பத்திற்கு இது நன்றாகவா இருக்கிறது? என்று கேட்டால்,
(தண்கோவலூர் பாடி ஆட, கேட்டு, நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன?)
"அம்மா! திரு நறையூரும் (எனும் நாச்சியார் கோவில்) பாடுவேன்.. கேள்" என்கிறாளே !
(நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே)
என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.
No comments:
Post a Comment