தர்மத்தில் இருப்பவனை தர்மம் காக்குமா?
ராமபிரானே இந்த கேள்வியை நமக்காக கேட்டு, தன் சரித்திரத்தில் பதிலும் காட்டுகிறார்.
சீதையை ராவணன் கடத்தி சென்று விட்டான்.
ராமபிரான்,
மரமே சீதையை கண்டாயா?
நதியே சீதையை கண்டாயா?
என்று கதறினார்..
உண்மையில் மரத்துக்கு அதிபதியான , நதிக்கு அதிபதியான தேவதைகளை தான் ராமபிரான் கூப்பிட்டார்.
தேவதைகள், ராமபிரானுக்கு பதில் சொல்லவில்லை.
"தர்மத்தில் இருப்பவனை தர்மம் காக்கும்" என்று சாஸ்திரம் சொல்கிறது.
"தர்மத்தில் இருக்கும் எனக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்து இருக்கும் போது, தர்மத்தை காக்க வேண்டிய தேவதைகள் காப்பாற்றாமல், அமைதியாக இருக்கிறார்களே!" என்று நம்மை போலவே புலம்புவது போல காட்டிக்கொண்டார்.
"தான் மனிதன் என்று நினைத்துத்தானே, தேவர்கள் பதில் சொல்லாமல் அலட்சியம் செய்கிறார்கள்" என்று கோபப்பட்டார்.
உடனே தன்னுடைய வில்லில் அம்பை பூட்டி,
"இந்த உலகம் முழுவதையும் நான் தலைகீழாக மாற்றி காட்டுகிறேன் பார்!" என்று ராமபிரான் சொல்ல, லக்ஷ்மணன் காலில் விழுந்து நமஸ்கரித்து சமாதானம் செய்து, மேலும் தேடி பார்க்கலாம் என்று அழைத்து கொண்டு சென்றார்.
स देव गन्धर्व मनुष्य पन्नगं
जगत् सशैलम् परिवर्तयामि अहम्।।
ஸ தேவ கந்தர்வ மனுஷ்ய பன்னகம்
ஜகத் ஸ சைலம் பரிவர்தயாமி அஹம் ||
- வால்மீகி ராமாயணம்
தர்மத்துக்கு கட்டுப்பட்டு தந்தை சொல் கேட்டார்,
தர்மத்துக்கு கட்டுப்பட்டு கிடைத்த ராஜ்யத்தை விட்டார்,
தர்மத்துக்கு கட்டுப்பட்டு மரவுரி அணிந்தார்,
தர்மத்துக்கு கட்டுப்பட்டு வனவாசம் 14 வருடம் சென்றார்,
தர்மத்துக்கு கட்டுப்பட்டு கிழங்கு, பழங்களை மட்டுமே உண்டார்,
இந்த கஷ்டங்களுக்கு மேல், ராமபிரானுக்கு, பெரும் சோகமாக தன் மனைவி சீதாதேவியையும் இழக்க நேரிட்டது.
"தர்மத்தில் இருப்பவனை தர்மமே காக்கும்" என்று சாஸ்திரம் சொல்கிறது.
ராமபிரான் கேட்டும் கூட தர்ம தேவதைகள் பதில் சொல்லவில்லையே?
தர்மம் உண்மையில் காக்குமா? என்ற சந்தேகம் நமக்கு எழலாம்.
தர்மத்தில் இருப்பவர்களை நிச்சயமாக தர்மம் காக்கும்.
ராமபிரான் "பகவான்" என்ற போதிலும், அவரால் நியமிக்கப்பட்ட தேவர்கள் (பிரம்மா உட்பட), உதவி கேட்டால், உதவி செய்வார்களே தவிர, 'நான் தான் செய்தேன்' என்று சொல்லிக்கொண்டு நேரே வர ஆசைப்பட மாட்டார்கள்.
இங்கு ராமபிரான் "தர்மத்தில் இருக்கிறேன். எனக்கு ஒரு இப்படி கஷ்டமா?" என்பது போல கேட்டார்.
தேவர்கள் நேரிடையாக பதில் சொல்லவில்லை.
ஆனால், அவருக்கு சேவை செய்ய தன் அம்சமாக ஏற்கனவே சுக்ரீவன் (சூரிய தேவன்), ஹனுமான் (வாயு தேவன்), மற்றும் கோடிக்கணக்கான வானர ரூபத்தில் முப்பது முக்கோடி தேவர்களும் சீதையை மீட்க வந்து விட்டனர்.
சீதாதேவியை மீட்டு விட்டார் ராமபிரான்.
தர்மத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டம் வந்தாலும், சிறிது பொறுமையோடு இருந்தால், தர்மமே நம்மை காப்பதை உணர முடியும்.
இதை ராமபிரான், மனிதனாக இருந்து நமக்கு காட்டினார்.
No comments:
Post a Comment