Followers

Search Here...

Saturday, 9 January 2021

மனிதனின் நோக்கம் என்ன? விலங்குக்கு உள்ள நோக்கம் தான் மனித நோக்கமா? மனித நோக்கத்தை அறிந்து கொள்ள, எந்த மொழிகளை தமிழன் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்?

மனிதன் எதை நோக்கி செல்ல வேண்டும்?

சிலர் "மரணத்தை நோக்கி பிறந்தோம்' என்று சொல்கிறார்கள்..

இறப்பு என்பது விலங்குக்கும் உண்டு. 

அனைவருக்கும் பொதுவான முடிவு "இறப்பு".

விலங்குக்கும், மனிதனுக்கும் பொதுவான 'இறப்பே' மனித பிறவியின் நோக்கம்! 

என்று சொல்லிவிட்டால், மனிதனும், விலங்கும் ஒன்று என்று ஆகி விடும்.


மனிதன் மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு இருக்கிறான் என்று தெளிவாக தெரியும் போது, 'மனித நோக்கம் தனித்துவமாக தான் இருக்க வேண்டும்' என்று தெரிகிறது.

"மனிதர்களாகிய நாம் எதை நோக்கி செல்ல வேண்டும்?" என்று வேதாந்தம் வழி காட்டுகிறது.


மனித நோக்கம் என்ன? என்பதை புரிந்து கொள்ள, 

* 'எந்த விஷயம் மனிதனுக்கும், விலங்குக்கும் பொதுவாக உள்ளது?' என்று கவனித்துப் பார்க்க வேண்டும்..

* 'எந்த விஷயம் மனிதனுக்கு மட்டும் அதிக சலுகையுடன் கொடுக்கப்பட்டு உள்ளது? மற்ற விலங்குகளுக்கு கொடுக்கப்படவில்லை' என்று கவனித்துப் பார்க்க வேண்டும்.. 

வேதாந்தம்.. சொல்கிறது

மனிதனுக்கும், விலங்குக்கும் பொதுவாக கொடுக்கப்பட்ட விஷயங்கள் பல.. அதில் ஒரு சில…

* கேட்பதற்கு 'காது' 

* சுவைக்க 'நாக்கு'

* பார்க்க 'கண்'

* தொடுவதை உணர 'தோல்'

* முகர்ந்து உணர 'மூக்கு'

* மரணம்





விலங்குக்கும், மனிதனுக்கும் பொதுவாக இருக்கும் விஷயத்தையே 'மனித நோக்கம்' என்று நினைத்தால், 

அவனை 'விலங்கு' என்று தானே சொல்ல வேண்டும்..


மனிதனுக்கு மட்டும் பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட, விலங்குகளிடம் காணப்படாத விஷயங்கள் சில உண்டு.. அதில் ஒரு சில…

* சுவைக்க செய்யும் 'நாக்கு', மனிதனை மட்டும் 'பேச' வைக்கிறது

* படுத்தவாறே வளர்கிறது விலங்குகள். 

   மனிதன் மட்டும், முதுகு நிமிர்ந்து மேல் நோக்கி வளருகிறான்.


இப்படி விலங்குக்கு இல்லாத சில சலுகைகளை, மனிதன் மட்டும், அந்த பரம்பொருளாக இருக்கும் பரப்ரம்மத்தின் கருணையால், பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் பெற்று இருக்கிறான்.

ஏன் மனிதனை மட்டும் முதுகு நிமிர்த்தி படைத்தார்?

ஏன் மனிதனுக்கு மட்டும் நாக்கை வைத்து பேசும் சக்தியை கொடுத்தார்?

இது மட்டுமா கொடுத்தார்? இப்படி கொடுத்த வாக்கை, காரணத்தை விசாரித்து சிந்திக்க, 6வது அறிவையும் மனிதனுக்கு கொடுத்து இருக்கிறார் பரமாத்மா.

* ஏன்? எதற்கு? இது நல்லதா? இது கெட்டதா? இது தான் லட்சியமா? இது புண்ணியமா? இது பாபமா? என்று அறிந்து செயல்பட, 6வது அறிவான விசார புத்தியையும் மனிதனுக்கு ஆசையோடு கொடுத்தார்.


இந்த 6வது அறிவை (புத்தியை) பயன்படுத்தாமலோ, பயன்படுத்த தெரியாமல் இருப்பதால், மனிதர்களில் பலருக்கு, மிருகத்திற்கு உள்ள ஆசையே இருக்கிறது. 

* சிலருக்கு, உணவே லட்சியமாக இருக்கிறது.. 

* சிலருக்கு, பல வித உலக காட்சிகளை பார்ப்பதே லட்சியமாக இருக்கிறது.. 

* சிலருக்கு, பல வித உலக பொருட்களை நுகர்வதே லட்சியமாக இருக்கிறது.. 

* சிலருக்கு, தொடுவதே லட்சியமாக இருக்கிறது..

* சிலருக்கு, பல வித உலக விஷயங்கள் கேட்பதே லட்சியமாக இருக்கிறது..

அதற்காக தனக்கு பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட 6வது அறிவை பயன்படுத்தி, பல பாவ, புண்ணிய காரியங்கள் மனிதர்கள் செய்கிறார்கள்..

விலங்குகளை பார்.  

அனைத்தும் படுத்தபடி நீள வாக்கில் வளருகிறது.  நீ மட்டும் ஏன் முதுகு நிமிர்ந்து வளருகிறாய்?

அதிலிருந்தே, மனித நோக்கம் தெரியவில்லையா?

'முதுகு நிமிர்ந்து, உன் நோக்கமும் மேல் நோக்கி போவது தான் உன் லட்சியம் என்று அறிந்து கொள்' என்று வேதாந்தம் காட்டுகிறது. 


உன் உடல் வளர்ச்சியை  கவனித்தே, உன் மனித பிறவியின் நோக்கத்தை புரிந்து கொள்" என்கிறது வேதம்.


அதே போல, 

கண், காது, மூக்கு, தோல், நாக்கு என்ற 5 உறுப்புகள், பார்க்கவும், கேட்கவும், முகரவும், தொடவும், சுவைக்கவும் இருக்கிறது.

இது மனிதனுக்கும் உள்ளது. மிருகத்துக்கும் உள்ளது.


சுவைக்க வைக்கும் நாக்கே, மனிதனுக்கு மட்டும் கூடுதலாக, பேச வைக்கும் கருவியாகவும் இருப்பதை காட்டி, 

உனக்கு கொடுக்கப்பட்ட இந்த அருமையான பேச்சை மேல் நோக்கிய விஷயங்களுக்கே பயன்படுத்து

உனக்கு தெய்வம் கொடுத்த இந்த அருமையான 'வாக்கை' உலக விஷயமான விஷயங்களை பார்க்கவோ, கேட்கவோ, சுவைக்கவோ, நுகரவோ, தொடவோ செலவு செய்து மீண்டும் விலங்காக ஆகாதே! 

பார்க்க ஆசைப்பட்டால். கோவிலுக்கு சென்று தெய்வத்தை பார்

கேட்க ஆசைப்பட்டால். தெய்வத்தை பற்றி சொல்லப்படும் மகான்கள் பேச்சை, பாடல்களை கேள்

சுவைக்க ஆசைப்பட்டால், கோவிலில் கொடுக்கப்படும் பல வித பிரசாதங்களையே சாப்பிடு

முகர ஆசைப்பட்டால், மனம் கமழும் பல வித பூக்களால் தெய்வத்துக்கு அர்ச்சனை செய்து அந்த பிரசாதத்தை நுகர்ந்து கொள்.

தொட ஆசைப்பட்டால், உன் வீட்டிலேயே கணபதி, முருகன், கிருஷ்ணர், ராமர், சிவன் என்று மூர்த்திகளை ஸ்வாமி அறையில் வைத்து, அவர்களுக்கு பக்தியுடன் நீயே தொட்டு தொட்டு அபிஷேகம், அலங்காரம் செய். 

நல்லது கெட்டது, பாவ புண்ணிய வித்தியாசம் அறிய உனக்கு கொடுக்கப்பட்ட இந்த 6வது அறிவை தெய்வத்தை நோக்கி மேல் நோக்கி திருப்பு' 

என்று சொல்கிறது..





எப்பொழுது மிருகத்தை விட அதிகப்படியாக, மனிதனுக்கு வாக்கும், 6வது அறிவும் கொடுக்கப்பட்டதோ, அதிலிருந்தே, 'விலங்குகள் அனுபவிக்கும் சுகத்தை விட,  மனிதனுக்கு அதிக சுகம் கொடுக்க பரமாத்மாஆசைப்படுகிறார்! என்று புரிந்து கொள்', 

என்று சொல்கிறது..


மிருகங்களுக்கு நல்லது கெட்டது பிரிக்கும் விசார புத்தி இல்லை. அதனால் அவைகளுக்கு பாபமும் சேர்வதில்லை. புண்ணியமும் சேருவதில்லை. 

அதன் லட்சியம் சாப்பிடுவதோடு (நாக்கு), உறவு (தொடுவது) கொள்வதோடு முடிந்து விடுகிறது

சுகத்தை அனுபவிக்கிறோம் என்று கூட புரிந்து கொள்ள தெரியாது. 

மரணம் நிச்சயம். மீண்டும் ஒரு விலங்காகவே பிறந்து விடுகிறது.


மகான்களின் திருவடி பட்டால், மகான்கள் கருணையோடு ஒரு விலங்கையோ, மரத்தையோ பார்த்தால், அவர்களின் ஆசையை நிறைவேற்ற, தெய்வம் இந்த ஆத்மாக்களுக்கு மனித பிறவி தருகிறது..


மகான்கள் பாதம் எங்கும் பட வேண்டும் என்பதால் தான், பொதுவாகவே சந்நியாசிகள், மகான்கள் பல ஊர்களுக்கு செல்கிறார்கள்

அவர்கள் பாத தூளி பட்ட, அவர்கள் பார்வையில் பட்ட மரங்கள், செடி கொடிகள், விலங்குகள், பறவைகள் அனைத்துக்கும், அடுத்த ஜென்மமாக மனித பிறவி கிடைக்கிறது.

மிருகத்தை காட்டிலும், வாக்கு கொடுத்தும், விசார புத்தி கொடுத்தும், மிருகத்தை விட அதிக சுகம் ஒரு மனிதன் அனுபவிக்கவில்லை என்றால், அதற்கு காரணம் கீழ் நோக்கிய லட்சியங்களே!


விலங்கும் உணவுக்காக அலைகிறது. கொஞ்சம் கஷ்டப்படுகிறது. 

கிடைக்காமல் போனாலும் வேதனை அடைவதில்லை.. தேடிக்கொண்டே இருக்கிறது.

இன்று உணவு கிடைத்தால் சாப்பிட்டு விட்டு அமைதியாக இருந்து விடுகிறது. நாளை கிடைக்குமா? என்று கவலைப்படுவது இல்லை.


மனிதனும் தன் லட்சியமாக உணவுக்காகவே அலையும் போது, விசார புத்தி இருப்பதால், கிடைக்கவில்லையென்றால் வேதனை படுகிறான். 

இன்று கிடைத்தாலும், நாளை கிடைக்குமா? என்று வேதனை படுகிறான்.

இது போல, 

உலக விஷயங்களை மிருகம் போல சுவைக்கவும், கேட்கவும், முகரவும், பார்க்கவும், தொடவும் லட்சியமாக கொள்ளும் போது

விசார புத்தி (6வது அறிவு) இவனுக்கு இருப்பதால், 'போதவில்லையே!!' என்று தோன்றி, விலங்கு அனுபவிக்கும் சுகத்தை கூட அனுபவிக்க முடியாமல், வேதனையில் மூழ்கி கிடக்கிறான். 

அடுத்த பிறவியாக சில ஆத்மாக்கள், மீண்டும் விலங்காகவோ, மரமாகவோ பிறந்து, மீள முடியாத சம்சார சூழலில் சிக்கி விடுகிறார்கள்.


4000 திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் கொடுத்த அள்ளி கொடுத்த பதிகங்கள், தமிழ் மொழியில் உள்ளது.

மூல ராமாயணம் வால்மீகி எழுதினார்.  

ஆபஸ்தம்ப சூத்திரம் (formula), நாரத பக்தி சூத்திரம் என்று பல வித சூத்திரங்கள் சம்ஸ்க்ரித மொழியில் உள்ளது.

கணாத ரிஷி சொன்ன சூத்திரத்தை அப்படியே நியூட்டன் சொல்கிறான். ஆனால் நமக்கு தெரியவில்லை.

இவை படித்து புரிந்து கொள்ள, 

அனைவரும் 'ஒரு வருடமாவது' தன் வாழ்க்கையை சங்க தமிழ் கற்கவும், சம்ஸ்க்ரிதம் கற்கவும் செலவு செய்ய வேண்டும்.. 

இதை பல முறை, காஞ்சி மஹா பெரியவர். ஹிந்துக்களுக்கு சொல்லி இருக்கிறார். 

ஆனந்த விகடன், கல்கி படிப்பதால், நம் நோக்கம் மேல் நோக்கி செல்லாது.. 

கொஞ்சம் கஷ்டப்பட்டு குறைந்த பட்சம் சங்கதமிழ் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கற்று கொண்டு விட்டால்

அனைவரும் ஆராய்ச்சியாளர்கள் ஆகி விடலாம்.

அனைவரது சிந்தனையையும் 4000 திவ்ய பிரபந்தமும், பதிகங்களும் தானே உயர்த்தி கொண்டு சென்று விடும்.

வேத மந்திரங்கள் அர்த்தம் தானாக புரிந்து விடும்

அர்த்த விவாதங்கள் ஏற்படும். ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்.


கணாத ரிஷி சொன்னதை நியூட்டன் சொன்னான்.. அது போல பொதிந்து கிடக்கும் பல ரகசியங்கள் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

நம் மூதாதையர்கள், 

மண்ணை தங்கமாக்கியது எப்படி? என்ற ஆராய்ச்சிகள் தொடங்கும்.

12 லட்சம் வருடம் முன், த்ரேதா யுகத்தில் நடந்த ராமாயணம், வானில் பறக்கும் புஷ்பக விமானத்தை (flight) பற்றி சொல்கிறது

இதன் வேத சூத்திரங்களை தொலைத்து இருக்கிறோம் இன்று.

கோவில்கள், அதன் சிற்பங்களை பார்த்தால் தலை சுற்றுகிறது.. 

அதனை வடித்த சிற்பி படித்த. சிற்ப வேத சாஸ்திரம் இன்று புரியவில்லை, காணவில்லை.

இன்று அனைவரும் அம்பு தயாரித்து பானம் விடுவது எப்படி? என்று கற்று கொள்கிறார்கள்.. 

சாதாரணமான பானங்கள் பயன்படாத போது, பலவித அஸ்திரங்கள் (bomb) பயன்படுத்தி பல ஆயிரம் பேரை ஒரே நேரத்தில் வீழ்த்தினார் என்று சொல்கிறது.  

இதை இப்போது Atom Bomb, Nuclear Bomb என்று வெளிநாட்டவர்கள் கண்டுபிடித்து நமக்கே கொடுத்து விற்று விட்டார்கள்

அஸ்திரங்கள் எப்படி பயன்படுத்தினார்கள்? என்ற ரகசியம், நமக்கு சம்ஸ்க்ரிதம் தெரியாததால் அழிந்து விட்டது. 

இந்த சம்ஸ்க்ரித மொழியை வெளிநாட்டவர்கள் கற்று கொண்டு, பல ரகசிய சூத்திரங்களை என்றோ திருடி கொண்டு சென்றுவிட்டனர்.

சம்ஸ்க்ரித மொழியில் ராமாயணம் எழுதிய வால்மீகி முனி "தமிழன்" என்று கூட தெரியவில்லை தமிழனுக்கு. 

அவர் பிறந்த 'அன்பில்' என்ற ஊரில் உள்ளவர்களுக்கு மட்டும் தெரிந்து இருக்கிறது.. 

அவர் முக்தி ஸ்தலம் சென்னைக்கு அருகில் உள்ள 'திருநீர்மலை' என்பதும் அங்கு இருப்பவர்களுக்கு மட்டும் தெரிகிறது.

அகத்தியர் 'தமிழ் முனி' என்று தெரிகிறது. அதே தமிழ் முனி தான், ராமபிரானுக்கு போர் சமயத்தில், எதிரிகளை வெற்றி கொள்ள 'ஆதித்ய ஹ்ருதயம்' என்ற சம்ஸ்க்ரித மந்திரம் சொன்னார் என்று தெரியவில்லை. அதன் அர்த்தமும் சம்ஸ்க்ரித மொழி தெரியாததால் புரியவில்லை.


'அறம் பொருள் இன்பம் வீடு' என்ற தமிழ் சொல் மட்டும் தெரிகிறது. 

'தர்ம, அர்த்த, காம, மோக்ஷ' என்று அதே வரிசையில் சமஸ்க்ரிதமும் சொல்கிறதே? என்று ஆராய்ச்சி அறிவு இல்லை.

ஆனால், மோக்ஷம் என்ற அர்த்தத்தை குறிக்கும் சொல்லுக்கு நிகரான சொல் 'விடுதலை' தானே? ஆனால் வீடு என்று குறிப்பிட்டு தமிழ் சொல்கிறதே? என்று காரணம் புரியவில்லை. 

அதன் அர்த்தத்தை விளக்கும் சங்க தமிழை புரிந்து கொள்ள, தமிழன் தமிழனாக இல்லை. 

அதுபோல,

'அறம் பொருள் இன்பம் (தர்ம, அர்த்த, காம)' என்று இந்த வரிசையில் குறிப்பாக ஏன் சொன்னார்கள்? 

பொருள் தானே!! மிக மிக முக்கியம்.. 

'பொருள் இன்பம் அறம்  (அர்த்த, காம, தர்ம)' என்று சொல்லி இருக்கலாமே? என்று யோசிக்க கூட முடியவில்லை தமிழனால்.. 

ஆராய்ச்சி செய்வதற்கு கூட சங்கதமிழ் தெரிந்து இருப்பது அவசியமாகிறது.





மிகவும் எளிதான தமிழில் எழுதப்பட்ட ஆத்திசூடிக்கும், திருக்குறளுக்கும், இன்றைய தமிழனுக்கு தமிழுக்கு தமிழ் உரை தேவைப்படுகிறது.

இதன் காரணத்தால், அர்த்தங்கள் புரியாத நிலையில், பாசுரங்கள் வெறும் பாட்டாகவே ஆகி விட்டது..

பதிகங்கள் கோவில் சுவரில் ஒதுங்கி அழிந்து கொண்டு இருக்கிறது. 


இந்த நிலை மாற வேண்டும் என்றால், மகான்கள் ஆசைப்படும் படி, அனைவரும் குறைந்தது, 

உண்மையான சங்க தமிழை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், 

உண்மையான சம்ஸ்க்ரித மொழியை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.


இன்றைய இன்டர்நெட் காலத்தில், 

வால்மீகி ராமாயணம் சம்ஸ்க்ரித ஸ்லோகம் என்ன? அதன் சொல்லுக்கு அர்த்தம் என்ன? 

என்று கொஞ்சம் நேரம் ஒதுக்கினால், நமக்கே பல விஷயங்கள் உண்மையாகவே புரிந்து விடும்.

கணாத ரிஷி சூத்திரம் என்னென்ன? என்ன சொல்கிறார்? என்ற தேடுதல் நமக்குள் ஏற்பட்டால், பல அற்புதங்கள் நமக்கே தெரிய வரும்.


4000 பாசுரம், பதிகங்கள் என்ன சொல்கிறது?  

என்ன தமிழ் சொல் பயன்படுத்தி இருக்கிறார்கள்? 

என்று ஒரு வருடம் முயற்சி செய்தால் கூட, பல அற்புத அனுபவங்கள் நமக்குள் ஏற்படும்.

1000 வருட அந்நிய மத ஆக்ரமிப்பால், நாம் இழந்தது அதிகம்..

ஆனால், இன்றும் ஹிந்துக்கள் என்று நாம் இருக்கும் போது, மேலும் நம் ஹிந்து தர்மத்தை அழிய விட்டு விட கூடாது.

நம் சொத்துக்கள் சங்கதமிழ் மொழியில் எழுதப்பட்டு ஒளிந்து கொண்டு இருக்கிறது.

நம் சொத்துக்கள், சம்ஸ்க்ரித மொழியில்  எழுதப்பட்டு, ஆயுர் வேதம், சிற்ப சாஸ்திரம், நாரத பக்தி சூத்திரம், ஆபஸ்தம்ப சூத்திரம், கன்வ சூத்திரம், ஆதித்ய ஹ்ருதயம், கருட புராணம், வால்மீகி ராமாயணம் என்று பல வித ரூபத்தில் ஒளிந்து கொண்டு இருக்கிறது.

இதை வேரோடு அழித்து விடாமல், இன்றே நாம் தண்ணீர் ஊற்றி பாதுகாக்க முயற்சித்து விட்டால், 80 கோடி ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்தால், மீண்டும் மந்திரங்களை சொல்லியே அஸ்திரங்கள் தயாரித்து காட்டலாம்.

மண்ணை தங்கமாக்கலாம்.

கல் என்று நாம் நினைக்க, ஆழ்வார்களுடன் பேசிய தெய்வத்திடம் நாமும் பேச தகுதி பெறலாம்.


நமது இன்றைய கடமை: 

ஒவ்வொரு தமிழனும், ஒரு வருடமாவது 

தமிழில் தேவாரமோ, திருவெம்பாவையோ, திவ்ய பிரபந்தோமோ ஒன்றை எடுத்து கொண்டு, ஒவ்வொரு தமிழ் சொல்லுக்கும் என்ன அர்த்தம்? என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தமிழனும், ஒரு வருடமாவது 

தமிழன் வால்மீகி சம்ஸ்க்ரித மொழியில் கொடுத்த  ராமாயணத்தையோ, ஆயுர் வேத சம்ஸ்க்ரித வாக்கியங்களோடு உடைய ஆயுர் வேதத்தையோ, ஒன்றை எடுத்து கொண்டு, ஒவ்வொரு சம்ஸ்க்ரித சொல்லுக்கும் என்ன அர்த்தம்? என்று புரிந்து கொள்ள வேண்டும்.


இந்த அறிவு ஆராய்ச்சியை, 80 கோடி ஹிந்துக்களும் செய்ய ஆரம்பித்தால், ஒரு வருடத்தில் பல ரகசிய படைப்புகள் வெளி வந்து விடும்.


"ராமபிரான் சீதைக்கு சித்தப்பா" என்று ஒருவன் சொன்னால்,

"ராமபிரான் மனிதன் என்று சொன்னால்" என்று ஒருவன் சொன்னால்,

வால்மீகி ராமாயணம் படித்த புரிந்து கொண்டவர்களுக்கு, பேசுபவன், 'ராமபிரானை தன் இஷடத்துக்கு சொல்லி, மதம் மாற்ற பார்க்கிறான், நாதீகனாக்க பார்க்கிறான்' என்பது புரியும்.

நம் அறிவை வளர்த்து கொள்வதே ஹிந்துக்களாகிய நமக்கு பலம்.

இந்த அறிவை வளர்க்க, நம்மிடம் உள்ள பொக்கிஷங்கள் 'சங்க தமிழ்' ரூபத்திலும், 'சம்ஸ்க்ரித மொழி'யிலும் ஒளிந்து கிடக்கிறது.


12 லட்சம் வருடம் முன் த்ரேதா யுகத்தில், இரண்டு தமிழர்கள் "வால்மீகி" (வேடுவ ஜாதியில் பிறந்தவர்) அகத்தியர் - தமிழும் அறிந்து இருந்தார்கள், சமஸ்கரிதமும் அறிந்து இருந்தார்கள்.

காலங்கள் கடந்து அழியாமல் இன்றும் வாழ்கிறார்கள்.

இந்த அறிவை நாம் அறிய, குறைந்த பட்சம் இவர்கள் நமக்கு கொடுத்த வைத்திய முறைகளை, ராமாயணத்தை, ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தோடு ஒரு வருடத்துக்குள் புரிந்து கொள்ள முயற்சி செய்து விட வேண்டும்.

நம் பெருமையை, நாமே படித்து உணர, நமக்கு கட்டாயம் சங்க தமிழ் அறிவும், சமஸ்க்ரித மொழி அறிவும் கட்டாயம் வேண்டும்.

சங்க தமிழும், சமஸ்க்ரிதமும் நமக்கு தெரிந்தால், அனைத்தும் தெரிந்து விடும்.

ராமாயணம், பாசுரங்கள், பதிகங்கள் அர்த்தம் புரிந்து கொண்டு படிக்க, முதுகு நிமிர்ந்து படைக்கப்பட்ட மனித பிறவி, மேல் நோக்கிய சிந்தனையை நிச்சயம் இறை அருளால் பெற்று விடும்.

இறை அருள் பெறும் போது, விலங்குகள் அனுபவிக்கும் சுகத்தை காட்டிலும், ஆனந்தம் நமக்கு கிட்டும்.

No comments: