Followers

Search Here...

Wednesday, 27 January 2021

ஸ்ரீகிருஷ்ணர் ஏன் முரணாக பேசினார்? "நான் எல்லா உயிரினங்களின் இருக்கிறேன்" என்று அத்வைதமாக சொல்கிறார். பிறகு, கிருஷ்ணரே "நான் விலங்குகளில் சிங்கமாக இருக்கிறேன், அசுரர்களில் ப்ரகலாதனாக இருக்கிறேன்" என்று த்வைதமாக சொல்கிறார். பகவத் கீதை... தெரிந்து கொள்வோமே

 ஸ்ரீகிருஷ்ணர் ஒரு இடத்தில், "பரமாத்மாவாகிய நான் அனைத்திலும் இருக்கிறேன்" என்று சொல்கிறார்.

அடுத்த ஸ்லோகத்திலேயே இதற்கு முரணாக, 

"நான் ருத்ரர்களில் சங்கரனாக இருக்கிறேன், 

சேனை தளபதிகளில் கந்தனாக இருக்கிறேன்,

பாண்டவர்களில் அர்ஜுனனாக இருக்கிறேன்,

வேதத்தில் சாம வேதமாக இருக்கிறேன்,

ரிஷிகளில் ப்ருகு ரிஷியாக இருக்கிறேன்.

மலைகளில் ஹிமாலயமாக இருக்கிறேன்,

மனிதர்களில் அரசனாக இருக்கிறேன்,

அசுரர்களில் ப்ரகலாதனாக இருக்கிறேன்,

விலங்கில் சிங்கமாக இருக்கிறேன்,

பறவைகளில் கருடனாக இருக்கிறேன்" 

என்று சொல்லிக்கொண்டே போகிறார்.


'அனைத்திலும் நான் இருக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, 

அதற்கு முரணாக

'மிருகங்களில் சிங்கமாக இருக்கிறேன்' என்று சொல்கிறாரே! 

அனைத்திலும் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, மற்ற விலங்கில் பரமாத்மா இல்லை என்பது போல பேசிவிட்டாரே!!





'அனைத்திலும் நான் இருக்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'மிருகங்களில் குறிப்பாக சிங்கத்திடம் நான் இருக்கிறேன்' என்று ஏன் சொல்கிறார்?


கிருஷ்ண பரமாத்மாவின் மனதில் என்ன ஓடியது?


பரமாத்மாவில் இருந்து தான் அனைத்துமே உற்பத்தியானது. இதுவே சத்தியம்.  

இந்த சத்தியத்தை அனுபவத்தில் கொண்டு வந்த மகான்களில் பிரகலாதன் தலைசிறந்தவர்.


ஹிரண்யகசிபு பிரகலாதனை விஷம் கொடுத்தும், சூலத்தால் குத்தியும், மலையில் இருந்து தள்ளியும், கடலில் கல்லை கட்டி தள்ளியும், யானையை விட்டு மிதக்க முயன்றும், எதுவுமே பிரகலாதனை தாக்கவில்லை..

பிரகலாதனை பார்த்து, "எப்படி உன்னை எதுவும் கொல்ல முடியவில்லை.. மலையில் இருந்து உருட்டினால் இயற்கை நியதிப்படி யார் விழுந்தாலும் அடி படுமே! கருநாகத்தின் விஷம் குடித்தால், அதன் குணப்படி சாக வேண்டுமே!"

என்று கேட்டான்.


ஹிரண்யகசிபுவுக்கு 

கல் கல்லாக தெரிந்தது. 

விஷம் விஷமாக தெரிந்தது. 

தான் அரசன் என்று தெரிந்தது. 

மந்திரிகள், போர் வீரர்கள் வித்தியாசம் தெரிந்தது. 

உலகம் உலகமாக தெரிந்தது.


ஆனால், பிரகலாதனுக்கோ, "ஹிரண்யகசிபுவே நாராயணனாக தெரிந்தான். 

அவன் போர் வீரர்களை ஏவி கொலை செய்ய சொல்ல, அந்த வீரர்களும்  நாராயணனாக தெரிந்தனர். 

குத்த வரும் சூலமும், விஷமும், மலையும், தானும் கூட நாராயணனாகவே தெரிந்தனர்.

நரசிம்மாக நாராயணனே வந்த போது, தேவர்களும் 'இது என்ன பயங்கரமான அவதாரம்!' என்று அருகில் செல்லவே பயந்தனர்..

'நரசிம்மாக வந்ததும் நாராயணனே!' என்று பார்த்த பிரகலாதன், துளியும் பயப்படவில்லை.


'பரமாத்மா அனைத்திலும் இருக்கிறார்' என்ற சத்தியத்தை, பிரகலாதன் நிரூபித்தான்.





ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் பிரகலாதனை மனதில் நினைத்து கொண்டு, 'அர்ஜுனா! நான் நிஜத்தில் அனைத்திலும் இருக்கிறேன்.. பிரகலாதன் போன்ற ஞானிகள் நான் அனைத்திலும் இருப்பதை பார்க்கின்றனர்." என்று சொல்கிறார்.

உடனே, அர்ஜுனன், "ஐயோ கிருஷ்ணா!! இது பிரகலாதன் போன்ற ஞானிக்கு வேண்டுமானால் அனுபவத்தில் ஏற்படலாம்.. 

நீ அனைத்திலும் இருக்கிறாய் என்பது உண்மை என்றாலும், அனுபவம் எங்களுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லையே! 

'எதை பார்த்தாலும், நீ அதில் இருக்கிறாய்' என்று பார்க்கும் பக்குவம் எங்களுக்கு ஏற்படாதே! 

நாங்கள் அஞானி..  நாங்கள் பிரகலாதன் போன்ற ஞானியின் அனுபவத்தை அடையவே முடியாதே!!"

என்று நினைத்து சோர்ந்து விடுவானோ! என்று நினைத்து, அவனை பேச விடாமல், அவன் மனதில் எழும் சந்தேகத்தை போக்க, வழி சொல்ல உடனே பேசினார்..


"அர்ஜுனா! நான் அனைத்திலும் இருக்கிறேன் என்ற அனுபவம் மிக உயர்ந்த நிலை.. 

நீ அந்த அனுபவத்தை அடைய முடியாது என்று நீயாகவே நினைத்துக்கொண்டு முயற்சிக்காமல் இருந்து விடாதே...

ஞானத்தை அடைய முயற்சி உடையவன் நாசமாக மாட்டான். 

பிரகலாதனை போன்ற நிலை உனக்கும் வரும்..

அதன் முதல் படியாக, அனைத்து மிருகத்திலும் நான் இருக்கிறேன் என்று உன்னால் பார்க்க முடியாது போனாலும், அதில் சிங்கத்தை பார்க்கும் போது மட்டுமாவது, 'நரசிம்மா..' என்று நினைக்க ஆரம்பி..

ருத்ரர்களில் மன்யு, சிவன் என்று பல ரூபங்கள் உண்டு.. அனைவரிடத்திலும் நானே இருக்கிறேன் என்ற அனுபவம் ஆரம்ப நிலையில் ஏற்படாது.

ஆனால் ருத்ர ரூபத்தை துறந்து, சாந்த ரூபத்துடன் இருக்கும் சங்கரனை பார்க்கும் போதாவது என்னை நினைத்து கொள். 


காக்கை பறந்தாலும், புறா பறந்தாலும் அனைத்திலும் நானே இருக்கிறேன் என்ற அனுபவம் உனக்கு ஆரம்ப நிலையில் ஏற்படாது.. 

அதனால், பறவைகளில் கருடன் பறந்து சென்றால், அதில் நான் இருக்கிறேன் என்று பார்.

இப்படி நீ பார்க்க ஆரம்பி.. இந்த முதல் படியே உன்னை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்திலும் நான் இருப்பதை உணர செய்து விடும். 


ஜீவ காருண்யம் முதலில் உனக்கு தோன்றும்.

மிருகத்தின் மாமிசத்தை தின்று தான் இந்த வயிற்றை வளர்க்க வேண்டுமா? என்று தோன்ற ஆரம்பிக்கும்..





படிப்படியாக உன் ஞான நிலை உயர்வதை நீயே அனுபவிக்கலாம்.


தெய்வம் உன்னிடம் கனவில் பேசுவதும், காட்சி தருவதும், யாரையோ அனுப்பி தக்க சமயத்தில் உன்னை ஆபத்துகளில் இருந்து காத்தும், நல்லவர்கள் நட்பு கிடைக்குமாறு வாழ்க்கை அமைவதையும் நீயே அனுபவிப்பாய்.. 


ஆதலால், அனைத்திலும் என்னை பார்க்க, முதல் படியாக, ஒரு வஸ்துவையாவது பார்க்கும் போது என்னை நினைத்து கொள்ளும் பழக்கத்தை கொள்.

தானாக ஞானி நிலை ஏற்பட்டு விடும்.."


இந்த மனோ நிலையில், கிருஷ்ண பிரமாதமா, 10வது அத்தியாயத்தில், 'நான் அனைத்திலும் இருக்கிறேன்' என்று சொல்லி, அர்ஜுனன் 'இந்த நிலை எனக்கு வராது' என்று சொல்லிவிடுவானோ என்று நினைத்து, அவனை கேட்பதற்கு முன்பேயே, உடனேயே இப்படி பேச ஆரம்பித்தார்.


अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थित: |

अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ||

- bhagavad Gita (பகவத் கீதை)

அஹம் ஆத்மா குடாகேச சர்வ பூத ஆஸய-ஸ்தித: |

அஹம் ஆதி: ச மத்யம் ச பூதானாம் அந்த ஏவ ச ||

- chap 10 - 20 vibhuti yoga  (பகவத் கீதை)

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்..

"அர்ஜுனா ! நான் எல்லா உயிரினங்களின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். நான் எல்லா உயிரினங்களின் ஆரம்பம், நடுத்தர மற்றும் முடிவாக இருக்கிறேன்".

Arjuna ! I am residing in everyone's heart. i am residing in all living entities. I am the beginning, middle, and end of all beings.




प्रह्लादश्चास्मि दैत्यानां काल: कलयतामहम् |

मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ||

ப்ரஹ்லாத ச அஸ்மி தைத்யானாம்

கால: கலாயதாம் அஹம் |

ம்ருகானாம் ச ம்ருக-இந்த்ர அஹம்

வைநதேய : ச பக்ஷிணாம் ||

- chap 10 - 20 vibhuti yoga  (பகவத் கீதை)

அர்ஜுனா ! நான் அசுரர்களில் ப்ரகலாதனாக இருக்கிறேன். நான் எல்லா உயிரினங்களின் காலமாக இருக்கிறேன். மிருகங்களில் சிங்கமாக இருக்கிறேன். நான் பறவைகளில் கருடனாக இருக்கிறேன்.


அஞானியும் 'ஞானி ஆக முடியும்' என்று காட்டும் அற்புதமான உபதேசம்.


பகவத் கீதை மனிதனாக பிறந்த அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது...


வாழ்க ஹிந்து தர்மம்.

No comments: