பரமாத்மாவை அறிந்தும், பரமாத்மா தத்துவத்தை அறிந்தும்,
வேதத்தை 4காக வகுத்து கொடுத்தும்,
'கர்ம யோகி'யாக இருந்து, மஹாபாரதம் மற்றும் 18 புராணங்களை உலகத்திற்காக கொடுத்தும்,
ஸ்வயமே 'ஞானி'யான வியாச பகவான், மனதிருப்தி ஏற்படாமல் குறைப்பட்டு கொண்டார்.
"கர்ம யோகி'யாக இருந்தும், 'ஞானி'யாக இருந்தும், பரமாத்மாவை உணர்ந்தும், திருப்தி இல்லையே! மன உருக்கம் ஏற்படவில்லையே! கண்ணீர் வரவில்லையே!" என்று குறைப்பட்டு கொண்டார் வியாசர்.
"பக்தியே 'கர்ம யோகத்தை விடவும், ஞான யோகத்தை விடவும்' ஆனந்தம் தரவல்லது.
ஆதலால் பக்தியை ஊட்டும் கிருஷ்ண சரித்திரத்தை எழுதுங்கள்"
என்று சொன்னார் நாரதர்.
'கிருஷ்ணனே பரமாத்மா' என்பதால், பிரம்மாவின் ஸ்ருஷ்டியில் ஆரம்பித்து, உலக ஸ்ருஷ்டிகளை வர்ணித்து, பரமாத்மாவின் அவதாரங்களை வர்ணித்து, கடைசியில் கிருஷ்ண அவதாரத்தை விவரித்து சொல்கிறார்.
குறிப்பாக பால லீலையை சொல்கிறார்.
அதன் பலனாக,
'பாகவதம்' என்ற பக்தி க்ரந்தம் நமக்கு கிடைத்தது.
பலனை எதிர்பார்க்காமல், பகவான் இஷ்டம் என்று கர்வமில்லாமல் காரியங்களை செய்வது - 'கர்மயோகம்'.
பகவானை பற்றி அறிந்து கொள்வது - "ஞானம்".
'பக்தி' என்றால் என்ன?
வியாசர் கொடுத்த பக்தி கிரந்தமான பாகவதத்தில், இந்த பக்தி எப்படி உள்ளது?...
'கோகுலவாசிகள் தனக்கு பூஜை செய்யாமல், கோவர்த்தன மலைக்கு பூஜை செய்கிறார்கள்' என்றதும், தேவர்களுக்கு அதிபதியான இந்திர தேவனுக்கு மஹாகோபம் வந்தது.
கோகுலத்தை அழிக்க பிரளய கால மழையை ஏவினான்.
7 வயதே ஆன ஸ்ரீ கிருஷ்ணன், கிடு கிடுவென்று ஓடி, தன் பிஞ்சு விரலால் கோவர்த்தன மலையையே தூக்கி விட்டான்.
"எல்லோரும் மலைக்கு கீழே வாருங்கள்" என்று அழைத்தான்.
சிறுவன் செய்ய கூடிய காரியமா?
சிறுவனை விடுங்கள். எந்த மனிதனால் மலையை தூக்க முடியும்?
வெளிப்படையாக, குட்டி கிருஷ்ணன் 'பகவானாக' செய்த காரியம் இது.
"இவன் பகவான் தான்" என்ற நம்பிக்கை இருந்ததால் தானே, யசோதை நந்தகோபர் உட்பட அனைத்து கோகுலவாசிகளும், மலைக்கு அடியில் நிற்க சம்மதித்தனர்.
இந்த காட்சியை பார்த்த ஞானிகள், ரிஷிகள் "தெய்வ லீலை... கிருஷ்ண லீலை" என்று கண்டு ஆனந்தப்பட்டனர்.
இந்திர தேவனோ, கிருஷ்ணன் 'பகவான் என்று புரிந்து கொள்ள முடியாமல்', கர்வத்தால் இடைவிடாது 7 நாட்கள் மழையை கொட்டினான்.
கவலையே இல்லாமல், 7 நாட்களும் மலையை தூக்கி கொண்டு இருந்தான் குட்டி கிருஷ்ணன்.
ஞானிகள் "பரமாத்மா தான் 7 வயது பாலகனாக இருக்கிறார். உலகத்தையே தாங்குபவர் இவர். கோவர்த்தனத்தை தூக்குவது ஒரு பெரிய காரியமா?"
என்று பரதத்துவத்தை நினைத்து கைக்குவித்து நின்றனர்.
ஞானிகள் இப்படி நினைக்க,
தானே கரம் யோகியாக இருந்து கோவர்த்தன மலையை தூக்கி, கோகுலத்தில் உள்ள அனைவரையும் தன் பாதுகாப்பில் வைத்து சத்சங்கம் கொடுத்து கொண்டு, 7 நாட்களும் மலையை தூக்கி கொண்டு நின்றார்.
இந்திரன் இனி மழை பொழிய ஜலம் இல்லை என்கிற அளவுக்கு போய், 7 வயது குழந்தையாக வந்திருப்பது "பகவான்" என்று உணர்ந்தான்.
"பதவி கர்வத்தால் பெரும் தவறு செய்து விட்டோம்" என்று பயந்தான்.
மழை நின்றவுடன், மலைக்கு அடியில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பி, பிறகு இருந்த இடத்திலேயே மலையை வைத்து விட்டு, குட்டி கிருஷ்ணன் கோவிந்தனாக நிற்க,
இந்திர தேவன் ப்ரத்யஷமாகி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு, குடம் குடமாக பால் அபிஷேகம் செய்தான்.
மலையை தூக்கி, 7 நாட்கள் தாங்கி பிடித்து, இந்திரனையே ப்ரத்யஷமாக பார்த்தும், கிருஷ்ணனை "என் குழந்தை" என்றே பார்த்தாளாம் யசோதை.
இந்திரனை பார்த்து, "7 நாட்கள் தண்ணீர் கொட்டினது போதாது என்று, பாலை எடுத்து வந்து என் குழந்தை மேல் கொட்டுகிறானே. ஜலதோஷம் பிடிக்குமே!!"
என்று கவலைப்பட்டு, ஓடி வந்து தன் குழந்தைக்கு தலையை துவட்டி விட, யசோதையின் இந்த அன்புக்கு அடிமையானார் பரமாத்மா.
"7 வயது குழந்தையாக இருந்து கொண்டு மலையையே தூக்கி காட்டி இருக்கேன்.
இந்திரனையே காலில் விழ செய்து விட்டேன்.
பகவான் என்று கண் எதிரே காட்டி விட்டேன்..
இப்பொழுதும்,
எனக்கு ஜலதோஷம் பிடிக்குமே!! என்றும்,
என் குழந்தை!!
என்றும் நினைக்கிறாளே..
பகவானுக்கு எதுவும் சாத்தியம் என்று எனது காரியங்கள் அனைத்தையும், ஞானிகள் 'லீலை லீலை'
என்றே ரசிக்கும் போது,
எனக்காக அழும் இவள் பக்தி, ஞானத்தை விட சிறந்தது"
என்று நினைத்தாராம் பரமாத்மா.
"பகவான் தான் உலகை படைத்தார். அந்த உலகில் அவருக்கு ஒரு கோவில் தேவையா?
பகவான் தான் உணவை படைத்தார். அவருக்கு போய் பசிக்குமா?
பகவான் தான் நம்மை காக்கிறார். அவருக்கு நாம் காவலா?.."
இப்படி நாத்தீகன் அல்ல, பரதத்துவத்தை உணர்ந்த ஞானிகள் கூட சொல்ல முடியும்.
அப்படிப்பட்ட ஞானிகள் கோவர்த்தன மலையை 7 வயது குழந்தையாக கிருஷ்ணர் தூக்கியதை பார்த்தும், "பகவானுக்கு இது ஒரு பெரிய காரியமா?"
என்று நினைத்தார்கள்.
"பகவான் தான் நம்மை படைத்தார், நம்மை காக்கிறார்"
என்ற ஞானம் இருந்தாலும், அந்த பரமாத்மா நம்மிடம் பழக ஆரம்பித்து விட்டால், அளவிட முடியாத அன்பு (பக்தி), ஆனந்தம் ஏற்பட்டு விடுமாம்.
"என்னை பகவான் காப்பாரா?' என்ற ஆரம்பநிலையில் கேட்கும் பக்தன்,
தெய்வம் பழக ஆரம்பிக்க ஆரம்பிக்க, யசோதையின் நிலை ஏற்பட்டு,
"பகவான் சாப்பிட்டாரா?
பகவான் அலங்காரம் செய்து கொண்டாரா?
பகவானை யாராவது கஷ்டப்படுத்தி விடுவார்களா?
அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கலாமா?"
என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்து விடுமாம்.
இதுவே பக்தி.
இந்த பக்தியை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஞானத்தை விட உயர்ந்தது என்று பார்க்கிறார்.
இந்திரன் 'பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தோம்' என்ற திருப்தியில் விடைபெற்றார்.
யசோதை, "கண்ணனுக்கு ஜலதோஷம் பிடிக்குமே!"
என்று வருத்தப்பட, அவளுக்கு குழந்தையாகவே இருந்தான்.
மலையிலிருந்து இறங்கி, யசோதையிடம் ஓடி சென்று 'அம்மா..' என்று கட்டி கொள்ள, நன்றாக தலையை துவட்டி, கண்ணனை பார்த்து
"கண்ணா.. மூக்கை சிந்து.. மூக்கை சிந்துடா..."
என்று யசோதை கண்ணனின் ஒரு மூக்கை மூடி கொண்டு கேட்க,
மூச்சை வெளியே விட தெரியாமல், மூச்சை இழுத்து கொண்டு, அறியா குழந்தையாக நின்றானாம் கண்ணன்.
'அனைத்தும் அறிந்தவன், ஒன்றும் தெரியாத குழந்தை போல செய்த கிருஷ்ண லீலை', ஞானிகளையும் மோஹிக்க செய்து, பக்தியின் பெருமையை காட்டியதாம். பெரும் ஆனந்தம் ஏற்பட்டு விடுமாம்.
ஞானியான வ்யாஸ்சருக்கு, ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை பகவான் என்று காட்டிய இடங்களை விட, யசோதையின் பக்திக்கு வசப்பட்டு, ஒன்றும் தெரியாத பாலகனாக செய்யும் லீலைகள் கண்ணீரையும், மன உருக்கத்தையும் தந்ததாம்.
பக்தியினால் ஏற்பட்ட இந்த மன உருக்கம், வ்யாஸருக்கு மன திருப்தியை, ஆனந்தத்தை அளித்ததாம்.
ஞானத்தை விட பக்தி ஆனந்தம் தரும். இந்த பக்தியை, நமக்கும் கிடைக்க செய்து, "பாகவதம்" என்ற மோக்ஷ கிரந்தத்தை நமக்கு அருளினார் வியாசர்.
அந்த வ்யாஸருக்கு நாம் அனைவருமே கடமைப்பட்டு இருக்கிறோம்.
இந்த பாகவதத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து குந்தி தேவி துதிக்கிறாள்..
அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.
இதே பாகவதத்தில் நோய்கள் விலக, எதிரிகள் தோற்க "நாராயண கவசம்" உள்ளது.
அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.
No comments:
Post a Comment