Followers

Search Here...

Tuesday, 7 April 2020

குட்டி சந்தியா வந்தனம் எப்படி செய்வது? தெரிந்து கொள்வோமே ! - பிராம்மணர்கள் கவனத்திற்கு

பிராம்மணன் இந்த குட்டி சந்தியா வந்தனத்தை குறைந்தபட்சம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்..
மெதுவாக அர்த்தங்களை தெரிந்து கொண்டு, 
முழுமையாக ஒரு முறையாவது உணர்ந்து, நாம் சாவதற்குள் செய்து விட வேண்டும்.

"பிராம்மண பிறவி துர்லபம்!!" என்பது நமக்கு தெரிகிறதோ! இல்லையோ! பிற ஜாதியில் பிறந்தவனுக்கு நன்றாக தெரியும்.




பிற ஜாதியில் பிறந்தவனும் கோவிலுக்கு போகிறான், பூஜை செய்கிறான்.
பிற ஜாதியில் பிறந்தவனும் ஜோசியம் பார்க்கிறான், பிரசங்கம் செய்கிறான்.
பிற ஜாதியில் பிறந்தவனும் வேலைக்கு போகிறான் வேலை கொடுக்கிறான்.
நமக்கும், மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

'சந்தியா வந்தனமும், வேதமும்' தானே நம்மை 'ஐயர்' (ஐயா) என்ற மரியாதையை பெற்று தந்தது!!
இந்த மரியாதைக்கு ஏன் பிராம்மணன் தன்னை தகுதி ஆக்கி கொள்ள கூடாது?...

கிடைத்த ஜன்மாவை பிராம்மணன் வீண் செய்து விட கூடாதல்லவா?....

நாம் (90%) இன்று வேதம் கற்கவில்லை.

நாம் சந்தியா வந்தனமும் செய்ய வில்லையென்றால், தெய்வம் எதற்காக நம்மை பிராம்மணனாக பிறக்க வைத்தோம்? என்று நினைக்குமல்லவா!!...

ஏதோ பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் தானே, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிராம்மண குடும்பத்தில் பிறந்து இருக்கிறோம்.
யோசிக்க வேண்டாமா?

இந்த சிறிய சந்தியாவந்தனம் செய்வோமே!!
1. ஆசமனம்:
(இதை செய்யும் போது நம்மை பரமாத்மாவின் நாமத்தை சொல்லி சுத்தம் செய்து கொள்கிறோம்.
"அச்சுதா, அனந்தா, கோவிந்தா" என்று கொஞ்சம் வாயில் தீர்த்தம் விட்டு கொள்ள முடியாதா நமக்கு?)

2. தேவ தர்ப்பணம்:
(இங்கு நவ கிரகங்களுக்கு தர்ப்பணம் செய்கிறோம்.
மேலும் 12 ரூபமாக உள்ள பரமாத்மாவுக்கு தர்ப்பணம் செய்கிறோம்.

ஒன்றுமே செய்யாததை விட குறைந்த பட்சம், தேவ தர்ப்பணம் மட்டுமாவது செய்ய வேண்டும்.  பத்மஸ்ரீ சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் சொல்வதை கேளுங்கள்.   (@ 16:04 Minute Speech)


தர்ப்பணம் என்றால் "திருப்தி" என்று அர்த்தம்.

"ராகும் தர்பயாமி" என்றால் "ராகு க்ரஹத்தின் தேவதையை திருப்தி செய்கிறேன்" என்று அர்த்தம்.

ராகு, கேது, சனீஸ்வரனை ஆராதித்து, அவர்கள் நம்மை பாதிக்காமல் இருக்க செய்ய, நமக்கு கசக்கிறதா?

ஒரு சொட்டு தண்ணீர், நம் கையால் நவ க்ரஹங்களை ஆளும் தேவதைகளுக்கு  கொடுக்க முடியாதா நம்மால்?

ஒரு சொட்டு தண்ணீர், 12 ரூபங்களாக இருந்து நம்மை காக்கும் பரமாத்மாவுக்கு நம்மால் கொடுக்க முடியாதா?

நம்மிடம் ஒரு சொட்டு தண்ணீருக்காக நவ க்ரஹ தேவதைகளோ, பரமாத்மாவோ ஏங்கவில்லை.. இதை மறந்து விட கூடாது...

ஆனால் 'பிராம்மண ஜாதியில் பிறந்த நமக்கு துளியாவது நன்றி இருக்கிறதா?' என்று தெய்வங்கள் பார்க்கிறார்கள்.

இந்த நன்றியை கூட பிராம்மணன் காட்ட கூடாதா?...
தெய்வங்களை நாம் தானே திருப்தி செய்ய வேண்டும்!! 

நம்மை படைத்த தெய்வங்கள் அல்லவா! 
நம்மை காக்கும் தெய்வங்கள் அல்லவா..? 

தொடர்ந்து 10 காயத்ரி மந்திரம் சொல்லி விட்டு,


கடைசியாக,

3. சமர்ப்பணம்:
காயே ந வாச...நாராயணா யேதி சமர்ப்பாயாமி"
என்ற மந்திரத்தை சொல்லி
"இப்படி அரைகுறையாக செய்த சந்தியா வந்தனத்தையும் அழகாக முழுமையாக செய்ததாக ஏற்று கொண்டு, பரமாத்மா நமக்கும், நம் குடும்பத்துக்கும் அருள் செய்ய வேண்டும்"
என்று பிரார்த்தித்து முடித்து விடலாமே..

இந்த மூன்றையும் செய்ய, ஒரு நிமிடம் கூட ஆகாதே நமக்கு!!...

உணர்ந்து செய்தால், நவ க்ரஹங்கள் நம்மை வாட்டுமா?  
துன்ப காலங்களிலும் நம்மை தெய்வங்கள் ரக்ஷிக்குமே!...

100 வயது காலம் நாம், நம் குடும்பம் வாழ, மதிய வேளையில் பிரார்த்தனை செய்யும் மந்திரம் இருக்கிறது.
அதை தெரிந்து கொள்ளாமல் போனாலும், இந்த குட்டி பிரார்த்தனையை பிராம்மணன் அனைவரும் செய்யலாமே!..

இந்த பிறவியில் அதிர்ஷ்டமாக நமக்கு கிடைத்த பரிசை, நாம் ஏன் அலட்சியம் செய்ய வேண்டும்?

"மற்றவர்கள் பொறாமைப்படும் பிராம்மண குலத்தில் இவனை பிறக்க வைத்தும், நமக்காக சில நிமிடங்கள் சந்தியா வேளைகளில் (காலை, மதியம், மாலை) கூட நினைக்காமல், நன்றி இல்லாமல் இருக்கிறானே?"
என்று தெய்வம் நினைக்கும் படியாக வாழ்ந்து நாம் இறந்து விட்டால்,
நமக்கு பெரிய நஷ்டமல்லவா!!..

இந்த ஜென்மத்தில் சந்தியா வந்தனம் செய்யாமல் இருந்த நமக்கு, தெய்வம் அடுத்த பிறவியிலும் பிராம்மண குடும்பத்தில் பிறக்க வாய்ப்பு தருமா?...

ப்ராம்மணர்கள் அனைவருக்கும் உரிமையுள்ள சந்தியா வந்தனத்தை, குறைந்தது இந்த மூன்றை மட்டுமாவது காலை, மதியம், மாலை, வெறும் ஒரு நிமிடம் ஒதுக்கி,
நமக்கு பிடித்த தெய்வத்தையே பரமாத்மாவாக நினைத்து நன்றி செய்யலாமே!!.
"பூணூலுக்கு அர்த்தம் உண்டு" என்று காட்டுவோமே!!.. 
(பூணூல் அர்த்தம் என்ன என்று அறிய இங்கே படிக்கவும்)

தெய்வ அருள் வேண்டாமென்று ஏன் சொல்ல வேண்டும்?

வியாச பகவான் நமக்காக கொடுத்த இந்த சந்தியா வந்தனத்தை,
நமக்கு என்று உரிமையுடன் கொடுத்த இந்த பாக்கியத்தை, நாம் யாருக்காக விட வேண்டும்?

நாம் தெய்வத்துக்கு நன்றி சொல்ல, யாரும் தடை இல்லையே!!  

இது நம் சொத்து ஆயிற்றே.. 

தெய்வ அருளை பெற்று தரும் சந்தியா வந்தனம் என்ற தங்க குவியலை, நாமே குப்பை தொட்டியில் வீசி விட்டு, 
தெய்வ அருள் எங்கே?, செல்வம் எங்கே?
என்று எங்கேயோ தேடுகிறோமே!!..

மேல் சொன்ன இந்த மூன்றை மட்டுமாவது, ஆசையோடு தினமும் நாம் செய்ய ஆரம்பிப்போம்.

புரிந்து கொண்டு ஒரு நிமிடம் செய்தாலும், நமக்கு மனத்திருப்தி நிச்சயம்.

100 வயது நாம் நம்மை சுற்றி உள்ளவர்கள் வாழ ஆசை இருந்தால், மேலும் சில மந்திரங்கள் அதன் அர்த்தங்களை தெரிந்து கொண்டு இன்னும் நன்றாக அனுபவித்து தெய்வத்துக்கு நன்றி செய்வோம்.

மேலும் சந்தியா வந்தனம் பற்றிய காரணங்கள் தெரிந்து கொள்ள... இங்கே படியுங்கள்..




சந்தியா வந்தன மந்திரங்களின் அர்த்தங்கள் தெரிந்து கொள்ள....


ஸூர்ய அஸ்தமனத்திலிருந்து (6PM) மறுநாள் உதயம் (6AM) வரையுள்ள முப்பது நாழிகையில் (30*24 = 720 minutes = 12hr), இருபத்தைந்து நாழிகையான பின், கடைசி 5 நாழிகையை (5*24 = 120 minutes = 2hr) "உஷத் காலம்" என்று சொல்கிறோம்.
4AM முதல் 6AM வரை 'உஷத் காலம்'. 
இதை "ப்ரம்ம முகூர்த்தம்" என்று சொல்கிறோம்.

இந்த உஷத் கால சமயத்தில் விழித்துக் கொண்டு, பல் துலக்கி, பச்சை ஜலத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டும். 

ஸந்தியாவந்தனமே தேவ யக்ஞம். 
ஸந்தியாவந்தனம் செய்வதால் தேவர்கள் நம்மை பார்த்து திருப்தி அடைகிறார்கள்.

"சந்தியா வந்தனம் செய்யவில்லையே" 
என்ற தாபம் ப்ராம்மணனுக்கு இருக்கவேண்டும்.

"சந்தியா வந்தனம் செய்யவேண்டும்" 
என்ற ஆர்வம் ப்ராம்மணனுக்கு இருக்க வேண்டும்.

கருணாமூர்த்தியான பகவான் நம் ஆர்வத்தை, தாபத்தை கவனிக்காமல் போகமாட்டார்.

உலகில் எந்த மதத்தையும் விட, தொன்றுதொட்டு வந்திருக்கிற இந்த அநுஷ்டானங்கள் நம் காலத்தோடு அழித்து விடாமல், நம் குழந்தைகள் எடுத்து செல்லும் அளவிற்கு, இவற்றால் நாம் பெறுகிற நன்மையையும், லோகம் பெறுகிற நன்மையையும் உண்டாக்குவதற்கே ஸகலப் பிரயத்தனமும் பண்ணவேண்டும்.
6:00 AM மணிக்கு ஸூர்யோதயம் என்றால் 8:24 AM வரை "ப்ராத: காலம்". 
உஷத் காலத்தில் சந்தியா வந்தனம் செய்ய முடியாது போனால், ப்ராத: காலத்தில் ப்ராத சந்தியா செய்ய வேண்டும்.

8:24 AM லிருந்து 10:48 AM வரை "ஸங்கவ காலம்". 
10:48-1:12 சமயத்தில் செய்ய இயலாது இருந்தால், இந்த காலத்திலேயே, மாத்யான்னிக சந்தியா வந்தனம் செய்து விடலாம்.
10:48 AM லிருந்து பகல் 1.12 PM வரை "மாத்யான்னிக காலம்".
இந்த சமயத்தில் மாத்யான்னிக சந்தியா வந்தனம் செய்ய வேண்டும்.

1:12 PM லிருந்து 3:36 PM வரை "அபரான்ன காலம்". 
அபரான்னத்தில் மட்டுமே பிராம்மணன் சாப்பிடவேண்டும். 
ஒரு வேளை தான் உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் ப்ராம்மணனை எதிர்பார்க்கிறது.

3:36 PMலிருந்து 6 PM மணி வரை (அதாவது அஸ்தமனம் வரை) "ஸாயங்காலம்". 

‘தோஷம்’ என்றால் இரவு. 
‘ப்ர’ என்றால் முன்னால்.
சூரிய அஸ்தமனத்தை ஒட்டினது "ப்ரதோஷகாலம்" (5:15 PM- 6 PM). 


1 comment:

Premkumar M said...

பிராம்மணர்கள் கவனத்திற்கு !!
குட்டி சந்தியா வந்தனம் எப்படி செய்வது?
தெரிந்து கொள்ள...

https://www.proudhindudharma.com/2020/04/short-sandhya-vandanam.html