Followers

Search Here...

Monday, 30 March 2020

பாசுரம் (அர்த்தம்) - முடிச்சோதியாய் உனது முகச்சோதி - நம்மாழ்வார் கள்ளழகர் (மதுரை) சுந்தரராஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நம்மாழ்வார் (திருவாய்மொழி) நம் கள்ளழகரை மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? 
திருமாலே கட்டுரையே
-  நம்மாழ்வார் (திருவாய்மொழி)
அர்ச்சா திருமேனியுடன் தான் கள்ளழகர் இருக்கிறார்.
இருந்தாலும்,
பரமபதத்தில் அப்ராக்ருத (Beyond Nature) திவ்ய மங்கள வடிவை கொண்ட பரவாசுதேவன் எப்படி இருப்பாரோ, அது போலவே இருக்கிறார் கள்ளழகர்.

கள்ளழகரை பார்க்கும் போது, இவர் அர்ச்சா திருமேனி  என்று தோன்றவே தோன்றாது.




இவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கிறார்?
என்றே சொல்ல முடியாத படி, தனித்து இருக்கிறார்.
இன்றைக்கு சென்று, நம் ஊன கண்ணால் பார்த்தாலும் இந்த அதிசயத்தை நாம் உணரலாம்.

எந்த கோவிலுக்கு சென்று போய் பார்த்தாலும், கள்ளழகருக்கு உள்ள அந்த அழகு, பொலிவு வேறு எங்கும் பார்க்க முடியாது.

திருமஞ்சனம் செய்யட்டும், செய்யாமாலே இருக்கட்டும், இவர் திருமேனி மட்டும் தக தக வென்று அப்படி ஒரு பொலிவுடன் இருக்கும்.
நம்மாழ்வார் ஹ்ருதயத்தில் அத்தகைய பொலிவுடன் கள்ளழகர் காட்சி தர, அந்த பொலிவை வர்ணிக்கிறார்.

தக தக வென ஜொலிக்கும் பெருமாளின் "கன்னத்தில் (முக) வெளிப்பட்ட பொலிவு (ஜோதி) தான் கிரீடமாக (முடிச்சோதி) இருக்கிறதோ?"
என்று பார்த்து பிரமிக்கிறார் நம்மாழ்வார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்கிறார்.

தங்க ஆபரணங்களை தனியாக பார்க்கும் போது ஜொலி ஜொலிக்குமாம்.
அதே தங்க ஆபரணங்களை கள்ளழகர் அணிந்துகொண்டு விட்டால், இவருடைய மேனி பொலிவுக்கு முன், தங்க நகைகள் பொலிவு இல்லாதது போல தெரியுமாம். 
இந்த அனுபவத்தை இன்று கள்ளழகரை சென்று பார்த்தால் கூட நாமும் அனுபவிக்க முடியும். 




கள்ளழகர் கன்னத்தை பார்த்தால், எதிரே நிற்பவர்களின் பிம்பம் தெரியுமாம். 
அத்தனை பொலிவு உடைய கள்ளழகரின் பொலிவை கண்டு மயங்கி, 
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்று நம்மாழ்வார் ஆச்சர்யப்பட்டு கேட்கிறார்.

பெருமாளின் முகப்பொலிவை கண்ட பிரமித்த நம்மாழ்வார், "சரி திருவடியை பார்ப்போம்" என்று கவனிக்க,
கள்ளழகரின் திருவடியின் அடிப்பகுதி சிவந்து பெரும் பொலிவை தர,
அந்த "திருவடி பொலிவுதான் சிவந்த தாமரையாக மலர்ந்து இருக்கிறதோ?" என்று கேட்கிறார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,  
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
என்கிறார்.




பெருமாள் இடுப்பில் பீதாம்பரம் அணிந்து இருந்தாலும், அந்த வஸ்திரத்தையும் மீறிக்கொண்டு, அவர் திருதொடையின் பொலிவு, பீதாம்பரத்துக்கும் மேல் பிரகாசிக்குமாம்.

இப்படி அடி முதல் முடி வரை தங்கம் போல (பைம்பொன்) தக தகவென ஜொலிக்கும் அழகரை கண்டு பிரம்பிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே

படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் 
நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ
என்கிறார்.

எப்பொழுதுமே தங்கம் போல ஜொலிக்கும் கள்ளழகர் .
ஒரே ஒரு சமயம் மட்டும், பச்சை திருமேனியாக ஆகி விடுகிறார்.

கள்ளழகர் ஒரு சமயம் மலை மீது ஏறி, நூபுர கங்கைக்கு செல்வார்.
இந்த மலையோ பச்சை பசேல் என்று சோலையாக இருக்கும். 

போகும் வழியில், இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று இருப்பதால், அந்த சாயம் இவர் கன்னத்தில் பிரதிபலித்து, பெருமாளே பச்சை வர்ணமாக காட்சி தருவார்.
அங்கு மட்டும் கள்ளழகர் பச்சை வண்ண பெருமாளாக இருப்பார்.
மற்ற சமயங்களில் எல்லாம், பெருமாள் மணிவண்ணனாகவே இருப்பார்.

இப்படி பெருமாளின் பொலிவை கண்டு ஆனந்தப்படுகிறார் நம்மாழ்வார்.

1 comment:

Premkumar M said...

பாசுரம் (அர்த்தம்) - முடிச்சோதியாய் உனது முகச்சோதி -
நம்மாழ்வார் கள்ளழகர் (மதுரை) சுந்தரராஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம்.
தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

https://www.proudhindudharma.com/2020/03/azhagar-pasuram-nammalvar.html